உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, December 24, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 11

மனம்கவர் மலேசியா! 
சாப்பிட்டுவிட்டுக் கிளம்பியதும், திரு.முனியசாமி எங்களை அழைத்துச் சென்ற இடம் ஓர் அரண்மனை. இஸ்தானா நெகரா என்னும் பெயர் தாங்கிய அது, முன்பு மன்னரின் அரண்மனையாக இருந்து, பிறகு மியூஸியமாக மாற்றப்பட்டதாகச் சொன்னார் முனியசாமி.

அதன்பின், அவர் எங்களை லேக் கார்டனுக்கு அழைத்துச் சென்றார். மிகப் பரந்த இடம். அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய. ஆனால், என் மகனுக்குக் காலையில் பஸ்ஸில் வரும்போதே காய்ச்சல் அடிக்க ஆரம்பித்திருந்தது. அது போகப்போக அதிகரித்து, ஒரு கட்டத்தில் அவனால் கொஞ்சம்கூட நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. முந்தின நாள் சதர்ன் ரிட்ஜஸில் ரொம்ப தூரம் நடந்த களைப்பு வேறு சேர்ந்துகொண்டதில், அவன் மிகவும் சோர்ந்துபோய், ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டான். எனவே, அங்கே அதிக நேரம் செலவழிக்காமல், உடனே கிளம்பிவிட்டோம்.

ஒரு மெடிக்கல் ஷாப்பில் போய் டோலா 650 மாத்திரை இருக்குமாவென்று விசாரித்தோம். இல்லை. இங்கே சென்னையில் கிடைக்கும் மாத்திரைகள் எதுவும் அங்கே கிடைக்கவில்லை. அதனால், ஜுரத்துக்கு ஏதாவது மாத்திரை கொடுங்கள் என்று ஒரு மெடிக்கல் ஷாப்பில் கேட்டோம். Panadol என்று ஒரு மாத்திரை அட்டையை எடுத்துக் கொடுத்தார்கள். அதில் ஒன்று போட்டுக்கொண்டான் ரஜ்னீஷ். அதன்பின், ஒரு மணி நேரம் கழித்துக் காய்ச்சல் விட்டு, கொஞ்சம் தெளிவும் தெம்பும் பெற்றான்.

அதன்பின் நாங்கள் சென்ற இடம், தேசிய மசூதி. உள்ளே தொழுகை நடந்துகொண்டிருந்ததால், எங்களால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. வெளியே நின்று போட்டோக்கள் மட்டும் எடுத்துக்கொண்டு, அருகிலேயே இருந்த மலேயாவின் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனோம். பார்ப்பதற்கு மும்பை சத்திரபதி டெர்மினல் மாதிரி இருந்தது.

அங்கிருந்து, இண்டிபெண்டன்ஸ் ஸ்கொயருக்கு எங்களை அழைத்துச் சென்றார் முனியசாமி. சில தினங்களுக்கு முன்புதான் அங்கே மலேசியாவின் சுதந்திர தினம் தடபுடலாகக் கொண்டாடப்பட்டதாகச் சொன்னார். அதாவது, ஆகஸ்ட் 31-ம் தேதியன்று.

1957-ல் ஆகஸ்ட் 30-ம் தேதியன்று, நம்மைப் போலவே நள்ளிரவில்தான் மலேசியாவுக்கும் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. மறுநாள் காலையில், ஒரே தூணால் ஆன தூண்களில் உலகிலேயே உயரமான இந்தக் கொடிமரத்தின் உச்சியில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு, மலேசியக் கொடி பறக்கவிடப்பட்டதாம். இதை மெர்டெக்கா சதுக்கம் என்றும் அழைக்கிறார்கள். மெர்டெக்கா என்றால், மலேய மொழியில் சுதந்திரம் என்று பொருள். அந்த மெர்டெக்கா சதுக்கத்தின் ஒரு பக்கத்தில் மலேசிய அமைச்சர்களின் படங்கள் வரையப்பட்டு, பார்வைக்குக் கிடைத்தன.

அங்கிருந்து நாங்கள் கிளம்பிச் சென்ற இடம், மிகப் பிரசித்திபெற்ற கோலாலம்பூர் டவர். உலகின் உயரமான ஏழாவது கோபுரம் இது என்று சொல்கிறார்கள். ஒலி-ஒளிபரப்புக்காகக் கட்டப்பட்ட டெலிகம்யூனிகேஷன் டவராம் இது. முனியசாமிதான் சொன்னார்.

கிட்டத்தட்ட நாங்கள் அங்கு போகும்போது இருட்டிவிட்டது. மணி 7 இருக்கலாம். இருங்க, டிக்கெட் வாங்கிட்டு வரேன் என்று போனார் முனியசாமி. அதுவரைக்கும் கீழே இருந்த கடை கண்ணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் டிக்கெட்டுடன் வந்ததும், பெற்றுக்கொண்டு லிப்டுக்குச் சென்றோம். 1380 அடி உயரத்துக்கு எங்களை அழைத்துச் சென்றது லிப்ட். உச்சியில் உள்ள கூண்டில் சுற்றி வர நடந்து, மலேசியாவை முழுதாகச் சுற்றிப் பார்த்தோம். அங்கிருந்த கடைகளில் யாதொன்றையும் வாங்கவில்லை. வாங்கும்படியாக எதுவும் இல்லை. கீ செயின்கள், செல்போன் கேஸ்கள், கோலாலம்பூரின் மினியேச்சர் பொம்மைகள் இப்படியாக நிறைய இருந்தன. எனவே, சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு, சிலபல போட்டோக்கள் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினோம்.

இங்கே மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இந்த மாதிரி அட்ராக்‌ஷன்களுக்குப் போனாலே, நம்மை அவர்கள் கேள்வியே கேட்காமல் பளிச் பளிச்சென்று போட்டோ எடுத்துவிட்டு, திரும்பி வரும்போது நம் படத்தை அலங்காரமாக ஷோகேஸில் வைத்திருக்கிறார்கள். பெருமையாக நின்று ஒரு பார்வை பார்த்தால் போதும், அதை எடுத்து வம்படியாக நம் தலையில் நம்ம ஊர் மதிப்பில் ரூ.300, ரூ.400 விலையில் கட்டிவிடுகிறார்கள். இரண்டு இடங்களில் ஏமாந்து வாங்கிவிட்டேன். ஏமாந்து என்று சொன்னதற்குக் காரணம் அதிக விலை என்பதல்ல; புகைப்படத்தின் தரம் மிகச் சுமார் என்பதுதான்.

டவரிலிருந்து கீழே வந்ததும், முனியசாமி எங்களுக்காகக் காத்திருந்தார். கீழேயே ஒரு ரவுண்டு சுற்றி வந்தோம். அதன்பின், நாங்கள் சென்ற இடம், மலேசியாவின் லேண்ட்மார்க்கான பெட்ரோனாஸ் ட்வின் டவர்.

ட்வின் டவருக்குப் போய்ச் சேருவதற்குள், இங்கே கே.எல்.டவருக்கு வரும் வழியில் நாங்கள் பார்த்த ஓர் இடத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

அது, தலைகீழ் வீடு. வெளியிலேயே மோரிஸ் மைனர் கார் ஒன்று அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது. கேட்டுக்கு உள்ளே, வீட்டையே தலைகீழாகக் கவிழ்த்து வைத்தாற்போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருந்தது அந்த வீடு. நேரமாகிவிட்டதால், உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. உள்ளே போனால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றார். அறைகள் எல்லாம்கூட உல்டாவாக, கட்டில்கள், படுக்கை எல்லாம் மேலே தலைகீழாகவும், ஃபேன் போன்றவை தரையிலுமாக திருப்பி டிசைன் செய்யப்பட்டிருக்கும்; அங்கே நின்று போட்டோ எடுத்துக்கொண்டால் விசித்திரமாக இருக்கும் என்றார். அதற்கு எங்களுக்குக் கொடுப்பினை இல்லை.  

இதோ, பெட்ரோனாஸ் டவர் வந்துவிட்டது. 2004-ம் ஆண்டு வரைக்கும் இதுதான் உலகிலேயே உயரமான டவராக இருந்திருக்கிறது. அதன்பிறகு, உலகில் புர்ஜ் கலீபா போன்ற மகா உயரமான கட்டங்கள் எல்லாம் வந்துவிட்டாலும், இந்த ட்வின் டவருக்கான மகத்துவம் குறையவில்லை. இன்றைக்கும் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகவே இருக்கிறது மலேசியாவின் இந்த பெட்ரோனாஸ் டவர்.

திங்கள்கிழமைகளில் அங்கு அனுமதி கிடையாது. நாங்கள் போனது திங்கள்கிழமையில்தான் என்பதால், மேலே ஏறிச் சென்று பார்க்க இயலவில்லை. தவிர, நன்றாக இருட்டியும்விட்டபடியால், கீழே இருந்தபடியே புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.

எங்களை ஸ்டார்பாயின்ட் என்னும் ஹோட்டலில் இறக்கிவிட்டார் முனியசாமி. காலைல 8 மணிக்கெல்லாம் டிபன் சாப்பிட்டுவிட்டுக் கீழே ரிசப்ஷனுக்கு வாங்க. சரியா 9 மணிக்கெல்லாம் கிளம்பிடலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.  

அறை வசதியாக, தாராளமாகத்தான் இருந்தது. நாலு பேர் தங்கிக்கொள்ளும்படியான இம்மாதிரி அறைகளை quard room என்கிறார்கள்.

படுப்பதற்கு முன், சுமார் 8:30 மணியளவில் பொடிநடையாக நடந்து, அருகில் இருந்த ஓர் உணவகத்தில் டிபன் சாப்பிட்டோம். சிங்கப்பூர் போலில்லாமல், இங்கே மலேசியாவில் நம்ம ஊர் இட்லி, தோசை, பூரியெல்லாம் பரவலாகக் கிடைக்கிறது. சென்னையோடு ஒப்பிடும்போது விலை சற்று அதிகமே தவிர, சிங்கப்பூரின் பயமுறுத்தும் விலைவாசி இல்லை.  

இந்த ஓட்டலிலிருந்து சற்றுத் தள்ளி, ஒரு நாற்சந்தியைக் காட்டி, அங்கே நின்று பார்த்தால் கோலாலம்பூர் டவர் ஒளிவெள்ளத்தில் ஜெகஜ்ஜோதியாகத் தெரியும் என்று சொல்லியிருந்தார் முனியசாமி. எனவே, டிபனை முடித்துக்கொண்டு, அவர் சொன்னபடியே அங்கே சென்று பார்த்தோம். உண்மையிலேயே வண்ண விளக்கொளிகளின் அலங்காரத்தில், உயரமாக, கம்பீரமாக நின்றிருந்த கோலாலம்பூர் டவர் கண்ணுக்கு அழகான விருந்தாகக் கிடைத்தது. புகைப்படம்தான் எடுக்க முடியவில்லை.

இரவு, கைகால் எல்லாம் அசதியில் கெஞ்ச, வெகு சீக்கிரமே உறங்கிப்போனோம்.

(பயணம் தொடரும்) 

0 comments: