Sunday, August 09, 2009
மூன்றாவது கிணறு!
‘ஞாநியின் கேணி’ மூன்றாவது இலக்கியக் கூட்டம் இன்று (9-8-2009) நடந்தது. சென்ற முறையைவிட இந்த முறை வந்திருந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு. சிறப்பு விருந்தினர் ஒரு சினிமாக்காரர் (பாலு மகேந்திரா) என்பதாலும் இருக்கலாம்; அல்லது, கேணிக் கூட்டம் பரவலாகத் தெரிய வந்ததாலும் இருக்கலாம். ஆனால், போன கூட்டத்தில் கலந்துகொண்ட பல முகங்களை இந்த முறை நான் பார்க்கவில்லை. ஆனால், ஒன்று நிச்சயம். போன முறை வந்தவர்களையும் எனக்குத் தெரியவில்லை; இந்த முறை வந்தவர்களையும் எனக்குப் பழக்கமில்லை. நான்தான்...
பாலு மகேந்திரா ட்ரிம் செய்யப்பட்ட தாடியும், தனது ஃபேவரைட் தொப்பியுமாக வந்தார். முதுகில் ASSAULT என்று எழுதப்பட்ட கார்கோ சட்டை அணிந்திருந்தார். இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசினார். எதுவுமே எனக்குப் புதுசாகவோ, புதிராகவோ இல்லை.
ஓர் எழுத்தாளன் ஒரு வரியில் வர்ணிப்பதைக் காட்சிப்படுத்த இரண்டு மூன்று சீன்கள் தேவைப்படலாம்; அல்லது, பத்திருபது பக்கங்கள் வர்ணித்திருப்பதை ஒரு ஷாட்டில் காண்பித்துவிடலாம் என்றார். தெரிந்ததுதான். எந்தவொரு படைப்புமே சொல்கிற விதம், சொல்லப்படுகிற விஷயம் (Form and content) என இரண்டு அம்சங்களைக் கொண்டது. சொல்லப்படுகிற விதம் எப்படி என்பதை வைத்துத்தான் ஒரு படைப்பாளி மதிக்கப்படுகிறான். சொன்ன விஷயம் இரண்டாம்பட்சம்தான். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருக்கும் காட்சியை எத்தனையோ பேர் வரைந்திருந்தாலும், அந்நாளில் ஓவியர்கள் பலரும் திரும்பத் திரும்ப அதை வரைந்துகொண்டு இருந்தார்கள். ஏற்கெனவேதான் சிலர் அதை வரைந்துவிட்டார்களே என்று யாரும் விட்டுவிடவில்லை. ‘அதில் நான் சொல்ல வருவது என்ன’ என்பதைக் காட்டத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் முயல்கிறார்.
இதைச் சொல்லிவிட்டு, “ஆனால், ஓர் இலக்கிய உபாசகனான நான் ஒரு கதையை சினிமாவாக எடுக்கும்போது, எழுத்தாளர் அந்தக் கதையில் எழுதியிருக்கும் வர்ணனைகள், வார்த்தைகள், வார்த்தைக் கோவைகள், சொல்லாற்றல் இவற்றையெல்லாம் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அதில் அவர் சொல்ல வருவது என்ன, எந்த விஷயம் அவரை அந்தக் கதையை எழுதத் தூண்டியது என்று பார்த்து அதை மட்டும் எடுத்துக் கொள்வேன். அதாவது, அந்தக் கதையின் ஜீவன் என்று சொல்லலாம். அதில் அந்த எழுத்தாளர் சொல்லத் தவறிய, அல்லது வாசகர்களின் யூகத்துக்கென வேண்டுமென்றே சொல்லாமல் விட்ட இடங்களையும் நான் காட்சிப்படுத்துவேன். அந்த எழுத்தாளர் சொல்லியிருக்கிற சில விஷயங்களைத் தேவையில்லை என்றால், விட்டுவிடுவேன். எழுத்து என்பது வேறு ஊடகம்; சினிமா என்பது வேறு ஊடகம். ஒரு கதையை நான் சினிமாவாக்கும்போது, அதற்கான படைப்புச் சுதந்திரம் எனக்கு உண்டு என்று நான் கருதுகிறேன்” என்றார்.
இது எதுவுமே எனக்குப் புதிய கருத்தாகத் தெரியவில்லை. ‘ஆமாம். அப்படித்தானே இருக்க முடியும்!’ என்றுதான் அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் மனசுக்குள் நினைத்துக்கொண்டு இருந்தேன்.
மாலனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ‘தப்புக் கணக்கு’ என்கிற ஒரு சிறுகதையைச் சிலாகித்துச் சொன்னார் பாலு மகேந்திரா. தனக்குப் பிடித்த எழுத்தாளர் மாலன் என்று பலமுறை குறிப்பிட்டார். மேற்படி கதையின் வரிகளை, அதை மாலன் எழுதியிருக்கும் விதத்தை மிகவும் பாராட்டிப் பேசினார். பின்னர், ஞாநி அந்தக் கதையை அனைவருக்கும் கேட்கும்படியாக ஏற்ற இறக்கத்துடன் வாசித்தார்.
ஜனனி என்கிற ஒரு சிறுமி வெகு புத்திசாலி. அவள் 7x2=14 என்று போட்ட கணக்கைத் தப்பு போட்டிருக்கிறாள் ஒரு டீச்சர். சிறுமியின் தாத்தா நியாயம் கேட்க பள்ளிக்குச் செல்கிறார். தான் சொல்லிக்கொடுத்தபடி 2x7=14 என்று போடாமல் மாற்றிப் போட்டதால்தான் தப்பு போட்டதாகச் சொல்கிறாள் அந்த டீச்சர். தாத்தா உடனே பிரின்சிபாலிடம் சென்று நியாயம் கேட்கிறார். ‘குழந்தை தன் இஷ்டத்துக்குப் போடக்கூடாது. இங்கே என்ன சொல்லித் தருகிறார்களோ அப்படித்தான் போடவேண்டும்’ என்று அவரும் சொல்கிறார். தாத்தா உடனே பள்ளிக் கல்வி அதிகாரியிடம் செல்கிறார். அவரும்கூட, ‘ஒரு விதத்தில் உங்கள் பேத்தி போட்டது பாதி சரிதான். ஆனால், விடை சரியாக இருந்துவிட்டால் போதாது, அதற்கான வழிமுறையும் சரியாக இருக்க வேண்டும் என்று காந்திஜியே சொல்லியிருக்கிறாரே’ என்று சொல்கிறார் அவர். குழந்தையின் அப்பாவுக்கு இந்த விஷயங்கள் தெரிய வர, ‘ஸ்கூலில் சொல்லிக் கொடுத்த மாதிரி போட வேண்டியதுதானே இவ! பொட்டப் புள்ள நாளைக்குப் பெரியவளா வளர்ந்ததும் நம்ம சம்பிரதாயம், பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் கேள்வி கேப்பா. அதுக்கு அனுமதிக்கக் கூடாது’ என்கிறார். சிறுமியின் முகம் வாடிப்போக, தாத்தாவின் கண்கள் கசிகின்றன. இதுதான் கதை.
நமது கல்வி முறை மாணவர்களை எத்தனை தூரத்துக்குச் சிந்திக்க விடாமல் செய்கிறது என்பதைச் சொல்கிற அருமையான கதை இது. இது தொடர்பான என் பள்ளிக்கூட அனுபவங்கள் இரண்டை நான் இதே வலைப்பூவில், கல்வி தொடர்பான பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஒன்று, கணக்கை வித்தியாசமான முறையில் நான் போட முயன்று, ஆசிரியரிடம் திட்டு வாங்கியது. மற்றொன்று, பத்து வார்த்தைகளை வாக்கியத்தில் பொருத்தி எழுதும்படி தமிழய்யா சொல்ல, அவர் சொன்ன வாக்கியங்களுக்குப் பதிலாக நான் வேறு சில வாக்கியங்களை, அதுவும் ஒரே பாராவாக வரும்படி தொடர்ச்சியாக எழுதி, அதற்குப் பாராட்டு கிடைக்கும் என்று கெத்தாக நிற்க, தமிழய்யா என்னைப் பாராட்டுவதற்குப் பதிலாகக் கண்டித்தது - இரண்டுமே மாணவர்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாத நமது கல்வி அமைப்பின் குறைபாட்டுக்கான சான்றுகள்தான்.
பாலு மகேந்திரா இந்தக் கதையைக் குறும்படமாக எடுத்திருந்தார். அது முன்னர் சன் தொலைக்காட்சியிலும் வெளியாயிற்று. அந்தப் படத்தையும் இன்று டி.வி-யில் வீடியோ போட்டுக் காண்பித்தார்கள். நன்றாகவே எடுத்திருந்தார் பாலு மகேந்திரா. தாத்தாவின் கண்களில் கண்ணீர் என்று முடிப்பதற்குப் பதிலாக அந்தப் பெண்ணின் எதிர்காலம் என்ன என்பதாக பார்ப்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழும் வண்ணம் அந்தப் பெண்ணின் ஏக்கமான முகத்தை ஃப்ரீஸ் செய்து படத்தை முடித்திருந்தார். ஜனனி என்ற பெயருக்குப் பதிலாக அந்தப் பெண்ணுக்கு சக்தி என்று பெயரிட்டிருந்தார். எல்லாமே அருமைதான்!
ஆனால், அவரது பேச்சிலிருந்து நான் புதிதாகத் தெரிந்துகொண்ட விஷயம் எதுவும் இல்லை. எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரிந்தவைதான்.
பாலு மகேந்திரா ஓர் அருமையான படைப்பாளி! அவரது மூடுபனி, அழியாத கோலங்கள் இரண்டையும் பார்த்து நான் பிரமித்திருக்கிறேன். அவர் தனக்குப் பிடித்ததாக வீடு, சந்தியா ராகம் இரண்டையும் குறிப்பிட்டார். 'ஒரு வருத்தமான செய்தி! இரண்டுக்குமான நெகடிவ்கள் அழிந்து போய்விட்டன. இனி அவற்றை புது பிரிண்ட் போடுவது சாத்தியமில்லை!' என்றார். சந்தியா ராகம் நான் பார்த்திருக்கிறேனா என்று நினைவில்லை. வீடு பார்த்திருக்கிறேன். அருமையாக எடுத்திருந்தார். சிறப்பாகவே இருந்தது. ஆனால், சினிமா சுவை எதுவுமின்றி, கிட்டத்தட்ட ஒரு டாகுமெண்ட்டரி போலத்தான் அது இருந்தது. அதை ஒரு கமர்ஷியல் சினிமாவாக என்னால் ரசிக்க முடியவில்லை. அதைவிட ‘மூன்றாம் பிறை’யும் மற்றும் மேலே சொன்ன படங்களும் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை.
கூட்டம் முடிந்து பலரும் பாலு மகேந்திராவுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். ஆட்டோகிராஃப் வாங்கினர். முன்பே சொல்லியிருக்கிறேன். எனக்கு சினிமா பிடிக்கும். ஆனால், சினிமாக்காரர்கள் என்றால் அலர்ஜி. எனவே, அடுத்த கணம் நான் எஸ்கேப்!
இந்தப் பதிவு பிடித்திருந்தால் இங்கே வாக்களிக்கவும்!--->
Posted by
ungalrasigan.blogspot.com
at
Sunday, August 09, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
பகிர்விற்கு நன்றி.
சரி பார்க்கவும்.
நடராஜன்
எனக்கு சினிமா பிடிக்காது. ஆனால் சினிமாக்காரர்களைப் பிடிக்கும்!
என்ன ஒரு வித்தியாம்!!
* திரு.நடராஜன், ராகமேதான்; காலம் இல்லை. தவற்றைத் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
* வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.சந்ரு!
* வாழ்த்துக்களுக்கு நன்றி சுமதி மேடம்! என் கம்ப்யூட்டருக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டிலிருந்தே பன்றிக்காய்ச்சல் தொலைந்தால்தான் அனைவருக்கும் நிம்மதி!
* ஒரு வீணையில் ஒவ்வொரு கம்பியும் ஒவ்வொரு நாதம் எழுப்பினால்தானே நமக்கு இனிய சங்கீதம் கிடைக்கும் லதானந்த்ஜி! எனவே, இந்த முரண் இனிய முரண்தான் இல்லையா!
* கிருபாநந்தினி மேடம்! தவற்றைத் திருத்திவிட்டேன். விட்டால் தோப்புக்கரணம்கூடப் போடச் சொல்வீர்கள் போலிருக்கிறதே!
ஒரு வேளை சினிமாகாரிகளை பிடிக்குமோ????
(தமாஷ்க்கு )
:)))))))))))
*****
நல்லவேளை... தமாஷுக்குன்னு போட்டீங்களோ, நான் வீட்டுல தப்பிச்சேன்.
Post a Comment