உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, December 08, 2017

அவரின் அணுக்கம், எனது ‘பாக்கியம்’!

நான் பழகிய சில எழுத்தாளர்களுடனான என் அனுபவங்கள் பற்றி ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். அந்த வரிசையில் அடுத்ததாக, நகைச்சுவை மாமன்னர் பாக்கியம் ராமசாமி பற்றிக் கொஞ்சம் எழுதிவைத்திருந்தேன். அதை பிரின்ட் அவுட் எடுத்து, நாளைய சனிக்கிழமையன்று (9.12.17) அவரின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் காண்பித்து, அவரிடம் பேசி, கூடுதலாக வேறு ஏதேனும் விஷயங்கள் சேர்த்துவிட்டுப் பதிவிடலாம் என்று எண்ணியிருந்த நேரத்தில், எதிர்பாராத அதிர்ச்சியாக இன்று காலையில் என்னை அதிர வைத்தது அவரின் மரணச் செய்தி!

சந்தோஷமான ஒரு பதிவாக வலைதளத்தில் ஏறியிருக்க வேண்டிய இந்தக் கட்டுரை, அஞ்சலிக் கட்டுரையாக மாறிய கொடுமையை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

பாக்கியம் ராமசாமி சார் “ரவ்வி… ரவ்விப்ரகாஷ்ஷ்..” என்று என் பெயரை அழுத்தி உச்சரித்து அழைக்கும்விதமே என்னை அவர் இறுக அணைத்துக்கொள்வதுபோல் இருக்கும். அவரின் கலகல சிரிப்பு, நம் இதயப் புண்கள் எல்லாவற்றையும் ஆற்றும் மாமருந்து.

இதயம், நுரையீரல் என என் உள்ளுறுப்புகளில் ஏதோ ஒன்று கழன்று காணாமல் போய், அந்த இடம் காலியாக இருப்பது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது அவரின் இழப்பு.   

oooooooo

சின்ன வயசில் அப்பா எனக்கு அறிமுகப்படுத்திய பெயர் ‘பாக்கியம் ராமசாமி’. குமுதம் பத்திரிகையில் வெளியான ‘அப்புசாமி-சீதாப்பாட்டி’ தொடர்களுக்கு என் அப்பா பெரிய ரசிகர். தான் அவற்றைப் படித்து ரசித்துச் சிரிப்பதோடு என்னையும் படிக்கச் சொல்வார்.

அன்றைக்கு, ஜோக்குகளில் உள்ள நகைச்சுவையையே புரிந்துகொள்ள முடியாத என்னால் ஒரு கதையைப் படித்து அதில் உள்ள நகைச்சுவையை அனுபவிக்கத் தெரியவில்லை. ஆனாலும் படித்தேன். ஒரு கதையின் அத்தியாயத்தில், அரபு ஷேக் ஒருவரின் முன் மண்டியிட்டு அவரின் மந்திரி நீளமாக பீடிகை போட்டு வசனங்களாகப் பேசி வணக்கம் தெரிவித்து மன்னிப்புக் கேட்பது போன்ற பகுதி இடம்பெற்றிருந்தது. புரியவில்லை என்றாலும், அது எனக்கு ஏனோ மிக சுவாரஸ்யமாக இருந்தது. அதுதான் ‘ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்’ தொடர்கதை.

அதன்பின், கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும், அதாவது நான் பத்தாம், பதினொன்றாம் வகுப்புகளில் படிக்கும்போது, அப்புசாமி – சீதாப்பாட்டி படக்கதைப் புத்தகங்களாக வெளியானவற்றையெல்லாம் வாங்கிப் படித்தேன். அதில், அப்புசாமிதான் சீதாப்பாட்டிக்கு (அப்போது பாட்டியல்ல! இளம்பெண் சீதா) ஏ-பி-சி-டி புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்து, அவளின் ஆங்கில அறிவை விருத்தி செய்வதாகவெல்லாம் கதைகள் இருக்கும்.

