உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, January 17, 2011

மீண்டும் ரேடியோவில் நான்!

1984. வேலை தேடி நானும் என் தம்பியுமாக‌ சென்னை வந்த‌ புதிது.

நான் எஸ்.எஸ்.எல்.ஸி (11ஆம் வகுப்பு) ப‌‌டித்துவிட்டு, மாமா வீட்டில் தங்கி, விழுப்புரம் ஆர்ட்ஸ் காலேஜில் பி.யு.ஸி முடித்துவிட்டு, மேலே படிக்கக் குடும்பச் சூழ்நிலையும், வறுமையும் இடம் கொடுக்காததால், டைப்ரைட்டிங் வகுப்புகளுக்குச் சென்று தமிழ், ஆங்கிலம் இரண்டும் ஹைஸ்பீட் வரை பாஸ் செய்து, மேலும் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்ரக்டர் கோர்ஸ் முடித்து, கொஞ்ச காலம் கிராமத்தில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்டியூட் வைத்து நடத்தி, ஒரே ஒரு செட் மாணவர்களை மட்டும் தட்டச்சுப் பரீட்சைக்குத் தயார் செய்து (மொத்தம் 6 மாணவ, மாணவிகள்) அனுப்பிப் பாஸ் செய்ய வைத்து, மேலே வியாபாரம் போணியாகாமல், 'கடை விரித்தேன் கொள்வாரில்லை; கட்டுவித்தேன்' என்னும் பட்டினத்தார் கதையாக இன்ஸ்டிட்யூட்டை மூடிவிட்டு, பிழைப்புத் தேடி சென்னைக்குப் பயணிக்க உத்தேசிக்கையில், பத்தாம் வகுப்பு முடித்திருந்த (அப்போது அதுதான் எஸ்.எஸ்.எல்.ஸி.) என் தம்பி, "நானும் உன்னுடன் கிளம்பி வருகிறேன் அண்ணா!" என்றான், வனவாசம் புறப்பட்ட‌ ராமனைப் பின்தொடர்ந்த லட்சுமணனாக.

அப்பா கொடுத்ததும், நான் சேர்த்து வைத்திருந்ததுமாக என் கையில் அப்போது மொத்தம் ரூ.1,500 மட்டுமே இருந்தது. சென்னையில் அத்தை வீடு உள்பட, எங்களின் உறவுக்காரர்கள் அதிகம் பேர் இருந்தார்கள். ஆனால், பள்ளிப் பருவத்தில் விழுப்புரம் மாமா வீட்டில் தங்கி, மாமியின் கொடுமைக்கு ஆளாகியிருந்த‌ அனுபவத்தால், சூடு கண்ட பூனையாக,‌ யார் வீட்டிலும் தங்க நான் விரும்பவில்லை.‌

எம்.ஜி.ஆர். நகரில், தூரத்து உறவினராக, 80 வயதுகளைக் கடந்த‌ ஒரு முதிய தம்பதி, இடிபாடான ஒரு வீட்டில் தனியே வசித்தார்கள். அவர்களின் வீட்டில் ஒரு அறையை ரூ.90 மாத வாடகைக்கு எடுத்துத் தங்கினோம். கரன்ட் பில்லுக்குத் தனியே ரூ.10. எனக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை, கையில் உள்ள பைசாவை வைத்துக்கொண்டு எத்தனைக் காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்று கணக்குப் போட்டேன்.

வீட்டுக்காரப் பாட்டி வீட்டிலேயே நாங்கள் இருவரும் காலையும் ராத்திரியும் சாப்பிடுவதென்று முடிவாயிற்று. பெரிய சமையல் எதுவும் பாட்டியால் முடியாது. ஒரு குழம்பு அல்லது ரசம், மோர், தொட்டுக்க ஊறுகாய், ஒரு கீரை. அவ்வளவுதான் மெனு. எங்கள் இருவருக்குமாகச் சேர்த்துச் சாப்பாட்டுக்கென‌ மாசம் ரூ.200 தரச் சொன்னார் பாட்டி. அன்றைக்கிருந்த விலைவாசிப்படி பார்த்தாலும், ரொம்ப சீப்! எனவே, கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொண்டேன்.‌‌

ஆக, வேறு எந்தச் செலவுகளும் செய்யவில்லை என்றால், ஐந்து மாதங்களைப் பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டிவிடலாம். பார்க்கலாம், அதற்குள்ளாகவா ஒரு வேலை கிடைக்காமல் போய்விடும் என்று ஒரு தைரியம் வந்த‌து.

வேலை தேடி அலையத் தொடங்கினேன். மாம்பலத்தில் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் இன்ஸ்ட்ரக்டராக வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 300 ரூபாய். அது கொஞ்ச நாள்தான். அங்கேயிருந்த ரவுடிப் பிள்ளைகள் எனக்குக் கட்டுப்படவே இல்லை. சென்னை நகரச் சூழ்நிலைக்குப் பழகாத ‌என்னை கேரோ செய்து வெறுப்பேற்றினார்கள். 20 நாள் வேலை செய்ததற்குண்டான சம்பளமும் கிடைக்கவில்லை.

வேலை தேடி அலைந்த இந்தச் சமயத்தில்தான் ஒரு நாள், இயக்குநர் பாண்டியராஜன் வீட்டில் போய் தவம் கிடந்ததும், தீரன் சின்னமலை பகுதியில் 'என்டர்பிரைஸிங் என்டர்பிரைஸஸ்' என்னும் வாட்ச் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறியதொரு கம்பெனியில் ஒரு நாள் பணியாற்றியதும் நடந்தது.

பின்னர், நண்பர் மார்க்கபந்துவின் உதவியால் 'ஆம்ப்ரோ' பிஸ்கட் கம்பெனியில் டெப்போ இன்சார்ஜாக வேலைக்குச் சேர்ந்தேன். இது பற்றியெல்லாம் முன்பே விலாவாரியாக என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.

பிஸ்கட் கம்பெனியில் எனக்கு மாதச் சம்பளம் ரூ.300. எனக்கும் என் தம்பிக்கும் மாதச் செலவுகளுக்கு இது போதாது. தவிர, பாரிமுனையில் இருந்த 'ஜெமினி இன்ஸ்டிட்யூட்'டில் டி.வி. மெக்கானிசம் பயில என் தம்பியைச் சேர்த்திருந்தேன். அதற்கு வேறு மாதக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

இந்த நிலையில்தான், மேல் வருமானத்துக்கு என்ன வழி என்று யோசித்தேன். இறுதியில் ஓர் உபாயம் கண்டுபிடித்தேன். ரேடியோ நாடகங்களில் நடித்தால் என்ன என்று ஒரு யோசனை ஓடியது. இதற்கு முன் சிறுவனாக இருந்தபோது, பாண்டிச்சேரி வானொலி நிலையத்தில், ஒரே ஒரு நாடகத்தில் நடித்திருக்கிறேன். அதன்பிறகு, அதைச் சுத்தமாக மறந்தே போயிருந்தேன். இப்போது மீண்டும் அந்த யோசனை வந்தது.

சென்னை வானொலி நிலையத்துக்கு ஆடிஷன் டெஸ்ட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துக் கடிதம் எழுதிப் போட்டேன். உடனேயே தேதி கொடுத்து, வரச் சொல்லி அழைப்பு வந்தது. ஆடிஷன் டெஸ்ட்டில் கலந்துகொள்ள ஒரு சொற்பத் தொகை கட்டணம் வைத்திருந்தார்கள்.

அவர்கள் குறிப்பிட்ட தேதியில் போய்க் கலந்துகொண்டேன். சிறுவனாக இருந்தபோது, எந்த பயமும் இல்லை. ஆனால், இந்த முறை நடுக்கமாக இருந்தது; குரல் தேர்வில் ஜெயிக்க வேண்டுமே என்று கவலையாகவும் இருந்தது.

வழக்கம்போலவே ஒரு ஸ்க்ரிப்டைக் கொடுத்து, ஏற்ற இறக்கத்துடன் பேசி நடித்துக் காட்டச் சொன்னார்கள். தவிர, "உங்களுக்குத் தெரிந்த ஏதாவது நாடக வசனம் இருந்தால் பேசிக் காட்டலாம்" என்றார்கள். எனக்குக் குஷியாகிவிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் கதை வசனம் முழுவதும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அதிலிருந்து, 'கிஸ்தி, திரை, வரி, வட்டி... வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?' என்று பொளந்து கட்டினேன்.

"பாடத் தெரியுமா?" என்றார்கள். "சினிமா பாடல்கள் பாடுவேன்" என்றேன். "பாடுங்கள் பார்க்கலாம்" என்றார்கள். 'ஆனந்தம் விளையாடும் வீடு, நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு...' என டி.எம்.எஸ். குரலை உள்வாங்கிக்கொண்டு சில வரிகள் பாடினேன். அவர்களுக்குப் பிடித்துவிட்டது போலிருக்கிறது. "இன்னொரு பாடல் பாடுங்கள்" என்றார்கள். 'என்னம்மா ராணி, பொன்னான மேனி, ஆலவட்டம் போட வந்ததோ...' எனப் பாடினேன்.

"சரி, வீட்டுக்குப் போங்கள். பதில் வரும்" என்று அனுப்பிவிட்டார்கள். நம்பிக்கையுடன் வந்தேன்.

குரல் தேர்வில் நான் பாஸானதாக இனிப்புச் செய்தி, அடுத்த பதினைந்து நாளில் வந்தது.

அதன்பின், நாடகத்தில் பங்கேற்று நடிக்க, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்னை வானொலி நிலையம் என்னை அழைத்துக்கொண்டு இருந்தது. காலையில் சைக்கிள் எடுத்துக்கொண்டு போனால், பத்து மணிக்கு ரிகர்சல் ஆரம்பிப்பார்கள். மதியம் ஒரு மணிக்கு லன்ச் பிரேக். அங்கேயே உள்ள காண்ட்டீனில் சப்பாத்தியோ, உப்புமாவோ கிடைக்கும். பிறகு இரண்டு மணிக்கு அனைவரும் கூடியதும், ரெக்கார்டிங் ஆரம்பிப்பார்கள். நடிப்பவர்களில் பல பேர் உச்சரிப்பில் குழறிவிடுவார்கள். அல்லது, வரிகளை மாற்றிப் பேசிவிடுவார்கள். நான் ஒருமுறைகூடத் தடுமாறியது கிடையாது. இதனால், மற்றவர்கள் சொதப்பும்போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால், ரெக்கார்டிங் செய்பவர்களோ, நாடக இயக்குநரோ யாரையும் இதற்காகக் கடுப்படிக்கவே மாட்டார்கள். சிரித்துக்கொண்டே கட் செய்துவிட்டு, மீண்டும் விட்ட இடத்திலிருந்து பேசி நடிக்கச் சொல்வார்கள். இதனால் ரெக்கார்டிங் முடிய மாலை ஐந்தரை, ஆறு மணி ஆகிவிடும்.

ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ஒருமுறை நடித்துவிட்டுச் சற்று காத்திருந்தால், கையோடு செக் தருவார்கள். வாங்கி வந்துவிடலாம். (அதை மாற்றுவதற்காகத்தான் மாம்பலம் இந்தியன் வங்கியில் முதன்முதலாக ஒரு கணக்கு ஆரம்பித்தேன். அது இன்றளவும் உள்ளது.) அப்போதெல்லாம் நாடகத்தில் ஒரு முறை பங்கேற்க, சன்மானமாக ரூ.200 கிடைத்தது. இந்த மேல் வருமானம் எனக்கு அப்போது பெரிய உதவியாக இருந்தது.

1987-ல் நான் 'சாவி' பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பின்னரும்கூட ரேடியோ நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தேன். 'சி' கிரேடு ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து, 'பி' கிரேடு, 'ஏ' கிரேடு என உயர்ந்தேன். ஒவ்வொரு கிரேடுக்கும் தனித்தனி சன்மானம். எனக்கான ரேடியோ சன்மானம் ரூ.500 வரை உயர்ந்தது. அந்நாளில், எனக்கு அது பெரிய தொகை. சாவியில் என் மாதச் சம்பளமே ரூ.500-தான் அப்போது!

அப்போதைய சென்னை வானொலி இயக்குநராக இருந்த எம்.கே.மூர்த்திதான் என்னைத் தேர்வு செய்தவர்; எனக்கு அதிகம் வாய்ப்புகளை வழங்கியவர். யாரேனும் நடிகர்கள் வரவில்லை என்றால், அவரே கதாபாத்திரமாகப் பங்கேற்று நடித்துவிடுவார்.

குமரேசன் என்றொரு நடிகருடன் ஒரு நாடகத்தில் நடித்தேன். அவர் அந்தக் காலத்தில் ‘கலியுகம்’ போன்ற ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருப்பதாகச் சொன்னார். தன்னை வளர்த்து ஆளாக்கியது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான் என்றும், ‘அவர் எங்கே போனாலும் நாங்கள் ஒரு ஏழெட்டுப் பேர் அவர் கூடவே போவோம்’ என்றும், கலைவாணர் பற்றிய இன்னும் பல நினைவுகளை அன்று அவர் எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.

டைப்பிஸ்ட் கோபு, செந்தாமரை, வி.எஸ்.ராகவன், ஒரு விரல் கிருஷ்ணாராவ், பீலி சிவம் போன்ற சினிமா நடிகர்களும் ரேடியோ நாடகங்களில் கலந்துகொண்டு நடிப்பார்கள் என்பது தெரிந்து ஆச்சரியப்பட்டேன். இவர்கள் அன்றைக்குக் காரில்கூட வராமல், வானொலி நிலையத்துக்கு வெளியே ஆட்டோவைக் கை தட்டி அழைத்து ஏறிச் சென்றதைப் பார்த்து இன்னும் அதிக வியப்பு எனக்கு. இவர்களுடனெல்லாம் நான் ரேடியோ நாடகத்தில் பங்கேற்று நடித்திருக்கிறேன். அதெல்லாம் இனிமையான அனுபவங்கள்!

கணீர்க் குரலுக்குச் சொந்தக்காரர் ஹெரான் ராமசாமி. இவருடனும் ஒரு சரித்திர நாடகத்தில் நடித்திருக்கிறேன் நான். மிகவும் அன்பான மனிதர். சக நடிகர்களைப் பாராட்டக்கூடியவர். என் இத்தனை ஆண்டு கால ரேடியோ அனுபவத்தில், என் நடிப்பை மனம்திறந்து பாராட்டிய ஒரே நடிகர் அவர்தான்.

1995-ல் ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர்ந்த பின்னர், முதல் ஒரு வருடம் மட்டுமே சென்னை வானொலி நிலைய நாடகங்களில் பங்கேற்று நடிக்க முடிந்தது. பின்னர், பத்திரிகை வேலை பளுவால் வானொலி அழைப்பை ஏற்க முடியாமல் போக, அவர்களும் பின்னர் அழைப்பு அனுப்புவதைத் தவிர்த்துவிட்டனர். அந்தத் தொடர்பு அத்தோடு அறுந்துவிட்டது.

கடைசியாக நான் வானொலியில் பங்கேற்றது நாடகத்துக்காக அல்ல. பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கியச் சம்பவங்களை ஒரு கட்டுரையாகத் தொகுத்து எழுதியிருந்தார்கள். அதை பிரபல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், வர்ணனையாளர் மற்றும் கவிஞரான‌ ஜஹானாரா பேகமும் நானும் மாற்றி மாற்றிப் படித்தோம். ஒரு மணி நேரம் ஒலிபரப்பான நிகழ்ச்சி இது.

நான் பங்கேற்ற ரேடியோ நிகழ்ச்சிகளிலேயே எனக்குத் திருப்தியான நிகழ்ச்சியும் இதுதான்!

ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்... நான் சிறுவனாக இருந்தபோது, பாண்டிச்சேரி வானொலி நிலைய‌ நாடகத்தில் பங்கேற்று நடித்ததை, பின்னர் அந்நாடகம் ஒலிபரப்பானபோது வானொலியில் கேட்டேனா இல்லையா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், எனக்கு நினைவு தெரிந்து, மேல் வருமானத்துக்காக‌ நானே வலியச் சென்று கலந்துகொண்டு நடித்த சென்னை வானொலி நிலைய நாடகங்கள் எதையுமே, அது ஒலிபரப்பானபோது வானொலியில் நான் கேட்டது கிடையாது. வானொலியில் என் குரல் எப்படி இருந்திருக்கும் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது!

காரணம், அந்தக் காலத்தில் எங்களிடம் ஒரு சின்ன பாக்கெட் ரேடியோகூட இல்லை.
.

9 comments:

உங்கள் அனுபவங்களைக் கோர்வையாக சொல்லி இருக்கீங்க சார். ஆனால் உங்கள் குரலை இன்னமும் ரேடியோவில் கேட்டதில்லை எனக் கடைசியில் சொல்லும்போது தான் வருத்தம் வந்தது.
 
காரணம், அந்தக் காலத்தில் எங்களிடம் ஒரு சின்ன பாக்கெட் ரேடியோகூட இல்லை.
.

..... Oh My!!!

.......நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விதம், ரொம்ப சுவாரசியமாக இருக்குதுங்க....
 
மிக நேர்த்தியான பதிவு, படிப்பவரை உள்ளிழுக்க செய்யும் எழுத்து.

வாழ்த்துக்கள்
 
உங்கள் அனுபவங்கள் எல்லாம் வாழ்க்கை பற்றிய ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றன. இவ்வளவு கஷ்டபட்ட ஒருவர்தான் இன்று பல புத்தகங்கள் உருவாகக்காரணம் என்பதை நினைக்கும் போது மிகவும் தன்னம்பிக்கையாய் இருக்கிறது
 
/காரணம், அந்தக் காலத்தில் எங்களிடம் ஒரு சின்ன பாக்கெட் ரேடியோகூட இல்லை./
ஒரு பாக்கெட் ரேடியோ வாங்க ஆறுமாதமாகக் காசு சேர்த்த அனுபவம் எனக்கும் உண்டுங்க!
 
பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றது உங்கள் பதிவு. ரேடியோ நாடகம் என்றாலே பட்டுக்கோட்டை குமாரவேல், கூத்தபிரான், அவர் மகள் ஆனந்தி, பார்வதி ராமனாதன், ஜெயங்கொண்டான் ஆகியோர்தான் சட்டென்று என் நினைவுக்கு வருவார்கள். அவர்களுடன் உங்களுக்குத் தொடர்பு இருந்திருக்குமானால், அவர்களைப் பற்றியும் எழுதவும்.
 
உங்க ரேடியோ நிகழ்ச்சிகளை நீங்களே கேட்டதில்லைங்கிறது பெரிய சோகமாச்சே? அதைக் கேக்குறதுக்காகவாவது ஒரு பாக்கெட் ரேடியோ வாங்கணும்னு தோணலீங்களாண்ணா?
 
ஜி்கே மூர்த்தி தயாரிப்பாளர்மட்டுமே இயக்குநர் இல்லை
 
the greatest beauty is simplicity!
உங்கள் அனுபவங்களை
லட்சக்கணக்கானோர் படிக்கும் வகையில் பத்திரிக்கையில் எழுதுங்களேன்?