உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, January 21, 2011

வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான்...

‘வேலை தேடி அலைந்த இந்தச் சமயத்தில்தான் ஒரு நாள், இயக்குநர் பாண்டியராஜன் வீட்டில் போய் தவம் கிடந்ததும், தீரன் சின்னமலை பகுதியில் 'என்டர்பிரைஸிங் என்டர்பிரைஸஸ்' என்னும் வாட்ச் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறியதொரு கம்பெனியில் ஒரு நாள் பணியாற்றியதும் நடந்தது. பின்னர், நண்பர் மார்க்கபந்துவின் உதவியால் 'ஆம்ப்ரோ' பிஸ்கட் கம்பெனியில் டெப்போ இன்சார்ஜாக வேலைக்குச் சேர்ந்தேன். இது பற்றியெல்லாம் முன்பே விலாவாரியாக என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்!’
- சென்ற பதிவில் நான் குறிப்பிட்டிருந்த வரிகள் இவை.

“இப்போதைய உங்கள் இரண்டு வலைப்பூக்களிலும் இந்த விஷயங்களைத் தேடினேன்; கிடைக்கவில்லை. ஒருக்கால், நீங்கள் முன்பு உங்கள் ‘ஏடாகூடம்’ வலைப்பூவில் அவற்றை எழுதியிருப்பீர்கள். சுவாரஸ்யமான நிகழ்வுகளாக இருந்தால் மீண்டும் அவற்றைத் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளுங்களேன். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்ததுபோல் இருக்கும்” என்று தொலைபேசியில் கேட்டுக்கொண்டார், என்னிடம் அடிக்கடி நட்புரீதியில் உரையாடும் ஒரு பிரமுகர்.

அவர் சொன்னதை உத்தரவாக ஏற்று, வாட்ச் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒரு நாள் ஊழியனாக இருந்த அனுபவத்தை இங்கே பதிவிடுகிறேன். இது சுவாரஸ்யமான நிகழ்வா, இல்லையா என்பதைப் படிப்பவர்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

ஒரே ஒரு திருத்தம். பாண்டியராஜனைச் சந்தித்தது, ஆம்ப்ரோ கம்பெனியில் சேர்ந்தது எல்லாம் 1984-85-ஆம் ஆண்டுகளில்தான். ஆனால், யோசித்துப் பார்க்கையில், தீரன் சின்னமலை பகுதி அனுபவம் மட்டும் அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது என்று தோன்றுகிறது.

1979-ஆம் ஆண்டு. அப்போது நான் மட்டும் வேலை தேடி சென்னை வந்து, என் அத்தை வீட்டில் தங்கியிருந்தேன்.

அப்போது, தண்டையார்ப்பேட்டையில் ஸ்ரீசாய் டிரேடர்ஸ், கங்கப்பா கிருஷ்ணமூர்த்தி அண்ட் கோ என இரண்டு மூன்று பெயர்களில் நடந்துகொண்டிருந்த பழைய பேப்பர் நிறுவனம் ஒன்றில் சில காலம் வேலை(?!) செய்தேன்.

வேலைக்குப் பக்கத்தில் கேள்விக்குறியும் ஆச்சர்யக்குறியும் போட்டதன் பின்னணியில் ஒரு பெரிய கதையே இருக்கிறது. சுருக்கமாகச் சொல்கிறேன்.

அங்கே மேனேஜராக இருந்தவர் என் தூரத்து உறவினர். என் மேல் பரிதாபப்பட்டு அங்கு கிளார்க் உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார்.

உண்மையில், அப்போது அங்கு எந்த வேலையும் காலி இல்லை. காலி இல்லை என்பதைவிட, அங்கே பணியாற்றிக்கொண்டு இருந்தவர்களுக்கே வேலை இல்லை என்பதுதான் உண்மை. அங்கே பணியில் சேர்ந்த பிறகுதான் எனக்கு இந்த விஷயமே தெரிய வந்தது.

பழைய பேப்பர்களை வாங்கி, ரகம் பிரித்து, பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கும் ஒரு நிறுவனம்தான் அது. அப்போது பேப்பர் மார்க்கெட் படு டல்லாக இருந்தது. நிறுவனமே தள்ளாடிக்கொண்டு இருந்தது. எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பது அங்குள்ளவர்களாலேயே உறுதியாகச் சொல்ல முடியாத நிலை.

எனக்கு வாரக் கூலி. ஒரு நாளைக்கு 5 ரூபாய் வீதம் ஆறு நாளைக்கு 30 ரூபாய் என்று கணக்கிட்டு, ஒவ்வொரு சனிக்கிழமையும் கையில் கொடுத்துவிடுவார்கள். இதை அப்படியே என் அத்தையிடம் கொடுத்துவிடுவேன். ஞாயிற்றுக்கிழமை லீவ். சம்பளம் கிடையாது.

காலையில் சாப்பிட்டுவிட்டு, கையில் ஒரு டப்பாவில் சாப்பாடு எடுத்துப் போய், கம்பெனியில் மதியம் சாப்பிடுவேன். பிறகு, இரவு வீடு வந்ததும் சாப்பாடு. இடையில் கம்பெனியில் காலையில் ஒரு டீ, மதியம் ஒரு டீ கம்பெனி செலவில் கிடைக்கும். மற்றபடி நான் வேறு எந்தச் செலவும் செய்ய மாட்டேன்.

பவழக்காரத் தெருவில் உள்ள என் அத்தை வீட்டிலிருந்து காலையில் நடராஜா சர்வீஸில் புறப்பட்டால், இப்ராஹிம்ஜி தெரு வழியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியைக் கடந்து, ஜி.ஏ.ரோடில் (கொல்லவார் அக்ரஹாரம் ரோடு என்பார்கள்) உள்ள கங்கப்பா கம்பெனியை அடைவேன். அதேபோல், சாயந்திரம் ஐந்தரை மணிக்கு வேலை முடிந்ததும், நடந்தே வீடு வந்து சேருவேன்.

இதெல்லாம் எனக்குக் கஷ்டமாக இல்லை. கம்பெனியில் வேலை செய்கிற மாதிரி வேலை செய்வதுதான் கஷ்டமாக இருந்தது. அதாவது, அங்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. ஆனால், ஏதாவது வேலை செய்கிற மாதிரி வேலை செய்துகொண்டு இருக்க வேண்டும். சும்மா உட்கார்ந்திருக்கக்கூடாது.

ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும் முதலாளி திடீர் விஸிட் செய்வார். (அவருக்குச் சென்னையில் வேறு சில இடங்களில், வேறு சில பிசினஸ்கள் இருந்தன.) ‘நீ என்ன செய்யறே?’, ‘நீ என்ன செய்யறே?’ ‘இவன் என்ன பண்றான்?’ என்றெல்லாம் மேனேஜரைக் கேட்பார். இவன் அக்கவுண்ட் டேலி பண்றான், அவர் சேல்ஸ் டீடெய்ல்ஸ் சரி பார்க்கிறார் என்று என்னத்தையாவது சொல்லிச் சமாளிப்பார் மேனேஜர். யாரும் எந்த வேலையும் செய்யாமல் ஈ ஓட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால், தன்னை உள்பட வேலையை விட்டுத் தூக்கிவிடப் போகிறாரே என்ற பயம்.

ஆக, வேலையே இல்லாமல் நாள் முழுக்க வேலை செய்வது மாதிரி நடிப்பதுதான் அங்கே என் வேலை என்று ஆகிப்போனது. அதற்காகக் கதைப் புத்தகம் படித்துக் கொண்டு இருக்கக்கூடாது. எதையாவது பில் புக்கை வைத்துக் கூட்டிக்கொண்டு இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக ஏதாவது இன்வாய்ஸில் எழுதிக்கொண்டு இருக்க வேண்டும். போனில் யாருடனாவது(?) பரபரப்பாக வியாபாரம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும். ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். எப்போதுமே படு சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டு இருக்க வேண்டும். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும், முதலாளி வருவார்.

நான் அங்கே வேலையில் சேர்ந்த முதல் வாரம் முழுக்க அவர் வரவில்லை. ஆனால், எனக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவை மதித்து நான் படு சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டு இருந்தேன். ஆனால், எதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? (‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்கிற வடிவேலுவின் டயலாகை மனசுக்குள் பின்னணியாக ஓடவிட்டுக் கொள்ளவும்.) எனக்கு இப்படி வேலை செய்வது மாதிரி வேலை செய்யச் சாமர்த்தியம் போதவில்லை. அடிக்கடி மேனேஜர், “என்னப்பா வேடிக்கை பார்க்கிறே? முதலாளி வந்து பார்த்தார்னா அந்த நிமிஷமே உன்னை வேலையை விட்டுத் தூக்கிடுவார். பரவாயில்லையா? உனக்குப் பரவாயில்லைப்பா! என்னையும் சேர்த்து இல்லே தூக்கிடுவார், வேலை இல்லாத பயல்களையெல்லாம் எதுக்கு வேலைக்கு வெச்சுக்கிட்டு தண்டச் சம்பளம் கொடுக்கிறேன்னு?” என்று என்னைக் கடுப்படிக்கத் தொடங்கினார்.

முதல் வார இறுதியில் கை நிறையச் சம்பளம் வாங்கியபோது, இந்த கம்பெனிக்காக இன்னும் நான் நிறைய உழைக்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டேன்.

அடுத்த வார மத்தியில் ஒரு நாள்... திடீரென்று மொத்த கம்பெனியுமே பரபரக்கத் தொடங்கியது. பேல் இயந்திரம் சுறுசுறுப்பாகப் பழைய பேப்பர்களை பேல் பிடிக்கத் தொடங்கியது. ஆட்கள் பரபரப்பாக இயங்கினார்கள். அங்கே இங்கே ஓடி ஓடி வேலை செய்தார்கள். அதை எடுத்து இங்கே போட்டார்கள். இங்கே கிடப்பதை அங்கே கொண்டு போய் வைத்தார்கள்.

அலுவலகத்தில் எங்களில் பலர் கால்குலேட்டரில் சுறுசுறுப்பாக எண்களைத் தட்டிக் கணக்குப் போட்டார்கள்; போனில் யாரையோ கூப்பிட்டு செம டோஸ் விட்டார்கள்; “சார், அந்த லெட்ஜரை இப்படித் தள்ளுங்க!” என்று அருகில் இருந்தவரிடம் பரபரப்பாகக் கேட்டார்கள். சீனிவாசன் என்று ஒருவர் (அவர் மேனேஜரின் ஒன்றுவிட்ட தம்பி) எல்லாரையும் மிஞ்சிவிட்டார். தொலைபேசி ரிசீவரை தோளில் இடுக்கிக்கொண்டு, கழுத்தைச் சாய்த்துப் பேசிக்கொண்டே இன்வாய்ஸில் ஏதோ எழுதிக்கொண்டு, கால்குலேட்டரிலும் ஏதோ கணக்குப் போட்டுக்கொண்டு சதாவதானி ஆகிவிட்டார். இவர்கள் பரபரப்பாக இயங்குவதைப் பார்த்து எனக்கு ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது; ஒரு பக்கம் பயமாக இருந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிசுக் பிசுக்கென்று விழித்துக்கொண்டு இருந்தேன்.

யாருக்கோ, ஏதோ உத்தரவு போட்டபடி வேகமாக உள்ளே வந்த மேனேஜர், “ஏம்ப்பா... குப்தாவுக்கு லெட்டர் அனுப்பச் சொன்னேனே, அனுப்பிட்டியா?” என்று ஒருவரைக் கேட்க, “அனுப்பிட்டேன் சார்! போன்லயும் புடிச்சி ஏறு ஏறுன்னு ஏறிட்டேன். ஒரு வாரத்துக்குள்ள சரக்கு அனுப்பிடறதா சொன்னாரு” என்று பதில் சொன்னார் அவர். அதே நேரம், முதலாளி என்கிற அந்த மாங்கா மடையன் உள்ளே நுழைந்துகொண்டு இருந்தார். நேரே போய் தன் குஷன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, சினிமா தயாரிப்பாளர் பாலாஜி போன்று பைப் பிடித்தபடி, சுழல் நாற்காலியில் ஒரு சுற்றுச் சுற்றி எங்கள் எல்லோரையும் பார்த்தார்.