பின்னாளில், ‘சாவி’ பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் ‘பாக்கியம் ராமசாமி’ அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் அப்போது குமுதம் பத்திரிகையிலிருந்து விலகியிருந்த நேரம். சாவி அவரைத் தம் பத்திரிகையில் எழுத அழைத்தார்.

சாவி அவர்களின் இல்லம் அப்போது அண்ணா நகரில், ஆதர்ஷ் காலேஜுக்கு எதிரில் இருந்தது. கீழே சாவி பத்திரிகை அலுவலகமும், மாடியில் சாவி சாரின் வீடும்.

அப்போது நான் சாவி இதழில் ‘இளவட்டம்’ என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதிக்கொண்டிருந்தேன். சாவி எழுதித் தரும் பதில்களில் சில நேரம் ஓரிரு பதில்களைச் சற்றே எடிட் செய்தோ அல்லது வேறு ஒரு பதிலையோ எழுதி அவரிடம் காட்டுவதுண்டு. வேறு எந்தப் பத்திரிகையாளரிடமாவது இப்படி என்னால் சுதந்திரமாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்று யோசிக்கக்கூட முடியவில்லை. அப்படி நான் செய்யும் திருத்தங்களைப் பார்த்துவிட்டு, “நீயே கேள்வி-பதில் எழுதேன், ரவி!” என்றார் சாவி ஒருநாள். திடுக்கிட்டுப் போனேன்.

“ஏன் பயப்படறே? நல்லாதானே எழுதறே! ட்ரை பண்ணு. எல்லாம் சரியா வரும்” என்று ஊக்கப்படுத்தினார். அவரேதான் ‘இளவட்டம்’ என்று பெயர் வைத்தார். சாவி இதழில் ஒரே நேரத்தில் சாவி பதில்கள், இளவட்டம் பதில்கள் என இரண்டுமே வெளியாகின. ஒருமுறை, கொஞ்சம் செக்ஸியான கேள்வி ஒன்று சாவி சாருக்கு வந்தபோது, ‘ரீ-டைரக்ட் டு இளவட்டம்’ என்று பதில் கொடுத்திருந்தார்.

அந்தக் கேள்வி… “டெபோனிர் பத்திரிகையை வாங்கியதும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்தப் பக்கத்தை?”

டெபோனிரில் அப்போது நடுப்பக்கத்தில் முழு நிர்வாணப் படங்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதை மனதில் கொண்டுதான் அந்த வாசகர் குறும்பாக இந்தக் கேள்வியை எழுதி அனுப்பியிருந்தார். இதற்குத்தான் ‘ரீ-டைரக்ட் டு இளவட்டம்’ என்று தன் கேள்வி-பகுதியில் பதில் கொடுத்திருந்தார் சாவி.

அந்தக் கேள்வி அதே இதழில் ‘இளவட்டம் பதில்கள்’ பகுதியில், ‘அக்கம்பக்கத்தை’ என்னும் பதிலோடு வெளியானது. அந்த பதிலும் சாவி சொன்ன பதில்தான்!

அதன்பின், சாவி சார் இரண்டாவது முறையாக ‘குங்குமம்’ பத்திரிகைக்கு ஆசிரியர் பொறுப்பேற்றபோது, அதில் ‘அசரீரி’ என்னும் தலைப்பில் என்னைக் கேள்வி-பதில் பகுதி எழுதச் சொன்னார். எழுதினேன். பின்னர், ‘அசரீரி’ என்னும் தலைப்பை ‘கதிர் பதில்கள்’ என கலைஞர் மாற்றிவிட்டார். அதன்பின் சில மாதங்களில், சாவி சாரே அங்கிருந்து விலகிவிட்டார். இது தனிக் கதை.

திரு.பாக்கியம் ராமசாமி, சாவி அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, தான் இளவட்டம் பதில்களைத் தொடர்ந்து படிப்பதாகச் சொல்லி, அந்த இளவட்டத்தைச் சந்திக்க வேண்டுமே என்று சாவி சாரிடம் கேட்டார். அருகில் நின்றிருந்த என்னைக் காட்டி, “இதோ, இவன்தான்!” என்றார் சாவி. “மத்தவங்க..?” என்று பா.ரா. கேட்க, “இவன் ஒருத்தன்தான். வேறு யாரும் இல்லை!” என்று சாவி சார் சொன்னதும், பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! “நான் ஏதோ இளைஞர் பட்டாளம் ஒண்ணு உள்ளே வந்திருக்குன்னல்லவா நினைச்சேன்!” என்றார்.

சாவி சாரைப் போலவே மனசு திறந்து பாராட்டக்கூடியவர் பாக்கியம் ராமசாமி.

ஒருமுறை, A4 சைஸ் தாள்களைப் பாதியாகக் கிழித்து என் டேபிளில் அடுக்கி வைத்திருந்தேன். “இது என்ன?” என்று கேட்டார் பா.ரா. “கதை, கட்டுரை ஏதாவது எழுதறதுக்கு சார்!” என்றேன். “இதை எதுக்கு வேலை மெனக்கெட்டு பாதிப் பாதியா கிழிச்சு வெச்சிருக்கே? அப்படியே எழுத வேண்டியதுதானே?” என்றார். “இல்ல சார், முதல்ல ஒரு பாரா எழுதின பிறகுதான், என்னால ஒரு ஃபார்முக்கு வர முடியும். அதுக்கப்புறம் கடகடன்னு எழுதி முடிப்பேன். ஆனால், அந்த முதல் பாராவை சரியா எழுதறதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆயிடும். A4 ஷீட்டுல எழுதினா, அடிச்சுட்டு மறுபடி எழுதணும். அது என் மூடை அப்செட் பண்ணிடும். தொடர்ந்து அதுல எழுத முடியாது. அதனால நான் இந்த ட்ரிக்கைக் கைப்பிடிக்கிறேன்” என்றேன். “இது நல்லாருக்கே! நானும் இனிமே இதை ஃபாலோ பண்ணலாம்னு இருக்கேன்” என்றார்.

பார்த்த அந்த முதல் சந்திப்பிலேயே என்மீது அவ்வளவு வாஞ்சை கொண்டுவிட்டார் பாக்கியம் ராமசாமி. “ரவி, நீ வீட்டுக்கு எப்படிப் போவே?” என்று கேட்டார்.

நான் அப்போது ஒரு ஓட்டை உடைசல் டூ வீலர் வைத்திருந்தேன். அதில் போவதாக அவரிடம் சொன்னேன்.

“என்னைக் கொஞ்சம் பனகல் பார்க்ல இறக்கி விட்டுடறியா?” என்றார்.

எனக்குத் திடுக்கென்றது. நானே சுமாராகத்தான் ஓட்டுவேன். அதிலும் வண்டி வேறு சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. இவ்வளவு பெரிய எழுத்தாளரை எப்படி அதில் அழைத்துச் செல்ல முடியும்? அவர் போன்ற மாமனிதர் உட்காரச் சற்றும் தகுதியான வண்டியே இல்லை அது. எனவே, தயங்கினேன்.

“என்ன தயங்கறே? விழுந்துடுவேன்னு பார்க்கறியா? விழ மாட்டேன். தைரியமா வா!” என்றார். தயக்கமே இல்லாமல் என் டி.வி.எஸ். எக்ஸெல் வண்டியில் என் பின்னால் அமர்ந்துகொண்டார். டொர்… டொர்ரென்று ஒரு மொக்கை வண்டியில் அவரை உட்கார வைத்து அழைத்துச் செல்ல எனக்குத்தான் கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது. அவர் அதுபற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.

தான் பெரிய எழுத்தாளர் என்கிற கர்வமோ பந்தாவோ கொஞ்சம்கூட இல்லாதவர் பாக்கியம் ராமசாமி சார்.

அவரை அறிமுகம் செய்துவைக்கவும், அந்த மாமனிதரின் ஆசிகளைக் கிடைக்கச் செய்யவும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் நான் என் மகனை அழைத்துப் போயிருந்தேன். அவன் சின்ன பையன் என்றெல்லாம் பாராமல், சரிக்குச் சமமாக அவனோடு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார் பா.ரா.

“ஏதோ ஃபேஸ்புக்னு என்னவோ சொல்றாங்களே… உனக்குத் தெரியுமா? எனக்குக் கொஞ்சம் சொல்லித் தாயேன்” என்றார்.

என் மகன் அங்கேயே, அவரின் சிஸ்டத்திலேயே அமர்ந்து ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஓப்பன் செய்து, கவர் பிக்சர், புரொஃபைல் பிக்சர் எல்லாம் செட் செய்து, அவர் சொன்ன சில வரிகளை முதல் பதிவாகப் பதிவேற்றியும் கொடுத்தான். அவரின் உதவியாளர் அனில் கேட்ட சில சந்தேகங்களுக்கு விளக்கமும் தந்தான். (இதை பா.ரா-வின் மகன் யோகேஷும் அனிலும் இன்றைக்கு நினைவுகூர்ந்து பேசினார்கள்.).

அதன்பின் அந்த ஃபேஸ்புக்கை அனிலே சிறப்பாகக் கையாளத் தொடங்கினார். பா.ரா. அதை ஒரு பத்திரிகை போலவே நடத்தி, பரிசுப் போட்டி எல்லாம் அதில் வைத்து, வெகு விரைவில் 5000 நட்புகளைத் தாண்டிவிட்டார்.

ஆனந்த விகடனில் அவரின் நகைச்சுவைக் கதைகள் பலவற்றைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தேன். குறிப்பாக, பஃபே விருந்தில் நின்றுகொண்டே சாப்பிடும் சங்கடம், எதை முதலில் எடுத்துச் சாப்பிடுவது என்கிற குழப்பம் ஆகியவற்றை வைத்து அவர் எழுதிய ஒரு சிறுகதையும், நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் எதையாவது ஒன்றுகிடக்க ஒன்று சொல்லி நோயாளிக்கு பீதி ஏற்படுத்துவது பற்றி அவர் எழுதிய ஒரு சிறுகதையும் அத்தனை நகைச்சுவையாக இருக்கும்.

வீட்டுக்கு வீடு சிஸ்டமும், கணினிப் பயன்பாடும் தொடங்கிய அந்த ஆரம்ப காலத்தில், கந்த சஷ்டி கவசம் பாணியில் விகடனில் ‘கணினி சிஸ்ட கவசம்’ ஒன்று எழுதினார் பா.ரா. அது வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

கதைகள் எழுதியது மட்டுமல்லாமல், ஒருசில ஆங்கில கார்ட்டூன் படங்களுக்கு தமிழ் வசனமும் எழுதியிருக்கிறார் பா.ரா. என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

அவரின் குருநாதர் எஸ்.ஏ.பி. பற்றிப் பல சிலிர்ப்பான, ரசனையான விஷயங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பா.ரா. தன் நண்பர் ரா.கி.ரா. பற்றி, புனிதன் பற்றியெல்லாம்கூடச் சொல்லியிருக்கிறார்.

அவர் ஆசைப்பட்ட இரண்டு விஷயங்களை என்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்கிற உறுத்தலும் வருத்தமும் எனக்கு இருக்கிறது.

ஒன்று… அவர் அன்போடு பலமுறை அழைத்தும், அவர் நடத்திய அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு ஒரு தடவைகூட நான் போனதில்லை. போகக்கூடாது என்றில்லை; ஏதோ வேலை, என்னவோ ஒரு காரணம்!

மற்றொன்று… நான் மிகத் தீவிர டி.எம்.எஸ். ரசிகன் என்று என் ஃபேஸ்புக் பதிவுகள் மூலமாக அவருக்குத் தெரியும். ஆனால், நேரில் பார்க்கும்போதெல்லாம் கதை, கட்டுரை, பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் என்றுதான் பேச்சு ஓடுமே தவிர, டி.எம்.எஸ். பற்றி நாங்கள் பேசிக்கொண்டதில்லை.

சில மாதங்களுக்கு முன்னால், அவர் வழக்கம்போல் ஒருநாள் போன் செய்திருந்தார்.

“ரவி, ஃபேஸ்புக்ல நீ டி.எம்.எஸ். பத்தி அடிக்கடி எழுதறதைப் பார்த்து, இன்னிக்கு ஒரு டி.எம்.எஸ். பாட்டை முழுசா கேட்டே ஆகணும்னு தோணிடுச்சு. அடிக்கடி டி.வி-யில டி.எம்.எஸ். பாட்டு ஏதாவது காதுல விழும்னாலும், இன்னிக்கு வேற யோசனை எதுவும் இல்லாம, அப்படியே முழுசா உட்கார்ந்து ஒரு பாட்டைக் கேக்கணும்னு நினைச்சேன். எங்கிருந்தோ புடிச்சு, எனக்காக டி.எம்.எஸ்ஸின் ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…’ பாடலைப் போட்டுக் காண்பிச்சார் அனில். ஹப்பா… என்னமா பாடறார்! நீ அவரோட ரசிகனா இருக்கிறது ரொம்பச் சரிதான். அடேங்கப்பா… என்னா பக்தி, என்னா குரல்… இனிமே ஒருத்தன் பிறந்துகூட வரமுடியாது இவர் போலப் பாட…” என்று டி.எம்.எஸ்ஸை வானளாவப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார் பாக்கியம் ராமசாமி. நான் காது குளிரக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

பேச்சின் தொடர்ச்சியாக, “ஒரு இடத்துல ‘கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்…’னு பாடறார் பாரு. ‘அடடா’ன்னு இருக்கு. ரவி, நீயும் நானும் சேர்ந்து டி.எம்.எஸ் நினைவா ஏதாவது செய்யணும். தணிகை மலையில் கல்லாவேன்னு பாடினாரே, சும்மா வெறுமே பாட்டுக்காக இல்லை; மனசுலேர்ந்து அவர் அந்த வரியைப் பாடற மாதிரி எனக்குத் தோணிச்சு. அதனால, அவர் ஆசைப்பட்டதை நிறைவேத்தி வைக்கணும்னு எனக்கு ஆசை. திருத்தணிகை மலையில் ஏறுற படிக்கட்டுகள்ல ஒரு படிக்கட்டாவோ, அல்லது அங்கேயிருக்கிற ஏதாவது ஒரு கருங்கல் தூணாவோ தயார் செஞ்சு, டி.எம்.எஸ்., பாடகர், முருக பக்தர், தோற்றம்-மறைவு எல்லாம் போட்டு, நிரந்தரமா அங்கே வெச்சுடணும். என்ன சொல்றே… திருத்தணி போற பக்தர்கள் கண்ணுல எல்லாம் அது படணும். அவ்வளவு பெரிய பாடகருக்கு ஓர் உண்மையான ரசிகனா இதை நான் செய்யணும்னு ஆசைப்படறேன். இதுக்கான செலவு மொத்தத்தையும் நான் ஏத்துக்கறேன். இதுக்கு யார்கிட்டே பர்மிஷன் கேக்கணும், அறநிலையத்துறைல யார்கிட்டே இதுபத்திப் பேசணும், என்ன பட்ஜெட் ஆகும்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்” என்றார்.

அதற்குப் பின்பும் இரண்டு மூன்று தடவை பேசியபோதும், வேறு ஏதோ பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் இந்த விஷயத்தையும் ஞாபகப்படுத்துவார். ஆரம்பத்தில் நானும் முயற்சி எடுத்து அது குறித்து விசாரித்தேன். ‘சொல்லின் செல்வர்’ திரு. பி.என்.பரசுராமன், ‘இமயத்துடன்’ சீரியலை இயக்கிய இயக்குநர் விஜய் ஆகியோருடனும் இதுபற்றிக் கலந்தாலோசித்தேன். அப்புறம், என் வேலை மும்முரத்தில் அது மறந்தே போனது.

அவரின் ஆசையை நிறைவேற்றித் தர இயலாமல் போனதில் எனக்கு உள்ளபடியே வருத்தம்தான்.

