உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, December 26, 2017

நான் பழகிய எழுத்தாளர்!

சிவசங்கரி - கம்பீர நாயகி!

சிவசங்கரி, அனுராதா ரமணன், இந்துமதி மூவரையும் தமிழ் எழுத்துலகின் முப்பெரும்தேவியர் என்றே சொல்வேன். இதைச் சில வருடங்களுக்கு முன்புகூட ஒரு ஃபேஸ்புக் பதிவில் சொல்லியிருந்தேன். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலிருந்து இம்மூவரின் சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் நான் படித்து, இவர்களின் ரசிகனாகவே ஆகியிருந்தேன்.

மூவரில், மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் எனக்கு நல்ல பழக்கம். திருமதி இந்துமதியுடன் போனில்கூடப் பேசியதில்லை. திருமதி சிவசங்கரியைப் பற்றித்தான் இப்போது நினைவுகூர விரும்புகிறேன்.

கம்பீரமான பெயர்; பெயருக்கேற்ற கம்பீரமான மனுஷியாக என் மனதில் பதிந்தவர் திருமதி சிவசங்கரி. இவரைப் பார்க்கும்போது ஒரு மிடுக்கான கலெக்டராகவோ, கண்டிப்பான ஒரு கல்லூரிப் பேராசிரியராகவோதான் என மனதில் ஒரு பிம்பம் எழும்.

அந்தக் காலத்தில் பெரிய சைஸ் தினமணிகதிரில் இவரின் பல சிறுகதைகளைப் படித்திருக்கிறேன்.சியாமா என்கிற தன் நாயைப் பற்றிக்கூட இவர் அதில் எழுதியிருந்ததைப் படித்து வியந்திருக்கிறேன். சுவாரஸ்யமாக எழுதுவதற்குப் பெரிய விஞ்ஞான ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டாம், நம்மைச் சுற்றி நடப்பதை வைத்தே அற்புமாக எழுத முடியும் என்பதை இவரின் எழுத்துகள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.

ஒரு சிறுகதை; இதுவும் பெரிய சைஸ் தினமணிகதிரில் வந்ததுதான். ஒருவருக்கு அல்லது ஒருத்திக்கு ஒரு நபரின் பெயர் மறந்துபோய்விடும். அவர் அல்லது அவளின் அன்றாட வேலையே பாதிக்கும் அளவுக்கு, அந்தக் குறிப்பிட்ட நபரின் பெயர் என்னவாயிருக்கும் என்று நாள்பூரா சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். சிறுகதை முழுக்க அவர் அல்லது அவளின் இந்த ஊசலாட்டம்தான்! இதை ஒரு சுவாரஸ்யமான சிறுகதையாக இன்றைக்குக்கூட என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. அத்தனை பிரமாதப்படுத்தியிருப்பார் சிவசங்கரி. நமக்கே அந்தப் பெயரைத் தெரிந்துகொள்ளாவிட்டால் மண்டை வெடித்துபோய்விடும் அளவுக்குக் கதையில்பெப் ஏறியிருக்கும்.

கடைசியில், மாடிப்படிகளின் கடைசி படி அருகில் உள்ள கைப்பிடிச் சுவர் மீது கை வைக்க, அதன் பந்து போன்ற தலைப்பகுதி ஆடும். என்ன இது, ஆடுகிறதே! இதைச் சரிசெய்ய வேண்டும் என்று அவர் அல்லது அவள் நினைக்கும்போதே, சட்டென்று அந்த நபரின் பெயர் நினைவுக்கு வந்துவிடும். ஆடு… ஆடு… ஆடிய… ம்… ஆடியபாதம்!

ஆஹா… சிறுகதையின் விவரணை கொஞ்சம் முன்னேபின்னே இருக்கலாம்; ஆனால், அந்தச் சிறுகதையைப் படித்த மாத்திரத்தில், அந்தப் பெயரைத் தெரிந்துகொண்ட மாத்திரத்தில், அந்தக் கதாபாத்திரம் அடைந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் நானும் அடைந்தேன் என்பதுதான் நிஜம். (இந்தஎன்பதுதான் நிஜம் என்கிற சொல்லாடல், மொழிநடைகூட சிவசங்கரி அவர்களுடையதுதான். அவரின் கதைகளில் அடிக்கடி இந்த நிஜம் வரும். அங்கிருந்து எனக்குத் தொற்றிக்கொண்டது.)

நான் பி.யூ.சி-யில் கோட் அடித்துவிட்டு, அரியர்ஸ் முடிப்பதில் மும்முரமாக இருந்த 1975-ம் ஆண்டு. விழுப்புரத்தில் இருந்த என் மாமா வீட்டில்தான் தங்கிப் படித்து வந்தேன். அப்போது சிவசங்கரி, விழுப்புரத்துக்கு அருகில் உள்ள வழுதரெட்டியில் வசித்துவந்தார்.

ஒருமுறை, விழுப்புரம் திரு.வி.க ரோட்டில் இருந்த ஒரு புத்தகக் கடையில் நான் ஏதோ நோட்ஸ் வாங்கிக்கொண்டு இருந்தபோது, பக்கத்தில் இருந்த பல்பொருள் அங்காடி வாசலில் ஒரு கார் வந்து நின்றது. யார் இறங்குகிறார்கள் என்று கவனித்தபோது, இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன். என் அபிமான எழுத்தாளர் சிவசங்கரிதான் இறங்கிக் கடைக்குள் சென்றார்கள். கூடவே, அவருக்கு பி.ஏ. போன்று ஒரு லேடியும் சென்றார். அந்த லேடி சுடிதாரோ சல்வார்கமீஸோ அணிந்திருந்ததாக நினைவு. எனவே, அவரை ஆங்கிலோ இண்டியன் என்று நான் நினைத்துக்கொண்டதும் இப்போதும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அப்பெல்லாம் சல்வார்கமீஸ் போட்டாலே அவர் ஆங்கிலோ இண்டியன்தானே?!

சிவசங்கரியிடம் சென்று அவரின் அபிமான வாசகன் என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரின் ஆட்டோகிராஃப் பெற வேண்டும் என்று எனக்கு ஆசையான ஆசை. ஆனால், தயக்கம், பயம் காரணமாக நான் அதைச் செய்யவில்லை. அவர் ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு, காரில் ஏறிக் கிளம்பிப் போகிற வரையில் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன்.

அந்நாளில் சிறுகதைகள், பத்திரிகைகள்மீது எனக்கு இருந்த நாட்டத்தை அறிந்த என் மாமா, சிவசங்கரியிடம் அசிஸ்டென்ட்டாகச் சேர்றியாடா, சேர்த்துவிடவா? எனக்கு அவங்களை நல்லா தெரியும்என்றார் ஒருநாள். என் மாமா விழுப்புரத்தில் பிரபல சிவில் இன்ஜினீயர். அந்த வகையில் சிவசங்கரி அவர்களைத் தெரிந்திருக்கக்கூடும். அல்லது, சிவசங்கரியின் கணவர் சந்திரசேகர் பிளாஸ்டிக் கம்பெனி வைத்து நடத்திவந்ததாக ஞாபகம். (இந்தப் பதிவைப் படித்துவிட்டு, சிவசங்கரி அவர்கள் எனக்குப் போன் செய்து, தன் கணவரின் நிறுவனம், பாலங்கள் கட்டப் பயன்படுத்தும் கான்க்ரீட் பைப்புகளைத் தயார் செய்யும் நிறுவனம் என்று திருத்தம் சொன்னார்.) அவரும் என் மாமாவும் சிநேகிதர்களாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. எப்படியோ… என் மாமா மூலமாக நான் திருமதி சிவசங்கரியிடம் உதவியாளனாகச் சேர்ந்துவிட்டதாகவே கனவு கண்டேன். அவர் சிறுகதைகளை டிக்டேட் செய்ய, நான் அவற்றை முத்துமுத்தாக எழுத, என் கையெழுத்தை அவர் பாராட்ட… இப்படியெல்லாம் என் கற்பனைக் குதிரை சிலகாலம் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது. ஆனால், எதுவும் நம்ம கையிலா இருக்கிறது? சூழ்நிலைகள் மாற, சிவசங்கரியிடம் உதவியாளனாகச் சேரும் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவே இல்லை.

பின்னாளில் நான் சாவி பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தபோது, இரண்டு முறை சிவசங்கரி அவர்களைச் சந்திக்கும் பேறு கிட்டியது. ஒருமுறை, சாவியின் அழைப்பின்பேரில் அவரின் குடும்ப விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார். மறுமுறை அவரைச் சந்தித்தது, சிறுகதைப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக.

இரண்டு முறையும் அவரை நான் அதே பள்ளிச் சிறுவன் மனோநிலையில்தான் பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர, அறிமுகம் செய்துகொண்டு உரையாடும் தைரியம் எனக்கு வரவேயில்லை.

சிவசங்கரியுடன் முதன்முறையாக நான் பேசியது ஒரு துயரமான சூழ்நிலையில்.

அப்போது நான் ஆனந்த விகடனில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தேன். சாவி சாரின் 85-வது வயது நிறைவையொட்டி, சாவி-85என்ற தலைப்பில் அவரின் சுயசரிதைப் புத்தகத்தைத் தொகுத்திருந்தார் திரு.ராணிமைந்தன். அதன் வெளியீட்டுவிழா நாரத கான சபாவில் நடைபெற்றது. அந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய கலைஞருக்கு நன்றி சொல்லிப் பேசிக்கொண்டிருந்தபோதே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, மயங்கிச் சரிந்தார் சாவி. சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த விழா நிகழ்ச்சிகள் உடனே சோக மயமாக மாறின. சாவி சார் உடனடியாக அப்போலோவில் சேர்க்கப்பட்டார். பல நாள்கள் கோமாவில் இருந்தார்.

அவரை அப்போலோ ஐ.சி.யூ-வில் இரண்டு முறை போய்ப் பார்த்தேன். அப்படிச் சென்றிருந்தபோதுதான் அங்கே சிவசங்கரியைச் சந்தித்தேன். சிவசங்கரியின் கண்கள் கலங்கியிருந்தன. மாமியுடனும் (சாவி சாரின் துணைவியார்) மகள்களுடனும் பேசிக்கொண்டிருந்தார். எழுத்துலகில் சாவி சார் தனக்குத் தந்த அதீத ஊக்கத்தைப் பற்றித்தான் அவர் அப்போது பகிர்ந்துகொண்டிருந்தார். பேச்சினிடையே நான் முன்பு சாவி சாரிடம் பணியாற்றியதைப் பற்றியும், தற்போது விகடனில் பணிபுரிந்துவருவது பற்றியும் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்துகொண்டேன்.

ஆனந்த விகடனில் பொக்கிஷம் புத்தகத் தயாரிப்புக்காக பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதுதான், சிவசங்கரி எனும் ஆளுமையின் விஸ்வரூபம் எனக்குப் புலப்படலாயிற்று.

ஆனந்த விகடனில் அவர் எழுதியஒரு மனிதனின் கதை மறக்கக்கூடியதா என்ன? அந்தத் தொடர்கதையைப் படித்தபின்பும் ஒருவன் குடிப் பழக்கத்தைத் தொடர்ந்தான் என்றால், அவனை இனி ஆண்டவனால்கூடத் திருத்த முடியாது என்று அடித்துச் சொல்லலாம். அந்தத் தொடர்கதைக்கான அறிவிப்பை விகடன் ஆசிரியர் அவர்கள் மவுன்ட்ரோட்டில் ஒரு சினிமா பேனர் அளவுக்குப் பெரியதாக, பிரமாண்டமாக சர்ச் பார்க் கான்வென்ட் அருகில் வைத்திருந்ததாக ஞாபகம். எனக்குத் தெரிந்து வேறு எந்த எழுத்தாளருக்கும் இத்தனை பெரிய கௌரவம் கிடைத்ததில்லை.

விகடனில் சிவசங்கரி எழுதிய மூன்று தலைமுறைக் கதைபாலங்கள் தொடர்கதையும் அந்த நாளில் வாசகர்களிடையே மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றது. மூன்று தலைமுறைக்கும் கோபுலு, மாருதி, ஜெயராஜ் என மூன்று ஓவியர்களைப் படம் போடச் செய்திருந்தார் விகடன் ஆசிரியர். ஒரே தொடருக்கு மூன்று ஓவியர்கள் படம் வரைந்ததுவும் அந்நாளில் ஒரு புதுமை.

சிவசங்கரியை வெறுமே கதாசிரியராக மட்டுமே கொள்ள முடியாது. மிகச் சிறந்த கட்டுரையாசிரியரும் ஆவார்.

இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரைச் சந்தித்து மிக விரிவான தொடர்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நடிகையர் திலகம் சாவித்திரி உடல்நலிவுற்று கோமாவில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் படுத்திருந்தபோது, அவர் கிடந்த கோலத்தைக் கண்ணீர் வரிகளால் கட்டுரையாக்கியிருக்கிறார். கண் தானம் செய்வதன் அவசியம் பற்றி அவர் எழுதிய கட்டுரை அத்தனை அற்புதம்! அதைப் படித்ததுமே விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் முதல் வேலையாக தம் கண்களை தானம் செய்ய எழுதிவைத்தார் என்று சொல்வார்கள். அத்தனை வீரியமுள்ள எழுத்து சிவசங்கரியுடையது. 

இன்றைக்கு நாம் பேசுகிறோமே, திருநங்கைகளுக்கு உரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்று… அதை அந்தக் காலத்திலேயே விரிவாக, திருநங்கைகளின் துயர வாழ்க்கையை அவர்களின் பக்கமாக நின்று கட்டுரையாக்கியிருக்கிறார்.  

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அவரைப் பற்றி.

சமீபத்தில் இரண்டு மூன்று முறை அவரது இல்லத்துக்குச் சென்று அலுவல் நிமித்தமாகப் பேச வேண்டிய சூழல் வந்தது. அப்போதும் மாறாத, அந்தப் பள்ளிச் சிறுவன் மனோபாவத்துடன்தான் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தேன்.

சாவி சாருக்கு 100 வயது பூர்த்தியானதையொட்டி, ஜிம்கானா கிளப்பில் ஒரு சின்ன கெட்டுகெதர் நடத்தினார்கள் சாவி சாரின் அன்பு மகள்கள். என்னையும் அழைத்துப் பெருமைப்படுத்தியிருந்தார்கள். அந்த நிகழ்விலும் திருமதி சிவசங்கரியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். பின்பு, சாகித்ய அகாடமி அமைப்பும் சாவி சாருக்கு விழா ஒன்று எடுத்தது. அதிலும் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்விலும் சிவசங்கரியைச் சந்தித்துப் பேசினேன். இப்படிக் கடந்த ஆண்டில் அவரை ஏழெட்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். என்றாலும், ஒரு கலெக்டருடன் பேசுகிற மரியாதையோடும், ஒரு கல்லூரிப் பேராசிரியரோடு பேசுகிற பயபக்தியோடும்தான் அவருடன் பேசியிருக்கிறேன்.

இந்தச் சந்திப்புகளுக்கெல்லாம் முன்பு, அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், திருமதி சிவசங்கரியிடமிருந்து போன்கால். அதாவது, அப்போலோவில் அவரைச் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசியதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்பு, ரவிபிரகாஷ் என்கிற ஒரு நபரே அவர் நினைவில் பதியாத சூழ்நிலையில், எங்கிருந்தோ என் மொபைல் எண் வாங்கி, என்னைத் தொடர்புகொண்டார் அவர்.

சொல்லுங்க மேடம், என்றதும், கடகடவென மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகப் பேசினார். ஆம், என் வலைப்பூவில் சாவி சார் பற்றி நான் எழுதியிருந்த பதிவுகளைப் படித்துவிட்டுத் தன் பாராட்டுகளைத் தெரிவிக்கவே அவர் போன் செய்திருந்தார்.

சிவசங்கரி மேம் அன்று என்னைப் பாராட்டியதை, முப்பெருந்தேவியருள் முதலாவதான அன்னை உமையாள் பாராட்டியதாகவே உணர்ந்தேன்; நெகிழ்ந்தேன்.

அவர் என்னைப் பாராட்டியது ஒருபக்கம் இருக்கட்டும்; சாவி சார் பற்றி அவர் அப்போது மகிழ்வும் நெகிழ்வுமாகப் பகிர்ந்துகொண்டவை… அந்த நன்றி விசுவாசம், அது ஒரு நல்ல குருவின் மிகச் சிறந்த சிஷ்யைக்கான அடையாளம்!

அதுதான் சிவசங்கரி!




1 comments:

27.12.17 அன்று மாலை 3 மணியளவில், எழுத்தாளர் சிவசங்கரி போன் செய்திருந்தார். இந்தப் பதிவு தன்னை மிகவும் நெகிழ்த்தியதாகச் சொன்னவர், ஒரே ஒரு திருத்தமும் சொன்னார். அவரின் கணவர் வழுதரெட்டியில் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்ததாக ஞாபகம் என்று என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பிவிசி பைப்புகள் தயாரிப்பு நிறுவனம் என்கிற ஞாபகத்தில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அவரின் நிறுவனம் பாலங்கள் கட்டப் பயன்படும் கான்க்ரீட் பைப்புகள் தயாரிக்கும் நிறுவனமாம். தவிர, சாவியின் நூல் வெளியீட்டு விழா நடந்தது காமராஜர் அரங்கத்தில் இல்லை, நாரத கான சபாவில் என்றார். இந்தத் திருத்தங்களை என் பதிவிலும் செய்துள்ளேன். மேலும் அவர் பேசும்போது, அந்த 'ஆடியபாதம்' கதைத் தலைப்பையும் சொன்னார். 'ஒருநாள் காலை ஏழரை மணியிலிருந்து எட்டரை மணிக்குள்...' என்பது தலைப்பு. மிக வித்தியாசமான தலைப்பு. பதிவெழுதுகையில் இந்தத் தலைப்பை நான் மறந்திருந்தாலும், இந்த வித்தியாசமான தலைப்புதான், என் மனதில் ஆழமாகப் பதிந்து, பின்னாளில் நான் கதைகள் எழுதத் தொடங்கும்போது, 'மாடு காத்துக்கொண்டிருக்கிறது' போன்ற வித்தியாசமான தலைப்புகளை வைக்கத் தூண்டியது என நினைக்கிறேன்.. 'சிவசங்கரி' என்கிற பெயர் வெறும் பெயரல்ல; ஒரு கம்பீரத்தின் அடையாளம்; ஓர் ஆளுமையின் குறியீடு!