உண்மையில் கிராமம் அழகுதான்!
ஆறு சுழித்துக்கொண்டு ஓடும்; பறவைகள் கி அமைக்கும்; பச்சை மரங்கள் காற்றைக் குளிர்ச்சியால் குளிப்பாட்டும்; கட்ட கட்ட வயல்களில் கதிர்கள் கதகளி பழகும்; புல்லின் தலையில் பனி தொப்பி போட்டுவிடும்; சூரிய உதயத்தில் பாலுமகேந்திராவுக்குத் தோதாய் வானம் சிரிக்கும்; ஆண்கள், மாடுகளோடு நடந்து வயல் உழுவார்கள்; பெண்கள், ஆற்றில் நிறைய சுதந்திரத்தோடு குளிப்பார்கள்; பம்ப் செட்டுகளில் குழந்தைகள் குதிக்கும்; ஒரே ஒரு டீக்கடை இருக்கும்; தட்டியில் ஔவையார் போஸ்டர். சமயத்தில் லேட்டஸ்ட்டாய் ‘அன்பே வா’.
இதெல்லாமும் அழகுதான்; இனிமைதான். ஆனால், எத்தனை நாளைக்கு? என்னைப் பொறுத்தவரை முதல் நாளுக்கப்புறம் எல்லாமே சலித்துப் போகும்.
வருஷத்திற்கு ஓரிரு தடவை கிராமத்திற்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் எனக்குண்டு. சென்னையில் ரயிலேறி மயிலாடுதுறையில் இறங்கணும். அங்கிருந்து மேற்கே போகும் பஸ் பிடித்து, ஒரு மணி நேரம் பயணம் செய்து இறங்கி, பொடிநடையாய் 1 கி.மீ. நடந்து வந்து என் அக்காவைச் சந்திக்கணும்.
‘என்னக்கா, எப்படி இருக்கே? ஏன் கொஞ்சம் இளைச்ச மாதிரி தெரியுது? மணி என்ன சொல்றான்? பேசறானா? எங்கே, மாமா சொல்லுடா கண்ணா, சொல்லு... மா... மா... மாமா! தோடு புதுசா செஞ்சு கொடுத்தாரா அத்தான்? அப்புறம்... புதுசா டிராக்டர் வாங்கியிருக்கீங்களாமே..?’ - இப்படியாகச் சில கேள்விகள் கேட்கணும்.
வயலிலிருந்து அத்தான் வந்தவுடன் அவரோடு சேர்ந்து சாப்பிடணும். புதுசாய் வந்திருக்கிற யூரியா உரத்தைப் பற்றியும், பயிருக்கு அடியுரம் இடுவதில் இருக்கிற சில டெக்னிக்குகள் பற்றியும் ‘வயலும் வாழ்வும்’ நடத்துவார். பெருமாள் கோயில் மாடு மாதிரி தலையாட்டணும். பைசா புரியாது. அப்புறம் கை கழுவி,துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு...
“ஒரு வாரம் தங்கிட்டுத்தான் போகணும்” என்று கனமான தொண்டையில் சொல்லிவிட்டு, வயலுக்குப் போய்விடுவார்.
அக்கா வேலை எல்லாம் முடித்துக்கொண்டு வந்து பாயில் படுத்துக்கொண்டு, “இப்ப ஏதாச்சும் சம்பளம் உசந்திருக்காடா ராஜு?” என்பாள். இல்லாவிட்டால், “எப்பதான் கல்யாணம் பண்ணிக்கப் போறே?” என்பாள். இந்த இரண்டு கேள்விகளை தடவைக்குத் தடவை மாற்றி மாற்றிக் கேட்பாள். சற்றைக்கெல்லாம் தூங்கிவிடுவாள்.
இதைப் போல இரண்டு வருஷத்துக்கு முன்பு, ஒரு பயணத்தில் நான் அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருந்தபோதுதான், மாதவன் சாரை சந்தித்தேன்.
மாதவன் சார் கேரளக்காரர் இல்லை. பள்ளிக்கூட வாத்தியாரும் இல்லை. அதென்னவோ, அவர் பெயரைச் சொல்லும்போதெல்லாம் சார் சேர்க்காமல் சொல்ல வரவில்லை. தானாய் மனத்திலிருந்து ஓர் அதீத மரியாதை வந்துவிடுகிறது. யாருக்கும் வரும்.
அறுபத்தாறு வயது மாதவன் சாருக்கு இரண்டு பையன்கள். இரண்டு பேரும் விவசாயத்தில். இருவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் பிறந்து... வீட்டில் சின்ன டிக்கெட்டுகள் ஐந்தாறு இருக்கும்.
மாத்வன் சாரை முதல் சந்திப்பில் என்னால் சரியாய் எடை போடவே முடியவில்லை. எனக்கு அவர் ஓர் ஆச்சரிய ஆசாமியாகத் தெரிந்தார்.
கதர் வேஷ்டி கட்டி, கதர் ஜிப்பா போட்டிருந்தார். வயலுக்கு அருகில் களத்து மேட்டில், சாய்வுப் பலகையின் பின்னால் ஒரு விரித்த குடை சணல் போட்டுக் கட்டப்பட்டிருக்கும். நாற்காலியில் தடியாய் ஒரு புத்தகத்தை மடி மீது வைத்துப் புரட்டிக்கொண்டு இருந்தார். வெள்ளை வெளேரென்று மீசை.
இடையிடையே எழுந்து வந்து, போரடித்துக்கொண்டு இருப்பவர்களிடம், “கருக்கா அதிகம் நிக்குது. இது சொந்த நெல்லு. பாத்துத் தூவுங்க” என்று சொல்லிவிட்டுத் திரும்பப் போய் புத்தகத்தைப் புரட்டினார்.
அவர் வயலுக்கு அடுத்த வயல்தான் என் அக்காவினுடையது. இங்கே கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு அவரைக் கவனித்துக்கொண்டு இருந்த நான், முதலில் அது ஏதோ சம்பளக் கணக்குப் புத்தகம் என்றுதான் நினைத்திருந்தேன்.
திடீர் திடீர் என்று “அடடா!” என்று சொல்வதையும், பாக்கெட்டுக்குள்ளிருந்து பேனா எடுத்துப் புத்தகத்தில் அடிக்கோடு இடுவதையும் கண்டு, அவரை நெருங்கினேன்.
“என்ன புஸ்தகம் சார் அது?”
ஏதாவது புராணப் புத்தகமாய் எதிர்பார்த்தேன்.
“பால் எலுவார்ட் கவிதைத் தொகுப்பு.”
அசந்துபோனேன்.
சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. அவர் உடை, தோற்றம், அமர்ந்திருந்த இடம், சுற்றிலும் நடக்கும் வயல் பணிகள்... இந்தச் சூழ்நிலையில் எவனும் இதை எதிர்பார்க்க முடியாது.
“யார் சார் அது?” என்றேன்.
என்னையறியாமல் ‘சார்’ வந்தது.
“பிகாஸோ தெரியுமா? அவர் ஃபிரண்ட். பொயட்; சர்ரியலிஸ்ட்.”
“சார், உங்க க்வாலிஃபிகேஷன் என்ன?”
“பழைய பி.ஏ.! பாத்தா தெரியலை இல்லை?”
“நிஜமா தெரியலை சார். நீங்க என்னவா இருந்தீங்க சார்?”
“உட்காருங்க தம்பி” என்று அடுத்த நாற்காலியைக் காட்டினார். உற்சாகமாய் அமர்ந்தேன். இன்னமும்கூட இவர் ஒரு படித்த, நிறையப் படிக்கிற மனிதர் என்கிற விஷயத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
“என்ன கேட்டீங்க? ம்... நான் ஸ்டேட் பாங்க்லே பிராஞ்ச் மேனேஜரா இருந்து ரிடையரானேன். மாலை போட்டு அனுப்பிட்டாங்க. இந்தியாவின் முதுகெலும்புக்கு வந்துட்டேன்.”
“உங்களைச் சந்திச்சதிலே எனக்கு ரொம்பச் சந்தோஷம், சார்! பேச ஆளே கிடைக்காம தவிச்சிக்கிட்டிருந்தேன். ஆமாம், இந்த வயசிலயும் எப்படி சீரியஸான விஷயங்களையெல்லாம் படிக்கிறீங்க?”
கொஞ்சம் சிரித்தார் மாதவன்.
“உங்க வயசென்ன தம்பி?”
“இருபத்தேழு.”
“என்ன செய்யறீங்க?”
“மெட்ராஸ்ல ஒரு கம்பெனில அக்கவுன்ட்டன்ட்டா இருக்கேன்.”
“கவிதை படிப்பீங்களா?”
“எப்பவாவது. அதுவும் தமிழ் மட்டும்.”
“வானப் புடவைக்கு கஜமெத்தனை? கடலின் காலுக்கு உயரமென்ன? விண்ணின் ஓட்டைகளில் ஜ்வலிப்பவையை எண்ணு! முடியுமா இதெல்லாம்? முடியாது. இது நடக்காத காரியம். நம்மாலே முடிஞ்சதைச் செய்யலாமே! என்னாலே எந்த விஷயத்தையும் என் அறிவுக்கு எட்டலைன்னு சட்டுனு உதறிட முடியாது. இது சாதா விஷயம், இது சீரியஸ் விஷயம்னு கூறு போட்டு ஜாதி மாதிரி பிரிச்சு வெச்சுத் தொடாம விட்டுட முடியறதில்லை.”
எனக்கு மாதவன் சார் மேல் மகா மதிப்பு உடனடியாய் விழுந்துவிட்டது. அவரோடு நிறைய நேரங்களைக் கழிப்பது என்று அந்த நொடியே முடிவெடுத்தேன்.
நாங்கள் பேசினோம். சாயந்திர ஆரஞ்சு வெளிச்சம் மரக் கிளைகளினூடே பிசிறடிக்க, மாந்தோப்புக் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து... சலசலத்துச் சீறிப் பாயும் ஆற்றின் ஓரமாகச் சம்மணம் போட்டமர்ந்து, மடியில் இருந்து கடலைக் காய்களை ஒவ்வொன்றாய் உடைத்துத் தின்றுகொண்டே நாங்கள் பேசுவோம்.
இதில் நான் பேசுவது மிகக் குறைவாகவே இருக்கும். ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அரை மணி நேரம் வாயை மூடிக்கொண்டு விடுவேன். அவர் அழகாய், ஆழமாய் விளக்கிக்கொண்டே, சலிக்காமல் பதில் சொல்கையில், உதாரணங்களுக்கு எட்டுத் திசைகளிலிருந்தும் கவிதை வந்து குதிக்கும்.
“பாப்லோ நெரூடா படிச்சிருக்கீங்களா?” என்பார். வழக்கம்போல “இல்லை” என்பேன்.
“ஓவியத்தில் க்யூபிஸம் தெரியுமா?”
“க்யூப் என்றொரு விளையாட்டு தெரியும்.”
“சல்வடோர் டாலி என்ன எழுதினான் தெரியுமா?”
“சார், இந்த மாதிரி தெரியுமா, தெரியுமானு கேக்காதீங்க. நீங்களே சொல்லிடுங்க” என்பேன்.
“எனக்கும் ஒரு பைத்தியக்காரனுக்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், நான் பைத்தியம் இல்லை - அப்படீன்னு எழுதினான்.”
“உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், நான் அறிவாளி இல்லை” என்றேன்.
“நோ ராஜு! நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. வைரம் வெட்டி எடுத்த உடனேயே பளிச்சிடறது கிடையாது. என்கிட்டே ஒரு தேடல் நெருப்பு அணையாம தீவிரமா தகிச்சுக்கிட்டே இருந்திச்சு. இப்பவும் இருக்கு. உங்ககிட்டே அந்தத் தேடல் இல்லை. உங்க கம்பெனில என்ன தயாரிக்கிறீங்க?”
“காருக்கான பாட்டரி.”
“பாட்டரி எப்படித் தயாரிக்கிறது, நம்ம நாட்டுல அதன் ஸ்கோப் என்ன... இப்படி பாட்டரி பத்தியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியும்.”
“காரோட இன்ஜின் பத்தி..?”
“தெரியாது.”
“தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டலை நீங்க. உங்க வட்டம் பாட்டரியோடு நின்னு போச்சு. ஒருவேளை கார் இன்ஜின் தயார் பண்ற கம்பெனில இருந்தா ஆர்வம் காட்டியிருப்பீங்க. ஆனா, என் வட்டம் பெரிசு. எதை எடுத்துக்கிட்டாலும், அது சம்பந்தப்பட்ட அத்தனையும் எனக்குத் தெரிஞ்சாகணும். இந்தத் தாகம் நிறையப் பேருக்கு ஏற்படறதில்லை. ஏற்படணும்னு ஒண்ணும் கட்டாயமும் இல்லை. அதனாலே நீங்க என்னைப் பார்த்து ஆச்சரியப்படறதும் தேவையில்லை.”
ஆனாலும், நான் ஆச்சரியப்படுவேன்.
மாதவன் சாரை சந்தித்த பின்னர், சென்னை வந்து அவருக்குக் கடிதம் எழுதினேன். அவரும் பதில் எழுதினார்.
எனக்கு வாழ்வில் சோர்வும் சலிப்பும் ஏற்படும்போதெல்லாம், என்னை எழுப்பி முன்னே ஓடச் செய்யும் முள்ளங்கிகளாக இருக்கும் அவரது கடிதங்கள். தோண்டத் தோண்ட அவரிடமிருந்து புதிய புதிய கோணங்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன. வாவ்..! இவர் லட்சத்தில் அல்ல; கோடியில் ஒரு மனிதர் என்ற என் பிரமிப்பும் அதிகரித்தது.
நடுவில் எழுந்த ஒரே ஒரு சந்தேகத்தைப் போன தடவை, ஆறு மாசம் முன்பு சென்றிருந்தபோது கேட்க நினைத்தேன். காபியைக் குடித்துவிட்டு டம்ளரை வைத்துவிட்டுக் கேட்டேன்...
“தப்பா நினைக்கக்கூடாது. உங்களைப் பல துறைகளிலும் வளர்த்துக்கிறதனாலயும், எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கிறதனாலயும், நமக்கு நிறையத் தெரியும்கிற பெருமிதத்தைத் தவிர, வேற என்ன லாபம்?”
“ரொம்ப மேம்போக்கான கேள்வி. தமிழகத்தின் முதலமைச்சர் யார் மிஸ்டர் ராஜு?”
“எம்.ஜி.ஆர்.”
“உங்களுக்குக் காலையிலே டிபன் சாப்பிடணும், ஆபீஸ் போகணும், கூட்டணும், கழிக்கணும், மத்தியானம் சாப்பிடணும், சாயங்காலம் சினிமா, இல்லை அரட்டை... சாப்பாடு, தூக்கம் - இதுதானே உங்க ரொட்டீன் வாழ்க்கை?”
“ஆமாம்.”
“அதனாலே தமிழகத்தின் முதலமைச்சர் யார்னு தெரியலைன்னாலும், உங்க ரொட்டீன் வாழ்க்கை தடைப்படப் போறதில்லை. உங்களுக்கு அது ஏன் தெரிஞ்சிருக்கணும்? இதை ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். விஷயங்களை, விவரங்களை நாம லாப, நஷ்டக் கணக்குப் பார்த்துத் தெரிஞ்சுக்கறதில்லை. அவங்கவங்களுக்கு இருக்கிற தாகத்தைப் பொறுத்தது.”
“அதாவது, நான் கேக்க வந்தது...”
“புரியுது. சமுதாயத்துக்கு என்ன லாபம்? அதானே..?”
“யெஸ்! வித்தியாசமா பார்க்க, சிந்திக்கத் தெரிஞ்ச நீங்க, உங்க அறிவை ஏன் சமுதாய மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தலை?”
“உங்களுக்குத் தெரிவிக்காத விஷயங்கள் நிறைய இருக்கு, ராஜு. இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் ஓர் எழுத்தாளன், தெரியுமா? அப்போ என்கிட்டே ஒரு வெறியே இருந்துச்சு. ‘தனி மனித எழுத்தினால் சரித்திரமே புரண்டிருக்கிறது, புரட்சித் தீ எழுந்திருக்கிறது, எழுத்தினால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை’ அப்படீன்னெல்லாம் மேடைகளிலே பேசியிருக்கேன். அனுபவத்திலே என் கருத்து தப்புன்னு புரிஞ்சுக்கிட்டேன். பொம்மை செய்யறவனின் விரல்கள் மட்டும் திறமையா இருந்தா போதாது, ராஜு... அந்த மண்ணும் தரமா, குழைவா இருக்கணும். எத்தனையோ இலக்கியமா எழுதியிருக்கேன். பிரச்னைகளை அலசியிருக்கேன். புதுமையான நடைமுறை சொல்யூஷன்ஸ் தந்திருக்கேன். அந்த எழுத்துக்களுக்குப் பலன்... அடுத்த வார இதழில் ரெண்டு பேர் ‘பிரமாதமா எழுதியிருந்தார் ஆசிரியர்’ என்பதோடு சரி. இப்போ வரதட்சிணைக் கொடுமை பத்தி எத்தனை ஆயிரம் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வந்துடுச்சி. சாதனை என்ன? நின்னு போச்சா அந்தப் பிரச்னை? கதைகள் அந்த நிமிஷத்திலே ஓர் உத்வேகத்தை ஏற்படுத்திடும். ஆனா, அந்த வேகத்துக்கு நீர்க்குமிழியின் ஆயுசுதான்! எங்காவது ஒரு இதயம், படைப்பினால் திருந்தலாம். ஆனா, அதை என்னால சாதனையா ஏத்துக்க முடியலை. மூணு நாளா சாப்பிடாம, ‘பசி ஐயா’ன்னு சொல்ற ஒருத்தனுக்கு, விளைஞ்சு நிக்கிற வயலைக் காட்டி, ‘இந்த வயல் பூரா என்னதுதான். அறுவடை பண்ணி, போரடிச்சி, மில்லுக்கு அனுப்பி அரிசியாக்கி சமைச்சுப் போடறேன், காத்திரு’ன்னு சொல்ற மாதிரியான சாதனை இது. சமுதாயமே மாறணும்னு பேனாவைப் பிடிச்ச எனக்கு அது சரியான பாதையா தோணலை. புகழுக்காக எழுதப் பிடித்தமில்லை. பேனாவை மூடிட்டேன் ராஜு! அப்புறம் குடும்பச் சூழ்நிலைகள், பிரச்னைகள் என்னை எனக்காக வாழறவனா மாத்தி, சமுதாயக் கவலைகள் விடுபட்டுப் போச்சு!”
இவருக்குள் இத்தனை மாதவன்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. மனத்தில் அவரைக் கிட்டத்தட்ட பூஜிக்கவே தொடங்கிவிட்டேன்.
“உங்களுக்குப் பிரச்னைகள் ஏதாவது இருக்கா சார்?” என்றேன், அன்று.
“ஒண்ணே ஒண்ணு!”
“என்ன சார்?”
“பர்சனல். ஆனாலும், எனக்கு வடிகால் தேவை. அதனால சொல்றேன். இப்ப கொஞ்ச நாளா என் வார்த்தைகள் என் மகன்களினாலே அவ்வளவா எடுத்துக்கப்படறதில்லை. வயசானவன் சும்மா தொணதொணப்பான் அப்படின்னு லேசா ஒரு முனகல் துவங்கியிருக்கு. என்னால அவங்களைப் புரிஞ்சுக்க முடியுது. அவங்களாலே என்னைப் புரிஞ்சுக்க முடியலை. என்னை நான் மாத்திக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.”
அந்தச் சந்திப்புக்குப் பிறகு நான் எழுதின நான்கு கடிதங்களுக்கு மாதவன் சாரிடமிருந்து பதில் இல்லை.
ஏன்? என்ன ஆயிற்று? என் அக்காவுக்குக் கடிதம் எழுதினேன், யாரையாவது விட்டு அவரிடம் கடிதம் எழுதச் சொல்லும்படி.
போன வாரம் அக்கா பதில் எழுதியிருந்தாள்... “நீ எழுதியுள்ள அந்தக் கிழவர் செத்துப் போய்விட்டார் போன மாசம்.”
கப்பென்று உள்ளுக்குள்ளே அடைத்துக் கொண்டது. சொந்தம் இல்லை; ரத்த உறவு இல்லை. ஆனால், கண்கள் கசிந்தன.
முந்தாநாள் சனிக்கிழமை புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அக்காவின் ஊருக்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் மாதவன் சார் வீட்டுக்கு வந்தேன். அவர் படம் மாலை போட்டுக்கொண்டிருந்தது. மகன்கள் இல்லை. மருமகள்கள் இருந்தார்கள். அவர் படுக்கும் ஈஸிசேர் இருந்தது குப்பையாய், தூசியாய்.
“என்னை ஞாபகம் இருக்கா?”
“மெட்ராஸ்தானே? வர்றப்பல்லாம் வந்து பேசுவீங்களே, ஞாபகம் இருக்கு.”
“என்ன ஆச்சு அவருக்கு?”
“நல்ல சாவுதான். அவஸ்தைப்படாம, வேற நோய் எதுவும் வராம, ஒருநாள் காலையில் இறந்துட்டார்.”
என் கண்கள் திரை கட்டின.
“உங்க அக்கா வீட்டுக்குப் பன்னண்டு புஸ்தகம் கொடுத்தனுப்பிச்சோம். உங்க கிட்டே கொடுக்கச் சொல்லி ஒப்படைச்சார் அவர்.”
கடிதம் எழுதாதற்குக் காரணம் புரிந்தது. அவர் கொடுத்த புத்தகங்களை வாங்கிப் புரட்டியபோது, மரணத்தின் காரணம் புரிந்தது.
ஒரு புத்தகத்தினுள் எழுதி வைத்திருந்த அந்தக் கடிதத்தில், அவர் கையெழுத்து மிகத் தடுமாறியிருந்தது.
“அன்புள்ள ராஜு!
சமீபகாலமாய் நான் உங்களுக்குக் கடிதம் எழுதவில்லை. இயலாமைதான் காரணம்.
எனது கண்கள் உழைத்து, ஓய்ந்துவிட்டன. என் செயல்கள் அத்தனையையும் முறித்துப் போட்டுவிட்டன அவை. காலையில் எழுந்து பல் துலக்கப் பின்புறம் செல்லக்கூட இன்னொருவர் உதவி தேவைப்பட்டது. தினம் எதையாவது படிக்காவிட்டால் எனக்கு உறக்கம் வராது. ஆனால், அத்தனை என் எண்ணங்களையும் சாட்டையால் அடித்து ஒடுக்கிவிட்டன. நடக்கவும், உட்காரவும், சாப்பிடவும் என்று எல்லாவற்றுக்கும் உதவுபவர்களின் உதடுகள், முதல் ஒரு வாரம் மட்டுமே மௌனமாய் இருக்கும்.
தவிர, நான் உணர்ந்தேன்... இனி என்னாலும் மற்றவர்களாலும் என் வாழ்க்கையைப் பொறுத்தவரை எதிர்பார்க்கப்படும் ஒரே நிகழ்ச்சி, என் மரணம் மட்டுமே! நானும் அந்த நிகழ்ச்சிக்காகவே காத்திருந்தேன்.
நாம் ஒரு சமயம் ‘மெர்ஸி கில்லிங்’ பற்றிப் பேசியிருக்கிறோம், நினைவிருக்கிறதா? கருணைக் கொலை! அது நியாயமானதே என்று நீங்கள்கூடச் சொன்னீர்கள். என் எண்ணம் ‘மெர்ஸி சூசைட்’ என்ற ஒன்றைப் பற்றி உடன் நினைத்தது. கருணைத் தற்கொலை! செய்வதற்குக் காரியங்கள் எதுவும் எனக்கு இல்லை. இருந்தாலும் உத்தரவுகள் மட்டுமே இட முடிகிற நிலை. மாலை வானத்தைத் தினமும் போல் ரசிக்க முடியாது. காலை பேப்பரை எழுத்து ஒன்று விடாமல் படிக்க முடியாது. இன்னும் படிக்க நினைத்த புத்தகங்கள் எத்தனையோ பாக்கி இருக்கின்றன. ஒரு குடும்பத் தலைவன் என்கிற முறையில் அத்தனைக் கடமைகளையும் செய்து முடித்து விட்டேன். என் இறப்பினால் விதவை ஆக மனைவிகூட இல்லை. ஆக, அந்த நாளுக்காக எதற்காகக் காத்துக்கொண்டு இருக்க வேண்டும் என யோசித்தேன். தீர்மானித்தேன். மாத்திரைகள் சில கடமையாற்றின.
யாருக்கும் தெரியாது. தெரியப்போவது இல்லை. ஆனால், சமீப காலமாக எல்லாவற்றையும் சொல்லி வந்த உங்களிடம் மட்டும் சொல்ல நினைத்து இந்தக் கடிதம். பல புத்தகங்கள் இத்துடன். படியுங்கள். உபயோகமாகலாம். ஒரே ஒரு அட்வைஸ்... அந்த நிமிடத்துச் சூழ்நிலைக்கு நியாயமாய்ப் படுவதை நிறைவேற்றத் தயங்காதீர்கள்.
என் இறுதியான வாழ்த்துக்கள் - உங்களின் எல்லா முயற்சிகளுக்கும்!
அன்புடன், மாதவன்.
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன். “ஏண்டா, என்னடா?” என்று ஓடி வந்த அக்கா, “என்னடா அது லெட்டர்? ஏன் அழறே? ஏதாச்சும் காதல் விஷயமா?” என்றாள்.
(ஆனந்த விகடன் 27.3.83 இதழில் வெளியான சிறுகதை)
.
4 comments:
nadesan
அதற்கப்புறம் இப்பொழுதுதான் படிக்கிறேன்....மாதவன் சார் அப்படியே இருக்கிறார் ...
அந்த தருணங்களில் பி,கே.பி அவர்கள் ரொமான்ஸ் சொட்ட சொட்ட எழுதிக் கொண்டிருந்தார்..துப்பறியும் கதைகளும் திரைக் கதை அளவுக்கு படம்பிடித்து எழுதி கொண்டிருந்தார்... இந்த சூழலில் இக்கதை வந்தது...
ஆரம்பத்தில் அந்த இளைநனிடம் என்னன்னோவோ எதிர் பார்த்து படிக்க ஆரம்பிப்போம்... அப்புறம் மாதவன் சார் நுழைந்தவுடன் அந்த இளைநனைப் போலவே கடைசிவரை கை கட்டி மண்டியிடுவோம் .. கடைசியில் துளிர்க்கும் கண்ணிர் உட்பட அந்த இளைநனின் உணர்வு நம்மிடம் ஒட்டிக் கொள்ளும்...
இப்ப கதையில் கூட ``மாதவன் சார்``வருவதில்லை..
நம் மனதிலிருந்து பிரிக்க முடியாத ம .செ வின் படமும் சேர்த்து வெளியிட்ட உங்களுக்கு மீண்டும் நன்றி........
Post a Comment