பாக்கியம் ராமசாமி எவ்வளவுக்கெவ்வளவு நகைச்சுவையாளரோ அவ்வளவுக்கவ்வளவு தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார். பெரியவர்களுக்கே லேசில் புரியாத தத்துவ விசாரங்கள் அடங்கிய ‘பகவத் கீதை’யை இரண்டு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக்கொள்வதுபோல அவர்கள் மொழியில் மிக எளிமையாக அவர் எழுதிய ‘பாமர கீதை’யே இதற்கு சாட்சி!   

ஒருமுறை, என்னிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தவர், “ரவி, இப்ப நான் சிலரோட பெயர்களைச் சொல்லிக்கிட்டே வரேன். கவனமா கேளு. கடைசியில ஒரு கேள்வி கேட்பேன். பதில் சொல்லணும். சரியா?” என்றார்.

“சரி சார்” என்று தயாரானேன்.

“காஞ்சிப் பெரியவர், கிருபானந்த வாரியார், எஸ்.ஏ.பி., எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜீவ் காந்தி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, சில்க் ஸ்மிதா, ஸ்மிதா பாட்டீல், டி.ஆர்.ராஜகுமாரி, ராம்சுரத்குமார், சாவித்திரி, தேவிகா, ஜெமினி கணேசன், மகாராஜபுரம் சந்தானம், ஜி.கே.மூப்பனார், இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, மைக்கேல் ஜாக்சன், ராஜ்கபூர், ராஜேஷ்கன்னா, தேவ் ஆனந்த், வி.பி.சிங், வாஜ்பாய், வேதாத்ரி மகரிஷி, சத்யசாயி பாபா, சுஜாதா, சாவி, நாகேஷ், குன்னக்குடி வைத்தியநாதன், லா.ச.ராமாமிருதம்…” என, ஆன்மிகம், அரசியல், சினிமா, இலக்கியம் எல்லாம் கலந்துகட்டி, கடகடவென ஐம்பது அறுபது பெயர்களுக்கு மேல் சொல்லிக்கொண்டுபோய், மூச்சு வாங்க நிறுத்தினார் பா.ரா.

பின்பு, “இப்ப நான் சொன்ன அத்தனை பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என்னன்னு சொல்லு, பார்க்கலாம்!” என்றார்.

என்ன யோசித்தும், இந்தக் கலவையான பட்டியலில் இருப்பவர்களுக்கிடையே என்ன ஒற்றுமை இருக்கிறது என்று என்னால் யூகிக்கவே முடியவில்லை.
“தெரியலை சார், நீங்களே சொல்லிடுங்க!” என்று சரண்டரானேன்.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பின், “இவங்க அத்தனை பேரும் நம் சம காலத்தவங்க. இவங்கள்ல யாரும் இப்ப உயிரோட இல்லைங்கிறதுதான் ஒத்துமை!” என்றார்.

அவர் இதைச் சொன்னதும், என் நெஞ்சு ஒரு தடவை திடுக்கெனத் தூக்கிப்போட்டது.

வாழ்க்கையின் அநித்யத்தை இதைவிட யாரும் சுலபமாக, சுருக்கமாகச் சொல்லிப் புரியவைத்துவிட முடியாது என்று தோன்றியது.

“நான் சொன்னது கொஞ்சம்தான். இன்னும் யோசிச்சா நம் சம காலத்துல, நம் கண்ணெதிரே வாழ்ந்து மறைஞ்ச இன்னுமொரு ஆயிரம் பேரை நம்மால பட்டியல் போட முடியும். அப்படின்னா, வாழ்க்கைங்கிறது எவ்ளோ சின்னது பாரு! இதுக்குள்ளேதான் மனுஷங்களுக்குள்ளே அத்தனை போட்டி, பொறாமை, சண்டை!” என்றார்.

அவர் சொன்ன இந்த விஷயம் இன்னமும் என் மண்டைக்குள் குடைந்துகொண்டிருக்கிறது.

இப்போது அந்தப் பட்டியலில் மேலும் ஒரு பெயர் சேர்ந்துகொண்டதில், என் மனக் குடைச்சல் அதிகமாகிவிட்டது.

0 comments: