உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, December 16, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 9

டூரிஸ்ட்டுகளுக்கு மரியாதை!


மூன்றாம் நாள் காலையில் கண்ணன்-கீதா தம்பதி இருவரும் சம்ஸ்கிருதப் பாடத்தில் தேர்வு எழுதுவதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். “நாங்கள் தேர்வு எழுதிவிட்டு, மாலை 4 மணிக்குள் வந்துவிடுவோம். நீங்கள் அதற்குள் உங்கள் புரொகிராம்படி எங்காவது சுற்றிப் பார்க்கவேண்டுமாயிருந்தால் போய்விட்டு சாயந்திரம் வந்துவிடுங்கள். இரவு ‘ரிவர்ஸ் க்ரூஸ்’ போகலாம். மிக நன்றாக இருக்கும். சிங்கப்பூர் வருகிறவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய விஷயம் அது” என்றார் கண்ணன்.

மகன் ரஜினியிடம் “எங்கேடா போகலாம்?” என்று கேட்டேன். அவன்தான் ஆரம்பத்திலிருந்தே கூகுளில் சிங்கப்பூரை அலசி, சகல விவரங்களையும் கைவசம் வைத்திருந்தான். 90 சதவிகிதம் அவன் போட்டுக்கொடுத்த செயல்திட்டப்படிதான் எங்கள் டூரை அமைத்துக்கொண்டிருந்தோம்.

“மொதல்ல சைனா டவுன் போவோம். அங்கே புத்தா டெம்பிள் ஒண்ணு இருக்கு. அதைப் பார்ப்போம். அப்புறம் மாரியம்மன் கோயிலும் பக்கத்துலயே இருக்கு. அதையும் பார்ப்போம். அப்புறம் சைனா ஸ்ட்ரீட்டுல கொஞ்ச நேரம் நடப்போம். அங்கிருந்து நேரா சதர்ன் ரிட்ஜஸ் வருவோம். நிறைய நடக்கணும். அதுக்கே 3 மணி ஆயிடும். அப்புறம் கிளம்பி வீட்டுக்கு வர சரியாயிருக்கும்” என்றான்.

“சதர்ன் ரிட்ஜஸா, அதென்ன?” என்றார் கீதா மன்னி. இரும்பு ராடுகளாலும் தகடுகளாலும் உயரமாக ஒரு நடைமேடை எழுப்பி, காடு, பூங்கா, நகரம் என எல்லா இடங்களிலும் நடந்துசென்று பார்க்கும்படியான ஒரு பாதை அது என்று விளக்கினான் ரஜினி.

சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். பஸ்தான்; எம்.ஆர்.டி-தான். இரண்டு நாளில், சென்னைபோல் பஸ் பயணமும், மெட்ரோ ரயில் பயணமும் அவ்வளவு பழகிவிட்டது. 

நேரே சைனா டவுன் போய் இறங்கினோம். பகோடா தெருவில் நடந்தோம். கண்களில் பட்டது மாரியம்மன் கோயில். பயபக்தியுடன் உள்ளே நுழைந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, குருக்கள் கொடுத்த குங்குமப் பிரசாதத்தை வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டு, கற்பூர ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, அம்பாளைப் பிரார்த்தித்துவிட்டு வெளியேறினோம். சுத்தபத்தமாக இருந்தது கோயில்.

அருகிலேயே புத்தர் கோயில். அரக்கு சிவப்பில் பளீரென்று தெரிந்தது. நான்கு மாடிக் கட்டடம். தரைத் தளத்தில் மிகப் பெரிய ஹால். கலர்ஃபுல்லாக இருந்தது அந்தக் கூடம். ஒவ்வொரு மாடியாக ஏறிப் போய்ப் பார்த்தோம். கலையழகுடன்கூடிய பொம்மைகள், சிற்பங்கள், புத்தர் சிலைகள் எனப் பார்க்கப் பார்க்கத் திகட்டாமல் கண்ணுக்கு விருந்தாக இருந்தது ஒவ்வொரு தளமும். ஒரு தளத்தில் சுவர் முழுக்க ஆயிரக்கணக்கில் சின்னச் சின்ன பிறைகளில் புத்தர் சிலைகள். நம்ம குழந்தைக் கிருஷ்ணன், குழந்தை முருகன், குழந்தை விநாயகர் மாதிரி குழந்தை புத்தர் சிலைகளும் இருந்தன.

ஒரு தளத்தில் வரிசையாக கண்ணாடிக் கூண்டுகளில் புத்தபிட்சுக்கள் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரின் கையில் ஓடும் பச்சை நரம்புகள், ரேகைகள், கண் இமைகள் என அத்தனை தத்ரூபம்! மெழுகுச் சிலை போலவே தெரியவில்லை; தொட்டால் சட்டென்று தியானத்திலிருந்து சிணுங்கிவிடுவார்களோ என்பதுபோல் நிஜமாகவே உயிரோட்டமாக அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் புத்தரின் சீடர்களாம்.

நாலாவது மாடியில் புத்தரின் புனிதப் பல் ஒரு பேழையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. புத்தர் இலங்கையில் அமரத்துவம் பெற்றார் என்றும், அங்கே அவரது உடலை சந்தனக் கட்டைகளில் வைத்து எரியூட்டினார்கள் என்றும், அந்தச் சாம்பலில் கிடைத்த புத்தரின் பல்லை அவரது சீடர் எடுத்துக்கொண்டு வந்து, அதை வைத்து கண்டியில் புத்தருக்குக் கோயில் எழுப்பினார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். இந்தியாவிலும் புத்தருக்குக் (புனிதப் பல்) கோயில்கள் உள்ளன. இங்கே சிங்கப்பூரிலும் புத்தர் பல் கோயில் பிரபலமாக உள்ளது.

ஆற அமர, புத்தர் கோயிலை நின்று நிதானமாகப் பார்த்துவிட்டு, பின்பு அங்கிருந்து கிளம்பி, சைனா டவுன் பகுதியில் மார்க்கெட் தெருக்களில் புகுந்து புகுந்து நடந்தோம். பின்னர், ஒரு ‘கேப்’ பிடித்து ஆண்டர்சன் தெருவில் போய் இறங்கினோம். அங்கேதான் ‘சதர்ன் ரிட்ஜஸ்’ நடைமேம்பாலம் தொடங்குகிறது என்று கூகுளில் தேடி வைத்திருந்தான் ரஜினி.

ஆண்டர்ஸன் தெருவில் இறங்கிக்கொண்டு, அருகிலிருந்து படிகளில் ஏறி மேலே வந்தோம். அங்கிருந்து வளைந்து வளைந்து தன் பயணத்தைத் தொடங்குகிறது ‘சதர்ன் ரிட்ஜஸ்’. அருகிலேயே சைக்கிளில் செல்பவருக்கும் பாதை செல்கிறது. கிட்டத்தட்ட 9 கிலோ மீட்டர் தூரம் செல்லும் நடைமேம்பாலம் இது. நடக்கத் தொடங்கினோம்.

காடு, மலை, செடிகளுக்குள் புகுந்தும் வளைந்தும் செல்கிறது இந்தப் பாதை. திடுமென அங்கிருந்து வெளிப்பட்டு, பரபரப்பான ஒரு அகன்ற சாலையைக் குறுக்கால் கடக்கிறது. அருகில் உயர உயரமான கட்டங்களினூடே பாதை பயணிக்கிறது. சட்டென்று ஒரு வளைவில் மீண்டும் வனத்தில் புகுகின்றது. நடந்து நடந்து கால் வலி கண்டாலும், சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது இந்த நடைப்பயணம். அங்கங்கே ‘ஸிங்கிங் ஃபாரஸ்ட்’ என்று போர்டு வைத்திருந்தார்கள். வனத்துக்குள்ளிருந்து விநோதமான பறவைகள் விதம்விதமாகக் கூவுவதைக் கேட்கமுடிகிறது. அதனால்தான் இந்தப் பெயர். பாடுவது பறவைகள்; பேரும் புகழும் வனத்துக்கு! என்ன அநியாயம்! அது மட்டுமா, ஆங்காங்கே ‘பறவைகளுக்கோ குரங்குகளுக்கோ உணவு எதுவும் கொடுக்காதீர்கள்’ என்று அறிவிப்புப் பலகைகள் வேறு. என்ன செய்ய… பறவைகளின் ‘டிசம்பர் சீசனை’ மனசுக்குள் பாராட்டிக்கொண்டே நடந்தோம்.

மவுன்ட் ஃபேபர் பார்க், ஹில் பார்க், கென்ட் ரிட்ஜ் பார்க் என மூன்று பெரிய பார்க்குகளை இந்த நடைமேம்பாலம் இணைக்கிறது. எங்களுக்கு அவ்வளவெல்லாம் நடக்க முடியவில்லை. ஒரு மூணு மூணரை கிலோ மீட்டர் நடந்திருப்போம். அதற்குள் மாலை 4 மணியே ஆகிவிட்டது. ‘சரி, வீடு திரும்புவோம்’ என முடிவு செய்து, இறங்கும் வழியைக் கண்டறிந்து, கடகடவென இறங்கினோம். நல்லவேளையாக, ஆங்காங்கே இறங்குவதற்கும் படிகள் வைத்திருக்கிறார்கள்.  

கீழே கேப் பிடித்து, கண்ணனின் அப்பார்ட்மென்ட்டுக்கு வந்தோம். அதற்குள் அவர்களும் வந்திருந்தார்கள். நடந்த களைப்பு தீர சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்துவிட்டு, டிபன் சாப்பிட்டுவிட்டு, மாலை 6 மணிக்குக் கிளம்பினோம்.

எல்லோருமாக ‘கிளார்க் கீ’ என்னும் இடத்துக்குச் சென்றோம். ‘Clarke Quay’ என்பதை ‘கிளார்க் க்வே’ என்று உச்சரித்தோம். அப்படி உச்சரிக்கக் கூடாதாம். ‘கிளார்க் கீ’ என்றுதான் சொல்ல வேண்டும் என்றார் கண்ணன். ‘கிளார்க் கீ’, ‘போட் கீ’ என்கிற இடங்கள் அடுத்தடுத்து உள்ளன. ‘கீ’ என்றால், படகுத் துறை, கப்பல் துறை என்று பொருள். கப்பல்களிலிருந்து சரக்குகளை இறக்கவும் ஏற்றவுமான இடம்.

40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிங்கப்பூர் நதியும் நம்ம கூவம் மாதிரிதான் கச்சடாவாக இருந்திருக்கிறது. காரணம், இங்குதான் சரக்குக் கப்பல்கள் வந்து சரக்குகளை இறக்கி, ஏற்றிச் சென்றுகொண்டிருந்தன. அவை வந்து வந்து போனதால் இங்குள்ள நீர்ப் பகுதி பெரிதும் மாசுபட்டு, சிங்கப்பூரின் அழகையே கெடுத்துவிட்டதாம். அதைக் கண்டு சகிக்கமுடியாமல், அன்றைக்கிருந்த ‘கிளார்க்’ என்கிற கவர்னர் இந்தச் சரக்குக் கப்பல் துறைமுகத்தை வேறு இடத்துக்கு மாற்றியமைத்து, இங்குள்ள தண்ணீரைச் சுத்தம் செய்து, இங்கே கரையில் வணிக வளாகங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் அமைக்க வழி செய்தார். அதனால்தான் இந்த இடத்துக்கு அவர் பெயரையே ‘கிளார்க் கீ’ என்று வைத்துவிட்டார்களாம். நம்ம சென்னை கூவத்தையும் அப்படி நம்ம கவர்னர் ‘ஆய்வு’ செய்து, சுத்தப்படுத்தி, கரையோரங்களில் வணிக வளாகங்கள் ஏற்படுத்தி, ஜிலுஜிலுவென்று படகுப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். இந்தக் கரைக்கு பன்வாரிலால் கீ, அந்தக் கரைக்கு புரோஹித் கீ என்று நாமும் அழகாகப் பெயர் சூட்டலாமே?!

ஏற்கெனவே டிக்கெட் எடுத்திருந்ததால், நேரே படகுத் துறைக்குச் சென்றோம். எங்களுக்கான படகு வந்ததும் ஏறி அமர்ந்தோம். நிதானமாகக் கிளம்பியது படகு. ரிவர் க்ரூஸ் தொடங்கியது. க்ரூஸ் என்றால், படகுப் பயணம். அன்னம் நீந்துவதுபோல் மெதுவாக நீந்தியது படகு. கிட்டத்தட்ட சிங்கப்பூரின் மெயின் அட்ராக்‌ஷன்கள் அனைத்தையும் சிங்கப்பூர் ஆற்றுப் பயணத்திலேயே பார்த்துவிடலாம். சைனீஸ் கலந்த ஒரு வித்தியாசமான ஆங்கில உச்சரிப்பில், படகு கடக்கும் ஒவ்வொரு இடத்தையும் வர்ணித்துக்கொண்டே வந்தது கம்ப்யூட்டர் வாய்ஸ்.
பாலத்தின் அடியில் படகு போகும்போது கதகதப்பாக இருந்தது. இருளில் மெர்லின் சிங்கத்தின் வாயிலிருந்து வெளிச்ச நீரூற்று பாய்வது பார்க்கக் கொள்ளை அழகு! உயர உயரமான கட்டங்கள் மின்விளக்கொளியில் ஷங்கர் படம் பார்க்கிற அனுபவத்தைத் தந்தன.

சிங்கப்பூரில் டூரிஸத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் டூர் அட்ராக்‌ஷன்கள் அமைக்க இடம் போதாமல் இருந்ததால், மண்ணைக் கொண்டு வந்து கொட்டி, கடலைக் கரையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தூர்த்து, மண் மேடாக்கி, கெட்டித்து நிலப்பகுதியாகச் செய்து இத்தனையையும் அமைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது நான் வியப்பின் உச்சிக்கே போனேன்.

இரவு 9 மணிக்கு ‘ரிவர் க்ரூஸ்’ நிறைவடைந்தது. நாங்கள் கிளம்பினோம்.

நாளைக் காலையில் கலர்ஃபுல் மலேசியா!


(பயணம் தொடரும்)

0 comments: