ச்சோ ச்சூ காங்!
சுரேஷ் தம்பதியின்
வீடு சாங்கி ஏர்போர்ட்டிலிருந்து காரில் 10 நிமிட தூரத்தில் ‘Simei’ ஏரியாவில் இருக்கிறது.
என் மைத்துனர் கண்ணன் வீடு சிங்கப்பூர் வெஸ்ட்டில், ஜுராங் பகுதியில் ‘Choa chu
kang drive’ என்னும் ஏரியாவில் உள்ளது. சும்மா பொழுதுபோகாமல், கூகுள் மேப்பில் இருவர்
அட்ரஸையும் தட்டி, சேட்டிலைட் வியூ பார்த்தேன். சற்றும் அந்த அனுபவத்தை எதிர்பாராமல்,
பிரமித்தேவிட்டேன். முப்பரிமாணத்தில் அந்தந்த இடத்திலேயே என்னைக் கொண்டு நிறுத்திவிட்டது
கூகுள் மேப். அந்த இரு படங்களையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
சுரேஷ் தம்பதியின் வீட்டில் எங்களை
வரவேற்ற அந்தச் சீனப் பணிப்பெண்ணின் பெயர் ஜோயன். பிலிப்பைன்ஸில் அவரின் குடும்பம்
இருக்கிறது. இங்கே குடும்பத்தில் ஒருவராக வீட்டோடு தங்கி, வேலை செய்து வருகிறார். அவருக்கான
பிரத்யேக செலவு என்பது இங்கே இல்லையென்பதால், அவரின் மாத வருமானத்தை அப்படியே முழுசாகக்
குடும்பத்தாருக்கு அனுப்பிவிடுகிறார். இப்படி இங்கே பெரும்பாலான குடும்பங்களில், குடும்பத்தில்
ஒருவராகத் தங்கி வேலை செய்யும் பெண்களைப் பார்க்க முடிகிறது. மற்றபடி, காலையில் வந்து
பத்துப் பாத்திரங்களை மட்டும் தேய்த்துக் கொடுத்துவிட்டுப் போகும் பணிப்பெண்கள் சிங்கப்பூரில்
இல்லை.
சுரேஷின் துணைவியார் ஜெயஸ்ரீ சிறந்த
சமையல்கலை வித்தகி. வீட்டில் அவரேதான் சமையல். மற்றபடி வீட்டை ஒழுங்குபடுத்துவது, கிச்சனை
க்ளீன் செய்வது போன்ற வேலைகளை மட்டும் ஜோயன் செய்கிறார். தமிழ் சரளமாகப் பேச வரவில்லையென்றாலும்,
பேசுவதைப் புரிந்துகொள்கிறார்.
“சரி, நீங்கள் எல்லாரும் இந்த அறையில்
படுத்துச் சற்று நேரம் தூங்குங்கள். 10 மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு, உங்கள் நண்பர்
வீட்டுக்குச் செல்லலாம்” என்றார் சுரேஷ்.
அப்படியே செய்தோம். ஆனால், தூங்கினோமா
இல்லையா என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஒரு மூன்று மணி நேரம் அசதி தீரப் படுத்து
எழுந்தோம்.
பல் விளக்கிவிட்டு வந்ததும், டைனிங்
டேபிளில் சுடச்சுட டிபன் ரெடியாக இருந்தது. கூடவே, கேசரி இனிப்பும்.
“என்ன, இன்னிக்கு ஏதாவது விசேஷ நாளா?
இல்லை, நாங்கள் வந்திருக்கிறதுக்காக கேசரி பண்ணியிருக்கீங்களா?” என்று கேட்டேன்.
“செப்டம்பர் 1, உங்க பையன் பர்த்டே
இல்லியா… அதுக்காகத்தான்!” என்றார் ஜெயஸ்ரீ. சட்டென எங்களை நெகிழவைத்தது அந்த அன்பு.
அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று சிங்கப்பூரிலிருந்து கிளம்பும்வரை எங்கள்மீது இறுக்கமான
வலையாகப் படிந்திருந்தன அந்த அன்பும் அக்கறையும்.
உண்மையில், டிக்கெட் புக் செய்தபோதே
இந்தப் ‘பிறந்த நாள்’ விஷயத்தை நாங்கள் கவனித்துவிட்டோம். ஃப்ளைட்டில் ரஜினியின் (என்
மகன் ரஜ்னீஷ்) பிறந்த நாளைக் கொண்டாடுவோம், உடன் பயணிப்பவர்களுக்கெல்லாம் சாக்லேட்ஸ்
வழங்குவோம், ஆனால், அதற்கு அனுமதிப்பார்களா என்று தெரியவில்லையே என்றெல்லாம்கூட எங்கள்
‘பிக்பாஸ்’ கூட்டத்தில் பேசிக்கொண்டோம். ஆனால், கிளம்புவதற்கு இரண்டு நாள்கள் முன்பு
உடல்நிலை எங்களைப் படுத்தியெடுத்ததில் இந்த பர்த்டே விஷயம் அடியோடு மறந்தேவிட்டது.
அதனால்தான் ஜெயஸ்ரீ கேசரி வழங்கியபோதுகூட இது சற்றும் ஞாபகத்துக்கு வரவில்லை. ஆனால்,
அவர்கள் அதை நினைவில் வைத்திருந்து, ரஜினிக்கு பர்த்டே விஷ்ஷஸ் சொன்ன அந்த நொடியிலிருந்து,
என் மகளும் மகனும் ஜெயஸ்ரீமீது அத்தனை ப்ரியம் வைத்துவிட்டார்கள். சிங்கப்பூரிலிருந்து
திரும்பி வந்ததும் அவர்கள் இருவரும் ஒன்றுபோல, “சிங்கப்பூரைவிட்டு வந்ததுகூட அவ்வளவு
வருத்தமாவோ ஏக்கமாவோ தெரியலைப்பா… ஜெயஸ்ரீ ஆன்ட்டியையும் அவங்க ஃபேமிலியையும் விட்டு
வந்ததுதான் என்னவோபோல் இருக்கு. ரொம்பவே மிஸ் பண்றோம் அவங்களை!” என்று மனதின் ஆழத்திலிருந்து
சொன்னது, ஜெயஸ்ரீ தம்பதியின் அன்புக்குச் சான்று.
டிபன் சாப்பிட்டு முடித்ததும், கிளம்பத்
தயாரானோம். “மறுபடியும் சொல்றோம்… அங்கே தங்கற இடத்துல உங்களுக்கு ஏதாவது கஷ்டம்னா,
யோசிக்கவே யோசிக்காதீங்க. உடனே இங்க கிளம்பி வந்துடுங்க. ரெண்டொரு நாள்தானே… அட்ஜஸ்ட்
பண்ணிக்கலாம்!” என்றார்கள். தொடர்ந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு சிங்கப்பூர்
டாலர்களை பல டினாமினேஷன்களில் கொடுத்தார் சுரேஷ். அங்கே லோக்கலில் தொடர்புகொள்வதற்காக
சிங்கப்பூர் சிம்கார்டு ஒன்றைக் கொடுத்தார் ஜெயஸ்ரீ. கூடவே, நான்கு ஈஸிலிங்க் கார்டுகளையும்
தந்தார்.
ஏடிஎம் கார்டு மாதிரி உள்ள இதை வாங்கி
வைத்துக்கொண்டால் சிங்கப்பூரில் எம்.ஆர்.டி. ரயிலில், பஸ்ஸில் என எதில் வேண்டுமானாலும்
பயணம் செய்யலாம். மூன்று டாலருக்குக் குறைந்தால், டாப் அப் செய்துகொள்ள வேண்டும். டாப்
அப் மெஷின்கள் ஒவ்வொரு எம்.ஆர்.டி. ஸ்டேஷன்களிலும் உள்ளன.
எந்தவொரு ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்தாலும்,
கீழேயே பஸ் ஸ்டாப் இருக்கிற மாதிரியான ஒரு செட்டப் இருப்பதால், சிங்கப்பூரில் போக்குவரத்துக்குப்
பிரச்னையே இல்லை. எங்கே வேண்டுமானாலும் சுலபமாகப் போய்விட முடிகிறது. யாரையும் விசாரிக்க
வேண்டிய அவசியமும் இல்லை. ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் துல்லியமான எம்.ஆர்.டி வழித்தட
மேப் வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மொத்தமும் நான்கு வழித்தடங்களால் கவர் செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாவது வழித்தடமும் பூர்த்தியாகும் நிலையில் இருந்தது. நாம் எங்கே இருக்கிறோம், எங்கே
போக வேண்டுமோ அந்த இடத்துக்கு எந்த வழித்தடத்தில் ரயில் ஏறி, எந்த ஸ்டேஷனில் தடம் மாற
வேண்டும் என எல்லாமே துல்லியமாய்க் கொடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் போயிருந்த சமயத்தில்
‘சிங்கப்பூர் எக்ஸ்போ’ நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தவறாமல், சிங்கப்பூர்
எக்ஸ்போவுக்குப் போக விரும்புகிறவர்கள் எங்கே இறங்கி, எந்தத் தடத்தில் வண்டி மாற வேண்டும்
எனத் துல்லியமாக, தமிழ் உள்பட நான்கு மொழிகளில் கணினிக் குரல் விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தது.
தரைக்கு அடியில் மூன்று தளங்களில்
பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர உயரமான எஸ்கலேட்டர்களில் ஏறி இறங்கிக்கொண்டே
இருந்தோம், அங்கிருந்த நாட்களில் எல்லாம். ஒவ்வொரு பிளாட்பாரத்துக்குள் நுழையும்போதும்
டோல்கேட்போல் தடுப்புக் கதவு திறப்பதற்கு, அதன் பிடியில் உள்ள ஸ்கேனரில் நமது ஈஸிலிங்க்
அட்டையை வைத்தால், பண இருப்பு எத்தனை உள்ளது என்பது டிஜிட்டலாக ஒளிர்கிறது. பின்பு
வெளியேறும்போதும் அதேபோல் வைத்தால், அதுவரை பயணித்ததற்கான தொகையைக் கழித்துக்கொண்டு
மீதியைக் காட்டுகிறது. நமது சென்னை மெட்ரோவிலும் இதே பாணிதான் என்று அறிகிறேன். நான்
இதுவரை இங்கே மெட்ரோவில் பயணித்ததில்லை.
பஸ்ஸிலும் கண்டக்டர் என்று யாரும்
இல்லை. ஏறுகிற வழியிலேயே உள்ள பாக்ஸில் நமது ஈஸிலிங்க் கார்டை வைத்து ஸ்கேன் செய்துவிட்டு
உள்ளே செல்ல வேண்டும். இறங்கும்போதும் அதேபோல் செய்தால், அதுவரை பயணித்த தொகை மட்டும்
கழிக்கப்படும். மறந்துவிட்டாலோ, அந்த பஸ் செல்லும் கடைசி டெர்மினஸ் வரைக்குமான தொகை
கழிக்கப்பட்டுவிடும்.
இந்த விஷயத்தையெல்லாம், கூடவே எங்களுடன்
ஒருநாள் வந்து சொல்லிக்கொடுத்தவர் என் மைத்துனர் கண்ணன் அவர்களின் துணைவி கீதா. போன
வருடம் பெங்களூரில் நடந்த அவர்களின் மகன் திருமணத்தில் பிஸியாக இருந்தவரை, அதிகம் அறிமுகம்
இல்லாத நிலையில் கூட்டத்தோடு கூட்டமாகப் பார்த்ததற்குப் பிறகு இப்போதுதான் முதன்முறையாக
இத்தனை அணுக்கமாகப் பார்க்கிறோம்; பழகுகிறோம். ஆனால், புதியவர் என்கிற எண்ணமே தோன்றாதவாறு
மிக நீண்ட நெடுங்காலம் பழகியவர்போன்று, கண்ணன் தம்பதி எங்களை வரவேற்று, அன்புடன் உபசரித்தார்கள்.
அன்பு, அக்கறையில் சுரேஷ்-ஜெயஸ்ரீ
தம்பதியும் கண்ணன்-கீதா தம்பதியும் ஒருவருக்கொருவர் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. “அங்கே
தங்கற இடத்துல உங்களுக்கு ஏதாவது கஷ்டம்னா, யோசிக்கவே யோசிக்காதீங்க. உடனே இங்க கிளம்பி
வந்துடுங்க” என்று சுரேஷ் தம்பதி சொன்ன அதே வார்த்தைகளை இங்கே கண்ணன் தம்பதியும் வார்த்தை
மாறாமல் சொன்னது ஓர் ஆச்சர்யம்!
உண்மையில், எங்களின் சிங்கப்பூர்
பயணம் திட்டமிட்டபடி வெற்றிகரமாகவும் இனிமையாகவும் நடந்து முடிந்தது இந்த இரு தம்பதியின்
அன்பான கவனிப்பால்தான் என்பதில் சந்தேகமில்லை.
சுரேஷ் கேப் புக் செய்தார். இங்கேயுள்ள
உபர் அங்கேயும் உள்ளது. அது தவிர, Grab என்னும் கேப் சர்வீஸும் உள்ளது. புக் செய்த
10 நிமிடங்களில் கேப் வந்துவிட்டது.
கடைசி மூன்று நாள்களுக்கான எங்களின்
துணிமணிகளை மட்டும் ஒரு ட்ராவல் பேகில் போட்டு இங்கேயே வைத்துவிட்டு, மற்றவற்றை எடுத்துக்கொண்டு,
மீண்டும் 6-ம் தேதி சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
ஜுராங் பகுதியில் உள்ள ‘ச்சோ ச்சூ
காங் டிரைவ்’ முகவரியை டிரைவரிடம் மொபைலில் காட்டியதும், அதை அவர் தன் மொபைலில் ஏற்றி,
ஜி.பி.ஆர்.எஸ்ஸில் வழி தெரிந்துகொண்டு, காரைக் கிளப்பினார்.
காலையில் சிங்கப்பூர் ஏர்போர்ட்
வந்து இறங்கியதுமே கண்ணனின் மொபைலுக்குத் தொடர்புகொண்டு, இங்கே நண்பரின் வீட்டில் சிறிது
நேரம் தங்கி ரெஸ்ட் எடுத்துவிட்டு, 12 மணிக்குள் அங்கு வந்துவிடுகிறோம் என்று சொல்லியிருந்தேன்.
டாக்ஸி கிளம்பியதும் மீண்டும் அவருக்கு போன் செய்து வந்துகொண்டிருப்பதைத் தெரியப்படுத்தினேன்.
மதியம் 1 மணி சுமாருக்கு கண்ணன்
அவர்களின் இல்லத்தை அடைந்தோம். அங்கே…
(பயணம் தொடரும்)
0 comments:
Post a Comment