உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, December 10, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்... கலர்ஃபுல் மலேசியா! - 8

மேக வனாந்தரமும் பூ மண்டபமும்!

நைட் சஃபாரி முடிந்து, இரவு 12 மணி சுமாருக்கு டாக்ஸியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். 

சிங்கப்பூரைப் பொறுத்தவரை மிகப் பாதுகாப்பான நகரம் என்று எல்லாருமே புகழ்ந்து சொல்கிறார்கள். காரணம், இங்கிருக்கிற சட்ட திட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்தும் விதமும்தான். ‘நடு இரவு 12 மணிக்கு இளம்பெண் ஒருத்தி உடம்பு முழுக்கத் தங்க நகைகள் அணிந்துகொண்டு, சற்றும் பயமின்றித் தெருவில் என்றைக்குப் பாதுகாப்பாக நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்’ என்று காந்திஜி சொன்னது, சிங்கப்பூர் நிலவரத்தைக் கேள்விப்பட்டதால் இருக்குமோ என்று தோன்றுகிறது.

சிங்கப்பூரில் டிராஃபிக் ஒழுங்கு அத்தனை சுத்தம். விதிமீறலை எங்கேயும் ஒரு புள்ளியளவுகூடக் காண முடியவில்லை. நாங்கள் அன்றைய இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அதிகம் போக்குவரத்து இல்லை. காரணம், நாங்கள் அப்போது இருந்தது ‘ஹார்ட் ஆஃப் த சிட்டி’ இல்லை; சிங்கப்பூரின் மேற்கு முனை.

ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடந்துகொண்டிருந்தபோது, தெருவில் வேறு எந்த வாகனமும் காணப்படவில்லை. ஆனாலும், அந்த நேரத்தில் எங்கள் டாக்ஸி சட்டென்று வேகம் குறைந்தது. 

எங்களுக்குக் காரணம் புரியவில்லை. ‘பெட்ரோல் காலியா? போடப்போகிறாரா?’ என்று யோசனையோடு எதிரே பார்த்தபோதுதான் விஷயம் விளங்கியது.

சிக்னலில் ஆரஞ்சு ஒளிர்ந்து, சிவப்புக்கு மாறியது. தெருவில் ஈ காக்கா இல்லை. ஆனாலும், வண்டியை நிறுத்திவிட்டார் டிரைவர். அந்தச் சில விநாடிகளில் எங்கள் காரின் பின்னால் இன்னும் இரண்டு மூன்று கார்கள் வந்து நின்றன. யாரும் தங்கள் டிராக்கிலிருந்து மாறி, மூக்கை நீட்டிக்கொண்டு முன்னால் வரவில்லை. ஹாரன் சத்தமும் எழுப்பவில்லை. அவர்களும் அமைதியாகக் காத்திருந்தார்கள்.

சிக்னலில் பச்சை விழுந்ததும் காரைக் கிளப்பினார் எங்கள் டிரைவர். இந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இருப்பதால்தான் வாகன விபத்துகள் இல்லா தேசமாக இருக்கிறது சிங்கப்பூர்.

இன்னொன்றையும் கவனித்தேன்… அங்குள்ள டாக்ஸிகள் எல்லாமே பார்ப்பதற்குப் புத்தம்புதுசாக இருந்தன. எதன் உடம்பிலும் ஒரு சின்ன கீறல் இல்லை. முன்பக்கமோ பின்பக்கமோ டொக்கு இல்லை. வண்டி ஓடும்போது ஒரு சின்ன ஜெர்க் இல்லை; உறுமல், உதறல் இல்லை. எந்த வாகனத்திலிருந்தும் ஒரு துளியளவு வேண்டாத சத்தமோ புகையோ வெளியேறவில்லை. இத்தனைக்கும் பல வண்டிகள் ஏழெட்டு வருஷங்களாக ஓடிக்கொண்டிருப்பவை.

நாங்கள் பயணிக்கிற கார்களின் மீட்டர்களைப் பார்ப்பது என் மகனின் வழக்கம். ஒவ்வொன்றும் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கிலோமீட்டர்கள், இரண்டு லட்சத்துச் சொச்சம் கிலோ மீட்டர்கள் என்று காட்டியதைப் பார்த்து வியந்து, “அப்படித் தெரியவே இல்லையே!” என்றான்.

இன்னொரு விஷயம்… அங்கு நாங்கள் இருந்தவரையில் (லிட்டில் இந்தியா பகுதி தவிர) வேறெங்கேயும் கார்களோ, பஸ்ஸோ ஹாரன் சத்தம் எழுப்பிக் கேட்கவேயில்லை. தேவையில்லாமல் ஹாரன் சத்தம் எழுப்புவதை முன்னால் போகும் வாகனத்தின் டிரைவரையோ, பிளாட்பாரத்தில் நிற்பவர், நடப்பவரையோ டீஸ் செய்வதாக அங்குள்ள டிரைவர்கள் கருதுகிறார்கள். ஹாரன் ஒலிப்பதற்கான தேவையே இல்லாமல் வாகனங்கள் அனைத்தும் அதனதன் ஒழுங்கில் இயங்கிக்கொண்டிருப்பதுதான் சிங்கப்பூரின் அழகு!

ஆரஞ்சு சிக்னல் விழுந்தவுடனேயே வண்டியை ஸ்லோ செய்து நிறுத்துவதற்குத் தயாராகிவிடுகிறார்கள். சிவப்பு விழுவதற்குள் தாண்டிவிட வேண்டும் என்று நம்மூர்க்காரர்கள்போல் வேகத்தைக் கூட்டுவதில்லை. இந்த ஒழுங்கு, பாதசாரிகளிடமும் இருக்கிறது. வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது தாங்களே டிராஃபிக் கான்ஸ்டபிள்களாக மாறி, கையை உயர்த்திக் காட்டி, நிறுத்தும் சைகை செய்துகொண்டே, தடதடவென்று குறுக்கில் பாய்வதில்லை. சிக்னலில் வண்டிகள் நின்றாலும்கூட, தாங்கள் கிராஸ் செய்வதற்கான பச்சை சிக்னல் விழுந்தால் ஜீப்ரா கிராஸிங்கில் இறங்கி நடக்கிறார்கள்.

சிங்கப்பூரில் சொந்தமாக கார் வாங்கி வைத்துக்கொள்வதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள், நிபந்தனைகள் இருக்கின்றன. பெரும்பாலான பணக்காரர்களிடமும் அங்கே சொந்தமாக கார் இல்லை. காரணம், மாசுக் கட்டுப்பாடு. ஆளாளுக்குக் கார் வாங்கி வைத்துக்கொண்டு ஓட்டினால், பொல்யூஷன் ஏற்பட்டுவிடும் என்கிற பயம்தான் முக்கியக் காரணம். எனவே, எம்.ஆர்.டி. டிரெயினையும், பஸ்களையும் ஊக்குவிக்கிறது அந்த அரசு.

காற்று மாசுவில் இத்தனை கெடுபிடியாக இருக்கும் அந்த அரசு, சிகரெட் புகைக் கட்டுப்பாட்டில் தீவிரமாக இல்லை என்பது ஒரு முரண். பொது இடங்களில், பார்ப்பவர் எல்லாம் பக் பக்கென்று சிகரெட்டை ஊதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். எந்த டாக்ஸிக்குள் ஏறினாலும் சிகரெட் நெடி மூச்சு முட்டுகிறது!

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்.

மறுநாள் காலையில் நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி, நேரே பொட்டானிக்கல் கார்டன் போனோம். 150 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கார்டன் என்றார்கள். என்ட்ரி ஃப்ரீ. மிகப்பெரிய ஏரியா. நடந்துகொண்டே இருந்தோம். அங்கே புதிதாக ஏதுமில்லை. வழக்கமாக நம்ம ஊட்டி, கொடைக்கானல், ஏற்காட்டில் பார்த்தவைதான்.

மதியம் 2 மணி போல் வீடு திரும்பி, சாப்பிட்டுவிட்டு, மாலை 4 மணி போல் கிளம்பினோம். எங்களுடன் கண்ணன் தம்பதியும் சேர்ந்துகொண்டனர்.

நேரே ‘கார்டன்ஸ் பை தி பே’ என்னும் பகுதிக்குப் போனோம். தமிழில் ‘வளைகுடாத் தோட்டம்’ எனலாம். இந்தப் பகுதியில்தான் கிளார்க் க்வே ரிசார்ட்ஸ், சூதாட்ட அரங்கம் காஸினோ, கிளவுட் ஃபாரஸ்ட், ஃப்ளவர் டோம், ஓஸிபிஸி ஸ்கை வே, மெரினா பே சாண்ட்ஸ், மெர்லின் பார்க் என சிங்கப்பூரின் முக்கிய அட்ராக்‌ஷன்கள் எல்லாம் சுற்றிச் சுற்றி அமைந்துள்ளன.

பளபளக்கும் அலுமினிய உடம்போடு இரண்டு ராட்சத மீன்கள், கடலிலிருந்து சற்று வெளித்தெரிவதுபோல் காணப்படும் இரண்டு பெரிய டூம்களில் ஒன்றில் கிளவுட் ஃபாரஸ்ட்டும், மற்றொன்றில் ஃப்ளவர் டோமும் அமைந்துள்ளன. உள்ளே போய் வர எங்கள் நாலு பேருக்கும் என்ட்ரி ஃபீ மொத்தம் 120 சிங்கப்பூர் டாலர். நம்ம ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 6000.

கிளவுட் ஃபாரஸ்ட்டின் உள்ளே செயற்கை வனாந்தரம் அமைக்கப்பட்டிருக்கிறது. செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் உயரத்திலிருந்து கொட்டிக்கொண்டிருக்கிறது. மொத்த இடமும் மிதமாகக் குளிரூட்டப்பட்டிருந்தது. 

அது முடிந்து அப்படியே அடுத்துள்ள ஃப்ளவர் டோமுக்குப் போனோம். ஏராளமான பூச்செடிகள், பொம்மைகள்… பொம்மைக் காய்கறித் தோட்டம் ஒன்று இருந்தது. கம்பியாலேயே முறுக்கி முறுக்கிச் செய்யப்பட்ட ஒரு குதிரையும் ரதமும் இருந்தன. சுவாரஸ்யமான இடம்தான்.

இந்த இரண்டு டூம்களுக்கும் நாங்கள் ஏற்கெனவே சுரேஷ் ஜெயஸ்ரீ தம்பதி மூலம் டிக்கெட் புக் செய்திருந்ததால், அவற்றுள் நாங்கள் மட்டுமே போய்ப் பார்த்து வந்தோம். கண்ணன் தம்பதி வெளியே வளைகுடாத் தோட்டத்தில் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர். நாங்கள் வெளியே வந்ததும், கண்ணன் தம்பதி எங்களுக்காக ஓஸிபிஸி ஸ்கை வாக் டிக்கெட் வாங்கி வைத்துக் காத்திருந்தார்கள்.

செயற்கை ராட்சச மரங்கள் போல் உயர உயரமாக எழுப்பி, வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது ஒஸிபிஸி ஸ்கை வாக். உள்ளே போனோம். டிரம்ஸ் இசை அதிர அதிர, அதற்கேற்ப செயற்கை மரங்கள் நிறம் மாறி மாறி ஒளிர்ந்தது மிக மிக ரசனையான காட்சி! அதன் மேலே ஏறிச் செல்லவும் பாதை உண்டு. அங்கே ஒரு மணி நேரம்போல் இருந்திருப்போம். இன்னும்கூட இருக்கலாம்தான்!

அதன்பின், சூதாட்ட நகரமான ‘காஸினோ’வுக்கு எங்களை அழைத்துச் சென்றார் கண்ணன். அவர்கள் உள்ளே வரவில்லை. காரணம், சிங்கப்பூர்வாசிகள் உள்ளே நுழைய, ஒருவருக்கு 200 டாலர் கட்டணமாம். டூரிஸ்ட்டுகளுக்கு பாஸ்போர்ட் காண்பித்தால் போதும், என்ட்ரி ஃப்ரீ! எனவே, நாங்கள் மட்டும் உள்ளே போனோம், வேடிக்கை பார்க்க! தங்கள் சொந்த தேசத்தவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுப் பணத்தை இழக்கக்கூடாது என்கிற நல்ல எண்ணம் சிங்கப்பூர் அரசுக்கு!

பால்கனி வளைவு பாதையிலிருந்து கீழே பார்த்தால், தகதகவென ஜொலித்துக்கொண்டிருந்தது அரங்கம். கீழே இறங்கி, ஒவ்வொரு டேபிளாகப் புகுந்து புகுந்து வந்தோம். சீட்டுக்கட்டில் தொடங்கி, பின்பால், அது இது என விதம்விதமான ஆட்டங்களில் டாலர்களைப் பந்தயம் வைத்து ஆடிக்கொண்டிருந்தார்கள் ஏராளமானோர்.

ஓரிடத்தில், உயரே விதானத்திலிருந்து தடதடவென்று நீர்வீழ்ச்சிபோல் ஹாலில் தண்ணீர் கொட்டி, நதி போல ஓடிக்கொண்டிருந்தது. சூப்பர் செட்டப்!

அங்கே அரை மணிக்கு மேல் எங்களுக்கு வேலை இல்லை; பார்க்கவும் ஏதுமில்லை. வெளியேறினோம். மணி இரவு 9 ஆகியிருந்தது.

“இப்போ இங்கே லேசர் ஷோ ஒண்ணு காண்பிப்பான். பார்த்துட்டுக் கிளம்பிடலாம்” என்றார் கண்ணன்.

வாசலில் சற்றுத் தூரம் நடந்தால் சிங்கப்பூர் நதி வருகிறது. செயற்கையாக உண்டாக்கப்பட்ட நதி. அதன் கரையில், சிமென்ட் தளங்களில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஆவலுடன் நம்ம ஊரில் தெருக்கூத்து பார்ப்பதுபோல் துண்டை விரித்து அமர்ந்திருக்கிறார்கள்.

லேசர் ஷோ தொடங்கியது. அதுவரை மென்மையாக ஒலித்துக்கொண்டிருந்த இசை அதிர்ந்து வேகம் பிடிக்க, நீருக்குள் பதிக்கப்பட்டிருந்த  குழாய்கள் வழியாக தண்ணீர் பீய்ச்சியடிக்க… அங்கே ஒரு நீர் நடனம் ஆரம்பமாகியது.

இசையின் தாள கதிக்கேற்ப ஃபவுண்டெய்ன்கள் நீரை விதம் விதமாக வளைத்தும் நெளித்தும் பொழிய, ஏதோ மாயாஜாலக் காட்சி போன்ற உணர்வு.

எதிரே தூரத்தில் ஸ்கைபார்க் ஓட்டலின் மாடியிலிருந்து லேசர் கதிர்கள் சிவப்பும் பச்சையும் நீலமுமாய் இந்த நீரூற்றின்மேல் விழ, நீர் நடனம் கலர்ஃபுல்லாக மாறியது. வெறுமே வண்ணங்களாக மட்டுமில்லாமல், அதில் ஆண் பெண் உருவங்களும் தோன்றி நடனமாடும் காட்சிகள் உண்டாயின.

அரைமணி நேரம் போல் பார்த்திருப்போம். அடுத்த காட்சி எப்போது என்று அந்த நீரூற்று ஒளிக்காட்சியிலேயே எழுத்துக்கள் தோன்றி, சுபம் போட்டதும், அங்கிருந்து கிளம்பினோம்.

(பயணம் தொடரும்)


0 comments: