அனைவருக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
தலைப்பைப் பார்த்ததும், நான் என்னவோ உலகளாவிய விஷயங்களை இங்கே கொட்டப் போவதாக எண்ணி ஏமாந்துவிடாதீர்கள்! என் வாழ்க்கையில் 2010 எப்படிக் கடந்தது என்கிற மலரும் நினைவே இந்தப் பதிவு!
ஜோசியம் பார்க்கிற வழக்கமோ, அதில் நம்பிக்கையோ எனக்குச் சிறிதும் இல்லை. என் திருமணத்தின்போதுகூட ஜாதகப் பொருத்தம் எதுவும் நான் பார்க்கவில்லை. என் மனைவியின் வீட்டார் கேட்டபோது, அவர்கள் திருப்திக்காக என் ஜாதகத்தை என் பெற்றோர் தந்தார்கள். இரண்டு ஜாதகங்களும் பொருந்தியதா என்றுகூட நான் இதுவரை அவர்களைக் கேட்டதில்லை.
அதே மாதிரி ராசி, ராகுகாலம், எமகண்டம், குளிகை, நட்சத்திரம், வடக்கு சூலை, தெற்கே சூலம், வாஸ்து, சென்டிமென்ட், பரிகாரம் என எந்த நம்பிக்கையும் எனக்குக் கிடையாது. என் ஒரே நம்பிக்கை 'மகாஸ்ரீ அரவிந்த அன்னை' மட்டுமே. அவரிடம் நம்மை ஒப்புக் கொடுத்துவிட்டால் போதும், அவர் நம்மைக் காத்து, எல்லா நலன்களும் அருள்வார் என்கிற உறுதியான, ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் எனக்கு உண்டு!
எல்லா வருடங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் இல்லை. என் வாழ்க்கையின் கிராஃப் ஒரே மாதிரி ஏறிக்கொண்டே போனதும் இல்லை.
இந்த வருடத்தில், என் வாழ்க்கையில் நடந்த சோதனைகள் என்னென்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.
* வருட ஆரம்பத்தில், பிப்ரவரி மாதத்தில், என் மனைவிக்குக் குடல் இறக்கத்துக்கான அறுவைச் சிகிச்சை நடந்தது. அப்போது நலிவுற்ற அவளின் ஆரோக்கியம் இன்றளவும் பூரணமாகத் திரும்பவில்லை. அறுவைச் சிகிச்சைக்காகக் கிட்டத்தட்ட ரூ.53,000 வரை செலவழிந்தது. மெடிக்ளைம் பாலிஸி எடுத்திருந்தும், பல காரணங்களால் பணம் கிடைக்கவில்லை.
* ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றவேண்டும் என்பது என் பிள்ளைப் பிராயத்துக் கனவு. விகடனின் பொன்விழா ஆண்டின்போதே அதற்காக முயற்சி செய்து தோற்றேன். மீண்டும் 1986-ல் ஒரு முறை முயன்று அப்போதும் தோல்வியுற்று, பின்னர் நண்பர் மார்க்கபந்து அவர்களின் உதவியாலும், எழுத்தாளர் புஷ்பாதங்கதுரை அவர்களின் உதவியாலும் 'சாவி' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். சாவி பத்திரிகை நின்ற பின்பு, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத மூன்றாவது முறையாக விகடனில் வேலைக்கு முயன்று, வெற்றியும் பெற்றேன்.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், சாவி எனக்குப் பிறந்த வீடு என்றால், விகடன் எனக்குப் புகுந்த வீடு! அதன் இம்ப்ரின்ட்டிலிருந்து என் பெயர் அகற்றப்பட்டது என் மனத்தை ரணப்படுத்திய ஒரு நிகழ்வுதான்! அதுவும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே நிகழ்ந்தது. ஒரு சின்ன ஆறுதலாக, 'பொக்கிஷம்' பகுதியில் தொகுப்பு: ரவிபிரகாஷ் என என் பெயர் இடம்பெற்று வந்தது. காலப் பெட்டகம் 2000-வது வருடத்துடன், அதையும் நானாகவே போதும் என முடித்துக்கொண்டதால், இனி அதிலும் என் பெயர் இடம்பெறாது. ஆனந்த விகடனிலிருந்து முற்றாக விலகிவிட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இதுவும் எனக்கு நேர்ந்த சோதனைகளில் ஒன்றுதான்.
* வீட்டில் மூட்டைப் பூச்சித் தொல்லை, மனைவியின் உடல் நிலை காரணமாக அடிக்கடி ஆஸ்பத்திரி செல்லவேண்டியிருந்தது, வேலைப் பளு, வீட்டில் சிஸ்டம் சில காலம் பழுதடைந்திருந்தது... இன்ன பிற காரணங்களால், ஒப்புக்கொண்டபடி 'சைல்ட் கேர்' புத்தகத்தைக் குறித்த நாளில் மொழிபெயர்த்துத் தர இயலாமல் திருப்பித் தர நேர்ந்ததில் வருத்தம்தான்.
அதேபோல், ராஷ்மி பன்ஸாலின் மற்றொரு அருமையான புத்தகமான 'கனெக்ட் தி டாட்ஸ்' புத்தகம் என்னிடம் மொழிபெயர்ப்புக்காக வந்தபோதும் இயலாமை காரணமாக மறுத்துவிட்டேன்.
* என் அன்புக்குரிய தங்கை மகன், கல்லூரி ஹாஸ்டல் மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டு, அடி உதைக்கு ஆளாகி, நடு இரவில் அலறிய அலறல் இன்னமும் என் வயிற்றைப் பிசைந்துகொண்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவன் என் வீட்டிலிருந்தபடியே காலேஜ் சென்றுவந்துகொண்டு இருந்தான். லீவு விட்டதால், நேற்று தன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறான். 2010-ல் எனக்கு நடந்த சோதனைகளில் இதுவும் ஒன்று!
இனி, மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ளத்தக்க நினைவுகளை அசை போடுகிறேன்.
* என் மகள், எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தாள். இது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கும் சாதாரண நிகழ்வாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை அது பெருமிதமான ஒரு நிகழ்வு. நான் கல்லூரியில் சேர்ந்தபோதுகூட இத்தனைப் பெருமையாக இருந்ததில்லை எனக்கு. கல்லூரி செல்லும் ஒரு பெண்ணுக்குத் தகப்பன் என்கிற உணர்வு என்னை அந்த அளவு மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது.
* பிரிட்டிஷ் கவுன்ஸிலில் அவள் ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, கோர்ஸை முடித்துவிட்டாள். அவளோடு சேர்ந்த இருபது பேருக்கும் ரேங்க் கொடுப்பதாக இருந்தால், இவளே முதல் ரேங்க் பெறுவாள் என்று அவளுக்குப் பாடம் நடத்திய மாஸ்டர் என்னிடம் தெரிவித்தபோது, ஒரு தந்தையாக எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பிரிட்டிஷ் கவுன்ஸிலில் 'எக்ஸலென்ட்' சர்ட்டிபிகேட் பெற்றிருக்கிறாள்.
* ஆனந்த விகடனிலிருந்து வெளியேறினாலும், அதன் குழும பத்திரிகையான 'சக்தி விகட'னுக்குப் பொறுப்பேற்றது, கண்டிப்பாக மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வுதான். மனதுக்கு இதமான மேட்டர்களும், இனிமையான உதவி ஆசிரியர்களுமாக, மனசு ரம்மியமாக இருக்கிறது.
* பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கணிசமாகக் கிடைத்தன.
* ராஷ்மி பன்ஸாலின் 'ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்' புத்தகத்தை ஏற்கெனவே நான் மொழிபெயர்த்திருந்தேன். அதைப் பார்த்த மூலப் பதிப்பகத்தார், ராஷ்மியின் அடுத்த புத்தகத்தையும் நானே மொழிபெயர்க்கவேண்டும் என்று சொல்ல, இந்த ஆண்டு இறுதியில் 'கனெக்ட் தி டாட்ஸ்' புத்தகம் மீண்டும் என்னிடமே மொழிபெயர்ப்புக்கு வந்தது உள்ளூர மகிழ்ச்சி தரும் விஷயம்.
* முதன்முறையாக சொந்தக் காசில் ஒரு வண்டி (ஸ்கூட்டி ஸ்ட்ரீக்) வாங்கி, 53 வயதில் ஓட்டக் கற்றுக்கொண்டு, லைசென்ஸ் எடுத்து, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக எந்தச் சிக்கலும், சின்ன விபத்தும் இன்றிச் சென்னைத் தெருக்களில் சீராக ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம்தானே?
* இவை எல்லாவற்றையும்விட மகிழ்ச்சியான விஷயம், என் வலைப்பூக்கள் மூலமாக அன்புக்குரிய நண்பர்கள் பலரைப் பெற்றிருப்பதே!
.
Saturday, January 01, 2011
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
கொஞ்சம் கூட தன்முனைப்பின்றி எதார்த்தமாக நல்லது கெட்டது இரண்டையும் பகிர்ந்து கொள்ளும் உங்கள் எழுத்துக்களுக்காகவே அன்னையின் ஆசிர்வாதம் என்றென்றும் உங்களோடு இருக்கும்..
உங்களை நண்பராகப் பெற்ற எங்களுக்கும்!
- ஜெகன்னாதன்.
Post a Comment