உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 05, 2011

பிடியுங்கள் பொக்கிஷத்தை!

'பொக்கிஷம் வேணுமா?' பதிவில் என் வலைப்பூ நேயர்களுக்கு ஒரு புதிர்ப் போட்டி வைத்து, விடை கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேன். அதற்கான விடைகளை அனுப்பக் கடைசி தேதி ஜனவரி 15 வரை கொடுத்திருந்தேன்.

யோசித்துப் பார்க்கையில், புதிர் முடிவை அவ்வளவு தள்ளி அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. காரணம், சரியான விடையைப் பின்னூட்டமாக அனுப்பும் முதல் நேயருக்குத்தான் புத்தகப் பரிசு என்று அந்தப் பதிவில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். அப்படியிருக்க, எப்போது சரியான விடையை முதலில் கிடைக்கப் பெற்றேனோ அப்போதே பரிசை அவருக்கென்று அறிவித்துவிட வேண்டியதுதானே? தள்ளி அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன? நிறையப் பின்னூட்டங்கள் வரட்டும் என்கிற குயுக்தியா?

ஒரு வாசகனாக இந்தப் பதிவை நான் மீண்டும் படித்தபோதுதான் எனக்குள் இந்தக் கேள்வி எழுந்தது. எனவே, இதோ உடனடியாக அந்தப் புதிருக்கான விடைகளையும் பரிசுக்குரியவரையும் அறிவிப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.

புதிரில் கொடுத்துள்ள குறிப்புகளின்படி அட்டவணைப்படுத்தினால், அது இப்படித்தான் அமையும்.

இடமிருந்து முதல் வீட்டில்:
ஆந்திரர் - மஞ்சள் வீடு - பூனை - (பானம் ?) - வீணை

இரண்டாம் வீட்டில்:
கேரளக்காரர் - நீல வீடு - குதிரை - டீ - மிருதங்கம்

மூன்றாம் (நடு) வீட்டில்:
தமிழர் - சிவப்பு வீடு - ஆடு - பால் - வயலின்

நான்காம் வீட்டில்:
வட இந்தியர் - வெள்ளை வீடு - நாய் - பழரசம் - கடம்

ஐந்தாம் வீட்டில்:
கன்னடத்துக்காரர் - பச்சை வீடு - (மிருகம் ?) - காபி - கஞ்சிரா

ஆக, இளநீர் அருந்துபவர் ஆந்திரர்; மாடு வளர்ப்பவர் கன்னடக்காரர் என்றாகிறது. இதுவே சரியான விடை.

என்னிடமிருந்த பழைய 'ரீடர்ஸ் டைஜஸ்ட்'டுகளைப் புரட்டிக்கொண்டு இருந்த‌போது, அதில் நான் பார்த்த ஒரு சுவாரசியமான புதிர்தான் இது. இதைத் தமிழுக்காகச் சற்று வார்த்தைகளை மாற்றிக் கொடுத்துள்ளேன்.

இந்தப் புதிரை விடுவிக்க நான் ரொம்பவே மண்டையை உடைத்துக்கொண்டேன். யோசித்து யோசித்து மூளை குழம்பி, உண்மையில் தலைவலியே வந்துவிட்டது. விடை கண்டுபிடிக்க முழுசாக இரண்டு நாள் தேவைப்பட்டது எனக்கு.

எனவேதான், ஓர் அலட்சிய மனோபாவத்தோடு, யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் இந்தப் புதிருக்கான விடையை என்ற எண்ணத்தில், ஜனவரி 15 வரை கடைசி தேதி கொடுத்திருந்தேன். சரியான விடையை முதலில் அனுப்பும் நபருக்கு மட்டுமே புத்தகப் பரிசு என்று குறிப்பிட்டிருந்தது நல்லதாகப் போயிற்று. காரணம், சரியான விடையைப் பலர் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.

ஆச்சரியமாக, நான் மேற்படி புதிரைப் பதிவிட்டு முடித்த ஒரு சில மணி நேரத்துக்குள்ளேயே திரு.சொக்கன் தனது விடையை மிகத் தெளிவாகவும், விரிவாகவும், மிகச் சரியாகவும் கணித்து எழுதியிருந்தார். அதேபோல் 'அதிஷா'வும்! இவர் விரிவாக எழுதவில்லையென்றாலும், நான் கேட்டிருந்த இரண்டு கேள்விகளுக்குமான சரியான விடைகளை எழுதியிருந்தார்.

ஹேட்ஸ் ஆஃப் சொக்கன்! ஹேட்ஸ் ஆஃப் அதிஷா!

முறைப்படி சொக்கனுக்கு மட்டுமே நான் புத்தகப் பரிசு தந்தால் போதுமானது. ஆனால், இன்னொரு புத்தகம் கூடுதலாகப் பரிசளித்தால் யாராவது சண்டைக்கு வரப்போகிறீர்களா என்ன? எனவே, பதிவிட்ட அன்றைய தினமே சரியான விடையை அனுப்பி வைத்த 'அதிஷா'வுக்கும் புத்தகம் பரிசளிப்பதென்று தீர்மானித்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள் சொக்கன் மற்றும் அதிஷா!

'ஆனந்த விகடன் காலப் பெட்டகம்' புத்தகம் அச்சாகிக்கொண்டு இருக்கிறது. மொத்தம் 368 பக்கங்கள்; விலை ரூ.180/‍- சென்னை புத்தகச் சந்தை தொடங்கும் 4-ம் தேதியன்றே கொண்டு வரவேண்டுமென்று கடுமையாக உழைத்தும், முடியாமல் போய்விட்டது. வார இறுதியில் சனி, ஞாயிறுக்குள் புத்தகச் சந்தையில் உள்ள விகடன் ஸ்டாலில் மேற்படி புத்தகம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று விகடன் அச்சகத்தார் உறுதியளித்திருக்கிறார்கள்.

9.1.11 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நான் சென்னை புத்தகச் சந்தையில் இருப்பேன். அப்போது நேரில் வந்தால் சொக்கன், அதிஷா இருவரையும் சந்தித்தது போலவும் இருக்கும்; பரிசை நேரில் தந்தது போலவும் இருக்கும்; கூரியர் செலவை மிச்சம் பிடித்தது மாதிரியும் இருக்கும்.

புத்தகச் சந்தைக்கு வருவதற்கு முன்னதாக, அன்று (9.1.11) காலையில் என்னை மொபைலில் தொடர்புகொண்டு, 'புத்தகம் தயாராகிவிட்டதா?' என்று எதற்கும் ஒரு தடவை தீர விசாரித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

என் மொபைல் எண்: 98409 24911
.

12 comments:

நான் மூணாவதா பதில் சொன்னேனே ...

பரிசு கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும் ...
ஏன் ரெண்டு ?? ஒரு ரவுண்டு ஆ முதல் மூணு பேருக்கு கொடுத்துடுங்களேன் .. :)

- கோகுல்
 
வாழ்த்துகள் சொக்கன் ஜி.
வாழ்த்துகள் அதிஷாண்ணே.
 
பொக்கிஷ வாழ்த்துக்கள் -சொக்கன் அவர்களுக்கும் , ஆதிஷா அவர்களுக்கும்
சரியான விடை நிறைய பேர் எழுதி இருப்பார்கள் ..சரியான நேரத்தில் முடித்தார்களா என்பது தான் போட்டி ..
கொஞ்சம் மண்டைய குடைய வைத்த சுவாரசியமான போட்டி ..நேரம் தாழ்ந்தாலும் நான் அனுப்பிய விடை சரியானது என்பதே மகிழ்ச்சி..
( தனி அஞ்சலில் வண்ண அட்டவணை வந்திருக்கும் என நம்புகிறேன் )
இந்த சுவாரஸ்ய போட்டியை வைத்த உங்களுக்கு நன்றி
 
சொக்கா! ரவி சார் கொடுக்கிற புத்தகப் பரிசு எனக்கே கிடைக்க நீதாம்பா அருள் செய்யணும்னு வேண்டிக்கிட்டு உங்க புதிருக்கான விடைகளைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணிட்டிருந்தேன். அந்தச் சொக்கனே பரிசைத் தட்டிக்கிட்டுப் போனா, நான் யார்கிட்ட போய் முறையிடுவேன்? :) எப்படியோ... வாழ்த்துக்கள் சொக்கண்ணே! வாழ்த்துக்கள் அதிஷாக்கா!
 
Super!

HAPPY NEW YEAR AND HAPPY PONGAL!!!
 
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.
 
பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே விடை அனுப்பிவிட்ட திரு. சொக்கனையும், அதிஷாவையும் எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை. இருவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! அதேபோல், ஒருவருக்கு ஒரு புத்தகம் பரிசென்று சொன்னாலும், இரண்டு பேருக்குப் பரிசளிக்க முன்வந்த தங்களின் தாராள மனசுக்கும் என் பாராட்டுக்கள்! எனக்குப் பரிசு கிடைக்கவில்லையென்ற வருத்தமே ஏற்படவில்லை.
 
:) பொக்கிஷம் கொடுக்கும் உங்கள் மனசுக்கு நன்றி :)

நான் பெங்களூரிலிருந்து வரும் செவ்வாய், புதன்தான் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன் வருகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் ஞாயிற்றுக்கிழமை திரு. அதிஷாவிடமே இரண்டு புத்தகங்களையும் கொடுத்துவிட இயலுமா? நான் செவ்வாய்க்கிழமை அவரைச் சந்திப்பேன், அப்போது பெற்றுக்கொள்கிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

- என். சொக்கன்,
பெங்களூரு.
 
விடை சொன்ன நேரத்தில் எனக்கு சொக்கனும் ஒரு நிமிடம்தான் வித்தியாசம். ச்சே ஒரு நிமிடத்தில் பரிசு போச்சே என்று நினைத்தேன். ஆனாலும் எனக்கும் பரிசு கொடுத்தமைக்கு நேரில் வந்து நன்றி சொல்கிறேன்சார்.
 
விலைவாசி உயர்ந்து நிற்கும் நேரத்தில் 140 புத்தகங்களில் விலையை குறைத்தமைக்கு விகடனுக்கு நன்றிகள்.

தங்களுடைய ஏடாகூட கதைகளின் தொகுப்பினை பொங்கலுக்கு நண்பர்களுக்கு பரிசலிப்பதாக இருக்கிறேன். நன்றி!.
 
போட்டியெல்லாம் வைச்சிங்களா@. வலைபதிவுக்கு தொடர்ந்து வராமையால் கலந்து கொள்ளும் வாய்ப்பினை இழந்துவிட்டேன்,.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்,...
 
சொக்கன்,அதீஷாவுக்கு வாழ்த்துக்கள்