உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, April 01, 2011

இடப்பெயர்ச்சி!

கன் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரி செல்லும் வரை கண்டிப்பாக இங்கேதான் குடியிருப்போம். அதன்பின்பும், தொடர்ந்து இவர்களின் இல்லத்தில் குடியிருக்கவேண்டும் என்றுதான் ஆசை. பார்ப்போம்!

சென்ற வருடம் ஜூலை மாதம் எழுதிய ஒரு பதிவின் கடைசி பாரா இது.

சென்னை அசோக் நகரில், அன்புப் பெரியவர் திரு.முகம்மது இஸ்மாயீல் அவர்களின் இல்லத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் குடியிருந்து வரும் இனிய நினைவுகளின் தொகுப்பாக எழுதிய ஒரு பதிவின் இறுதிப் பாரா இது.

'பார்ப்போம்' என்று முடித்திருந்தது, தொடர்ந்து இங்கே நாங்கள் குடியிருக்காமல் அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக வெளியேறிவிடுவோம் என்பதைத்தான் சூசகமாகச் சுட்டிக்காட்டியதோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

ஆமாம். சென்ற வாரம் நான் அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, மாம்பலத்தில் குடியேறிவிட்டேன்.

மகனின் பள்ளிப் படிப்பு முடியும் வரை கண்டிப்பாக அங்கேதான் குடியிருப்போம் என்று எழுதினேன்; அதன்பின்பும் தொடர்ந்து அவர்களின் இல்லத்தில்தான் குடியிருக்க ஆசை என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், காலி செய்யும்படி அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது?

பெரியவர் இஸ்மாயீலிடம் சொல்லாத, சொல்லமுடியாத அந்தக் காரணத்தை இங்கே எழுதவும் தயக்கமாக இருக்கிறது.

பெரியவர் இஸ்மாயீல் அருமையான மனிதர்; மிகவும் அன்பானவர். மிக மரியாதைக்குரியவர். நான் வீட்டை காலி செய்யப் போவதாகச் சொன்னவுடன், கிட்டத்தட்ட கண்கலங்கி விட்டார். என் கைகளைப் பிடித்துக்கொண்டு, "ஏன் காலி பண்றீங்க? இங்கே உங்களுக்கு ஏதேனும் பிரச்னையா? பையன் படிப்பு முடியற வரைக்கும் இங்கே இருக்கேன்னீங்களே?" என்று நெகிழ்ச்சியாகக் கேட்டார்.

அவரிடம், மாம்பலத்தில் வேறு வீடு பார்த்துக் குடியேறப் போகிறேன் என்று சொல்ல மனம் வரவில்லை. அது அவர் மனத்தை மேலும் புண்படுத்துமோ என்று எண்ணினேன். அதனால் கூசாமல் ஒரு பொய் சொன்னேன்.

சாலிகிராமத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு ஃப்ளாட் இருக்கிறது. அதில் குடியிருந்த என் நண்பர் நா.ரமேஷ்குமார் (பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் தம்பி) தன் குழந்தையின் படிப்பை முன்னிட்டு, அந்த வீட்டைக் காலி செய்துவிட்டார். எனவே, "எப்படியும் என் மகன் பள்ளிப் படிப்பு முடிந்ததும் அங்கேயே சொந்த வீட்டில் போய் செட்டிலாகிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அவர் காலி செய்துவிட்டதால், இந்த ஒரு வருடத்துக்கு வேறு யாரையாவது குடி வைப்பதற்குப் பதிலாக நாங்களே அங்கே போய்விடலாம் என்று தீர்மானித்துவிட்டோம். மற்றபடி, எங்களுக்கு இங்கே எந்தப் பிரச்னையும் இல்லை. 11 வருடம் பழகிய இந்த வீட்டை விட்டு, அன்பான உங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போவது உண்மையில் எனக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது" என்று பெரியவரிடம் சொன்னேன். கடைசியாகச் சொன்னது மட்டும் 100 சதவிகிதம் உண்மை.

அந்தப் பதிலில் அவர் சமாதானம் ஆனார் என்றே தோன்றியது.

"சரி, எங்களையெல்லாம் மறந்துட மாட்டீங்களே? மக கல்யாணத்துக்கு அழைப்பு கொடுப்பீங்க இல்லே? நாங்க அத்தனை பேரும் குடும்பத்தோட வருவோம்!" என்றார்.

"உங்களுக்கு முதல்ல சொல்லிட்டுதான் பத்திரிகையே அடிக்கக் கொடுப்பேன்" என்றேன்.

சரி, வீட்டைக் காலி செய்ததன் உண்மையான காரணம்தான் என்ன?

பூடகமாகச் சொல்வதானால், ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை அல்லவா! அதுதான் காரணம். இதற்கு மேல் அதை விவரித்து எழுத எனக்கு மனம் வரவில்லை. நிற்க.

இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து தீவிரமாக‌ வீடு பார்க்கத் தொடங்கினோம். மாம்பலம் டாக், மாம்பலம் டைம்ஸ் இவற்றில் வெளியான விளம்பரங்களைக் கொண்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் சராசரியாக ஐந்து வீடுகள் வீதம் மொத்தம் நாற்பது ஐம்பது வீடுகள் பார்த்திருப்போம். அது ஒரு தனிக் கதை.

இறுதியாக, மாம்பலம் கோவிந்தன் சாலையில், ஸ்ரீனிவாசா தியேட்டருக்கு அருகில் ஓர் அருமையான இடம் கிடைத்தது. என் மகன் ரஜ்னீஷ் இணையத்தில் தேடிச் சொன்ன இடம் அது. போனேன்; பார்த்தேன்; பேசினேன். எல்லாமே மனசுக்கு ஏற்றபடி திருப்திகரமாக இருந்தன‌. எனவே, அட்வான்ஸ் கொடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்னால் அங்கே குடியேறிவிட்டேன்.

பங்குனியில் குடிபோகக்கூடாது என்பார்கள். ஆனால், நான் நாள், நட்சத்திரமெல்லாம் பார்ப்பது இல்லை. ராகு காலம், எமகண்டம், வடக்கே சூலம், தெற்கே ஈட்டி எதையும் பொருட்படுத்துவது கிடையாது. அதற்காக, வெளியே வறட்டுப் பகுத்தறிவு பேசிக்கொண்டு, வீட்டுக்குள் ரகசியமாக சாமி கும்பிட்டுக்கொண்டு, எல்லா சகுனங்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துப் பார்த்துச் செயல்படும் போலி நாத்திகவாதியும் இல்லை நான்.

நமக்கும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்று உறுதியாக எண்ணுகிறேன். அது நம்மைக் கைவிடாது என்று உண்மையாக நம்புகிறேன். அந்த சக்தியை மகாஸ்ரீ அரவிந்த அன்னை வடிவத்தில் நான் வணங்குகிறேன்.

அரவிந்த அன்னை துணையிருக்கும்போது நாள், கோள் பற்றியெல்லாம் நான் ஏன் கவலைப்படவேண்டும்?
.

5 comments:

பூடகமாகச் சொல்வதானால், ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை அல்லவா! அதுதான் காரணம். இதற்கு மேல் அதை விவரித்து எழுத எனக்கு மனம் வரவில்லை. நிற்க.


...very decent approach. :-)
 
பெரியவர் இஸ்மாயில் முன்பு எழுதிய பதிவு மிகவும் நெகிழ வைத்தது.. படித்தவர்கள் அனைவரும் அந்த வீட்டில் தான் தொடர்வீர்கள் என நம்பும் அளவுக்கு அந்த பெரியவர் அன்பால் கட்டி போட்டிருந்தார் ... சில காரணங்கள் வெளிய சொன்னால் அன்பிற்கும் நட்பிற்கும் பங்கம் வந்துவிடும் என்பதால் சொல்லவில்லை ... அன்னையின் அருளால் புது இடத்திலும் எல்லா சிறப்புகளும் பெற்று , பெரியவரோடும் என்றும் நட்போடு இருக்கவும் பிரார்த்தனைகள் ....
 
ஆம்... நாள், கோள் பற்றி எதற்கு நாம் கவலைப் படவேண்டும்! என்னைப் பொறுத்தவரை அதெல்லாம் கையால் ஆகாதவர்கள் சொல்லும் சால்ஜாப்பு!
நானும் கிட்டத் தட்ட தங்களைப் போலத் தான்! ஆனால் ஒன்று.. நான் பூணல் அணிந்தவன்..அரிக்கும் முதுகை ஆனந்தமாய் சொரிந்து கொள்ள அதை விட்டால் வேறு என்ன இருக்கிறது?
 
ரொம்ப நாளாக நீங்கள் பதிவு எதுவும் எழுதவில்லையே, பதிவு எழுதச் சொல்லி ஒரு பின்னூட்டம் போடலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். அதற்குள் மளமளவென்று மூன்று பதிவுகள் போட்டுவிட்டீர்கள். இப்படி ஒரேயடியாக மூணு நாலு எழுதுவதைவிட, மூணு நாலு மாசம் கேப் விடாமல், வாரத்துக்கு ஒரு பதிவாவது போடுவது மேல்! புது வீட்டுக்குக் குடிபெயர்ந்ததிலிருந்தாவ்து தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்!
 
பூணூல் யார் வேண்டுமானாலும் பூணலாம்..அது நம் உடலை இரண்டாகப் பிரிக்கிறது ஒரு டயப்ரம் மாதிரி..மேல் பக்கம் BRAIN,HEART,LUNGS..கீழ்பக்கம் கிட்னி.இதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கும்..இருக்கலாம்.. நம் முன்னோர்களுக்கு மூன்று கண்கள்..அடுத்து வந்த நாம் தான் அந்தகர்களாய் போய் விட்டோம்!..