உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, December 28, 2010

பொக்கிஷம் வேணுமா?

“எனது ‘உங்கள் ரசிகன்’ மற்றும் ‘என் டயரி’ வலைப்பூக்களைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு இந்த ஆண்டு முடிய அவ்வப்போது ஏதேனும் போட்டிகள் அறிவித்துப் புத்தகப் பரிசுகள் தர எண்ணியுள்ளேன். குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒன்று என்ற அளவிலாவது பதினைந்து புத்தகங்கள் வரை அன்பளிக்க ஆசை. பார்க்கலாம்!” என இந்த ஆண்டு ஜனவரியில், எனது ‘என் டயரி’ வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தேன்.

எனது பொன்மொழிகள் புத்தகத்துக்கு ஒரு பெயர் வைக்கச் சொல்லி நான் வைத்த முதல் போட்டியின் முடிவுக்கான பதிவில்தான் அதுபோல் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், 15 என்ற எண்ணிக்கையையெல்லாம் தாண்டி, 300 புத்தகங்களாவது பரிசளித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில், என் வலைப்பூ வாசகர் திரு.கணேஷ்ராஜா, நான் போட்டி வைத்துப் புத்தகம் பரிசளித்து வெகு காலமாகிவிட்டது என்று ஞாபகமூட்டியிருந்தார். அவரது பின்னூட்டத்திற்கான என் பதிலில், “இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக ஒரு போட்டி வைத்துப் புத்தகப் பரிசளிக்கிறேன். நான் பரிசளிக்கப்போகிற அந்தப் புத்தகம் மிக அற்புதமான புத்தகம். விலை மதிப்பற்றது. விறுவிறுவெனத் தயாராகி வருகிறது. ஜனவரியில் விற்பனைக்கு வரும். மற்ற விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன். முடிந்தால், நான் பரிசளிக்க எண்ணியுள்ள அந்தப் புத்தகம் என்னவாக இருக்கும் என்று யூகித்து, என் வலைப்பூ நேயர்கள் எனக்குப் பின்னூட்டங்கள் அனுப்பலாம். சரியாக யூகித்து எழுதும் முதல் ஐந்து பேருக்கு வேறு ஒரு குட்டிப் புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்” என்று கிளைப் போட்டி ஒன்றையும் அறிவித்திருந்தேன்.

அதற்கு சொக்கன், கிருஷ்குமார், எஸ்.ராஜேஸ்வரி, கணேஷ்ராஜா ஆகிய நாலு பேர் மட்டுமே சரியான விடை அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு தலா ஒரு பாக்கெட் சைஸ் விகடன் பிரசுர புத்தகம் (குறைந்தபட்சம் ரூ.50 விலையுள்ளது) விரைவில் பரிசாக அனுப்பி வைக்கப்படும். நால்வரும் தயவுசெய்து தங்கள் முகவரிகளை எனக்கு ஈ-மெயிலில் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

விறுவிறுவெனத் தயாராகி வரும் ஆனந்த விகடன் காலப் பெட்டகம் (1926 முதல் 2000 வரையிலான விகடன் சரித்திரம்) புத்தகம்தான் நான் பரிசளிக்க எண்ணியுள்ள அந்தப் புத்தகம் என்பதே சரியான விடை.

தொகுப்பாசிரியர் என்கிற முறையில் அந்தப் புத்தகத்திற்கான முன்னுரையை இன்று எழுதிக் கொடுத்தேன். விகடன் பிரசுரத்தாரால் அதில் ஒருக்கால் சின்னச் சின்ன வாக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம். மற்றபடி, நான் எழுதிய அந்த முன்னுரையை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

“அதெல்லாம் சரி, போட்டி என்ன ஆயிற்று?” என்று கேட்கிறீர்களா? அது இந்தப் பதிவின் கடைசியில்.

படித்தேன்... சிலிர்த்தேன்... மலைத்தேன்... தொகுத்தேன்..!

