உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, August 02, 2009

கற்பனைக் கேள்வி-பதில்!

‘இவர்கள் எழுதினால்’ கற்பனைக் கட்டுரைக்கு வந்த பாராட்டுக்கள் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தின. அனைவருக்கும் மீண்டும் என் நன்றி!

நான் ஏற்கெனவே 2008 பிப்ரவரியில் ‘ஏடாகூடம்’ என்ற பெயரில் வலைப்பூ எழுதத் தொடங்கி, ஒரே ஒரு மாதம் மட்டும் சுறுசுறுப்பாக எழுதி, பிறகு அதில் ஆர்வம் இல்லாமல், ஊற்றிமூடிவிட்டேன்.

அந்தச் சமயத்தில், நான் எழுதிய குட்டிக் குட்டிக் கதைகள், விகடனில் ‘டிக்... டிக்... டிக்’ என்ற தலைப்பில் நான் எழுதி வந்த பொன்மொழிகள் ஆகியவற்றை அந்த ஏடாகூடம் வலைப்பூவில் பதிவிட்டிருந்தேன்.

அவற்றில் ஒன்று, நான் ’80-களில் கல்கி வார இதழில் எழுதிய ‘கற்பனைக் கேள்வி-பதில்’. அப்போது - அதாவது, ஏடாகூடம் வலைப்பூவில் அதைப் பதிவிட்டபோது அதை நிறையப் பேர் படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். எனவே, அதை இங்கே மறுபதிவிடுகிறேன். அதை ஏற்கெனவே படித்திருப்பவர்கள் இங்கேயே கழன்றுகொண்டு, வேறு சுவாரசியமான வலைப்பூவுக்குத் தாவிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கற்பனைக் கேள்வி-பதிலுக்குள் செல்வதற்கு முன்...

1979-80-களில் நான் வேலை தேடி சென்னைத் தெருக்களில் சுற்றிக்கொண்டு இருந்தேன். சாப்பாட்டுக்குக் கவலையில்லை. ஜார்ஜ் டவுனில் என் அத்தை வீடு இருந்தது. அங்கே தங்கிக்கொண்டு வேளாவேளைக்குச் சாப்பிட்டுவிட்டு, காலாற நடந்தே போய் ஒவ்வொரு நிறுவனமாக ஏறி வேலை கேட்பதே என் வேலையாக இருந்தது அப்போது.

வேலை லேசில் கிடைக்கவில்லை. (தண்டையார்பேட்டையில் இருந்த கங்கப்பா பேப்பர் கம்பெனியில் சில காலமும், மறைமலையடிகள் பாலத்தின் அருகில் - தீரன் சின்னமலை ஸ்டாப்பிங் - இருந்த ‘என்டர்பிரைஸிங் என்டர்பிரைசஸ்’ என்கிற வாட்ச் பாகங்கள் தயாரிக்கிற ஒரு தொழிலகத்தில் ஒரே ஒரு நாளும் நான் வேலை செய்தது அப்போதுதான். அந்த அனுபவங்களையும் ஏடாகூடம் வலைப்பூவில் பதிவிட்டிருந்தேன்.)

அப்படி ஒரு சமயம் மண்ணடி பக்கமாக நடந்து வந்துகொண்டு இருந்தபோது, வேலை கிடைக்காத சோர்வில், ‘முட்டாள்தனமாக இங்கே இப்படி அலைந்துகொண்டு இருக்கிறோமோ’ என்று தோன்றியது. அந்த யோசனையின் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனையில், ‘மிக மிக மடத்தனமான காரியத்தைத் தற்போது செய்துகொண்டு இருப்பவர் யார்?’ என்ற கேள்விக்குப் பத்திரிகைகள் பதில் சொன்னால் எப்படி இருக்கும் என்று மளமளவென்று ஒரு கற்பனை ஓடியது.

சட்டென்று மண்ணடி போஸ்ட் ஆபீசுக்குள் நுழைந்து, ஒரு இன்லாண்டு கவர் வாங்கினேன். அங்கேயே ஒரு பெஞ்ச்சில் அமர்ந்து என் கற்பனையை விறுவிறுவென்று எழுதி, ஒட்டி, அங்கேயே போஸ்ட் செய்துவிட்டு வெளியேறினேன். சத்தியமாக அது பிரசுரமாகும் என்கிற நம்பிக்கையெல்லாம் எனக்கில்லை. ஆனால், என் கற்பனையை இன்லாண்டில் எழுதியதுமே, அது ஒரு பத்திரிகையில் பிரசுரமானால் உண்டாகக்கூடிய சந்தோஷம் எனக்குக் கிடைத்துவிட்டது மட்டும் உண்மை.

அடுத்த இருபதாவது நாள், கிராமத்தில் இருந்த என் பெற்றோர் வீட்டுக்கு 30.3.80 தேதியிட்ட கல்கி இதழ் சென்றது - கடைசி பக்கத்தில் என் ‘கற்பனைக் கேள்வி-பதில்’ கட்டுரையைத் தாங்கி! பிறகு, அப்பாவிடமிருந்து கடிதம் வந்த பின்பே, இங்கு சென்னையில் மேற்படி கல்கி இதழைக் கடையில் வாங்கிப் பார்த்து ஆனந்தித்தேன்.

இதோ, அந்தக் கட்டுரை:

கற்பனைக் கேள்வி பதில்!

ன்று பெரும்பாலான பத்திரிகைகள் கேள்வி-பதில் பகுதியை வெளியிடுகின்றன. ‘மிக மிக மடத்தனமான காரியத்தினைத் தற்போது செய்துகொண்டு இருப்பவர் யார்?’ என்ற கேள்வி கேட்டால், அவர்கள் எவ்வாறு பதிலளிக்கக்கூடும் என்பதற்கான கற்பனை இதோ...மணிவண்ணன் பதில்கள் (தினமணி கதிர்): இந்தக் கேள்வி, இந்திய மக்கள் மீது தங்களுக்கு இருக்கும் இழிவான அபிப்ராயத்தையே காட்டுகிறது. உலக நாடுகள் பலவும் வேகமாக வளர்ந்து வருகிற நிலையில், நமது பாரத கண்டத்தில் கட்சிப் பூசல்களும், இன வெறி, மொழி வெறிகளும், ஒற்றுமையின்மையுமே பெரிதாகப் பல்கிப் பெருகி நாட்டைத் துண்டு துண்டாக்கிக் கொண்டிருக்கிற வேளையில், ‘புத்திசாலித்தனமான காரியத்தைச் செய்துகொண்டிருப்பவர் யார்?’ என்று கேட்பதே பொருத்தமாக இருக்கும். ஜப்பானைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதோடு நிறுத்திக் கொண்டால், முன்னேற்றம் எங்கிருந்து வரும்?

பராசக்தி (குங்குமம்): அதி முட்டாள்தனமான ர்ரியம் செய்வதில் என்றுமே முன்னணியில் நிற்கிறவர்... வேண்டாம், பாவம்... விட்டுவிடுவோம்!

சோ (துக்ளக்): சாட்சாத் அடியேன்தான்! பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து வெற்றி வாகை சூடிக் கொண்டிருக்கிற அன்னை மாதா தாயாரின் கட்சியில், அத்தனை கட்சிகளிலிருந்தும் அரசியல்வாதிகளின் கூட்டம் விழுந்தடித்துக்கொண்டு போய்ச் சேருகிற நேரத்தில் நான் மட்டும் இன்னமும் விடாப்பிடியாக எதிர்த்துக்கொண்டு இருக்கிறேனே! இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? ஆனாலும், இதே முட்டாள்தனத்தையே என்றென்றும் இறைவன் என்னிடம் தங்க வைத்திருப்பானாக!

கடுகு (கல்கி): என்னய்யா மறைமுகமாகத் தாக்குகிறீர்? எனக்குப் புரியாதென்று நினைத்தீரா? வேலை வெட்டியற்ற பயல்களெல்லாம் கேள்வி-பதில் பகுதி எழுத வந்துவிட்டானே என்கிற எண்ணமா உமக்கு?

ஜூனியர் (கல்கண்டு): இந்தக் கேள்வி கேட்ட நீரும், இதற்குப் பதில் சொல்கிற நானும்!

அரசு (குமுதம்): ஒரு கதை நினைவுக்கு வருகிறது. சிறு வயதில் படித்த ஞாபகம். தந்தையின் சொல்லை மீறாத பிள்ளை. கப்பலில் பிரயாணம். கப்பலின் உச்சியில் தீப்பிடித்துக் கொண்டது. பையனிடம், தான் வருகிற வரையில் எங்கும் போகாதே என்று சொல்லிவிட்டுத் தீயை அணைக்கப் போன தந்தை அங்கேயே இறந்துவிட்டார். தீ வெகுவாகப் பரவிவிட்டது. இனி கப்பலைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், மாலுமிகள் அனைவரும் கடலில் குதித்துத் தப்பித்தார்கள். பையனையும் அழைத்தார்கள். தந்தையின் வாக்கினை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவன் அதற்கு மறுத்து, அத்தீயிலேயே மாண்டு போனான். அவன் செய்தது மடத்தனமான காரியமா இல்லையா என்பது பற்றிக்கூட சில வருடங்களுக்கு முன்னால் ஒரு சர்ச்சை எழுந்ததாக நினைவு. ஆமாம்... நீங்கள் என்ன கேட்டீர்கள்?

மணியன் (இதயம் பேசுகிறது): அன்புள்ள நண்பரே! அது நிச்சயமாக நீர் இல்லை. திருப்திதானே?

சாவி (சாவி): கலைஞருடன் ஒருமுறை பேசிக்கொண்டு இருந்தேன். “உதிர்ந்து போன இரண்டே இரண்டு இலைகளை வைத்துக்கொண்டு, சூரியனுடைய ஒளியினைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறார்களே சிலர், அவர்களை எந்த வரிசையில் சேர்க்கலாம்?” என்று கேட்டேன். ஏதோ ஓர் அர்த்தத்துடன் புன்னகைத்தார். அது என்ன அர்த்தம் என்பது உங்கள் கேள்வியைப் படித்த பின்புதான் விளங்கியது.

8 comments:

ஏடாகூடமில்லை.நல்ல கற்பனை.

தொடருங்கள்.
 
nice.

நான் உங்களுடைய ஏடாகூடம் வலைப்பூ படித்திருக்கிறேன் என நினைக்கிறேன். சின்னமலையில் ஒரு தையல் கம்பெனியோ எக்ஸ்போர்ட்டிலோ வேலைக்கு சேர்ந்ததை, வேலை பார்த்ததை அப்போது உங்களுக்கு உதவிய பெண் பற்றி எல்லாம் அழகாக எழுதியிருந்தீர்கள்.

அந்த ப்ளாக் இப்போது இருக்கிறதா??
 
'ஏடாகூடம்'னு எந்த நேரத்துல உங்க பிலாகுக்குத் தலைப்பு வெச்சீங்களோ, ஊற்றி மூடிட்டேன்னு கூஸாம சொல்றீங்க. இந்த பிலாகையாவது உருப்படியா தொடர்ந்து எழுதுவீங்களா?
 
கிருபாநந்தினி
Mr.Ravi, Just now I have read your blog matters and those are well appreciated. Keep it up. And I have one suggestion for you. As you are a well known journalist, you can design your blog like a magazine - not in outlook (it is already good) but in matters like short stories, jokes, hykoos,general articles etc. please consider.
- KRM.
 
திரட்டிகளில் இணைக்கவும்.......
 
Nalla anuvapa pathivu rasithu padichaen
 
பராசக்தி பதில் சூப்பர். ;)
 
* தங்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத என்னை மிகவும் ஊக்குவித்துக்கொண்டு இருக்கின்றன. நன்றி பட்டர்ஃப்ளை!

* ஏடாகூடம் பிளாகை ஊற்றி மூடிவிட்டேன். மற்றபடி, அதில் முன்பு எழுதியதை ஞாபகம் வைத்துக்கொண்டு இப்போது நீங்கள் குறிப்பிட்டதே எனக்கு ஒரு பாராட்டு! நன்றி மங்களூர் சிவா!

* கிருபா மேடம்! என் பழைய பிளாகை ஊற்றி மூடிட்டேன்னு சொல்றதுக்கு என்ன கூச்சம் வேண்டியிருக்குன்னு புரியலையே! இந்த ‘உங்கள் ரசிகன்’ பிளாகை மட்டுமல்ல; எனது இன்னொரு ‘என் டயரி’ பிளாகையும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதுதான் விருப்பம். மற்றபடி தங்கள் ஆதரவுக்கு நன்றி!

* திரு.கே.ஆர்.எம். சார், வணக்கம். உங்கள் பாராட்டுக்கும் ஆலோசனைக்கும் நன்றி! முதல்லே என் பிளாகுகளை கிருபா மேடம் சொன்ன மாதிரி தொடர்ந்து உருப்படியா எழுத முயற்சி பண்றேன். அப்புறம் உங்க ஆலோசனையையும் செயல்படுத்த முயற்சிக்கிறேன். சரியா கே.ஆர்.எம். சார்?

* அன்புக்கு நன்றி ரவி! (அட, என் பேரு!) திரட்டிகளில் இணைக்கவும்னு ஈஸியா சொல்லிட்டீங்க. விரட்டி விரட்டிப் பார்த்தாலும் முடியலீங்களே! என் பசங்க கைகொடுத்தாதான் உண்டு.

* திரு.சுரேஷ்! பாராட்டுக்கு நன்றி!

* ஹாய் சஞ்சய்காந்தி! தங்கள் பாராட்டு பூஸ்ட் குடிச்ச உற்சாகம் தருது!