நான் சும்மா உட்கார்ந்திருப்பதை அவருக்கு முன்னால் கவனித்துவிட்ட மேனேஜர், சட்டென்று ஒரு லெட்ஜரை எடுத்து என் முன் போட்டு, “கூட்டல்களைச் சரி பாரு! அக்கவுண்ட்ஸ் டேலி ஆகமாட்டேங்குது. எங்கேயோ ஃபிகர் இடிக்குது. எங்கே தப்புன்னு பாரு. சீக்கிரம். க்விக்!” என்று உசுப்பினார். நானும் எங்கே தப்பு என்று தேட ஆரம்பித்தேன். ‘இங்கே வந்து வேலைக்குச் சேர்ந்ததுதான் தப்பு’ என்பதைத்தான் நான் போன வாரமே கண்டுபிடித்துவிட்டேனே!

முதலாளி அங்கே மூன்று மணி நேரத்துக்கு மேல் இருந்தார். கம்பெனியை ஒவ்வொரு இடமாக, வேலையெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று சுற்றிப் பார்த்தார். மேனேஜர் அவருடனேயே போய், நடந்துகொண்டிருக்கும் வேலைகள் பற்றி விளக்கிச் சொன்னார்.

ஒரு வழியாக, அவரை வாசல் வரை சென்று காரில் ஏற்றி டாட்டா காட்டி வழியனுப்பி வைத்துவிட்டு, உள்ளே வந்து ஒரு பெருமூச்சுடன், “உஸ்... அப்பாடா! இவனை நல்லபடியா பேக் பண்ணி அனுப்புறதுக்குள்ள என் தாலி அறுந்து போகுது!” என்றவர், என் பக்கம் திரும்பி, “என்ன ரவி, உனக்கு எத்தனை தடவைதான் படிச்சுப் படிச்சு சொல்றது! அதுவும், முதலாளி வந்திருக்கிற நேரத்துல இப்படிப் பக பகன்னு முழிச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்னா என்ன அர்த்தம்? உனக்கு முன்னேறணும்கிற எண்ணம் துளியாவது இருக்கா இல்லையா? இன்னொரு தடவை இப்படி வேலையில்லாம உட்கார்ந்திருந்தேன்னா, முதலாளி என்ன உன்னை டிஸ்மிஸ் பண்றது... நானே பண்ணிடுவேன். சொல்லிட்டேன்!” என்று என்னை எச்சரித்தார்.

அந்த கம்பெனியில் என்ன முக்கியும், என்னால் ஒரு மாதத்துக்கு மேல் குப்பை கொட்ட முடியவில்லை.

ஆனால், ஒன்றைச் சொல்ல வேண்டும். அங்கே வேலை செய்த (வேலை செய்த என்று இந்தப் பதிவில் எழுதும்போதெல்லாம் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது) அந்த ஒரு மாத காலத்தில் சம்பளம் தவிர, உபயோகமாக எனக்கு எந்த நன்மையுமே கிடைக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.

அரக்கு சீல் வைத்து தபால் மூலம் பார்சல்கள் அனுப்புவது எப்படி என்று அங்கேதான் கற்றுக் கொண்டேன். தந்தி அனுப்பக் கற்றுக் கொண்டது அங்கேதான்.

அங்கேதான், டெலிபோனில் டயல் செய்து பேசவும் கற்றுக் கொண்டேன். தியேட்டர்களுக்கெல்லாம் பேசி, அங்கே இப்போது என்ன படம் ஓடுகிறது என்று சும்மாவாச்சும் கேட்டுத் தெரிந்துகொள்வேன். தொலைபேசித் துறையில், என்கொயரிக்கு என அப்போது ஒரு நம்பர் உண்டு. அதற்குப் பேசி, இந்த கம்பெனி நம்பர் என்ன, அந்த ஹாஸ்பிட்டலின் நம்பர் என்ன என்று எதையாவது விசாரித்துக்கொண்டு இருப்பேன். டெலிபோன் டைரக்டரியை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வது சரியா என்று கிராஸ் செக் செய்வேன். சரி, எனக்கும் பொழுது போகவேண்டாமா? அப்படித்தான் ஒருதடவை ‘மோட்சம் (தியேட்டர்) எங்கே இருக்கு?’ என்று கேட்க, எதிர்முனையில் இருந்த பெண் களுக்கென்று சிரித்து, தன் பக்கத்திலிருந்த சிநேகிதியிடம், ‘மோட்சத்துக்குப் போகணுமாமா’ என்று கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டுப் பின்பு அந்தத் தியேட்டர் இருக்கும் ஏரியா புரசைவாக்கம் என்றும், போன் நம்பரும் கொடுத்தாள்.

டெலிபோனிலேயே தந்தி தருவது (ஃபோனோகிராம் என்று சொல்வார்கள்) எப்படி, ரிமைண்டர் வைப்பது எப்படி, டயம் ஆங்கிலம்/தமிழ் கேட்பது எப்படி என்றெல்லாம் அந்த கம்பெனியில் வேலை செய்தபோதுதான் தெரிந்துகொண்டேன். ட்ரங்க்கால் புக் செய்து பேசக் கற்றுக் கொண்டதும் அங்கேதான்.

கம்பெனிக்குள்ளேயே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள இன்டர்காம் என்று ஒரு வசதி இருப்பதைத் தெரிந்துகொண்டது அங்கேதான். எதிர் டேபிள்காரருக்கு, பக்கத்து டேபிள்காரருக்கெல்லாம் இன்டர்காம் போட்டுப் பேசுவேன். அட, வேலையாத்தாங்க!

மற்றபடி, ஒரு மாதத்துக்கு மேல் அங்கே நான் கற்றுக்கொள்ள புதிதாக எதுவும் இல்லை என்கிற கட்டத்தில், மேனேஜரிடம் சொல்லிவிட்டு வேலையை விட்டு நின்றுவிட்டேன்.

தீரன் சின்னமலை கம்பெனியில் ஒரு நாள் ஊழியனாக வேலை பார்த்தது இதற்கும் முந்தி. சுருக்கமாகச் சொல்கிறேன் பேர்வழி என்று கங்கப்பா கதையே பெருங்கதையாக நீண்டுவிட்டது. எனவே, சத்தியமாக அடுத்த பதிவில் வாட்ச் கம்பெனி வேலை!

ப்ளீஸ், வெயிட் அண்ட் ‘வாட்ச்’!
.

8 comments:

நல்ல வேலைதாங்க பார்த்து இருக்கீங்க... ஒரு ஆணியும் பிடுங்கவேண்டாம் மாதிரியும் புடுங்கணும் மாதிரியும் இல்ல இருக்கு... பாவங்க ஒரு மாதம் சம்பளம் கொடுத்த முதலாளியை மாங்கா மடையான்னு திட்டக்கூடாது .. எதையும் பிளான் பண்ணி எழுதணும்... வாழ்த்துக்கள்
 
நல்ல வேலைதாங்க பார்த்து இருக்கீங்க... ஒரு ஆணியும் பிடுங்கவேண்டாம் மாதிரியும் புடுங்கணும் மாதிரியும் இல்ல இருக்கு... பாவங்க ஒரு மாதம் சம்பளம் கொடுத்த முதலாளியை மாங்கா மடையான்னு திட்டக்கூடாது .. எதையும் பிளான் பண்ணி எழுதணும்... வாழ்த்துக்கள்
 
interesting ones. Enjoyed reading it. :-)
 
உங்களின் அனுபவங்கள் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் பாடம். வேலை செய்ற மாதிரி நடிப்பது எப்படி என்பதைப் பற்றி ஒரு விரிவான இடுகை போட்டீர்களானால் நன்றாக இருக்கும் அண்ணா.
 
hilarious
 
வேலையே செய்யாத வேலை அனுபவம் பிரமாதம்.
 
செம ஜாலியான பதிவு! சிரித்துச் சிரித்து வயிறு வலி கண்டுவிட்டதுங்க. //என்னிடம் அடிக்கடி நட்புரீதியில் உரையாடும் ஒரு பிரமுகர்// என்னிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லுங்க சார், அந்த பிரமுகர் பாக்கியம் ராமசாமிதானே? :)
 
அட... நீங்களும் 1977 டிகிரி தானா?