உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, August 26, 2009

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்’ என்று பாரதி போல் என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால், பாரதிக்கு ஏழெட்டு மொழிகள் தெரிந்திருக்கும். எனக்குத் தமிழை விட்டால் வேறு நாதி இல்லை. இதை அங்கலாய்ப்புடன் சொல்கிற தொனியில் படிக்க வேண்டாம். ‘கடவுளை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை’ என்று ஒரு பக்தன் சொல்கிற தொனியில் படிக்கவும்.

தமிழ் தமிழ்தான்; தாய் தாய்தான்!

ஆனால், தமிழை ஏதோ தாங்கள்தான் தாங்குகிற மாதிரி சில அரசியல்வாதிகள் அவ்வப்போது கிளம்பி, சில ஸ்டண்ட் வேலைகளில் இறங்குகிறார்கள். (தமிழ்ப் படத்துக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று கலைஞர் மு.கருணாநிதி அறிவித்ததும் அப்படியான ஸ்டண்ட்தான். ஆனால், நாகேஷ் போடுகிற மாதிரி இது ஒரு காமெடியான ஸ்டண்ட்!) வேறு பரபரப்பான பிரச்னைகள் எதுவும் கிடைக்காதபோது, அவர்கள் இந்தத் தமிழாயுதத்தை ஏந்திக் கொள்கிறார்கள். ‘ஆஹா... பாரதியே சொல்லிவிட்டான், மெல்லத் தமிழினி சாகும் என்று’ எனத் தொண்டை கிழிய வறட்டுக் கூச்சல் போடுகிறார்கள்.

பாரதி உண்மையில் சொன்னது என்ன? ‘தமிழ்த் தாய்’ என்னும் தலைப்பில், ‘ஆதிசிவன் பெற்றுவிட்டான்...’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் சில வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

இதற்கு நான் தனியாகப் பதவுரை சொல்லத் தேவையில்லை. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.


1996-ல், கடைகளின் பெயர்ப் பலகைகளில் கட்டாயத் தமிழ்; ரயில் வண்டிகளின் பெயர்களைத் தமிழாக்கம் செய்தல் (எம்.ஜி.ஆரும் தமது ஆட்சியின்போது தன் தமிழ்ப் பற்றை வெளிக்காட்டும்பொருட்டு ஒரு கப்பலுக்குத் ‘தமிழ் அண்ணா’ என்று பெயர் வைத்து காமெடி ஸ்டண்ட் அடித்தார்!) எனத் தமிழ் மொழியை வளர்ப்பதில்(!) தடாலடியாக இறங்கினார், அன்றைய தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன்.


அதையொட்டி அப்போது ஜூனியர்விகடனில் நக்கலாக நான் எழுதிய கட்டுரை கீழே:


லுவலக வேலையாக வெளிநாடு போனவன், சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு இன்றுதான் சென்னை திரும்புகிறேன். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.


“ஐயா! தானியங்கி ஊர்தி வேணுங்களா?” என்றபடி அருகில் வந்து நின்றார் ஒருவர்.


“அப்படின்னா... டாக்ஸியாப்பா?” என்றேன் குழப்பத்தோடு.


“இல்லை ஐயா! அது வாடகை இயந்திர ரதம் ஆச்சுங்களே!” என்றவர் என் காதில் குனிந்து, “நம்மது ஆட்டோ ரிக்‌ஷாங்க. இங்கிலீஷ்ல சொன்னா எங்க ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துடுவாங்க” என்று கிசுகிசுத்தார்.


ஏறிக் கொண்டேன். “அளக்கும் கருவிக்கு மேலே அஞ்சு பணம் போட்டுக் கொடுங்க” என்றார் தானியங்கி ஊர்தி ஓட்டுநர்.


வீட்டுக்கு வெறுங்கையுடன் போக வேண்டாமே என்று வழியில் ஒரு கடை முன் நிறுத்தச் சொன்னேன்.


“என்னங்க வேணும்? புகையிலைச் சுருளா, உலர்ந்த ரொட்டிப் பொட்டலமா?” என்றார் கடைக்காரர்.


“பிஸ்கட் பாக்கெட் இருந்தா கொடுங்க” என்றேன்.


“அதைத்தான் ஐயா, உலர்ந்த ரொட்டிப் பொட்டலம் என்றேன். கடைப் பெயர்களை மாத்திரமல்ல, கடையில் விற்கிற பொருள்களின் பெயர்களையும் தமிழில்தான் சொல்லி விற்க வேண்டும் என்பது உத்தரவு. இல்லேன்னா எங்க விற்பனை உரிமத்தை ரத்து செய்துடுவாங்க” என்றார் கடைக்காரர்.


“ஜூஸ் ஏதாவது இருக்குங்களா?” என்றேன், காய்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டு.


“பழரசம்ங்களா? கொஞ்சம் தள்ளிப்போனா ஒரு அங்காடி இருக்குங்க. அங்க கிடைக்கும். இங்க எங்கிட்ட வெறும் புட்டித் திரவம் மட்டும்தாங்க இருக்கு” என்றார்.


சற்றுத் தள்ளி ஒரு கடையின் முகப்பில், ‘சரவணாவின் வேக உணவு’ என்று பெயர்ப் பலகை தெரிந்தது. ‘இதுவாக இருக்குமோ’ என்று உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரு பலகையில் ‘இன்றைய சிற்றுண்டி’ என்று எழுதி, ‘மாவுப் பணியாரம்’, ‘அப்ப வருக்கம்’ என்றெல்லாம் விநோத தின்பண்டங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. தலைசுற்றிக் கிறுகிறுத்து, வெளியேறி நடந்தேன்.


அடுத்த கடையின் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். ‘இலக்குவன் அற்ப ஆகாரம் மற்றும் தேநீர் குடிசை’ என்று எழுதப்பட்டிருந்தது.


உள்ளே நுழைந்து, “அற்ப ஆகாரம் என்னங்கய்யா இருக்கு?” என்று விசாரித்தேன்.


“வெண்ணெய் ரொட்டி, இனிப்பு ரொட்டி, பழக்கூழ்... என்ன வேணும் சொல்லுங்க?”


“பழரசம் இருக்குமா?”


“பழரசம் பக்கத்துக் கடை. இங்கே வெறும் கொட்டைவடிநீரும், இலைவடிநீரும் மட்டும்தான் கிடைக்கும்” என்றார் டீ மாஸ்டர். அதாவது, தேநீர் தலைவர்.


பக்கத்துக் கடை - ‘கதிர் குழம்பியகம்’.


“என்ன இருக்கு?” - பயந்த குரலில் விசாரித்தேன்.


“எல்லாம் இருக்குங்க. என்ன வேணும், சதைப்பற்றுப் பழமா, சர்க்கரைநாரத்தையா?”


எனக்குத் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.


“அது வேண்டாம்னா சொல்லுங்க... இனிப்புத் தயிர் போட்டுடலாம்!”


ஒரு வேகத்தில், அது என்ன பண்டம் என்று புரியாமலே, ஆனது ஆகட்டும் என்ற தைரியத்தில், ‘சரி’ என்று சொல்லிவிட்டேன். கடைசியில், அவர் கலந்து நீட்டியது... அட! நான் விரும்பிச் சாப்பிடும் லஸ்ஸி!


தானியங்கி ஊர்தியில் ஏறி அமர்ந்தேன். கடந்து சென்றது ஒரு பஸ். அதைத் தொடர்ந்து ஒரு கார். அவற்றின் நம்பர் பிளேட்டுகளில் ‘கக-அ’, ‘கஅ-யோ’ என்றெல்லாம் விசித்திரமாக எழுதப்பட்டிருந்தன.


“என்னங்கய்யா இது?” என்றேன் ஆட்டோ ஓட்டுநரிடம், மிரட்சியாக.


“அதுங்களா... பேருந்து, மகிழுந்து இதிலெல்லாம் வண்டி எண்களைத் தமிழில்தான் எழுதணும்னு உத்தரவு. நம்ம தானியங்கி ஊர்தியின் எண் பலகையிலும் தமிழில்தான் எழுதியிருக்கு. கவனிக்கலீங்களா?” என்றார்.


ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். வீட்டு எண் 96 என ஆட்டோ டிரைவரிடம் சொல்லியிருந்ததால், அவரே சரியாக ௯௬ என்று கதவிலக்கம் எழுதப்பட்டிருந்த வீட்டின் முன் கொண்டு வந்து இறக்கிவிட்டார்.


உள்ளே என் மனைவி என் மகனின் கற்பலகையில், “௮-வும் ௨-வும் கூட்டினா ௧0. ௭-வும் ௩-வும் கூட்டினா என்ன வரும், சொல்லு?” என்று கணிதம் கற்பித்துக்கொண்டு இருந்தாள்.


எனக்குத் தலையே சுற்றி, ‘ஓ’வெனக் கத்த ஆரம்பித்தேன்.


என்னை உலுக்கி எழுப்பிய என் மனைவி, “ஏன் இப்படி நடு ராத்திரியில கத்தி டிஸ்டர்ப் பண்றீங்க?” என்று சிடுசிடுத்தாள்.


டிஸ்டர்ப்..? அப்பாடா!

.

7 comments:

அருமையான பதிவு. ஆனால் இப்போது சில கடைகளில் மட்டுமே (சென்னையில்)சுத்த தமிழில் பெயர் பலகைகளை காண முடிகிறது. தங்கள் பதிவை படிக்கும்போதே நான் சிரித்துக்கொண்டிருந்ததால் வீட்டில் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். மெட்ராஸ் பாஷையை பற்றியும் ஒரு பதிவு போடுங்க சார்.

ரேகா ராகவன்.
 
அருமை! அருமை!
கடைசி வரி “டிஸ்டர்ப்” “அப்பாடா” எத்தனை பேருக்குப் புரிஞ்சுதோ?
அதாகப்பட்டது தனித் தமிழால் குழம்பிய ஒருவர் நிகழ்காலத்துக்கு வந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவதை இரண்டே வார்த்தைகளில் சொல்லி அசத்திட்டீங்க.
என்னைப் பொருத்த வரை நீங்க இன்னொரு ரா.கி.ரங்கராஜன்.... அவரையும் விடக் கூடுதல் எழுத்தாற்றலுடன்!
 
/
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
/

தமிழ் இனி மெல்ல சாகும்னு சொல்றவங்க வசதியா மேல இருக்கிறத எல்லாம் விட்றுவாங்க :)))))))

தூய தமிழ் பற்றிய உங்கள் கட்டுரை சூப்பர்ப்!
 
திரு.ரேகா ராகவன்,
கொங்கு தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ், மதுரைத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் எல்லாம் எப்படி என்னை வசீகரிக்கின்றனவோ, அதே அளவுக்கு சென்னைத் தமிழும் என்னை வசீகரிக்கவே செய்கிறது. கட்டாயம் எனக்கே அப்படி ஒரு பதிவு இடவேண்டும் என்று ஆசை இருக்கிறது. பார்ப்போம்.

திரு.லதானந்த்ஜி,
உங்க பின்னூட்டத்தில் திடுக்கென்று எதையாவது வரிகளைப் போட்டு என்னைத் திகிலடைய வைத்துவிடுகிறீர்கள். அசத்திட்டீங்க என்பதோடு நிறுத்தியிருக்கலாம். அடுத்த மூணு வரி என்னை மூச்சுத் திணற வைக்குது. எப்படி அதை எடிட் பண்றதுன்னும் தெரியலே!

திரு.மங்களூர் சிவா!
தூய தமிழ் பற்றிய உங்கள் கட்டுரை சூப்பர்ப்! ஆங்கிலத்தில் பாராட்டு. குசும்புதானே இது!
 
வாத்யாரே.... பின்னிடிங்க.. மெய்யாலுமே நல்லாகுது...

(நான் மெட்ராஸ்காரன்)
 
"KAANAVILLAI-SRI.RAVIPRAKASH- MIDDLE AGED - WHEETISH COMPLEX-
SINCE THE MIDLE OF AUGUST 2009 THE GENTELMAN IS NOT TRACEABLE - FOUNDER CAN PLEASE CONTACT 'BLOG UNGAL RASIGAN' AND WHO WILL BE AWARDED WITH PORGIZHI'

Suppamani
 
தெலுங்கு கருணாநிதிக்கு தமிழ் அழிந்தால் மகிழ்ச்சியாகும் !

இராமேசுவரத்தில் கடைகளில் தமிழ் பெயர்ப்பலகைகளே கிடையாது எல்லாமே இந்தி மொழி தான் !

சென்னையில் கடைகளில் தமிழ் பெயர்ப்பலகைகளே கிடையாது எல்லாமே ஆங்கிலம் தான் !

கர்நாடகாவில் கன்னடம் இல்லாமல் கடைகள் நிற்குமா ?

நிற்கவே வாய்ப்பில்லை !

தமிழ் அழிகிறது !

கன்னடம் செழிக்கிறது !

தமிழ்கத்தில் முதலில் ஒரு தமிழ் முதலமைச்சர் வந்தால் நன்று !

தெலுங்கு நடிகர்கள் வந்தால் தமிழ் இல்லாமல் போகும் !