உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, December 13, 2017

என் வணக்கத்துக்குரிய காதலனே!

Image may contain: 1 person, standing, eyeglasses and outdoor

ன்றைக்கு (12.12.17) எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் நினைவு நாள் என்பதை வேதாகோபாலன் அவர்களின் பதிவு மூலமும், ராஜேந்திர குமாரின் மகன் திரு.நாகராஜ்குமாரின் பதிவு மூலமும் அறிந்துகொண்டேன்.
தொப்பி அணிந்த பிரபலங்கள் என்றதும் எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் தமிழ்வாணன், எம்.ஜி.ஆர்., பாலுமகேந்திரா மற்றும் ராஜேந்திர குமார்.
அப்போதெல்லாம் பத்திரிகைகளில், தொப்பி அணிந்து, தலையைக் குனிந்து, பாதி முகம் மறைந்திருக்க, உள்ளுக்குள்ளிருந்து கூர்ந்து நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற ராஜேந்திர குமாரின் புகைப்படங்கள்தான் வெளியாகும். கிட்டத்தட்ட ஒரு டிரேட் மார்க்காகவே அவர் அந்தத் தொப்பியையும் அந்த போஸையும் வைத்திருந்தார்.
நான் அதிகம் பழகாமல் மிஸ் பண்ணிவிட்டேனே என்று ஜெயகாந்தன் உள்ளிட்ட சில முக்கிய எழுத்தாளர்களை நினைத்து இன்றைக்கும் வருத்தப்படுவதுண்டு. அவர்களில் ராஜேந்திர குமாரும் ஒருவர்.
எனவே, ‘நான் பழகிய எழுத்தாளர்கள்’ வரிசையில் இவரைப் பற்றி எழுத எனக்கு இவரோடு அதிக அனுபவம் இல்லை. ஆனால், இவரை ஒரே ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இவரின் மகன் திரு.நாகராஜ் குமார் என் இனிய நண்பர். சாவி காலத்து நண்பர்.
நான் சாவி பத்திரிகையில் பணியில் சேர்ந்த புதிதில் அங்கே டிடிபி-யில் கம்போஸிங் செய்பவராக நாகராஜ் குமார் பணியாற்றிக்கொண்டிருந்தார். ‘தானுண்டு தன் வேலை உண்டு’ என்று மிக சாதுவாகப் பணியாற்றிக்கொண்டிருப்பார். சாவி சார் என்னை உள்பட அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த எல்லோரையும் திட்டிப் பார்த்திருக்கிறேன். ஆனால், இவரை ஒருமுறையேனும் சாவி சார் திட்டிப் பார்த்ததில்லை. காரணம் இவர் அவ்வளவு பொறுமை; வேலையில் அத்தனை கச்சிதம்!
அப்போது இவர் பிரபல எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் மகன் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால், இவரை அப்போதே சிநேகம் பிடித்து, ராஜேந்திர குமார் அவர்களோடு பழகி, இன்றைக்கு என் பெருமைகளில் ஒன்றாக, ‘நான் ராஜேந்திர குமாரின் அன்புக்குப் பாத்திரமானவனாக்கும்’ என்று நீளமாக ஒரு பதிவு போட்டிருப்பேன். ஹூம்... அதற்கு வாய்ப்பில்லாமல் போனது என் துரதிர்ஷ்டம்!
திரு.ராஜேந்திர குமாரின் எழுத்துக்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன் என்று பொய்யாக எழுத விரும்பவில்லை. அவரின் ‘வணக்கத்துக்குரிய காதலியே’, ‘பைரவன் அழைக்கிறேன்’, ‘நான் ஒரு A' ஆகிய மூன்று நாவல்களை மட்டுமே படித்துள்ளேன்.
‘வணக்கத்துக்குரிய காதலியே’ படிக்கப் படிக்கத் திகட்டாத நாவல். மிக ஜாலியான, சுவாரஸ்யமான எழுத்து நடையில், கதை ஜிலுஜிலுவென்று நகரும். இது பின்னர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி (இரட்டை வேடம்) நடிப்பில் திரைப்படமாகவும் வெளியானது. படத்தையும் நான் பார்த்து ரசித்தேன்.
‘நான் ஒரு A' புத்தகத்தை சாவியின் ‘மோனா’ பப்ளிகேஷன் வெளியிட்டதென்று ஞாபகம். எனவே அதையும் படித்திருக்கிறேன்.
எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் எழுத்தை சாவி சார் சிலாகித்துப் பேசிக் கேட்டிருக்கிறேன். ஆனால், நான் அங்கே பணியாற்றிய கால கட்டத்தில் ராஜேந்திர குமார் சாவியில் எந்தத் தொடர்கதையும் எழுதவில்லை. காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இரண்டு மூன்று முறை அவர் வந்து, சாவி சாருடன் நட்பு ரீதியில் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
பின்னர் நான் சில மாத காலம் அமுதசுரபியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அதன் ஆசிரியர் திரு.விக்கிரமனின் உத்தரவின்பேரில் எழுத்தாளர் ராஜேந்திர குமாரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளேன். ஒரே ஒரு முறை சந்தித்திருப்பதாக ஆரம்பத்தில் சொன்னது அதைத்தான்.
அமுதசுரபிக்கென ஒரு சரித்திரக் கதை எழுதித் தந்திருந்தார் ராஜேந்திர குமார். சரித்திரம் என்றால் நிஜ சரித்திரம் இல்லை. கற்பனைக் கதாபாத்திரங்கள், கற்பனைச் சம்பவங்களால் ஆன கற்பனைச் சரித்திரக் கதை. அதை அவருக்கே உரிய பாணியில் ஜிலுஜிலு நடையில் எழுதியிருந்தார்.கதை என்னவோ எனக்குப் படிக்க ரொம்பவும் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.
ஆனால், சரித்திரக் கதை எழுதுவதில் மன்னரான திரு.விக்கிரமனுக்கு அந்த நடை உவப்பாயில்லை. சரித்திரக் கதைக்கென்றே பிரத்யேகமான ‘புரவிகள்’, ‘கழஞ்சு’, ‘ஜாஜ்வல்யம்’, ‘பொற்கிரணங்கள்’, ‘உதயாதி நாழிகை’, ’நடுச்சாமம்’ போன்ற வார்த்தைகள் ஏதுமில்லாமல் எழுதப்பட்டிருந்ததை சரித்திரக் கதையாகவே அவரால் ஏற்க முடியவில்லை. இப்படியான ‘சரித்திர நடை’யில் அந்தக் கதையை மாற்றி எழுதித் தருமாறு கேட்டு, அந்தப் பிரதியை திரு.ராஜேந்திர குமாரிடம் கொடுத்துவிட்டு வருமாறு என்னை அனுப்பினார்.
அதன்படி நான் போய் திரு.ராஜேந்திர குமாரைச் சந்தித்தேன். அப்போது அவர் வீடு பெசன்ட் நகரில் இருந்ததாக ஞாபகம்.
கதையைக் கொடுத்துவிட்டு, திரு.விக்கிரமன் சொல்லியனுப்பியதை அப்படியே அவரிடம் ஒப்பித்தேன். அப்போது திரு.ராஜேந்திர குமார் என்னைப் பார்த்த பார்வை... ‘ஐயா, நான் சொல்லலை. விக்கிரமன் சார் சொன்னதை அப்படியே வந்து உங்ககிட்ட சொல்றேன்’ என்று தன்னிலை விளக்கம் கொடுக்கலாமா என்று என்னை யோசிக்க வைத்தது.
Image may contain: 1 person, eyeglasses and closeupபுகைப்படங்களில் பார்த்தது மாதிரியே தலையைக் குனிந்து, தொப்பிக்குக் கீழேயிருந்து, மேல்வெட்டாக என்னைக் குறுகுறுவென்று சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் திரு.ராஜேந்திர குமார். நானும் உள்ளுக்குள் நடுக்கத்தோடு அமைதியாகக் காத்திருந்தேன்.
திடீரென்று, “நாகராஜ்... நாகராஜ்... இங்கே வாடா! இவர் என்னவோ சொல்றார். இங்கே வா. எனக்கொண்ணும் புரியலே” என்று சத்தமாகக் குரல் கொடுத்தார்.
அடுத்த அறையிலிருந்து ஓடி வந்தார் திரு.நாகராஜ் குமார். ‘அடேடே, இவர் சாவியில் பணியாற்றியவரல்லவா!’ என்று அப்போதுதான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன்.
“என்னப்பா, என்ன?” என்றார் நாகராஜ்குமார்.
“இவர் என்னவோ சொல்றாரே! இது சரித்திர நடையிலேயே இல்லையாமே? மாத்தி எழுதித் தரச் சொல்றாராமே? ஏண்டா, ராஜேந்திர குமார் ராஜேந்திர குமார் மாதிரிதாண்டா எழுத முடியும்? விக்கிரமன் மாதிரியா எழுத முடியும்? அதுக்கு நான் எதுக்கு?” என்றவர்,
“சரி, நீங்க போங்க! நான் அவர்கிட்ட பேசிக்கறேன்” என்று என்னை அனுப்பிவைத்தார்.
திரு.ராஜேந்திர குமாரை புகைப்படங்களில் சிரித்த போஸில் நான் பார்த்ததே இல்லை. ’உர்ரென்று’ ஒரு குறுகுறுப்பான முக பாவனையோடுதான் காணப்படுவார். நேரிலும் கோப உணர்ச்சியோடுதான் அவரைப் பார்த்தேன். ‘எனக்கு அந்தக் கதையும் நடையும் பிடித்திருக்கிறது. நான் உங்கள் ரசிகன்’ என்று சொல்ல மனமிருந்தாலும், பயத்தில் வாய் வரவில்லை.
“சரி சார்” என்று எழுந்துகொண்டேன்.
அவரின் அறைக் கதவைத் தாண்டியிருப்பேன். “எதுல வந்தீங்க?” என்று கேட்டார். “பஸ்லதான் சார்” என்றேன். “உங்க வீடு எங்கே?” என்றார். “மேற்கு மாம்பலத்தில் சார்!” என்றேன். உடனே, “டேய், இவரை உன் டூவீலர்ல அழைச்சுட்டுப் போய் இவர் வீட்டுல விட்டுட்டு வா!” என்று மகன் நாகராஜ் குமாரிடம் சொன்னார்.
சடக்கென்று திரு.ராஜேந்திர குமார் மீதான இனம்புரியாத பயம் அகன்று, என் மனசுக்குள் அவர் மிக நெருக்கமாக வந்ததுபோல் நெகிழ்ந்தேன்.
நாகராஜ்குமாரிடம் ‘என்னை பெசன்ட் நகர் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுடுங்க. நான் பஸ் பிடிச்சுப் போய்க்கறேன். நீங்க அவ்ளோ தூரம்லாம் வர வேணாம்’ என்று, அவரோடு வந்து இறங்கிக் கொண்டேன்.
இன்றைக்கு, இதோ இப்போது, இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கிற இந்த விநாடியில், ‘திரு.ராஜேந்திர குமார் அவர்களோடு பழகக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோமே’ என்று பரிதவிக்கிறது என் மனம்.
என்ன செய்வது... எல்லா பாக்கியங்களும் எல்லா நேரமும் ஒருவருக்கே கிடைத்துவிடுமா என்ன?!
(திரு.ராஜேந்திர குமாரின் புகைப்படம்: வேதாகோபாலனின் பதிவிலிருந்து சுட்டது - அவரின் முன் அனுமதியின்றி, கோபித்துக்கொள்ள மாட்டார் என்கிற தைரியத்தில், உரிமையில்!)

0 comments: