தொலைக்காட்சி வருவதற்கு முன்பு, ரேடியோ நிகழ்ச்சிகள் பிரபலமாக இருந்த காலம். தினமும் இரவு எட்டரை முதல் எட்டேமுக்கால் மணி வரையில் நாடகம் ஒலிபரப்புவார்கள். அதற்குப் பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. இப்போது மெகா சீரியல்களுக்கு ஆதரவளிப்பதுபோல் அன்றைக்கும் ரேடியோ நாடகங்களுக்குத் தாய்க்குலங்களின் ஆதரவுதான் அதிகமாக இருந்தது. எட்டரை மணிக்குள் பரபரவென்று வேலைகளை முடித்துக்கொண்டு வந்து, சாவகாசமாக ரேடியோ முன் உட்கார்ந்துகொள்வார்கள். வால்யூமை அதிகப்படுத்துவார்கள்.
கணீர்க் குரலொன்று நாடகத்தின் தலைப்பைச் சொல்லிவிட்டு, அதில் நடிக்கும் நடிகர்களின் பெயர்களைக் கதாபாத்திரத்தின் பெயரோடு சேர்த்து அறிமுகப்படுத்தும். அறிவிப்பு முடியும் வரைக்கும், அதற்குப் பின்பு நாடகத்தின் காட்சிகளுக்கேற்பவும் நிலைய வித்வான் தனது குழுவினரோடு பின்னணி வாசிப்பார். அந்தப் பின்னணி இசை நாடகத்துக்கு நாடகம் வித்தியாசப்பட்டுத் தெரியாது. சந்தோஷம், துக்கம், அழுகை, கொண்டாட்டம் என எல்லாவற்றுக்கும் ரெடிமேடாக ஒரு டியூனை வைத்துக்கொண்டு, அதையே எல்லா நாடகங்களுக்கும் பின்பற்றுகிற மாதிரி தோன்றும்.
அந்நாளில், வானொலி என்றொரு மாதப் பத்திரிகை வந்துகொண்டு இருந்தது. அதில் அந்த மாதம் இடம்பெறப்போகும் ரேடியோ நிகழ்ச்சிகள், பஞ்சாங்கக் குறிப்புகள் போல் வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும். 'திரைகானம்', 'நேயர் விருப்பம்' போன்ற திரை இசைப் பகுதிகளில், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் எந்தெந்த படங்களிலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாகும் என்கிற பட்டியலும்கூட இருக்கும்.
'ஆல் இண்டியா ரேடியோ நாடக விழா' என்பது அந்நாளில் பிரசித்தமான ஒன்று. நாடகப் போட்டி வைத்து, அதில் வெற்றி பெற்ற பத்துப் பன்னிரண்டு நாடகங்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒலிபரப்புவார்கள். இந்த நாடகங்கள் ஒரு மணி நேரம் நடக்கும். நானும்கூட ஆவலோடு அவற்றை அந்த நாளில் கேட்டு ரசித்திருக்கிறேன்.
பின்னர், ஒரு திரைப்படத்தை எடிட் செய்து ஒரு மணி நேரமாகக் குறைத்து, 'ஒலிச்சித்திரம்' என்ற பெயரில் ஒலிபரப்பியது ஆல் இண்டியா ரேடியோ. குடும்பத்தோடு அமர்ந்து, அதை அத்தனை ஆவலாகக் கேட்டு ரசிப்போம்.
தொடர் நாடகங்களையும் ஒலிபரப்பியது ரேடியோ. அவற்றையும் ஒரு நாள் விடாமல் கேட்டு ரசித்த காலம் உண்டு. பெரியவர்களிடம் கேட்டால், மனோரமாவின் புகழ்பெற்ற 'காப்புக்கட்டிச் சத்திரம்' போன்ற தொடர் நாடகங்களைக் கேட்டு ரசித்ததைக் கதை கதையாய்ச் சொல்வார்கள்.
நான்கூட ரேடியோ நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஆர்வ மிகுதியில் அப்பா என்னை ரேடியோ நாடகத்தில் நடிக்க வைக்கும் பொருட்டு, பாண்டிச்சேரி வானொலி நிலையத்துக்கு எழுதிப் போட்டார். அப்போது எனக்குப் பத்து வயது. குரல் தேர்வுக்கு அழைப்பு வந்தது. 'ஆடிஷன்' என்பார்கள். அப்பா என்னை அழைத்துக்கொண்டு போனது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
வானொலி நிலையத்தில், என் போன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் அன்று ஆடிஷனுக்கு வந்திருந்தார்கள். என்னைத் தேர்ந்தெடுப்பார்களா, மாட்டார்களா என்கிற எந்தக் கவலையும் இல்லாமல் நான் சுற்றிலும் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்பாதான் டென்ஷனாக இருந்தார்.
ஆடிஷன் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, நடித்துக் காட்டவேண்டிய நாடகக் காட்சியை டைப் செய்து, ரோனியோடு காப்பியாக (ஜெராக்ஸ் மிஷின் வராத காலம். ஸ்டென்ஸில் பேப்பரில் டைப் கட் செய்து, அதைப் பிரதியெடுக்கும் மெஷினில் பொருத்தி, கைப்பிடியை உருட்டினால், ஒவ்வொரு பேப்பராக அச்சாகும். கார்பன் காப்பி என்பது அசல் அல்ல; அது நகல். ஆனால், இப்படி ரோனியோடு காப்பி எடுத்தால், ஒவ்வொன்றுமே அசல்!) ஆளுக்கொன்று தந்தார்கள். உடனேயே, வந்திருந்த பிள்ளைகள் அனைவரும் துடிப்பாக அதைப் படித்து, ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப் பழகத் தொடங்கிவிட்டார்கள்.
நான் என் கையிலிருந்த பேப்பரைப் பார்த்தேன். சிறுவர்களுக்கு நீதி புகட்டும்படியாக, ஏதோ ஒரு நாடகம். நான் சிறு வயதிலிருந்தே பள்ளிகளில் வீரபாண்டியக் கட்டபொம்மன், மனோகரா, அன்னையின் ஆணை படத்தில் சேரன் செங்குட்டுவன் நாடகம் என மனப்பாடமாகப் பேசி நடித்துப் பழகியிருந்ததால், இந்த ரேடியோ நாடக வசனம் ஜுஜுபியாகப் பட்டது. தவிர, மனனம் செய்யவேண்டிய அவசியமும் இல்லாததால், இரண்டொரு தடவைக்கு மேல் நான் அதைப் படிக்கவில்லை. மற்ற பையன்கள் ஒவ்வொருவரும் அதற்காக எப்படி மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள் என்று பார்ப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏதோ சினிமாவில் நடிப்பது போன்று பற்களைக் கடித்தும், முறைத்தும், முஷ்டியை மடக்கி உயர்த்தியும், நாக்கைத் துருத்தியும் நடித்துக்கொண்டு இருந்தார்கள்.
ஆடிஷன் ஹால் சில்லென்று குளிரூட்டப்பட்டிருந்தது. எனக்கு நினைவு தெரிந்து நான் ஏ.சி. அறைக்குள் சென்றது அதுதான் முதல் முறை. அவ்வளவு பெரிய ஹாலில் ஒருவருமே இல்லை. நடுவாக ஒரே ஒரு மைக் மட்டும் ஸ்டேண்டில் வைக்கப்பட்டு இருந்தது. எதிரே இருந்த சுவரில் ஒரு செவ்வகக் கண்ணாடித் தடுப்பு. அதற்கு அப்பால் இருக்கும் சவுண்ட் இன்ஜினீயர் கை அசைத்தால் நடிக்கத் தொடங்கவேண்டும் என்பது உத்தரவு.
அதன்படியே செய்தேன். ஒரு சில நொடிகள் பேசி நடித்ததும், "நாலாம் பக்கத்தில் 'நான் அவனுடைய பேனாவை எடுக்கலே, சார்!' என்பதிலிருந்து படி!" என்று அசரீரி உத்தரவு வந்தது. அப்படியே படித்து நடித்தேன். மீண்டும் குறுக்கிட்டு, "இரண்டாம் பக்கத்தில் 'நாம இனிமே நண்பர்களா இருப்போம்டா' என்பதிலிருந்து படி!" என மறு உத்தரவு. இப்படியே ஒரு பதினைந்து நிமிடம் ஆடிஷன் நடந்தது. அப்புறம் என்னைப் போகச் சொல்லிவிட்டார்கள்.
ஒரு வாரத்துக்குப் பிறகு, பாண்டிச்சேரி வானொலி நிலையத்திலிருந்து, நான் குரல் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக, காணை கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டுக்குக் கடிதம் வந்தது.
அதன்பின்பு உடனேயே நாடகத்தில் நடிக்க அழைப்பும் வந்தது. நான் நடித்த முதல் நாடகம் 'தீபாவளிப் பரிசு'. அதில் என் கேரக்டர் பெயரும் 'ரவி'தான். தீபாவளியன்று ஒலிபரப்பாயிற்று இந்த நாடகம். அப்பாவுக்குச் சந்தோஷமான சந்தோஷம்! நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் என்பதால், எனக்கு இதில் பெரிய சந்தோஷம் எதுவும் தெரியவில்லை என்பதுதான் நிஜம்!
இந்த நாடகம் ஒலிபரப்பான அடுத்த மாதமே திருச்சி வானொலி நிலையத்திலிருந்தும், சென்னை வானொலி நிலையத்திலிருந்தும் தங்கள் ஆடிஷன் டெஸ்ட்டுகளில் வந்து கலந்துகொள்ளும்படி, அப்பா எதுவும் விண்ணப்பிக்காமலே கடிதங்கள் வந்தன.
திருச்சிக்கு அழைத்துப் போனார் அப்பா. அங்கேயும் இதே நடைமுறையிலான ஆடிஷனில் கலந்துகொண்டேன். அங்கும் குரல் தேர்வில் நான் தேர்ச்சி பெற்றேன். நாடகத்தில் பங்கேற்று நடிக்க அங்கிருந்தும் அழைப்பு வந்தது. ஆனால், போய்க் கலந்துகொள்ளவில்லை. சென்னை ஆடிஷனிலும் கலந்துகொள்ளவில்லை.
காரணம், அப்போது நாங்கள் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு குக்கிராமத்தில் வசித்தோம். திருச்சிக்கும் சென்னைக்கும் பயணம் மேற்கொள்வது என்பது எங்களுக்கு அந்நாளில் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பயணப்படுவதுபோல! தவிர, 'ரேடியோவில் என் மகனும் நடிக்கிறான்; அவன் குரல் தமிழ்நாடு பூராவும் கேட்கிறது' என்கிற சந்தோஷத்தைத் தவிர, பெரிய வருமானம் ஒன்றும் அதில் கிடைக்கவில்லை என் அப்பாவுக்கு. போக வர பஸ் சார்ஜுக்குக்கூடக் கட்டுப்படியாகவில்லை, ரேடியோ நாடகத்தில் நடித்ததன் மூலம் எனக்குக் கிடைத்த சன்மானம்.
இதெல்லாம் போக, ரேடியோ நாடகத்தில் நான் நடித்ததை ஏதோ சினிமாவில் நடித்தது மாதிரி... பாராட்டி அல்ல; கேலியாகப் பேசினார்கள். "படிக்கிற புள்ளைக்கு ஏங்க இந்த வேல? புள்ளைய நல்லா படிக்க வைப்பீங்களா... அத்த வுட்டுப்புட்டு நாடகம், கூத்துன்னுக்கிட்டு இது என்ன கண்ணராவி!" என்றார்கள். அப்பாவுடன் பணியாற்றிய சக ஆசிரியர்களும், அப்பா என்னைத் தவறான வழியில் திசை திருப்பிக் கெடுப்பதாகக் குற்றம் சாட்டினார்கள்.
எனவே, 'தீபாவளிப் பரிசு' என்கிற அந்த ஒரே ஒரு நாடகத்தில் நடித்ததோடு, என் ரேடியோ அனுபவம் அப்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.
கவனிக்க... அப்போதைக்கு! மீண்டும் நான் ரேடியோ நாடகங்களில் பங்கேற்றது குறித்துப் பின்னர் எழுதுகிறேன்!
.
Thursday, January 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
+ கவிதைக் காதலன்! பெயர் அருமையாக இருக்கிறது. ஆனால்... நீங்களோ கவிதைக் காதலன்; நானோ கவிதை என்றால் நூறு கிராம் என்ன விலை என்று கேட்கிற ஆசாமி. பரவாயில்லையா? என்னைச் சந்தித்துப் பேசி, உங்களுக்கு ஏதேனும் ஏமாற்றமாகிவிடப் போகிறது! நிற்க. ஓய்வு என்பது செய்துகொண்டிருக்கும் வேலையைச் சற்றே நிறுத்திவிட்டு வேறு ஒரு புதிய வேலையைச் செய்யத் தொடங்குவதுதான். அப்படிப் பார்த்தால், உங்களுடன் சில நிமிடங்கள் பேசுவதுகூட எனக்கு ஓய்வு மாதிரிதான்! தாராளமாக எப்போது வேண்டுமானாலும் விகடன் அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்திக்கலாம். வருவதற்கு முன் நான் அலுவலகத்தில் இருக்கிறேனா என்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். என் மொபைல் எண் 98409 24911.
....என்ன கொடுமைங்க இது? ஊரார் பேச்சை கேட்டு.... :-(
Post a Comment