உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, August 16, 2009

நா ஒரு மாதிரி! (பாகம் 2)

சென்ற பதிவின் தொடர்ச்சி...கிரீஸ் கறை, ஆயில் கறை லட்சணங்கள் உள்ள எனது காக்கிச் சீருடையை மாட்டிக்கொண்டு ஆயுத சகிதம் கிளம்பியபோதுதான் அந்தத் தபால் என் முன் விசிறப்பட்டது. புக் போஸ்ட்!

எடுத்துப் பிரித்தேன். சுஜா என்கிற சுஜாதாவுக்கும், ராகி என்கிற ராதாகிருஷ்ணனுக்கும் சுபயோக சுபதினம் பார்த்து நடத்தி வைக்கப்படுகிற கல்யாணத்துக்கான அழைப்பிதழ்! ஒன்று அடிக்கவே ஒன்பது ரூபாய் ஆகியிருக்கும்போல, வாசனாதி திரவியங்களைப் பூசிக்கொண்டு வந்த மகா ஆடம்பர அழைப்பிதழ்!

பிரிந்து வந்த ஆறே மாத காலத்துக்குள் மாமாவிடமிருந்து இப்படி ஓர் அழைப்பு! கிழித்து எறிவேன் என்று அம்மா தப்பாய் யூகித்திருக்கலாம். “திங்கள்கிழமை கல்யாணமாம். ஓனரிடம் ஒரு நாள் லீவு சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன். இரண்டு பேருமாய்ப் போய்விட்டு வரலாம்” என்றதும் அதிசயித்துப் போனாள்.

ராகி என்கிற ராதாகிருஷ்ணன் யாரென்று நான் மூளையைக் கசக்கிக் கொண்டேன். எனக்குத் தெரிந்து இரண்டு ராதாகிருஷ்ணன்கள். ஒருவன் மாமியின் அண்ணார் மகன். ஃபாரின் ரிட்டர்ன் என்று அடிக்கடி பீற்றிக் கொள்கிறவன். இன்னொருவன் மாமியின் உடன்பிறப்பு. பணம் காய்க்கும் மரம் இவன் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிறதோ என்று எனக்கு ஒரு சந்தேகம். இருவரில் இவன் எந்த ராகியோ? யாராய் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எப்படியும் அவன் சந்தேகமில்லாமல் மச்சமுள்ள ஆசாமிதான்.

இன்றைக்கு நான் ஒரு மெக்கானிக். கார் ஒன்றை நட்டு நட்டாய்க் கழற்றிப் போட்டுப் பூட்டத் தெரிந்த கில்லாடி மெக்கானிக். வீணாய் சுஜாவை எண்ணி எண்ணி மருகிக்கொண்டு இருப்பதை விடுத்து, என் தகுதிக்கேற்ற பெண் இருக்கிறாளா என்று பார்ப்பது உசிதம் என்கிற தீர்மானத்துக்கு நான் எப்போதோ வந்துவிட்டிருந்தேன்.

ண்டபம் மகா பிரமாண்டமாய் இருந்தது. வெளியே கார்ப் படை. நாயனம் வாசித்தவரை டி.வி-யில் பார்த்த ஞாபகம். பார்க்குமிடமெல்லாம் பட்டு பளிச்சிட்டது. வீடியோ காமிரா சகிதம் ஒரு சுறுசுறுப்பாளர் குறுக்கே நெடுக்கே வயர்களை இழுத்தபடி ஓடிக்கொண்டு இருந்தார். கவலை கிலோ என்ன விலை என்று கேட்கிற முகங்கள். பரிதாப ஜீவன்களாய் நானும் அம்மாவும். “யார் இதுங்களை உள்ளே விட்டது?” என்று யாரும் அதட்டல் போடாமல் இருக்க வேண்டுமே என்று கவலை வந்தது.

மாமா பார்த்ததும், “வா” என்று ஒற்றை எழுத்தில் விளித்தார். தொடர்ந்து, “டே தத்தி! மசமசன்னு நிக்காம, வர்றவங்களைப் பார்த்து உபசரி. டிபனுக்குக் கூட்டிட்டுப் போ. காபி கேக்கறவங்களுக்குக் கொண்டு குடு. ஓடு, ஓடு!” என்று விரட்டினார். அகன்றார்.

நான் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சுறுசுறுப்பானேன். பம்பரமாய்ச் சுழன்றேன்.

முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. யதேச்சையான ஒரு கணத்தில், மாலையும் கழுத்துமாய் மணையில் உட்கார்ந்திருந்த சுஜாவின் பார்வையும் என் பார்வையும் ஒருமுறை மோதிக் கொண்டன. அதற்குள் ஏராள கற்பனைகள்.

தலையை உலுப்பிக்கொண்டு மணமகனைத் தேடினேன்.

சற்று எட்டத்தில் ஒரு ரகளை உருவாகிக்கொண்டு இருப்பது புலப்பட்டது. அணுகியதில் வழக்கமான வைரத் தோடு தகராறு. மாமா அவகாசம் கேட்டாராம். வுட்-பி மாப்பிள்ளை சுருக்கென்று தைக்கிற மாதிரி ஏதோ சொல்லிவிட்டானாம். காலரைப் பிடித்துவிட்டார். நான் அந்த ‘ராகி’ என்கிற ராதாகிருஷ்ணனைப் பார்த்தேன். மாமியின் தம்பிதான்!

சூழ்நிலையின் விபரீதம் புரிந்து சுற்றம் அனைத்தும் எழுந்து நிற்க, சலசலப்பு குறைந்து, அமைதியின் கனம் அதிகரித்தது.

புரோகிதர்களின் மந்திரம் தடைப்பட்டது. சுஜா எழுந்து நின்றாள். நாயனம் தரையில் செங்குத்தாக நின்றது. மேளம் மௌனம் காத்தது. வீடியோ சுழல்வது நின்றது. பானகம் வழங்குதல் தற்காலிகமாய் ஒத்திவைக்கப்பட்டது. அனைவரின் கவனமும் கலவரப் பகுதிக்குத் தாவிற்று.

மாமா ஆவேசப்பட்டார். மைத்துனனை உதறித் தள்ளினார். பெருங்குரலெடுத்து இரைந்தார்.

“இடியட்! உறவுன்னு மதிச்சுதான் உனக்கு என் பொண்ணைக் கட்டித் தர சம்மதிச்சேன். பட் நௌ, யூ ப்ரூவ் - யூ ஆர் அன் இண்டீசன்ட் மேனர்லெஸ் ஸ்கௌண்ட்ரல்! கெட் அவுட் ஃப்ரம் திஸ் ப்ளேஸ்! நீ இல்லேன்னா இந்தக் கல்யாணம் ஒண்ணும் நின்னு போயிடாது. மைண்ட் தட்! உன்னைவிட ஒரு கழுதைக்கு எம் பொண்ணை சந்தோஷமா கட்டி வைப்பேன். பார்க்கறியா, நடத்திக் காட்டட்டுமா? சேலஞ்ச்?” என்று அவன் முகத்துக்கு எதிரே விரலை ஆட்டி அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து, “டே தத்தி! இங்கே வாடா!” என்று அதிர்ந்தார். “போ, போய் மணையில உட்காரு. போ! நீதான் இப்போ மாப்பிள்ளை. நடத்தியே காமிச்சுடறேன். அப்பத்தான் இந்தப் பயல்களுக்கு நான் யாருன்னு புரியும்!” என்று சிம்மமாக முழங்கினார்.

குபுக்கென்று என் மனசுக்குள் ஒரு பிரளயம் உண்டாயிற்று. மூளையின் லட்சக்கணக்கான ஞாபகச் செல்களில் சிற்சில வெடித்தன. நரம்புகளில் அதிர்வு உற்பத்தியானது. இதயம் தடதடத்தது.

“மாமா” என்றேன்.

“என்னடா இன்னும் மசமசன்னு நின்னுக்கிட்டு? முதல்ல சொன்னதைச் செய், போ! அப்புறம் பேசலாம்” என்று வெடித்தார்.

“மன்னிச்சுக்குங்க மாமா! உங்க பெண்ணை ஏத்துக்க நான் தயாரில்லை!”

மண்டபம் மொத்தமும் நிசப்தம் உறைந்தது. மாமா ‘தட்’டென்று அதிர்ந்து போனவராய், “காரணம்?” என்றார் புருவம் சுழித்து.

“அது உங்களுக்கு அநாவசியம்னு நினைக்கிறேன். அம்மா, வாங்க போகலாம்! மாமா, சுஜாவுக்கு அடுத்த முறை கல்யாணம் பண்றப்பவும் மறக்காம எனக்கு அழைப்பு அனுப்புங்க. பந்தி உபசரிப்பு செய்யக் கட்டாயம் வரேன். வரட்டுமா?” என்று சொல்லிவிட்டு, அம்மாவை அழைத்துக்கொண்டு விருட்டென்று வெளியேறினேன்.

எனக்கு என்ன ஆயிற்று என்கிறீர்களா?

நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே சார்... நான் ஒரு மாதிரி! கிராக்.

1.1.88 தேதியிட்ட மோனா மாத இதழில் வெளியான கதை.

8 comments:

ஹா ஹா
:)))
 
கதாநாயகனுக்குத் திடீரென ரோஷம் வருவதும், மாமாவைப் பழி வாங்குவதற்காக எந்தப் பாவமும் அறியாத அந்தப் பெண்ணின் முகத்தில் கரியைப் பூசுவதும் ஏற்புடையதாக இல்லை. ஆனால், எழுத்து நடை அற்புதம்! அதுவும் ஆன் த ஸ்பாட்டில், விடிய விடிய உட்கார்ந்து எழுதிக் கொடுத்திருப்பதாகச் சொல்வது உண்மையென்றால், இட் ஈஸ் ரியலி கிரேட்! கங்கிராட்ஸ்!
 
கிருபாநந்தினி
துள்ளல் நடை. அருமையான வார்த்தை பிரயோகங்கள். மொத்தத்தில் ஒரு அருமையான சிறுகதையை வாசித்த திருப்தி.

ரேகா ராகவன்
 
சிரித்துச் சிரித்து என்னைப் பாராட்டுச் சிறையில் தள்ளிவிட்டீர்கள் சிவா!
*****
ஹப்பா..! கிருபா மேடத்திடம் பாராட்டு வாங்குவது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்குவது போன்றது!
*****
புதிய வரவான ரேகா ராகவனை வருக வருகவென வரவேற்கிறேன். பாராட்டுக்கு நன்றி மேடம்!
 
If the HERO agreed for the marriage, this story if one among thousands; by decided to refuae thie story outstnding as one of thousands"
Suppamani
 
அன்புள்ள திரு ரவிபிரகாஷ் அவர்களுக்கு,

வணக்கம். நீல வெளியில் திடீரென்று ஒரு வானவில் மாதிரி உங்கள் வலைப்பூ என் கண்ணுக்கு தென்பட்டது. எப்படி இதுவரை தெரியாமல் போயிற்று! இப்போதுதான் அறிந்தேன். ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்து விட்டேன்! உங்கள் 'சாவி' அனுபவ நாட்கள் என் கண் முன் அப்படியே விரிந்தன. விறுவிறுப்பாக வரைந்துள்ளீர்கள். (உங்கள் 'நடிகன்' சிறுகதையை இன்னும் வைத்திருக்கிறேன்.) விகடன் சந்திப்பு எங்களை எப்படி வசீகரிக்கும் என்று சொல்லணுமா! வரிவரியாக ரசித்தேன். வலைப்பூவில் (படித்த ஒவ்வொரு 'இதழு'ம் அருமை) பின்னூட்டம் கொடுக்க விருப்பம். kbjana@gmail.com
 
கே.பி.ஜனார்த்தனன்.
ரவி சார், உங்களை ரொம்ப நாளாக ஒன்று கேட்கவேண்டும் என்றிருந்தேன். ஏன் இப்போதெல்லாம் நீங்கள் சிறுகதை எழுதுவதில்லை?
 
கிருபாநந்தினி
கிருபா மேடம், உங்கள் கேள்விக்கு ஓரிரு வரிகளில் பதில் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. எனவே, இது குறித்து ஒரு புதிய பதிவே எழுதலாம் என்றிருக்கிறேன்.