உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, December 04, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 7

பறவைகளோடும் விலங்குகளோடும் ஒரு நாள்!
ங்களின் ‘கேப்’, கண்ணன் அவர்களின் குடியிருப்புக் காலனிக்குள் நுழைந்து, குறிப்பிட்ட இலக்க அப்பார்ட்மென்ட்டின் வாசலில் நின்றதும், இறங்கினோம். கண்ணனே காத்திருந்தார். எங்களின் ட்ராலி பேக், ஷோல்டர் பேகுகளை எடுத்துக்கொண்டு இறங்கி, கேபை கட் செய்து அனுப்பிவிட்டு, கண்ணனுடன் அவர் குடியிருந்த 16-வது மாடிக்கு லிஃப்டில் சென்றோம்.

“வாங்க, ஏன் இவ்ளோ லேட்டு? அய்யாவும் அம்மாவும் இன்னும் சாப்பிடாம உங்களுக்காகக் காத்திட்டிருக்காங்க!” என்று உரிமையுடன் அதட்டி வரவேற்றாள் பணிப்பெண் ஈஸ்வரி. சொந்த ஊர் மன்னார்குடியாம். பரபர துறுதுறுவெனக் காரியங்கள் செய்வதாகவும், கலகலவென அரட்டையடிப்பதாகவும், முக்கியமாகத் தன் வயதான தாயாருக்குத் (என் மனைவிக்குப் பெரியம்மா. 94 வயது) தேவையானவற்றை வேளாவேளைக்குப் பார்த்துக் கொடுத்து அக்கறையோடு கவனித்துக் கொள்வதாகவும், ‘எங்காவது வெளியில் போய்வர வேண்டுமென்றாலும் இந்தப் பெண்ணை நம்பி தைரியமாகப் போய்வரலாம், இவள் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே ஆகிவிட்டாள்’ என்றும் அந்தப் பெண்ணுக்குப் புகழாரம் சூட்டினார் கண்ணன்.

“ஐயோ… ஏன் அண்ணா எங்களுக்காக வெயிட் பண்ணீங்க. நான்தான் உங்களுக்கு முன்னாடியே சொல்லியிருந்தேனே, ஃப்ரெண்டு வீட்டுல படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு, டிபன் சாப்பிட்டுட்டு நிதானமா கிளம்பி வரோம்னு!” என்றேன் நான்.

“அவ கிடக்கறா வாயாடி, நாங்க எப்பவுமே 12 மணி போலதான் சாப்பிடுவோம். இன்னிக்கு ஒரு மணி நேரம் கூட ஆனதுல என்ன கெட்டுப்போச்சு? நீங்களும் வந்ததும் ஒண்ணா சாப்பிடலாமேனுதான் காத்திருந்தோம். வாங்க, டேபிள்ல தட்டெல்லாம் போட்டு ரெடியா வெச்சிருக்கேன். கைகால் அலம்பிண்டு வாங்க, சாப்பிடலாம்!” என்று அன்புடன் வரவேற்றார் கீதா மன்னி.

“சாப்பிட்டு முடிச்சதும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. ரெண்டரை மணிக்குக் கிளம்பி பேர்ட்ஸ் பார்க் போகலாம். அதை முடிச்சுட்டு வர்றதுக்கே சாயந்திரம் ஆயிடும். அப்புறம் ராத்திரி சாப்பிட்டுட்டு, நைட் சஃபாரி போகலாம். ரொம்ப நல்லாருக்கும்” என்றார் கண்ணன்.
அப்படியே செய்தோம். சாப்பிட்ட அசதியில் நாங்கள் நால்வரும் ஒரு பாட்டம் தூங்கியே விட்டோம். கீதா மன்னிதான் 3 மணிக்கு எழுப்பினார். சுறுசுறுப்பாக ரெடியாகி, காபி குடித்துவிட்டு, கண்ணனுடன் கிளம்பினோம்.

கீழே, காலனிக்கு வெளியே, அந்த வழியாக வந்த ‘கேப்’ ஒன்றைக் கைகாட்டி நிறுத்தினார் கண்ணன். ‘பேர்ட்ஸ் பார்க்’கில் எங்களை இறக்கிவிடும்படி டிரைவரிடம் சொன்னார். “வரும்போது கேப் புடிச்சி வந்துருங்க. ஏதாவது பிரச்னைன்னா ஒரு போன் அடிங்க. நான் வரேன்” என்று சொல்லி வழியனுப்பினார்.

முன்பே சிங்கப்பூரின் முக்கியமான அட்ராக்‌ஷன் டிக்கெட்டுகளை நண்பர் சுரேஷின் மனைவி ஜெயஸ்ரீ எங்களுக்காக வாங்கி வைத்து, எங்களிடம் கொடுத்திருந்ததால், நாங்கள் க்யூவில் நிற்கவேண்டிய அவசியமில்லாமல் நேரே உள்ளே சென்றோம்.

பிரமாண்டமான நிலப்பரப்பு. செடி கொடிகள், புதர்கள் நிறைந்த வனாந்தரப் பகுதியில் ஆங்காங்கே பல வண்ணப் பறவைகளின் காச் மூச்… கர்ரக் முர்ரக்… க்வாக் க்வாக் போன்ற சத்தங்களைக் கேட்டபடியே, பறவைகளைப் பார்த்தபடியே உள்ளே நடந்தோம். ஒரு குன்றின்மீது அமைந்திருக்கிறது ஜுராங் பேர்ட் பார்க். அதனால் சில இடங்களில் முப்பது நாற்பது படிகள் ஏறி மேலே மேலே செல்ல வேண்டியிருந்தது. உள்ளே அழகானதொரு நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.

இந்தப் பறவைகள் சரணாலயத்தில் 400 வகைக்கும் அதிகமான பறவைகள் இருப்பதாகச் சொன்னார்கள். மொத்த எண்ணிக்கையில் 6000-ஐத் தாண்டுமாம். ஆந்தைகளில் பலவகை, கழுகில் பலவகை, மக்காவ் கிளிகளில் பலவகை என்று வகைப்படுத்தியிருப்பதால் 400 வகையாக இருக்கலாம். ஆனால் என் பார்வையில், ஃப்ளெமிங்கோ, பெலிகான் பறவைகள், நாரைகள், பென்குயின், மக்காவ் கிளிகள் என மொத்தமே பத்துப்பன்னிரண்டு வகைக்குள் அடங்கிவிட்ட மாதிரிதான் இருந்தது.

ட்ராமா, பஸ்ஸா என்று இனம்காண முடியாதவாறு, மரத்தாலேயே செய்யப்பட்டது மாதிரி அங்கே ஒரு வாகனம் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில் ஏறி, ‘பேர்ட் ஷோ’ நடக்கிற இடத்துக்கு வந்தோம்.

மிகப் பெரிய கேலரியில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்தார்கள். நாங்களும் ஓர் இடம் தேடி அமர்ந்தோம். மையத்தில் கிரவுண்டில் ஒரு குட்டிப் பெண் கலகலவென்று ஆங்கிலத்தில் சரளமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் பறவைகளை வைத்து சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பித்தாள்.

கையில் ஒரு குட்டி வளையத்தை அவள் உயர்த்திப் பிடிக்க, எங்கேயோ மரத்தில் அமர்ந்திருக்கிற ஒரு பெரிய ராஜாளிப்பறவை வேகமாகப் பறந்து வந்து, தன் இறகுகளை மடக்கிக்கொண்டு, அம்பு போல் அந்த வளையத்துக்குள் புகுந்து பறக்கிறது. அப்புறம் இன்னொரு பெண் வந்து நின்று, தன் நாக்கில் பட்டாணி போன்ற ஒரு தின்பண்டத்தை வைத்து, அண்ணாந்து தன் நாக்கை நீட்டியபடி இருக்க, புயலெனப் பாய்ந்து வரும் மிகப் பெரிய கழுகு, அவளின் நாக்கில் இருக்கும் அந்தப் பட்டாணியைத் தன் அலகால் நோகாமல் கொத்திக்கொண்டு பறக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை நாலைந்து தடவை நிகழ்த்திக் காட்டிவிட்டு, அடுத்த நிகழ்ச்சிக்குப் போகிறார்கள்.

ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் கூட்டம் பலமாகக் கைதட்டுகிறது. கைதட்டவில்லையென்றால் கூச்சமே படாமல் கைதட்டலைக் கேட்டு வாங்கிக்கொள்கிறாள் அந்தப் பெண். “உங்கள்ல யாருக்காவது இப்படி நாக்குல பட்டாணியோட இங்க வந்து நிக்க தைரியம் இருக்கா? ஆனா, இந்தப் பெண் எப்படி பயப்படாம நிக்கறீங்க, பார்த்தீங்க இல்லே… அதுக்கு உங்க பாராட்டைக் கைத்தட்டா தரக்கூடாதா?” என்று ஆங்கிலத்தில் கேட்கிறாள். 

“சரிங்கய்யா… எங்களுக்குக் கைதட்ட வேணாம். அந்தக் கழுகு எப்படி அவ நாக்குல ஒரு சின்ன கீறல்கூட இல்லாம சாதுர்யமா அந்தப் பட்டாணியை கொத்தி எடுத்துட்டுப் போச்சு… அந்த ஜீவனைக்கூடப் பாராட்ட மாட்டீங்களா? உங்க கைதட்டலை அதுக்காவது கொடுங்கய்யா!” என்று உரிமையோடு கேட்கிறாள்.
அதன்பின், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கைதட்டல் கூரையைப் பிய்த்தது.

அப்புறம் ஒரு மியூஸிக் ஒலிக்க, மெல்லிசை நிகழ்ச்சிகளில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும்பொருட்டு ஆவேசமாகக் கைகளையும் குச்சியையும் ஆட்டி இசைக் கலைஞர்களை வழிநடத்தும் குழுவின் தலைவன் மாதிரி, அந்தப் பெண் கைகளை அசைக்க, கொக்குகளும் ஃப்ளெமிங்கோ பறவைகளும், சர்க்கஸில் கலைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக வருவது மாதிரி வரிசையாக வந்து மையத்தில் நின்று, குரூப் டான்ஸ் ஆடின. குதித்துக் குதித்து அவை தன்போக்கில்தான் ஒரு குத்தாட்டம் போட்டன. அதற்குத் தகுந்த மாதிரி பின்னணி இசையை ஒலிக்கவிட்டதில், அந்தக் காட்சி ரசனையாக இருந்தது.

பின்பு, கிட்டத்தட்ட தன் உயரத்தில் பாதியளவு இருந்த ஒரு பெரிய சாம்பல் நிற ஆந்தையைத் தோளில் தூக்கிக்கொண்டு, கேலரியில் பார்வையாளர்கள் மத்தியில் நடந்துவந்தாள் அவள். அப்புறம் ஒரு மூணு பேர் மிகப் பெரிய மலைப்பாம்பை ரயில்வண்டி மாதிரி சுமந்து வந்தனர். கூட்டத்தில் யாருக்காவது ஆசையாக இருந்தால், மைதானத்துக்கு வரும்படியும், அந்த மலைப்பாம்பை மாலையாக அணிவித்து கௌரவிக்கிறோம் என்றும் அறிவிப்பு செய்தார்கள். பெங்களூரைச் சேர்ந்த ஒரு தைரியசாலி இறங்கிப் போனார். அவர் பெயரை மைக்கில் அறிவித்து, ‘இந்தியாவில் உள்ள பெங்களூரிலிருந்து வந்திருக்கிறார் இந்த வீரர். இவரைப் பாராட்டும்விதமாகக் உங்கள் கரகோஷங்களை இவருக்குக் கொடுங்கள்’ என்று அறிவித்தாள் அந்தப் பெண்.

அடுத்து, ஒரு விநோத ஜந்து ஒன்று – பெரிய சைஸ் பெருச்சாளியா, முள்ளம்பன்றியா, கீரிப்பிள்ளையா அல்லது ராட்சத அணிலா என அனுமானிக்க முடியவில்லை – உள்ளே மைதானத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியது. அதைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு செல்லம் கொஞ்சினாள் அவள். அதை வைத்து ஒரு விளையாட்டுக் காட்டினாள். சிவப்பு, நீலம், வெள்ளை என தனித்தனியாக மூன்று வண்ண டிரம்கள் வைத்தாள். அதேபோல் மூன்று வண்ணமுள்ள பிளாஸ்டிக் பந்துகள் பத்துப் பதினைந்தைக் கீழே போட்டாள். அந்தப் பெயர் தெரியாத ஜந்து ஒவ்வொரு பந்தையும் கவ்வி எடுத்து, அதே நிறமுள்ள டிரம்மில் போட்டது.

நிகழ்ச்சி முடிந்து, நாங்கள் கேப் பிடித்து, கண்ணன் வீட்டுக்குப் போகும்போது 7 மணி ஆகிவிட்டது. ஒரு மணி நேரம் கழித்து, சாப்பிட்டுவிட்டு மீண்டும் ‘நைட் சஃபாரி’க்குக் கிளம்பினோம். கண்ணன் எங்களுடன் வந்து, எங்கள் நால்வருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டு, “முடிவதற்கு எப்படியும் ராத்திரி 11 மணியாகிடும். நான் கிளம்பறேன். நீங்க நிதானமா பார்த்துட்டு வாங்க” என்று விடைபெற்றார். எங்கள் நால்வருக்கான ‘நைட் சஃபாரி’ டிக்கெட்டின் மதிப்பு நம்ம ஊர் மதிப்பில் ரூ.6,000/- இது எங்கள் அஜெண்டாவிலேயே இல்லை என்பதால், நாங்கள் இதற்கு டிக்கெட் வாங்கியிருக்கவில்லை. இது அண்ணன் செலவு!

இரவு 9 மணிக்கு அடுத்த பேட்ச் புறப்படும் என்றார்கள். அதுவரை வெளியே தீப்பந்தங்களோடு சாகசங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த இருவரைக் கூட்டம் மொய்த்துக்கொண்டு, செல்போனில் படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தது. வாயில் மண்ணெண்ணெயை நிரப்பி, ஊஃப் என்று நெருப்பு மழையாக ஊதும் வித்தை, உடம்பு முழுக்க சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிப்பதுபோல் தீப்பந்தங்களால் தடவிக்கொள்ளும் சாகசம், தீப்பந்தங்களைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் ‘ஜக்ளிங்’ சாதனை என எல்லாமே நம்ம தமிழ்நாட்டில் பார்த்த சாகசங்கள்தான் என்பதால், எனக்குப் பெரிய பிரமிப்பெல்லாம் ஏற்படவில்லை.

எங்கள் முறை வந்ததும், நால்வரும் ஒரு டிராமில் ஏறி அமர்ந்துகொண்டோம். நைட் சஃபாரி தொடங்கியது. அடர்ந்த இருளில், கானகத்தில் பயணம். ஆங்காங்கே நிலவொளி போன்ற செயற்கை வெளிச்சத்தில் கரடிகள், யானைகள், காட்டெருமைகள், சிங்கங்கள் எனத் தட்டுப்பட்டன. மரம் செடிகொடிகளினூடே இருக்கும் ஒற்றையடிப் பாதையில் பல டூரிஸ்ட்டுகள் நடைப்பயணமாகவும் வந்துகொண்டிருந்தார்கள். அது இன்னும் த்ரில்லாக இருக்கும் என்று தோன்றியது. மிருகங்களைப் பார்த்த மகிழ்ச்சியைவிட காட்டின் நடுவில் சென்ற அந்த இரவுப் பயணம் நல்லதொரு அனுபவமாக இருந்தது.

பதினொன்றரை மணிக்கு ‘கேப்’ பிடித்தோம். வீடு திரும்புகிற வழியில்… சொன்னால், உங்களால் சற்றும் நம்ப முடியாத ஒரு சம்பவம் நடந்தது.

(பயணம் தொடரும்)

0 comments: