உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, August 16, 2009

நா ஒரு மாதிரி!

மரர் சி.ஆர்.கண்ணன் பற்றிய ஒரு பதிவில், மோனா நாவலில் துண்டு விழுந்த பக்கங்களைப் பூர்த்தி செய்வதற்காக, அச்சகத்திலேயே உட்கார்ந்து விடிய விடிய ஒரு சிறுகதையை எழுதிப் புத்தகத்தை முழுமையாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கதை இங்கே...நா ஒரு மாதிரி!

நா ஒரு மாதிரி. கிராக். மாமாவினால் செல்லமாய் ‘தத்தி’ என்றும், மாமியினால் வாஞ்சையுடன் ‘தண்டச் சோறு’ என்றும் விளிக்கப்படுகிறவன். அவ்வப்போது சுஜா என் மீது எய்யும் பரிதாபப் பார்வைக்குக் காதல் முலாம் பூசி, மனசுக்குள் குளிர்ந்து போகிறவன். ஒரு பௌர்ணமி நாளில் - சந்தியா காலத்தில் - மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு, தென்னங்கீற்றுகளூடே வெட்டி வெட்டித் தென்படுகிற நிலவின் அழகைக் கண்களால் பருகியபடி, ‘சுஜா, என் பிரிய சகியே!’ என்று, சுஜாவின் கைகளில் தருவதற்காகப் புதுக்கவிதை எழுத முயற்சித்து, மேலே வரிகள் வராமல் தோற்றவன்.

சுஜா, என் மாமா பெண். ‘சுஜா ஹோம் அப்ளையன்ஸஸ்’ நிறுவனத்துக்கும், பெசன்ட் நகரில் இருக்கிற ‘சுஜா பியூட்டி பார்ல’ருக்கும், இருபது லட்ச ரூபாய் பெறுமானமுள்ள ஒரு ‘போஷ்’ பங்களாவுக்கும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரந்தரமாய் முகாமிட்டிருக்கும் ஐந்து லட்ச ரூபாய் தொகைக்கும் ஒரே செல்ல வாரிசு!

‘அதரங்களில் தேன் வைத்திருந்தாள்; கண்களில் காந்தம் வைத்திருந்தாள்; புஷ்டியான...’ என்றெல்லாம் நேர்முக வர்ணனைகள் கொடுத்து, எனக்கே எனக்கு மட்டுமேயான என் சுஜாவைக் கொச்சைப்படுத்த என் மனசு இடங் கொடுக்கவில்லையாதலால், சுருக்கமாக - அவளொரு ‘பிரம்மனின் மாஸ்டர்பீஸ்!’

பத்து வருஷங்களுக்கு முன்னால், உட்காருமிடக் கிழிசல்களுள்ள காக்கி அரை டிராயரும், வியர்வையில் தொப்பலாய் உடம்புடன் ஒட்டிக்கொண்டு இருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையுமாய், அம்மாவின் நிறம் மாறிப்போன சேலைத் தலைப்பின் கிழிசல் முடிச்சினை விரல்களால் உருட்டிக்கொண்டு நின்றிருந்தபோது எனக்கு இது தெரியவில்லை.

அதுவரை பார்த்தேயிராத நவீன உடையில் நின்றிருந்த அன்றைய ஒன்பது வயது சுஜா, என்னை விசித்திர ஜந்து போல் நோக்கினாள். அவள் பின்னால் வந்து நின்ற என் மாமா ‘ராப் பிச்சைக்காரர்கள் டியூட்டி டயத்தை மாற்றிக்கொண்டு விட்டார்களா, என்ன’ என்பது போல் ஒரு முகச் சுளிப்புப் பார்வையை எங்கள் மீது எறிந்தார். புதியவர்களைக் காணும் ஆவலில் சமையலறையிலிருந்து அவசரமாய் வெளிப்பட்ட மாமி, சட்டென்று முகம் மாறி, ‘வாங்கோ’ என்றாள் சன்னமாய் - வெகுவாய் துக்கித்து!

