உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, June 14, 2009

சத்தியம் நீயே... தர்மத் தாயே..!

ங்கள் தாத்தா வளர்த்த பசு ‘லக்ஷ்மி’ பற்றி மூன்று நாட்களுக்கு முன்னால் நான் பிளாகில் எழுதியிருந்ததை இன்று யதேச்சையாகப் படித்துவிட்டு, இன்று அந்த லக்ஷ்மி பற்றி மேலும் சில தகவல்களைச் சொன்னார் அப்பா. அவை ஆச்சரியமாக இருந்தன.

எங்கள் தாத்தாவுக்கு அறுபதாம் கல்யாணம் நடந்த சமயம் அது. நானெல்லாம் பிறந்திருக்கவில்லை.

வீடு முழுக்க கல்யாணத்துக்கு வந்த உறவினர்கள் நிரம்பியிருந்தார்கள். கிராமத்து வீடு, கல்யாண சத்திரம் போன்று பெரியது. விசாலமான கூடத்தில் அத்தனை பேரும் தங்கள் குழந்தை குட்டிகளோடு குறுக்கும் நெடுக்குமாகப் படுத்திருந்தார்கள். ஊருக்கே மின்வசதி இல்லாத காலம் அது. இரண்டு மூன்று சிம்னி விளக்குகள் மட்டும் அங்கங்கே ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

நடு ராத்திரி மணி 12 இருக்கும். புறக்கடைப் பக்கம் புஸ்... புஸ்ஸென்று ஏதோ சத்தம். திடுக்கிட்டு எழுந்த என் பாட்டி சிம்னி விளக்கைப் பெரிதாக்கிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் போய்ப் பார்த்தால்... லக்ஷ்மி தொட்டியில் இருந்த கழுநீரைக் குடித்துக்கொண்டு இருக்கிறது.

வாசலில் கட்டப்பட்டிருந்த பசு அது. எப்படியோ கட்டு அவிழ்ந்துவிட்டிருக்கிறது. வழக்கமாக அது வீட்டினுள் சுவாதீனமாக நுழைவது மாதிரி நுழைந்து, அந்த இருட்டில், குறுக்கும் மறுக்குமாகப் படுத்திருந்த இருபது முப்பது பேரையும் தாண்டி, ஒருவரையும் துளியும் மிதிக்காமல் தோட்டத்துப் பக்கம் போயிருக்கிறது. அன்றைக்கு வந்திருந்த உறவினர்களிடையே மிகவும் சிலாகித்துப் பேசப்பட்ட விஷயம் இது.

இங்கே எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். குதிரைகளும் தப்பித் தவறிக்கூட யாரையும் மிதிக்காதாம். காமிரா மேதை கர்ணனே சொல்லியிருந்த ஒரு தகவல் இது.

அவரது படங்களில்தான் குதிரை அதற்கான லட்சணத்தோடு மிடுக்காக இருக்கும். மற்ற படங்களில் வரும் குதிரைகள் எல்லாம் வண்டிக் குதிரை மாதிரி சொத்... சொத்தென்று நடந்து வர, கர்ணன் படத்தில் மட்டும் குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் பறக்கும். எப்படித்தான் அதை அத்தனை அழகாகப் படம் பிடித்தாரோ என்று வியப்பாக இருக்கும். ‘கங்கா’ என்றொரு படம். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்தது. இங்கிலீஷ் படம் பார்க்கிற மாதிரி இருக்கும். அதில் குதிரைகள் ஓட்டம் அபாரமாக இருக்கும். சில காட்சிகளில், பார்க்கும் நம்மையே தாண்டிக்கொண்டு ஓடுகிற மாதிரியான கோணங்களில் எல்லாம் படமாக்கப்பட்டிருக்கும். இந்த மாதிரி எப்படிப் படம் பிடித்தார் என்று ரொம்ப நாள் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. வலுவான பெரிய கண்ணாடித் தளம் ஒன்றை அமைத்து, குதிரைகளை மேலே ஓடவிட்டு, காமிராமேன் கீழே இருந்து படம் பிடித்தாரோ என்று கூட நான் யோசித்தது உண்டு.

அது அப்படியல்ல! தப்பித் தவறிக்கூட குதிரைகள் யாரையும் மிதிக்காது என்கிறார் கர்ணன். இந்தத் தன்மை குதிரைகளிடம் இருப்பது தெரிந்து, அவர் தைரியமாக ஒரு காரியம் செய்தாராம். மூவி காமிராவோடு அவர் தரையில் படுத்துப் படம் எடுக்கத் தொடங்கிவிடுவாராம். தூரத்திலிருந்து பல குதிரைகள் அவர் படுத்திருக்கும் பாதை வழியாகத் துரத்தப்படுமாம். அவை வேகமாக ஓடி வந்து, கர்ணனைத் தாண்டிக்கொண்டு ஓடிவிடுமாம். ‘அந்தக் காட்சியை அப்படியே நான் படம் பிடித்துவிடுவேன்’ என்று சொல்லியிருக்கிறார் கர்ணன்.

என்னதான் குதிரைகள் மிதிக்காது என்றாலும், தைரியமாக அப்படிப் படம் பிடிப்பதற்குத் துணிச்சல் வேண்டும்தானே!

சரி, லக்ஷ்மியிடம் வருவோம். லக்ஷ்மி பற்றி அப்பா சொன்ன இன்னொரு விஷயம்தான் என்னை உண்மையில் சிலிர்க்க வைத்தது.

என் அப்பாவுக்கு சுசீலா என்று ஒரு தங்கை இருந்தாளாம். (இப்போது இல்லை. சின்ன வயதிலேயே இறந்துவிட்டதாகச் சொன்னார்.) சுசீலா அப்போது ஐந்தாறு வயதுக் குழந்தை. லக்ஷ்மி பசு அசை போட்டபடி வாசலில் அமர்ந்திருந்தது. சுசீலா விளையாட்டாக அதன் முதுகில் ஏறியவள், அப்படியே குப்புறப் படுத்து உறங்கியும் விட்டிருக்கிறாள். எத்தனை நேரம் ஆயிற்றோ!

யதேச்சையாக வெளியே வந்த என் அப்பாவின் அத்தை, பசு மாட்டின் முதுகில் குழந்தை படுத்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டு, ‘ஐயையோ! பசு எழுந்தால் குழந்தை உருண்டு விழுந்துவிடுமே’ என்று பதறி, ஓடிப் போய்க் குழந்தையைத் தூக்கிக் கொண்டாராம்.

அடுத்த கணம், லக்ஷ்மி விலுக்கென்று உடம்பை உதறிக்கொண்டு எழுந்து நின்றது. அடுத்து அது செய்த காரியம்... நிறுத்தாமல் கொஞ்ச நேரத்துக்கு சிறுநீர் கழித்ததுதான்! தான் எழுந்தால் குழந்தை விழுந்துவிடுமே என்று அது பாவம், அத்தனை நேரமாக அடக்கிக்கொண்டு இருந்திருக்கிறது.

மிகச் சாதுவான பசு லக்ஷ்மி. வறுமையான ஒரு நேரத்தில், மனசே வராமல் அதை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார் என் தாத்தா. ஆனால், அது அங்கே இருக்கப் பிடிக்காமல் முரட்டுத்தனமாகக் கட்டை அறுத்துக்கொண்டு தாத்தா வீட்டுக்கே ஓடி வந்துவிட்டதாம். அந்த ஆள் அதைப் பிடிக்கப் போனால், முட்ட வந்ததாம். இரண்டு மூன்று முறை இப்படியே லக்ஷ்மி, தாத்தா வீட்டுக்கு ஓடி வந்துவிட, அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு லக்ஷ்மியை மீண்டும் தன்னிடமே வைத்து வளர்த்து வந்திருக்கிறார் தாத்தா.

பால் கறப்பை நிறுத்திய பிறகும், அந்தப் பசுவை யாரிடமும் விற்காமல் (அடிமாட்டுக்கென வாங்கிக் கொள்வார்கள்), தெருவில் துரத்தாமல் கடைசி வரை தன்னிடமே வைத்திருந்து தீனி போட்டுக் காப்பாற்றியிருக்கிறார். அவர் இறந்த அன்று... அன்று மட்டுமல்ல, அடுத்த இரண்டு மூன்று நாட்களும் லக்ஷ்மி வைக்கோல், புல் எதுவும் தின்னாமல், கழுநீர் குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து, நாலாம் நாள் அதுவும் இறந்துபோய்விட்டதாம்.

‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி எழுதிய பாடலை இப்போது உணர்ச்சியோடு நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

‘சத்தியம் நீயே, தர்மத் தாயே, குழந்தை வடிவே, தெய்வ மகளே...’ என்ற அந்தப் பாடலில் ஒரு வரி...

‘வளர்த்தவரே உன்னை வெறுத்துவிட்டாலும், அடுத்தவரிடத்தில் கொடுத்துவிட்டாலும், வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம், வாய் மட்டும் இருந்தால் மொழி பேசும் தெய்வம்...’

5 comments:

நெகிழ்வான ஆச்சரியமான தகவல்கள்.

நன்றி.
 
ஒரு விஷயத்தைப் படித்துவிட்டு வேறெதுவும் செய்யத் தோன்றாமல் படித்ததையே நினைத்துக்கொண்டு சில சமயம் இருந்திருக்கிறேன். அது போன்ற ஒரு நிலை எனக்கு இதைப் படித்ததும் ஏற்பட்டது.
 
ரவிப்ரகாஷ் அவர்களே,

சமீபத்தில்தான் உங்கள் ப்ளாகை கண்டுபிடித்தேன். சாவி பற்றி நீங்கள் எழுதிய பல பதிவுகள் மிக அருமையாக இருக்கின்றன.

கர்ணன் பற்றி பதிவர் முரளி கண்ணன் சமீபத்தில் ஒரு பதிவு எழுதி இருந்தார். அது வரையில் கர்ணன் எனக்கு ஜம்பு புகழ் கர்ணன் மட்டுமே. சில நாட்களுக்கு முன்தான் அதை குறிப்பிட்டு நானும் எழுதி இருந்தேன். வெகு செக்கிரத்திலேயே உங்கள் பதிவு! அதை என் தளத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். கர்ணனை தவிர வேறு பல விஷயங்கள் இந்த பதிவில் இருப்பதால், அந்த பகுதியை மட்டும் எடுத்தாண்டிருக்கிறேன். நீங்கள் விரும்பாவிட்டால் எடுத்துவிடுகிறேன். ;-)

என் பதிவு - http://awardakodukkaranga.wordpress.com/2009/06/15/ஜம்பு-புகழ்-கர்ணனை-பற்றி/
 
very touching.
 
* வண்ணத்துப் பூச்சியாரே! அட, எப்படிங்க... எழுதி முடித்து பிளாக்ல பதிவிட்ட அடுத்த ஒரு சில நிமிடங்கள்ல பின்னோட்டம் இடறீங்க? பொதுவா எத்தனை மணிக்குத்தான் தூங்கப் போவீங்க?

* லதானந்த்ஜி! உங்க பாராட்டுக்களைப் படிச்சுட்டு வேறெதுவும் செய்யத் தோணாமல் நானும் கொஞ்ச நேரம் அப்படியே மெய்ம்மறந்து இருந்துட்டேன்!

* ஆர்வி, என் பெயரின் முதல் எழுத்தும் மூணாவது எழுத்துமாக இருப்பதால் நீங்க ரொம்ப நெருங்கி வந்துட்டீங்க. சாவி பத்திரிகையில் பணியாற்றும்போது காமிராமேதை கர்ணன் ஒருமுறை அங்கே சாவி சாரை பார்க்க வந்திருக்கிறார். நான்தான் வரவேற்று உட்கார வைத்து, சாவி சாருக்குத் தகவல் சொன்னேன். ஆனால், அப்போது கர்ணன் எத்தனை பெரிய ஜாம்பவான் என்று எனக்குத் தெரியாது.அதிகம் அவரோடு பேசிப் பழகாமல் போனோமே என்று இப்போது வருத்தமாக இருக்கிறது. போகட்டும், பிளாக் என்று வந்துவிட்டாலே அது பொதுச் சொத்தாகிவிடுகிறது. தாராளமாக எடுத்தாளுங்கள். என் அனுமதியே தேவையில்லை.

* மங்களூர் சிவா, ‘டச்சிங்’ என்று ஒற்றை வரியில் பாராட்டும் உங்கள் பாணி ரொம்ப ‘நச்’சிங்!