உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, July 31, 2009

இவர்கள் எழுதினால்...

‘கதை எழுதுவது எப்படி?’ என்று சுட்டிக் குழந்தைகளிடம் பேசும்போது, எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளுள் ஒன்றாக, “பழைய ‘முயலும் ஆமையும்’, ‘காக்கை-வடை-நரி’ போன்ற கதைகளை உங்களுடைய ஸ்டைலில் எழுதிப் பாருங்கள். உதாரணமாக, ‘ஏ... காக்கா! நீ அசின் மாதிரி ரொம்ப அழகா இருக்கே! உன் குரலும் சாதனா சர்கம் குரல் மாதிரி ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. அதனால, எனக்காக ப்ளீஸ்... ஒரே ஒரு தடவை அந்த நாக்கு மூக்க பாட்டைப் பாடிக் காட்டேன்’ என்று நரி கேட்பதாக எழுதிப் பார்க்கலாம்” என்று ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டேன்.

சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடந்த இந்த சுட்டி விகடன் விழாவுக்கு ஒரு பார்வையாளராக ஆவலோடு வந்து, மாலை வரை விழாவை ரசித்தார் 80 வயதான என் தந்தை. விழாவில் நான் பேசியதை ஒரு தந்தை என்கிற முறையில் ரசித்த அவர், “காக்கா-வடை கதைன்னா உனக்கு அத்தனை பிடிக்குமோ? 30 வருஷங்களுக்கு முன்னே தினமணி கதிர் தீபாவளி ஸ்பெஷல் புத்தகத்தில், காக்கா-வடை கதையை பிரபல எழுத்தாளர்கள் எழுதினால், எப்படி எழுதியிருப்பார்கள் என்று கற்பனையாக எழுதியிருந்தாயே, அதுதான் நீ இப்போது பேசும்போது சட்டென்று என் ஞாபகத்துக்கு வந்தது” என்று சொல்லி, வீட்டுக்கு வந்ததும், தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த புத்தகங்களிலிருந்து மேற்படி தினமணி கதிர் இதழை எடுத்துக் காண்பித்தார்.

நம் சின்ன வயது போட்டோவை இப்போது எடுத்துப் பார்க்கிறபோது, நமக்கே ஒரு சந்தோஷம் வருமில்லையா, அப்படி இருந்தது என் பழைய எழுத்தைப் பார்க்கும்போது.

14.11.1980 தேதியிட்ட தினமணி கதிர் இதழில் வெளியான, நான் எழுதிய அந்தக் கற்பனைக் கட்டுரை இதோ, இங்கே..!

இவர்கள் எழுதினால்...

பிரபலமான எழுத்தாளர்களுடைய கதைகளைக் கூர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் அமைந்திருப்பது புரியும். ‘காக்கையும் வடையும்’ கதையினை சாண்டில்யன், இந்துமதி, புஷ்பா தங்கதுரை, கண்ணதாசன், சுஜாதா ஆகியோர் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தேன்.

சாண்டில்யன்:

பொழுது புலர்ந்து பத்து நாழிகைக்கு மேல் ஓடிவிட்ட போதிலும், பங்குனியின் பின்பனி மூட்டம் சிறிதும் விலகாமல், முத்துக்களால் நெய்யப்பட்ட போர்வையைப் போன்று அம்மரத்தைப் போர்த்துக் குளிரச் செய்தும், ஆல விருட்சத்தின் கரிய பெரிய கூரிய மரக் கிளைகள் பேய்களைப் போல் பயங்கரமாக எழுந்து நின்று மிரட்டியும், பனியில் குளிர்ந்தாலும் மனம் குளிராத வாயு தேவனானவன் சீறி எழுந்திருந்து தன் வலிவு மிக்க கரங்களால் அம்மரத்தைப் பலமாக அசைக்க முயன்றும்கூட, எதற்கும் மசியாத அக்காகம், மிக அலட்சியமாகக் கிளைகள் மீது தாவியும் குதித்தும், இளம் யுவதியின் இடையினைப் போல் சிறுத்துப் போய் மிக மெல்லியதாயிருந்தபோதிலும் வலிவு மிக்கதாயிருந்த தன் கால்களால் கிளைகளை உறுதியாகப் பற்றியும் தன்னிஷ்டத்திற்கு விளையாடியது.

கதிரவன் கிளம்பிப் பனி மூட்டங்களை விலகச் செய்துவிட்ட காரணமோ, அல்லது தன் அலகில் கொத்தியிருந்த திருட்டு வடையினைச் சுவைக்கும் ஆசை எழுந்து விட்டதன் காரணமோ... அதனுடைய ஆட்டங்கள் சிறிது மந்தப்படவே செய்ததால், தவழ்ந்து பறந்து வந்து கீழே அகலமான பெரிய கிளையொன்றில் உட்கார்ந்தது.

இதன் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு, சற்றுத் தள்ளியிருந்த பாறை மீது அமர்ந்திருந்த நரியானது, அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக்கொண்டே கீழிறங்கி வந்தது. அப்படி இறங்கி வரும் மாத்திரத்திலேயே, “ஏமாற்றுவதென்பது அநாகரிகமான செயல் அல்லவா?” என்று உள் மனம் கண்டித்தாலும், அந்தக் கண்டிப்பு பொய்க் கண்டிப்பு என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ‘சமயம் வரும்போது எந்த நரிமாவும் அயோக்கியன்தான்’ என்று நரி வர்க்கத்தின் அவல நிலைக்குச் சமாதானம் சொன்னது. சொந்தக் குற்றங்களுக்கு வர்க்கத்தின் மேல் பழி போடுவது யாருக்குமே உள்ள இயற்கையாதலால், அந்த இயற்கைக்குத் தானும் விலக்கல்ல என்பதை அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த நரியும் நிரூபித்தது.

புகழ் என்பது வாழ்க்கையில் ஏற்படும் பிரமை. ஒரு மாயை. சிலர் புகழை வெறும் மாயை என்று உணர்ந்து, அதிலிருந்து விலகப் பார்க்கிறார்கள். அவர்களைப் புகழ் விடுவதில்லை. சிலர் புகழைச் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள். புகழ் அவர்களை அணுகுவதில்லை. வாழ்க்கையை ஊன்றிப் பார்க்கும் பட்சத்தில், புகழுக்கு ஆசைப்பட்டுச் செய்யும் சின்னஞ்சிறு செய்கைகள்கூட பெரியதொரு நஷ்டத்தில் கொண்டு தள்ளிவிடுகின்றன. அதற்கு ஏதாவது உதாரணம் தேவையென்றால், ஆல விருட்சத்தின் அடிக்கிளையில் அமர்ந்திருந்த காகத்தைச் சுட்டிக்காட்டலாம்.

காகம் செய்த முதல் தவறு, புகழின் மீது வைத்த அத்து மீறிய ஆசை. இரண்டாவது தவறு, நரியின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிச் சுய நிலை இழந்து பாட ஆரம்பித்தது. இந்த இரண்டு தவறுகளும் சிறிய தவறுகள்தான்; யாருமே செய்யக்கூடியவைதான். ஆனால், அந்தச் சிறிய தவறுகள் எத்தனை பெரிய நஷ்டத்தில் கொண்டு போய் விட்டன! காகம் ஆசையுடன் உண்ண வைத்திருந்த வடையினை அல்லவா இழக்கும்படிச் செய்துவிட்டன!

இந்துமதி:

பூவரசன் பூக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு நாட்களாகத்தான் இப்படி மஞ்சளில் சிரிக்கிறது. இடத்தையும் மனசையும் நிறைக்கிற குழந்தைச் சிரிப்பாகத் தெரிகிறது. தன்னிடம்கூட அதே சிரிப்பு வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டது காகம். பூவரசன் சிரிக்கிறபோதெல்லாம் அதற்கும் சிரிப்பு வரும். மனசு நிறைய சந்தோஷம் வரும். நாள் முழுதும் இப்படிப் பார்த்துக்கொண்டே மரத்தின் மேல் கிளையில் உட்கார்ந்துகொண்டிருக்கலாம் போலிருக்கும். அந்த நேரத்தில் அதுதான் நிஜம், அது மட்டும்தான் சாஸ்வதம் என்கிற பட்சத்தில் அது எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்! எப்படிச் சிரித்துக்கொண்டிருக்கும்! எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எதையுமே நினைக்காமல்... முக்கியமாய் அந்தப் பள்ளிக்கூடம் - குழந்தைகள் - அதன் குறும்புகள் - அப்புறம் அந்த நரி..!

நரி..? மை குட்னெஸ்! கற்பனையில்கூடத் தன்னால் நிஜத்திலிருந்து விலக முடிவதில்லை. நிஜங்கள் குரூரமானவைகள். விலக்க முடியாதவைகள். அதனால்தான் அப்பொழுது நரியின் நினைவு வருகிறது. பூவரசன் பூத்துச் சொரிகிறபோதெல்லாம் எப்படி நரியின் நினைவு தவறாமல் வருகிறது? நரிக்கும் பூவரசனுக்கும் என்ன சம்பந்தம்? அந்த நிகழ்ச்சிதான் சம்பந்தமா? வெறும் நிகழ்ச்சி மட்டும்தானா? எதுவானாலும் நரி மோசமான பிராணிதான் என்று பட்டது.

அன்றைய அந்தச் சம்பவம் - பேசின பேச்சுக்கள் மனசுக்குள் வந்து போயிற்று. நேற்று நடந்த மாதிரி ஒவ்வொன்றும் அப்படியே நினைவுக்கு வந்தது. பாட்டி வைத்திருந்த வடைகளுள் ஒன்றை தான் கொத்திக்கொண்டு வந்தது - அதை ருசி பார்க்கத் துவங்குகையில் நரி வந்து நின்றது - தன்னைப் பெரிதாகப் புகழ்ந்து, பாடச் சொல்லி வற்புறுத்தியது - தானும் அதன் பேச்சுக்களில் மயங்கிப் பாட ஆரம்பித்தது - கீழே விழுந்த வடையை நரி கவ்விக்கொண்டு ஓடி மறைந்தது...

‘நரியே, நீ ஏன் இப்படி இருக்கிறாய்? எதற்காக, ஏமாற்றும் கூட்டத்தில் ஒருத்தனாக அலைகிறாய்? இவர்களை விட்டுவிட்டுத் தனியே வாயேன்! உன் ரசனையைக் கொஞ்சம் வளர்த்துக் கொள்ளேன். உன் தகுதிக்கும் திறமைக்கும்...’

மரத்தின் கீழே காலடிச் சத்தம் கேட்டுக் காகம் கலைந்து போனது. கீழே நின்றிருந்த நரியினைக் கண்டதும் மெலிதாகப் புன்னகைத்தது. நரியும் இதனைப் பார்த்துப் புன்சிரிப்பாகச் சிரித்தது.

அப்பா... என்ன சிரிப்பு அது! மனசுக்குள் ஊடுருவுகிற மாதிரி... நெஞ்சைத் தொடுகிற மாதிரி... இதமாய் வருடிக் கொடுக்கிற மாதிரி... அதனுடைய தவறுகளை, அதன் மீது எழுந்த கோப தாபங்களை மறக்கடிக்கிற மாதிரி...

இதனுடைய இந்த ஒரு சிரிப்புக்கு எத்தனை வடைகளை வேண்டுமானாலும் இழக்கலாமென்று தோன்றியது. கூடவே, தான் அன்று வசமாக ஏமாந்துபோனதும் நெஞ்சினை உறுத்தியது.

மனசுக்குள் அந்த உறுத்தல் கலையாமல் - கனம் குறையாமல், காகம் அந்த மரத்தை விட்டுப் பறந்து போயிற்று!

*****
புஷ்பா தங்கதுரை, சுஜாதா, கண்ணதாசன் ஆகியோர் இதே கதையை எழுதினால்..? அது அடுத்த பதிவில்!

8 comments:

hahahaha..

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..

அதுவும் என்றுமே எனது மனம் கவர்ந்த கண்ணதாசன்...
 
நெம்ப நல்லா இருக்குது!

டெம்ப்ளேட்டும் டாப்பா இருக்குது.

எனக்கு ஒரு ஆசை.

வெக்கத்தை விட்டுக் கேக்கிறேன்.

காக்கா வடை கதையை நான் எழுதினா எப்படி இருக்கும்?

எழுதுவீங்களா ப்ளீஸ்?
 
அன்புள்ள ரவிபிரகாஷிற்கு,
வணக்கம்.
காக்காய்-வடை-நரி கதையை சாண்டில்யனும் இந்துமதியும் எழுதினால் அவை எந்த பாணியில் இருக்கும் என்ற உங்கள் கற்பனை வெகு அபாரம்.குறிப்பாக, சாண்டில்யனின் நடையை நீங்கள் கற்பனை செய்திருப்பது, அப்படியே அந்த சாண்டில்யனின் கதையைப் படிப்பதுபோலவே இருந்தது..சும்மா சொல்லக்கூடாது, உங்களுடைய கற்பனை வளம், இங்கு மும்பை மாநகரத்தில் பீறிட்டுக்கொட்டித் தீர்க்கும் மழையைப்போல பொங்கிப் பாய்கிறது. அந்த எழுத்தாளர் சாண்டில்யன் மட்டும் இன்று உயிருடன் இருப்பாரேயானால், நிச்சயமாக உங்கள் எழுத்துப் படைப்பைக் கண்டு முதுகில் ஒரு ’ஷொட்டு’ கொடுத்து பாராட்டியிருப்பார்; சந்தேகமேயில்லை.
இந்துமதியின் ’ஸ்டைலையும்’ அமர்க்களமாக கற்பனை செய்து சும்மா கலக்கிவிட்டீர்கள்.எனக்கு என்னமோ காலஞ்சென்ற சாவியின் எழுத்துக்கள் உங்களிடம் ஏற்படுத்தியுள்ள ஒரு தாக்கத்தைத்
தான் இது பிரதிபலிப்பதாகத் தோன்று
கிறது. அந்த காலத்தில் சாவி எழுதிய
‘வாஷிங்டனில் திருமணத்தில் வீசிய நகைச்சுவை நெடியை, இன்று நான் படித்த உங்களின் கற்பனைவளம்
நிறைந்த கட்டுரையில் வெகுவாக உண்ர்ந்தேன்; ரசித்தேன்; இங்கு உண்மையாகப் பாராட்டுகிறேன்.
keep it up..
சரோஜ் நாராயணசுவாமி
 
வண்ணத்துப்பூச்சியார் கொடுக்கிற ஊக்கமே ஊக்கம்! அது ஓர் உடனடி குளுக்கோஸ்!
 
காக்கா வட கதய நீங்க எளுதினீங்ணா மெய்யாலுமே நெம்ப சூப்பரா இருக்குமுங்கோவ்! அசத்திப்பிடுவோம் லதானந்த்ஜி!
 
மேடம்! பதிவைப் பாராட்டி மிக நீண்ட பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். பெரிய ஐஸ் பாறையைத் தூக்கி என் தலையில் வைத்தது மாதிரி இருக்கிறது. இத்தனைக் குளிர்ச்சி என் உடம்புக்கு ஆகாது! எனவே, இந்தப் பாராட்டுக்களைத் தங்களின் ஆசீர்வாதமாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நன்றி!
 
எண்பதுகளிலா எழுதினீர்கள்? அருமை. 2007ல் நான் இப்படி சிங்கி அடித்திருக்கிறேன் :-(
 
அருமை என்று என்னைப் பாராட்டியதைப் பினாத்தல் என்று சொல்ல மனம் வரவில்லை சுரேஷ்! அது சரி, 2007-ல் நீங்கள் சிங்கியடித்ததை ஒரு லிங்க் கொடுத்தால் நானும் படித்து ரசிப்பேனே?