அம்மா கையிலிருந்த பையைத் திறந்தாள். வெள்ளை நிற யூரியா பையைப் பிரித்து நாலாய் அடித்ததில் மிச்சமிருந்த ஒரே பை அது. திறந்து, மந்தார இலையில் சுற்றிக்கொண்டு வந்திருந்த கனகாம்பரத்தை எடுத்து மாமியிடம் நீட்டினாள். நைந்துபோன நியூஸ்பேப்பரில் எண்ணெய்க் கறை தெரியக் கட்டிக்கொண்டு வந்திருந்த கைமுறுக்கை எடுத்து சுஜாவிடம் நீட்டினாள். அடுத்து, பை வைக்க இடம் தேடினாள்.

எதிரே, சினிமா செட்டுகளில் வருவது போல், நாலு படிகள் கடந்ததும் இரண்டாய் வகிர்ந்து, வளைந்து மேலேறி உயரே இணைகிற மாடிப்படிகள். படிகளின்மீது போர்த்தப்பட்டிருந்த கம்பளத்தில் சிவப்பு டாலடித்தது.

படிகள் பிரிகிற இடத்தில், சுவரில், நிஜத்தைப் போல் மூன்று மடங்கு பெரிதாக்கப்பட்ட சுஜா! படிகள் வளைகிற இடங்களில் புன்னகை பூக்கிற சுஜாக்கள்!

அம்மா பிரமித்துத் திரும்பினாள். கோணலாய், சரியாகச் செய்யப்படாமல் ஒரு மேஜை. பியானோ என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். கர்ட்டன்கள் அழகுற அசைந்தவண்ணம் இருந்த ஜன்னல் திட்டில், கலையம்சம் நிறைந்த பூ ஜாடிகளில், வாடாத மலர்கள்.

வியூகம் அமைத்திருந்த சோபா செட்டுகளுக்கு மத்தியிலிருந்த டீப்பாயை, பை வைக்கத் தோதான இடமாக இருக்குமா என்று ஆராய்ந்தாள். மேலே நவ நாகரிகமான ஈகிள் ஃப்ளாஸ்க், பெரிய சைஸ். சுற்றிலும் வித விதமாய் டிஸைன்கள் போடப்பட்ட கப்புகள், சாஸர்கள். அடித்தட்டில் வழவழாப் புத்தகங்கள்.

அம்மா ஊருக்குக் கிளம்புகிறவரை அந்தப் பையைக் கையிலேயே வைத்திருந்தாள். சீக்கிரமே கிளம்பிவிட்டாள்.

போகிறபோது கடைசி முறையாய்த் தன் குச்சிக் கைகளால் என்னைப் பற்றி இழுத்துப் போய் மாமா வசம் ஒப்புவித்து, ‘இவன் இனி உன் மகன்! இவனை வளர்த்து ஆளாக்குவது இனி உன் பொறுப்பு! இவன் நல்லது பொல்லாததுக்கெல்லாம் இனி நீயே ஜவாப்!’ என்று, அடுத்த காட்சியில் மண்டையைப் போடவிருக்கிற கதாநாயகியின் அம்மா மாதிரி சொல்லிவிட்டுப் போனாள்.

“ஜாக்கிரதைடா! உடம்பைப் பார்த்துக்கோ. ஒழுங்காப் படி. ஊர் சுத்தாதே! மாமா, மாமி சொல்படி கேட்டு நட! அவங்களுக்குக் கூடமாட ஒத்தாசையா இரு. சுஜாவுக்குக் கணக்கெல்லாம் சொல்லிக் கொடு. அவளும் நம்ப ஜெயா மாதிரிதான். சமர்த்தா இருக்கியா? நான் போயிட்டு வரட்டுமா?” என்று என் முதுகைத் தடவி, தோளைத் தடவி, முகத்தை வருடி விடைபெற்ற அம்மாவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல், ‘டிர்ர்ரிங்’ அடித்த அந்த இள நீல நிறப் பொருளை மாமா தொட்டுத் தூக்கிக் காதில் வைத்துப் பேசுகிற அழகில் பிரமித்து நின்றபடி, “ம்... ம்...” என்று அனுப்பினேன்.

“நடேசா! நா போயிட்டு வரேண்டா!” என்றாள் அம்மா, மாமாவிடம். அந்த ‘டா’ மிகச் சன்னமாக வெளிப்பட்ட ‘டா’. பொருட்காட்சியில் தொலைந்த குழந்தை மாதிரி மிரள் விழித்த ‘டா’!

விழிகளை ஓரங்கட்டி, அம்மாவை ஒரு தலையசைப்பில் வழியனுப்பினார் மாமா.

மாமா! சொந்த மாமா! தாய் மாமா! ஜெயாவுக்கு நான் அண்ணன் போல் இவர் என் அம்மாவுக்கு சொந்தத் தம்பிதான் என்பதை நம்புவது மிகச் சிரமமாக இருந்தது. இருவரையும் போட்டோ எடுத்துப் போட்டு, தலைப்பு வைக்கச் சொல்லிப் புகைப்படப் போட்டி ஒன்று நடத்தினால், ‘வறுமையும் வளமையும்’ என்ற தலைப்பு மட்டும் ஆயிரம் வரும்.

அம்மா நல்ல அம்மா! சமர்த்து அம்மா. சௌகர்யமான இடத்தில் என்னைத் தூக்கி உட்கார்த்தி வைத்துவிட்டுப் போன அம்மா. மனசு பூராவும் அம்மாவை வாழ்த்தினேன். விட்டுப் போன சொர்க்கங்களை நினைந்து நினைந்து நாளெல்லாம் சந்தோஷித்தேன். ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ என்று போக வர, விசிலில் பாடினேன். மனம் குளிரக் குளிர காண்டெஸாவைத் தழுவினேன். பக்கெட் நிறையத் தண்ணீர் முகர்ந்து வந்து, துணியை நனைத்து சளப், சளப்பென்று அடித்து, ஆனந்தமாய், ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவது போல் கழுவினேன். டெலிபோன் ரிசீவரை, ஒரு முயலின் காதைப் பற்றித் தூக்கும் லாகவத்துடன் தூக்கிக் காதில் பொருத்திக்கொண்டு, ‘ரொய்ங்ங்..’கென்ற அதன் ரீங்காரத்தைச் சற்று நேரம் ரசித்தேன். பின், அட்டகாசமாய் ‘ஹலாவ்’ என்று படு ஸ்டைலாகச் சொல்லிப் பார்த்தேன். அப்புறம் கர்ச்சீப் மாதிரி மிருது துணி கொண்டு துப்புரவாய்த் துடைத்தேன். பிரஷ் வைத்து, இடுக்குகளை அநாயாசமாய் சுத்தம் செய்தேன். அந்நியர் யாரேனும் வந்தால், நானே சகலத்துக்கும் அத்தாரிட்டி போல், ‘யாரய்யா அது?’ என்று அதட்டினேன். அங்கேயே நிற்க வைத்தேன். அத்தனை பெரிய பங்களாவில் எங்கு வேண்டுமானாலும் போவேன் என்று வந்தவருக்குக் காட்டுகிற விதமாய் மாடிப்படிகளில் தாவி ஓடினேன். உற்சாகனாயிருந்தேன்.

படிப்பு ஏறவில்லை. ஆரம்பக் காலத்தில் ‘எத்தனை சப்ஜெக்ட்ல போச்சு?’ என்று விசாரித்தார் மாமா. எண்ணச் சிரமப்படுகிறேன் என்பதைப் புரிந்துகொண்டவராய், என் மேல் பரிதாபப்பட்டு படிப்பு பற்றி விசாரிப்பதை நிறுத்திவிட்டார். மகா ஆனந்தமாகிவிட்டேன். அன்றிலிருந்து கொண்டாட்டம்தான்!

முன் ஏடு, பின் ஏடு போன புத்தகங்களை எடைக்குப் போட்டுப் பட்டாணி வாங்கிக் கொறித்தேன். சுஜாவுக்கும் அன்புடன் இரண்டு கொடுத்தேன்.

“டே தத்தி! கார்ல என்னவோ ரிப்பேர்னு சொன்னான் கிருஷ்ணன். அவனோட போய் என்னான்னு பார்த்து, ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது புதுசு மாத்த வேண்டியிருந்துதுன்னா, கையோட இருந்து ரிப்பேர் வேலையை முடிச்சுக்கிட்டு வா! வேலை முடியற வரைக்கும் ஷெட்டை விட்டு அன்னண்டை இன்னண்டை நகரக் கூடாது. கிருஷ்ணன் கிராதகன். அவனை நம்ப முடியாது. புதுசு மாத்தறதா சொல்லிப் பணத்தை வாங்கிப் பையில போட்டுக்குவான். அதுக்குத்தான் உன்னை அனுப்பறேன். புரியுதா?” என்பார் மாமா.

கிளுகிளுத்துப் போய்விடுவேன். மாமாவின் மொத்தச் சொத்தும் இப்போது என் கைப்பிடியில் என்கிற மாதிரி உடம்பு பூரா சிலிர்த்துப் போகும். மிதப்பாய் டிரைவர் கிருஷ்ணனை ஏறிடுவேன். பூச்சி மாதிரி அவனைப் பார்ப்பேன். ‘ஓட்டுய்யா’ என்று உத்தரவிடுவேன்.

மாமா ‘உட்கார்’ என்றால் உட்கார்ந்தேன். மாமி ‘எழுந்திரு’ என்றால் எழுந்திருந்தேன். சுஜா சொன்னாளே என்று ஒரு நாள் பாத்ரூம் முழுக்க ‘சானிஃப்ரெஷ்’ தெளித்து சுத்தமாய்க் கழுவிவிட்டேன்.

கால்களில் ரோமத்தின் அடர்த்தி அதிகரித்ததில், மாமி சொல்படி வேட்டி கட்டப் பழகினேன். வெகுவாய் யோசித்து, கோடாய் மீசை ஒதுக்கி, அப்புறம் மாமா நையாண்டி செய்ததில், தாட்சண்யமில்லாமல் எடுத்துவிட்டேன். சந்தேகத்துக்கு சுஜாவிடம், ‘எது எனக்கு அழகு - மீசை எடுத்தலோ, ஒதுக்கலோ?’ என்று விசாரித்துத் தெரிந்துகொண்டேன் - இரண்டுமே இல்லையென்று. நடுநடுவே, சுஜாவிடம் தோன்றி வரும் பரிணாம வளர்ச்சிகளைப் பார்த்தும் பெருமூச்சு விடலானேன். அவளைக் குறிப்பாய்க் கவனித்தேன். நெஞ்சுக்குள் தொட்டில் கட்டி, அவளை வைத்துத் தாலாட்டினேன். ஒரு வசமான சந்தர்ப்பத்தில் அவளை இறுக அணைத்துத் துணிச்சலாய் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டேன். அப்புறம் அவளை நேரே சந்திக்கப் பயந்து, நாளெல்லாம் நடுங்கிக்கொண்டு இருந்தேன்.

ம்மா வருஷத்துக்கு ஒருமுறை, தப்பினால் இரண்டு முறை, வந்து போய்க்கொண்டு இருந்தாள். வருகிறபோதெல்லாம் மறக்காமல் கனகாம்பரமும், கைமுறுக்கும் கொண்டு வந்தாள். முதல் பூ, முதல் முறுக்கு போலவே ஒவ்வொரு முறையும் இரண்டும் வேலைக்காரி தாயம்மாவின் தலையையும், அவள் மகனின் வயிற்றையும் நிறைக்கப் போயின.

சரியான ஒரு தருணத்தில் அம்மாவைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு, மாமாவிடம் சுஜாவைப் பெண் கேட்கச் சொல்லி மன்றாடினேன். அம்மா அதிர்ந்தாள். மிரண்டாள். “வேண்டாண்டா! உன் மாமன்காரன் போக்கிரி. கேட்டதும் அக்கான்னுகூடப் பார்க்காம என்னைக் கண்டந்துண்டமாய் வெட்டியே போட்டுடுவான்!” என்றாள்.

மாமாவின் குணாதிசயங்கள் பலவற்றை நயமாக அம்மாவுக்கு எடுத்துச் சொல்லித் தைரியமாய்க் கேட்கும்படி ஊக்கினேன்.

கிளம்புகிற சமயத்தின் அம்மா பெரிதாய் பீடிகை போட்டாள். “சுஜாவுக்கு இப்போ பத்தொம்போது நடக்கறதா?” என்று நைஸாக ஆரம்பித்தாள். “வரன் ஏதாவது வர்றதானு பார்த்துக்கிட்டிருக்கியோ?” என்று வளர்த்தாள். “அவ கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?” என்ற மாமாவிடம், “இப்பவே பிடிச்சுப் பார்த்தால்தானே காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?” என்று சாதுர்யமாய் வார்த்தை விட்டாள்.

“ஏன், ஏதாவது பார்த்து வச்சிருக்கியா என்ன? நல்ல இடமா இருந்தா சொல்லேன், முடிச்சுடுவோம்” என்றார் மாமா, குத்துக்கல் மாதிரி என்னை எதிரே வைத்துக்கொண்டு. அம்மா ஜாடையாய் என்னைத் திரும்பிப் பார்த்துக் குறிப்பால் அவருக்கு உணர்த்த முயன்றாள். முடியாமல் தோற்றுப் போய்த் தலையைக் குனிந்துகொண்டு, பலகீனமான குரலில், “பையன் ஆசைப்படறான். எனக்கும்கூட லேசா உள்ளூற சபலம்தான். வேண்டாம்னு பார்த்தாலும் என்னால கேக்காம இருக்க முடியலே. உன் பொண்ணை மருமகளாக்கிக் கொள்ள ஆசைப்படறேன். நீ என்ன சொல்றே?” என்றாள்.

நல்லதொரு நகைச்சுவையைக் கேட்டாற்போல், மாமா தலையை அண்ணாத்தி ‘ஹோ...ஹோ...’வென்று சிரித்தார். கண்களில் நீர் ததும்புகிற வரைக்கும் சிரித்தார். வந்து நின்ற மாமியிடமும், வேலைக்காரி தாயம்மாவிடமும், டிரைவர் கிருஷ்ணனிடமும், இன்னும் அப்போதைக்கு அங்கே குழுமியிருந்த சகலரிடமும், “கேட்டியா, கேட்டியா?” என்று சொல்லிச் சொல்லிச் சிரித்தார். “என்னம்மா சுஜா, தோ நிக்கறான் பார் நம்ம கதாநாயகன். இவனை நீ கல்யாணம் பண்ணிக்கணுமாம். என்ன, பண்ணிக்கிறயா?” என்று மகளிடம் லஜ்ஜையில்லாமல் கேட்டுக் கண் சிமிட்டினார். “என்னடா தத்திப் பயலே! என் பொண்ணு வேணுமா? நூத்தியெட்டு தடவை தோப்புக்கரணம் போடறியா, தர்றேன். எண்ணிக்கவா?” என்றார்.

குபுக்கென்று என் உடம்பு பூராவும் உற்சாக ரத்தம் கொப்பளிக்க, காதுகளைப் பிடித்துக்கொண்டு தயாரானேன். மாமா ஒன்று, இரண்டு சொல்ல... மாமி, சுஜா, தாயம்மா, கிருஷ்ணன் எல்லோரும் வாய் வலிக்க, விலா வலிக்கச் சிரித்துக் குதூகலிக்க, அம்மா மட்டும் ஏனோ வாயடைத்துப் போய்க் கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள்.

முடிந்ததும் வெற்றி வீரனாய் எழுந்து நின்று நீளமாய் மூச்சு விட்டு, “என்ன மாமா, சரியா? கல்யாணத்தை எப்போ வெச்சுக்கலாம்?” என்று நான் ஆர்வத்துடன் கேட்டபோது, பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்தி, அம்மாவிடம் திரும்பி, “தெரிஞ்சுக்கிட்டியா உம் புள்ளையோட யோக்கியதையை? போறுமா, இன்னும் சாம்பிள் காட்டவா? ஆசைப்படறதுக்கும் ஓர் அளவு உண்டு, ஞாபகத்துல வெச்சுக்கோ. பின்னாடி ரொம்ப உதவும்” என்றார் சாவதானமாய்.

மறுபடி நான் “மாமா, கல்யாணம்...” என்று விடாமுயற்சிக்க, “போடா! போய் வேலையைப் பாரு. பூட்ஸுக்கெல்லாம் பாலிஷ் போட்டு வைடான்னனே, போட்டியா? எரும்மாடு! கழுதைக்குக் கல்யாணம் ஒரு கேடாக்கும்!” என்று ஆசீர்வதித்தார்.

நான் சுவாரசியம் இழந்தவனாய்த் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, மாமா சொன்ன வேலையைச் செவ்வனே செய்து முடிக்கத் திரும்பியபோது, “நில்!” என்றாள் அம்மா.

பின்பு மாமாவிடம் திரும்பி, “நாங்க கிளம்பறோம்” என்றாள்.

“நல்லது! இதுக்குப் பிறகும் அவன் இங்கே இருக்கிறது சரியில்லை என்பதை நான் சொல்லாமல் நீயாக உணர்ந்துகொண்ட வரையில் சந்தோஷம்” என்றார் மாமா டாணென்று.

மனசேயில்லாமல் அம்மாவுடன் புறப்பட்டேன்.

- அடுத்த பதிவில் முடியும்.

6 comments:

அடுத்த பதிவிற்காக வெயிட்டிங்...
 
தங்கள் தந்தையார் ஊரிலிருந்து திரும்பிவிட்டாரோ? சொன்னபடி ‘நா ஒரு மாதிரி’ கதையைப் பதிவிட்டதற்கு நன்றி! முற்றும் போடுங்க, பிறகு என் கருத்தைச் சொல்றேன்.
 
கிருபாநந்தினி
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
 
அருமை.
லேட்டா வந்துட்டேன்னு நினைக்கிறேன். இரண்டாவது பாகத்துக்கு செல்கிறேன்.
 
Dear Sir,
I am a fan of your (blogs) writings that introduced me, Mrs. Saroj
Narayanaswami who well known person in our community. I met Mrs.Saroj few
months back at her home that regarding for Tamil Culture IIT Bombay. She
has proud of your writings and she is really down to earth person I never
met in my life this type of star person is being very simple.
My best wishes for your writings.
 
முடிச்சதைப் படிச்சீங்களா வண்ணத்துப்பூச்சி?
*****
கிருபா மேடம்! ஆர்வத்துக்கு நன்றி!
*****
'கேபிள்' கனெக்ஷனுக்காக (முடிவின் பின்னூட்டத்துக்காக) காத்திருக்கிறேன்.
*****
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா பின்னூட்டத்துல (கதை முடிவுல) முந்திக்கிட்டீங்களே பாஸு!
*****
Mr.Thambidhurai! Thanks for your compliments and I have already sent a reply to your email.