இன்று (12.12.17) குமுதம் எடிட்டர் அமரர் எஸ்.ஏ.பி அவர்களின் பிறந்த நாள் என்பதை எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்களின் முகநூல் பதிவு மூலம் அறிந்தேன்.
'நான் பழகிய எழுத்தாளர்கள்' வரிசையில் வைத்து எழுதும் அளவுக்கு திரு.எஸ்.ஏ.பி-யுடன் நான் அதிகம் பழகியதில்லை. ஆனால், அவர்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்த என் ஆசான் பத்திரிகையுலகப் பிதாமகர் சாவி அவர்கள் சொல்லி, திரு.எஸ்.ஏ.பி-யின் அருமை பெருமைகளை அறிந்திருக்கிறேன். தவிர, எஸ்.ஏ.பி. அவர்கள் மறைந்த 1994-ம் ஆண்டில், அவரைப் பற்றி 'எடிட்டர்' என்னும் தலைப்பில் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கட்டுரை வாயிலாகவும் திரு.எஸ்.ஏ.பி. பற்றி அறிந்திருக்கிறேன். மேலும், என் மரியாதைக்குரிய நண்பர் அமரர் திரு.பாக்கியம் ராமசாமி அவர்கள் மூலமாகவும் எஸ்.ஏ.பி அவர்களின் பெருமைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
நான் திரு.எஸ்.ஏ.பி அவர்களை நேரில் சந்தித்துப் பேசியது ஒரே ஒருமுறைதான். அந்த ஒரே சந்திப்பே, அவர் எத்தகைய மாமனிதர் என்பதை உணர்ந்துகொள்ளப் போதுமானதாக இருந்தது.
அப்போது 'சாவி' பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தமுடியாமல் பொருளாதார ரீதியாக நிறைய சிரமங்களை அனுபவித்து வந்தார் சாவி. நான் இந்தப் பத்திரிகை தொடர்ந்து நடக்குமா, என் எதிர்காலம் என்ன ஆகும் என்று பயந்து, தவித்து, குமுதத்தில் வேலை கேட்கலாம் என்ற உத்தேசத்தில், அப்போது குமுதம் பொறுப்பாசிரியராக இருந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மூலமாக திரு.எஸ்.ஏ.பி அவர்களை குமுதம் அலுவலகத்தில் சந்தித்தேன்.
"குமுதத்தில் சேர விரும்புவதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார் எஸ்.ஏ.பி.
"சாவி இதழ் தொடர்ந்து நடக்குமா என்று தெரியவில்லை. என் எதிர்காலத்தை உத்தேசித்தே இங்கே சேர விரும்புகிறேன்" என்றேன்.
"ஒருவேளை, அதை அவர் தொடர்ந்து நடத்துவதாக இருந்தால் இங்கே சேருவீர்களா?" என்று கேட்டார்.
"மாட்டேன். அங்கே எனக்கு எந்தக் குறையும் இல்லை. அவர் சாவி இதழைக் கண்டிப்பாகத் தொடர்ந்து நடத்துவார் என்றால், அவரிடமேதான் வேலை செய்வேன்" என்று என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னேன்.
எஸ்.ஏ.பி. அவர்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தார். ஒரு புன்னகையுடன் திரும்பி அருகில் இருந்த சுஜாதாவைப் பார்த்தார்.
'இவனையெல்லாம் நம்பி எப்படி வேலைக்கு எடுப்பது?' என்று எண்ணுகிறாரோ, என்று நான் அவரின் அந்தப் புன்னகைக்கு அர்த்தம் செய்துகொண்டேன்.
"சரி, நீங்க இங்கே வந்துட்டா, சாவி பத்திரிகையை யார் கவனிச்சுப்பா?" என்று கேட்டார் எஸ்.ஏ.பி.
"அடுத்த சில வார காலம் சாவி சாரே பார்த்துப்பார். அப்புறம் மூடிடுவார். சில காலம் கழிச்சு எடுக்க வேண்டிய முடிவை, இதைச் சாக்கிட்டு உடனே எடுத்துடுவார். ஏன்னா, இப்போதைக்கு எடிட்டோரியலில் சாவி சாரும் நானும் மட்டும்தான் இருக்கோம்" என்றேன்.
எஸ்.ஏ.பி. யோசனையில் ஆழ்ந்தார். பிறகு "சமீபத்துல ஒரு ஏழெட்டு நாளைக்கு முன்னால சாவி சாரை ஒரு ஃபங்ஷன்ல பார்த்தேன். பத்திரிகையை நடத்த முடியாம சிரமப்படறதைப் பத்திச் சொன்னார். எனக்கு ரொம்பவும் பிடித்த பத்திரிகை சாவி. அதனால நான் அவர்கிட்டே, 'சார், பிரதிகள் விற்பனை குறைவா இருக்குங்கிறதுக்காக பத்திரிகையை நிறுத்திடாதீங்க. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷம், உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காக 2000-மாவது வருஷம் வரைக்குமாவது இதை நீங்க தொடர்ந்து நடத்தணும்னு கேட்டுக்கறேன்'னு அவரிடம் சொன்னேன். அவர் சிரிச்சுக்கிட்டே 'ஆகட்டும். நீங்க இப்படிச் சொன்னதே எனக்குச் சந்தோஷமா இருக்கு. எஸ்.ஏ.பி என்கிற பெரிய வாசகருக்காகவே இதை நான் நடத்தறேன்'னு உற்சாகமா சொன்னார். அப்படியிருக்கும்போது, இப்போ நான் உங்களை இங்கே வேலைக்கு எடுத்துக்கிட்டா அது நல்லாருக்குமா? 'ஏய்யா... 2000 வரைக்கும் சாவியை நடத்தணும்னு எங்கிட்ட சொன்ன கையோடு, என்கிட்டே இருக்கிற ஒருத்தனையும் பிடுங்கிக்கிட்டா எப்படி?'னு சாவி சார் கேட்டா, நான் என் மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வெச்சுப்பேன்?" என்றார்.
எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அமைதியாக அவரே ஒரு முடிவு சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.
"சரி, நீங்க போய் பழையபடியே அவர்கிட்டே உற்சாகமா வேலை செய்யுங்க. அவர் எப்போ பத்திரிகையை மூடறாரோ, அப்போ வாங்க. உங்களுக்கான இடம் எப்பவும் இங்கே காலியா இருக்கும்" என்றார்.
அதுதான் எஸ்.ஏ.பி.
அதன்பின் அடுத்த ஆண்டே, பொருளாதார நெருக்கடிகளால் சாவி இதழைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டார் சாவி. ஏற்கெனவே கடும் சிரமத்தில் இருந்த அவரின் கோபத்தைத் தூண்டுவதுபோல் நான் என்னையறியாமல் நடந்துகொண்டுவிட்டேன் என்பதும் ஒரு காரணம். எஸ்.ஏ.பி அவர்கள் அதற்கு முன்பே அமரராகிவிட்டதால், அதன்பின் அங்கே செல்ல விரும்பாமல், ஆனந்த விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியனுக்கு இரண்டே வரிகளில் என் நிலையைத் தெரிவித்து வேலை வாய்ப்பு கேட்டேன். அவர் உடனே என்னைச் சேர்த்துக்கொண்டார். அதன்பின் ஒருநாள், "உங்களை இங்கே வேலையில சேர்த்துக்கறதுக்கு முன்னாடி சாவி கிட்டே கேட்டேன், 'பையன் எப்படி, ஊக்கமா வேலை செய்வானா?'ன்னு. அவர் உடனே, "தங்கமான பையன். அவனை நீங்க வேலைக்கு எடுத்துக்கிட்டீஙகன்னா அவன் உங்களுக்கு ஒரு 'அஸெட்'டாகவே இருப்பான்'னு உங்களைப் பத்தி ரொம்பவும் புகழ்ந்து சொன்னார்" என்றார். எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! ஏனென்றால், என்மீது சாவி சார் கடுங்கோபத்தில் இருப்பார் என்றுதான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் அதையெல்லாம் மறந்து என்னைப் பற்றி உயர்வாக விகடன் சேர்மனிடம் சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்தபோது என் கண்கள் கலங்கியேவிட்டன.
எத்தகைய மாமனிதர்களுடன் பழகியிருக்கிறேன் என்கிற நினைப்பு ஒன்றே போதும், இந்த என் ஜென்மத்தை அர்த்தமுள்ளதாக்க!
0 comments:
Post a Comment