காக்கா-வடை-நரி கதையை புஷ்பா தங்கதுரை, சுஜாதா, கண்ணதாசன் ஆகியோர் எழுதினால் எப்படி இருக்கும்?
புஷ்பா தங்கதுரை:
கரிச்சான் நொண்டியாகிச் சரிந்து, அந்த நேரம் ஒரு கிழவியின் கோபத்திற்கு ஆளாகிக்கொண்டு இருந்தது.
சிறுவர்கள் பள்ளியின் மணி ஒலிக்கேற்ப யந்திரகதியாக இயங்கத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
கருவாலி மரத்தின் மேல் கிளையில் அமர்ந்துள்ள காகத்தினை நீங்கள் பார்ப்பதற்குள், அதனைப் பற்றிய சிறு குறிப்பு:
அந்தக் காகத்திற்குக் கரிச்சான்குஞ்சு என்று அலையஸ் உண்டு. கடைசியாக அடித்த புயலின்போது, பக்கத்து ஊரிலிருந்து தனியாகப் பறந்து வந்தது.
கரிச்சானுக்குச் சில பின்புற நடவடிக்கைகள் உண்டு. புயலுக்குப் பின் இங்கு வந்து சேர்ந்ததும், அது மிகவும் தாராளமாகக் கருவடாம் கடத்தலில் ஈடுபட்டது. அம்மரம் அதற்கு ஏகபோகம்.
பின்னாட்களில் அவ்வூர்க் காக்கைகளின் பெரும்புள்ளிகளோடு விருந்தும் சாப்பிட்டிருக்கிறது.
கருவடாம் கடத்தலில் சில சில்லறைச் சங்கடங்கள் ஏற்பட்டதால், அப்பளம் கடத்தலில் ஈடுபட்டது. குடும்பங்களில் இது பிரபலமாகும் முன்பே பல வீடுகளிலிருந்து அப்பளங்களை அகற்றியது. அது இத்தொழிலில் இறங்கிய நாட்களில் இப்படி ஒரு மோசடி நடக்கிறதென்பதே அங்கு யாருக்கும் தெரியாது. அப்பாவி குடும்பஸ்தர்கள்.
இங்கே இந்தக் கருவாலி மரத்தினில் நித்தியவாசத்திற்கு வந்த பின், பழைய சுவர்க்கங்களை நினைத்துச் சோகமாக வாழ்வதுடன், விட்ட குறை தொட்ட குறையாகச் சில சில்லறைக் கடத்தல்களை - வடை கடத்தல் அதற்கு ஸ்பெஷாலிட்டி - செய்து, ஓரமாக ஒரு சின்ன உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது.
- அந்த ஆளு யாரப்பா? தமனகன்னு பேர் சொன்னான். சோப்ளாங்கின்னு நெனைச்சா மடி மேல கை வைக்கிறானே?
- என்னா செஞ்சான்?
கேட்டது கிரீவ். தூய பெயர் கிரீவன். கழுத்திலும் கறுப்பு மின்னியது. மொஸைக் உடம்பு. வயிறு பம்மென்று வீங்கி, நீண்ட வால் கறுப்பு சுக்கான்.
- வடையை ராவிக்கினு வந்தேன்ல..?
- ஆமா!
- துண்ணலாம்னு இருந்தேன். பாடச் சொல்லி ஐஸ் வெச்சான் இந்த ஆளு!
- வடையைப் பறிக்கத் திட்டம் போட்டிருப்பானோ?
- தெரியாது. நம்பளை ஆழம் பார்க்கணும்னு டூப் அளக்கறானோ என்னவோன்னு, நான் வாயையே தொறக்கலே!
- ஒருவேளை, புகழ்ச்சியில் மயங்கி பாடியிருந்தேன்னு வெச்சுக்க...
- அந்தச் சந்தேகம் எனக்கும் தோணுச்சு. அதனால்தான் வடையைக் கீழே உழுந்துடாம பத்திரமா ஒரு கிளையிலே வெச்சேன். அப்புறம் பாடினேன்.
ஆமாம். பாடியது. தமனகன் ஏமாந்து ஓட, கிரீவ் கரைந்து சிரிக்க, கரிச்சான் வடையைச் சுவைக்க ஆரம்பித்தது.
சுஜாதா:
அதை விருட்சம் என்றோ, மரம் என்றோ சொல்ல முடியாது. ஒரு தாவரம். அவ்வளவுதான்! பள்ளிக் கட்டடத்துக்கு உட்பட்டது. பஞ்சாயத்து சார்பில் அதற்குக் கிடைத்திருப்பது 1/2’ x 1/2’ சதுர வெட்டுப் பள்ளத்தில், வெள்ளைப் பெயின்ட்டடித்துக் கறுப்பில் எண்.
இதிலிருந்து பத்தடி தள்ளி பாப்பம்மாள் இட்லிக் கடை இருக்கிறது. கடையின் சாமுத்ரிகா லட்சணங்கள்... புகை படிந்த தகரம் - அடுப்புக்குத் தடுப்பாகப் பயன்படுவது - ஓரிரண்டு வாழை இலை, மந்தார இலைச் சுருள்கள், சின்ன பெட்டி போன்ற சமாசாரம், அதனுள் பக்கத் தடுப்பில் சில்லறை நாணயங்கள், மத்தியில் அருள்பாலித்துக்கொண்டு முருகர். மரத்துக்குப் பக்கத்தில் கையலம்புதலின் ஈர அடையாளங்கள்.
மதிய நேரம்... மணி சரியாக ஒன்று; இல்லை, ஒன்று பத்து! காகம் ஒன்று மெல்லியதாய் சீட்டியடித்துக்கொண்டு, டைவடித்துக் கடையினை நெருங்கியது.
பாப்பம்மாள் அதே சமயம் வேறு புறம் திரும்ப, எதிரே ஸ்ரீசூர்ணம் இட்டிருந்தவர், “அம்மா, அந்தால பாருங்க, காக்க” என்றார்.
பாப்பம்மாள் சட்டென்று உஷாராகி, கையில் கிடைத்ததை எடுத்து ஆக்ரோஷத்துடன் ஒரு வீசு வீச, ‘ஷ்ஷ்ஷ்க்க்க்க்’ என்று அந்தக் கல் காற்றைக் கிழித்துக்கொண்டு போய் காக்கையின் மண்டையில் பட்டுத் தாக்க, உள்ளே இலவச வைரங்கள் ஜொலித்தன. மண்டைக்குள் ஜாஜ்வல்யமாக வலித்தது. அந்தக் காகம் மிச்சமிருந்த தன் ரிஃப்ளெக்ஸ் செயல்பாடுகளில் உடம்பை உதறிக்கொண்டு பறந்து போய் ஒரு கிளையில் லேண்ட் ஆக, பாம்மாவுக்கு ஒரு வடை இழப்பு! ஸ்ரீசூர்ணாச்சாரி வாயெல்லாம் சிரித்தார்.
எட்ட இருந்த ஒரு நரி, மௌனமாகக் கிட்டே வந்து நின்று, காக்கையிடம் இன்ஸ்டன்ட் காதல் கொண்டது. அதன் கன்னங்களில், குட்டிப் பருவத்தில் சாப்பிட்ட முயல் மாமிசங்களின் உபயம் தெரிந்தது. தடித்த உதடுகள். மார்பு புஷ்டியாக வளர்ந்திருந்தது.
“மிஸ் காக்... ஐ மீன், காக்கா! யு ஆர் ஸோ பியூட்டிஃபுல்! உங்க சாங்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸோ...”
வடையைக் வாயில் கடித்தபடியே சின்னதாகக் கர்ர்ர்ரிட்டது காகம்.
“...எனக்காக நீங்க இப்பவே ஒரு பர்ஃபாமென்ஸ் கொடுக்கணும்.”
நரி வஞ்சத்தில் புகழ, காகத்தின் உணர்வு நரம்புகளில் வேகம் உற்பத்தியாகித் துடிக்க, கீழே நரி வடையை எதிர்பார்த்துக் காத்திருக்க, அலகினைத் திறந்து பாடியது அப்பாவிக் காகம்.
பூமியின் கிரேவிட்டி பவரில் சரசரவென்று கீழே வந்த வடையைக் கப்பென்று பிடித்துக்கொண்டது நரி. தட்சணமே பெரும் ஓட்டமெடுத்து ஓடத் தொடங்கியது. எதிர்ப்பட்ட பாறை மீது தாவிக் குதித்து, விழுந்து கிடந்த மர நீட்டலின் மீது ஓடி, சரிந்து எழுந்து, பக்கத்தில் சரேலென்ற திருப்பத்தில் வளைந்து மறைந்தது.
ம்ஹூம்... இந்த நரிக்கு விமோசனமே கிடையாது!
கண்ணதாசன்:
வாழ்க்கை எதிலே ஓடிக் கொண்டிருக்கிறது?
அடுத்தவனை ஏமாற்றிப் பிழைப்பதில் சிலருக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நதி, ஆடி வெள்ளம் வரும்போது கரையேறி ஊரை அழிக்கிறது; அடுத்தவனை ஏய்ப்பதில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை, ஆடி அலைந்து ஓய்ந்து போய் அமரப்போகும் வயதில் அலைக்கழிக்கிறது.
பாவத்தின் அளவு எவ்வளவோ அவ்வளவே தண்டனையின் அளவும் என்பது உண்மை!
ஒரு நடைபாதையில் நீ ஒரு கண்ணாடித் துண்டைப் போட்டால், நீ திரும்பி வரும்போது அது உன் காலிலேயே குத்துகிறது; நீ மற்றவனை ஏமாற்றினால், தெய்வம் உன்னை ஏமாற்றுகிறது.
சிறு வயதில் படித்த கதை ஞாபகமிருக்கலாம்.
அடுத்தவரை ஏய்த்துத் திருடிக்கொண்டு வந்த வடையை ஒரு காகம் தின்ன முற்படுகையில், நரி வருகிறது.
நேரில் ஒருவனைப் புகழ்வதும், மற்றவரிடத்து இவனை இகழ்வதும் எத்தர்கள் செய்கின்ற வேலை. அதை நரி செய்கிறது.
நரியின் பேச்சில் மயங்கிய காகம், நரி கேட்டுக்கொண்டதற்கிணங்க வாயைத் திறந்து பாடுகிறது.
தன்னைத் தூக்கிப் பார்க்கும் கசாப்புக் கடைக்காரன், தன்னை எதற்காகப் பார்க்கிறான் என்று தெரியாத வரை ஆடு ஆனந்தம் கொள்கிறது.
தேர்தல் நேரத்தில் தங்களைப் புகழ்ந்து பேசும் அரசியல்வாதி, தங்களை எதற்காகப் புகழ்கிறான் என்று தெரியாத வரையில் மக்களுடைய ஓட்டுக்கள் அவனுக்கே கிடைக்கின்றன.
ஏமாற்றுகிறவன் அகப்பட்டதைச் சுருட்டுகிறான்; ஏமாறுகிறவன் விவரம் புரியாமல் விழிக்கிறான்.
காகம் ஏமாற்ற நினைத்தது; தானே நரியிடம் ஏமாந்து நின்றது.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது முன்னோர்கள் சொல்லி வைத்த பாடம். அதை விளக்குவதற்காக அவர்கள் எழுதி வைத்த புராணங்கள் அனந்தம்.
தவறு செய்தவன் இந்திரனே ஆனாலும், தண்டனை உண்டு என்கிறது இந்து மதம். இதை எளிதில் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட கதைதான் இந்தக் ‘காக்கையும் வடையும்’ கதை.
இது வெறும் கற்பனைக் கதையல்ல; பெரும் தத்துவ விதை!
‘ஏமாற்றுவோர்க்குத்தான் காலம்’ என்கிற அர்த்தம்தானே இக்கதையில் கிடைக்கிறது என்று குதர்க்க வாதம் செய்வதில் அர்த்தமில்லை.
‘இத் தவறை நீ செய்யாதே’ என்று நேரடியாகச் சொல்லித் திருத்துவது ஒரு முறை; இத் தவறை இவர்கள் செய்ததால் இந்த நிலைக்கு ஆளானார்கள் என்று சுட்டிக்காட்டித் திருத்துவது ஒரு முறை!
ராவணனின் பெண்ணாசையே அவன் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறது ராமாயணம். துரியோதனன் வீழ்ச்சி அவனது மண்ணாசையால் விளைந்த விளைவே என்கிறது மகாபாரதம். பிறரை ஏமாற்ற நினைத்தால், நீ ஏமாந்து போவாய் என்கிறது இக் கதை.
நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள் முட்டாள்கள் அல்ல! கஷ்டத்திலும் நேர்மையாக இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே!
உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்!
Saturday, August 01, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அசத்திட்டீங்க ரவிபிரகாஷ், ரொம்ப நுணுக்கமான கவனிப்புகள், பொறுமையாக மீண்டும் தட்டச்சு செய்து இங்கே கொடுத்ததற்கு நன்றி!
- என். சொக்கன்,
பெங்களூர்.
பொதுவாக பாராட்டு என்பதே ஊக்கம் தருவதுதான். அதிலும், பதிவிட்ட அடுத்த சில விநாடிகளிலேயே நீங்கள் அதைப் படித்துப் பாராட்டிப் பின்னூட்டம் இட்ட வேகமானது எனக்குப் பத்து மடங்கு, நூறு மடங்கு ஊக்கம் தருவதாக உள்ளது! நன்றி! நன்றி!!
அனைத்தும் அருமை. அதுவும் கண்ணதாசன் கலக்கல்.
உங்கள் வாசிப்பு அனுபவனத்திற்கு இது ஒரு tiny sample.
Xlent..
வாழ்த்துகள்.
+ பட்டர்ஃப்ளைஜி! கண்ணதாசன் நடையை நீங்கள் போன பதிவின்போதே எதிர்பார்த்திருந்தீர்கள் என்பதால், அது தங்களுக்குப் பிடிக்கவேண்டுமே என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். தங்கள் பாராட்டு எனக்கு உற்சாகம் தருகிறது.
+ அ.நம்பி! தங்களை மனமார வரவேற்கிறேன். பாராட்டி ஊக்கப்படுத்தியதற்கு நன்றி!
+ தங்களுக்கும் என் நன்றி சத்யா!
Post a Comment