டந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நான் நானாகவே இல்லை. காந்திஜியுடன் யாத்திரை போனேன்; காமராஜருடன் அளவளாவினேன்; இந்திரா காந்தியின் இல்லத்தில் தங்கினேன்; காஞ்சிப் பெரியவரின் அருளாசி பெற்றேன்; தந்தை பெரியாரின் அன்புக்குப் பாத்திரமானேன்; பழம்பெரும் இலக்கியவாதிகளைச் சந்தித்தேன்; தியாகராஜ பாகவதருடனும், கே.பி.சுந்தராம்பாளுடனும் உரையாடினேன்; எம்.ஜி.ஆருடன் உணவருந்தினேன்; சிவாஜியின் கை பிடித்து நடந்தேன்; டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, சாவித்திரி, சரோஜாதேவி எனத் திறமை மிக்க சினிமா தாரகைகள் அத்தனை பேருடனும் கலந்துரையாடினேன்...

''இரு, இரு... ஏதாவது கனவு கினவு கண்டாயா?'' என்கிறீர்களா? இல்லை சுவாமி! அத்தனையும் உண்மை!

கால யந்திரம், கால யந்திரம் என்கிறார்களே, அதெல்லாம் அதீத விஞ்ஞானக் கற்பனை என்றுதான் நான் இத்தனை நாள் நினைத்துக்கொண்டு இருந்தேன். என் நினைப்பைப் பொய்யாக்கிவிட்டது ஆனந்த விகடன்.

'பழைய விகடன் இதழ்களைப் படித்து, அவற்றிலிருந்து இன்றைய இளைய தலைமுறைக்கும் பயன்படக்கூடிய, சுவாரஸ்யமான விஷயங்களை வாராவாரம் தொகுத்துத் தரவேண்டும்' என்கிற, கரும்பு தின்னும் பணி என்னைத் தேடி வந்தது, நான் செய்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும்.

2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆனந்த(விகட)ப் பெருங்கடலுக்குள் என் பயணத்தைத் துவக்கினேன். உள்ளே செல்லச் செல்ல, நான் என்னை மறந்தேன்; தன்னை இழந்தேன். எந்த ஆண்டுப் புத்தகங்களைப் புரட்டுகிறேனோ, அந்த ஆண்டில் வாழும் நபராகவே மாறிப்போனேன். மெய்யாகவே கால யந்திரத்தில் பயணம் செய்தேன். ஆரம்பப் பாராவில் சொன்ன அத்தனையும் நான் அனுபவித்த உண்மை!

ஆனந்த விகடன் எனும் அமுதக் கடலுக்குள்தான் எத்தனையெத்தனை ஆச்சரியங்கள்... அற்புதங்கள்..! அங்கே கொட்டிக் கிடக்கும் முத்துப் பரல்களையும், வைரக் கற்களையும், நவரத்தின மாலைகளையும் கண்டு விக்கித்துப் போனேன்; பிரமித்து நின்றேன். இத்தனை வைர வைடூரியங்களில் எதையென்று வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்று குழம்பினேன். ஒன்றைப் புரட்டும்போது, 'அடடா! இதை இந்த வாரமே கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்' என்று தோன்றும். இன்னொன்றைப் புரட்டும்போது, 'இதையும் இப்போதே கொடுத்துவிடலாம்' என்று நினைப்பேன்.

தருமர், கர்ணன் இருவரில் யார் பெரிய வள்ளல் என்று ஒரு கேள்வி வந்ததாம். இருவரிடமும் தங்கக் காசுகள் அடங்கிய ஒரு குடத்தைக் கொடுத்து, 'இதை யார் சீக்கிரம் தானம் செய்கிறீர்கள், பார்ப்போம்' என்று ஒரு போட்டி வைத்தாராம் கிருஷ்ண பகவான். தருமர் அந்தக் குடத்தை எடுத்துக்கொண்டு போய், ஆளுக்கொரு தங்கக் காசாக விநியோகம் செய்தார். கர்ணனோ வறியவர் ஒருவரை அழைத்து, 'இந்தா, வைத்துக் கொள்!' என்று அந்தக் குடத்தையே தூக்கிக் கொடுத்துவிட்டாராம்.

ஆனந்த விகடன் இதழ்களைப் படிக்கப் படிக்க, அந்தக் கர்ணனாக நான் ஆகிவிடக் கூடாதா என்கிற பேராசை எழுந்தது.

அதன் விளைவாக... 30-களில், 80-களில், 50-களில், 90-களில் என அங்கொன்றும் இங்கொன்றுமாக விகடனின் வைர மணிகளைப் பொறுக்கியெடுத்து, ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ என்கிற மாலையாகத் தொடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்த நான், பிறகு ஆனந்த விகடனின் முதல் இதழில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டு இதழ்களிலும் உள்ள ரத்தினக் குவியலிலிருந்து கொஞ்சத்தை எடுத்து, 'பொக்கிஷம்' பகுதிக்குள்ளேயே 'காலப் பெட்டகம்' என்னும் தனிப் பகுதியாகத் தொகுத்துக் கொடுத்தேன்.

ஆறு குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் ஒன்று சேர்த்து ஆறுமுகப் பெருமானாக அவதரிக்கச் செய்ததுபோல், தனித் தனித் தொகுப்புகளாகப் பிரிந்து கிடந்த விகடன் காலப் பெட்டகத்தை ஒன்று சேர்த்து 'ஆனந்த விகடன் காலப் பெட்டகம்' என்னும் முழுப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள் விகடன் பிரசுரத்தார்.

1926 முதல் 2000 வரையிலான ஆனந்த விகடனின் பரிணாம வளர்ச்சியை மட்டும் காட்டுகிற தொகுப்பல்ல இது. நாட்டின் அரசியல் மாற்றங்கள், சமூகச் சூழல்கள், மக்களின் மனோபாவங்கள், கலை- இலக்கிய வளர்ச்சிகள் என 75 ஆண்டுக் கால சமுதாயத்தைப் பிரதிபலிக்கிற கண்ணாடியும்கூட!

நான் பயணித்த விகடன் கால யந்திரத்தில் ஏறி, நீங்களும் ஒரு சுற்று வாருங்கள்; அதன் த்ரில்லை உணர்வீர்கள்!

மிக்க அன்புடன்,

ரவிபிரகாஷ்.

*****

இனி, போட்டி!

ரிசையாக ஐந்து வீடுகள் உங்களுக்கு நேர் எதிரே இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு நிறம். அந்த ஐந்து வீடுகளிலும், ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு மாநிலத்தார் வசிக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இசைக் கருவியை வாசிப்பதில் நிபுணர்கள். ஒவ்வொருவரும் காலையில் அருந்தும் பானம் வெவ்வேறு. அவர்கள் அனைவரும் ஆளுக்கொரு பிராணியை வளர்க்கிறார்கள்.

இனி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கவனமாகப் பாருங்கள்.

1. தமிழர் சிவப்பு நிற வீட்டில் வசிக்கிறார்.

2. வட இந்தியர் நாய் வளர்க்கிறார்.

3. பச்சை நிற வீட்டில் வசிப்பவர் காலையில் அருந்துவது காபி.

4. கேரளத்துக்காரர் காலையில் டீ அருந்துவார்.

5. வெள்ளை நிற வீட்டுக்கு அருகில் வலப் பக்கத்தில் (அதாவது, உங்கள் பார்வையில் வலப் பக்கம்) உள்ள வீட்டின் நிறம் பச்சை.

6. வயலின் வாசிப்பவர் ஆடு வளர்க்கிறார்.

7. வீணை வாசிப்பவரின் வீட்டு நிறம் மஞ்சள்.

8. நடு வீட்டில் வசிப்பவர் பால் அருந்துகிறார்.

9. பூனை வளர்க்கப்படும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் மிருதங்கம் வாசிப்பார்.

10. உங்கள் பார்வையில், இடப்பக்கம் உள்ள முதல் வீட்டில் வசிப்பவர் ஆந்திரர்.

11. குதிரை வளர்க்கப்படும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் வீணை வாசிப்பார்.

12. கடம் வாசிப்பவர் பழரசம் அருந்துவார்.

13. கன்னடக்காரருக்கு கஞ்சிரா வாசிக்கத் தெரியும்.

14. ஆந்திரர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டின் நிறம் நீலம்.

எனில், இளநீர் அருந்துபவர் யார்? மாடு வளர்ப்பவர் யார்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் எழுதும் முதல் நபருக்கு, ஆனந்த விகடன் காலப் பெட்டகம் புத்தகம் தயாரானதும் (சுமார் 350 பக்கம் வரையில் வரக்கூடிய அந்தப் புத்தகத்தின் விலை ஏறத்தாழ ரூ.150 இருக்கலாம்), அதில் ஒரு பிரதியை என் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

ஜனவரி புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பொருட்டு, மேற்படி புத்தகம் அதி விரைவாகத் தயாராகி வருகிறது.

எனவே, ஜனவரி 15-க்குள் வந்து சேரும் விடைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

வாழ்த்துக்கள்!

.


24 comments:

நன்றி ரவிபிரகாஷ்.

கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு புதிர் ஆங்கிலத்தில் பார்த்திருக்கிறேன். தமிழில் இன்னும் சிக்கலாகச் செய்துவிட்டீர்கள் - 4 காகிதத்தைக் கிறுக்கி வீணாக்கியபிறகு விடை மாட்டியது - சரியா என்று சொல்லுங்கள் :)

நீங்கள் கொடுத்த குறிப்புகளின் அடிப்படையில் எனக்குக் கிடைத்த விடை:

* முதல் வீடு - மஞ்சள் நிறம் - ஆந்திரர் வசிக்கிறார் - இளநீர் குடிக்கிறார் - வீணை வாசிக்கிறார் - பூனை வளர்க்கிறார்
* இரண்டாவது வீடு - நீல நிறம் - கேரளத்துக்காரர் வசிக்கிறார் - தேநீர் குடிக்கிறார் - மிருதங்கம் வாசிக்கிறார் - குதிரை வளர்க்கிறார்
* மூன்றாவது வீடு - சிவப்பு நிறம் - தமிழர் வசிக்கிறார் - பால் குடிக்கிறார் - வயலின் வாசிக்கிறார் - ஆடு வளர்க்கிறார்
* நான்காவது வீடு - வெள்ளை நிறம் - வட இந்தியர் வசிக்கிறார் - பழரசம் குடிக்கிறார் - கடம் வாசிக்கிறார் - நாய் வளர்க்கிறார்
* ஐந்தாவது வீடு - பச்சை நிறம் - கன்னடக்காரர் வசிக்கிறார் - காபி குடிக்கிறார் - கஞ்சிரா வாசிக்கிறார் - மாடு வளர்க்கிறார்

ஆக,

1. இளநீர் அருந்துபவர் ஆந்திரர்
2. மாடு வளர்ப்பவர் - கன்னடர்

சரியா சார்? :)

- என். சொக்கன்,
பெங்களூரு.
 
சார் வணக்கம்,


ஆந்திராக்காரர் இளநீர் அருந்துகிறார்!
கன்னடக்காரர் மாடு வளர்க்கிறார்!

இதுதான் சரியான விடை என்கிற நம்பிக்கையோடு பதில் போட்டிருக்கிறேன். பார்த்து போட்டுக்கொடுங்கஜி
 
இளநீர் அருந்துபவர் -
ஆந்திரர், மஞ்சள் நிற வீடு, பூனை வளர்ப்பவர், வீணை வாசிப்பவர்

மாடு வளர்ப்பவர் -
கன்னடர், பச்சை நிற வீடு, காபி அருந்துபவர், கஞ்சிரா வாசிப்பவர்

-- கோகுல்.
 
இளநீர் அருந்துபவர் -
ஆந்திரர், மஞ்சள் நிற வீடு, பூனை வளர்ப்பவர், வீணை வாசிப்பவர்

மாடு வளர்ப்பவர் -
கன்னடர், பச்சை நிற வீடு, காபி அருந்துபவர், கஞ்சிரா வாசிப்பவர்

-- கோகுல்.
 
Answer(?)

Ilaneer -- Andhira

Maadu ---Tamilnadu
 
இங்கு இது கூறுவது பொருத்தமா எனத் தெரியவில்லை ..விகடன் வேறு நீங்கள் வேறு பிரிக்கமுடியவில்லை ..இந்த வாரம் (இங்கு ஒரு வாரம் தாமதமாக வரும் ) பொக்கிஷத்தில் சுஜாதா அவர்களின் ரிசப்ஷன் 2010 சிறுகதையை முழுதாக எடுத்து போட்டதற்கு மிக்க நன்றி ..
இன்னமும் 10 வருடம் கழித்து படித்தாலும் இதே சிலிர்ப்பு வரும் ( உ-ம் ஒரு வசனம் , போச்சுடா ரோபர்ட் இப்போதெல்லாம் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் வேறுபாடே இல்லை கன்னக் குழி கூட அப்படியே செய்கிறார்கள் )

எனவே பொக்கிஷம் பொக்கிஷம்தான் சந்தேகமே இல்லை.

அப்புறம் புதிரோ புதிர் .. இது என்ன ரொம்ப சிம்பிள் என்று உட்கார்ந்தேன் ..ம் ஹும் .. இப்ப மண்டை முழுவதும் கடம், கஞ்சிரா , மாடு, பூனை, மஞ்சள் , பச்சை , பால் ,ஜூஸ் என ஒரே குழப்படிதான் ... சரியாகத்தான் நேரம் கொடுத்துள்ளீர்கள் . அதுக்குள்ள முடியுமான்னு தெரியலை ...
 
இளநீர் அருந்துபவர் ஆந்திராக்காரர்...

மாடு வளர்ப்பவர் கர்நாடகக்காரர்...

( விடை வழிமுறை உங்கள் தனி அஞ்சலுக்கு...கணக்கு சரியில்லாவிட்டாலும் ஸ்டெப்புக்கு மார்க் கிடைக்கும் எனும் ஒன்பதாம் வகுப்பு ஆசை.)
 
அப்படா, ஒரு மணி நேரம் பாடுபட்டு பட்டு விடை கண்டுபிடிச்சு இருக்கேன்.

இளநீர் அருந்துபவர்-- ஆந்திரக்காரர்

யார்? மாடு வளர்ப்பவர்--கன்னடக்காரர்

சரியான விடைதானே?
கமலா
kamala33@gmail.com
 
1) இளநீர் - ஆந்திரர் - மஞ்சள் வீடு- அவர் வாசிப்பது வீணை - அவர் வளர்ப்பது பூனை

2) மாடு வளர்ப்பது - கன்னடக்காரர் - அவர் வாசிப்பது - கஞ்சிரா - அருந்துவது காபி.

Balaji.manoharan@gmail.com
 
இடமிருந்து வலம்

முதல் வீடு - மஞ்சள் - ஆந்திரர் - வீணை - இளநீர் - பூனை

நீலம் - கேரளர் - மிருதங்கம் - டீ - குதிரை

சிகப்பு - தமிழர் - வயலின் - பால் - ஆடு

வெள்ளை - வ.இந்தியர் - கடம் - பழரசம் - நாய்

பச்சை - கன்னடிகர் - கஞ்சிரா - காபி - மாடு

:)

It took 30 mins. Thanks for the puzzle :)
 
இளநீர் குடிப்பவர் ஆந்திரர்.
மாடு வளர்ப்பவர் கன்னடர்.

மாநிலத்தவர் ஆந்திரர் கேரளர் தமிழர் வட இந்தியர் கன்னடர்
நிறம் மஞ்சள் நீலம் சிவப்பு வெள்ளை பச்சை
விலங்கு பூனை குதிரை ஆடு நாய் மாடு
பானம் இளநீர் டீ பால் பழரசம் காபி
இசை வீணை மிருத வயலி கடம் கஞ்சிரா

விடை இது தான். சரியா..?
ரசிகனின் ரசிகன்,
‍ சிவம், திருச்சி.
9944457752
 
விடை :

இளநீர் அருந்துபவர் : ஆந்திரா
மாடு வளர்ப்பவர் : கர்நாடகா

ஆந்திரா-கேரளா-தமிழ்-வடநாடு-கர்நாடகா

மஞ்சள்-நீலம்-சிவப்பு-வெள்ளை-பச்சை
வீணை-மிருதங்கம்-வயலின் -கடம்-கஞ்சிரா
பூனை-குதிரை-ஆடு-நாய்-மாடு
இளநீர்-டீ-பால்-பழரசம்-காபி
 
விடை :

இளநீர் அருந்துபவர் : ஆந்திரா
மாடு வளர்ப்பவர் : கர்நாடகா

ஆந்திரா-கேரளா-தமிழ்-வடநாடு-கர்நாடகா

மஞ்சள்-நீலம்-சிவப்பு-வெள்ளை-பச்சை
வீணை-மிருதங்கம்-வயலின் -கடம்-கஞ்சிரா
பூனை-குதிரை-ஆடு-நாய்-மாடு
இளநீர்-டீ-பால்-பழரசம்-காபி
 
மஞ்சள் வீட்டில் வீணைவாசித்துக் கொண்டு இளநீர் அருந்தி மாடு வளர்ப்பவர் ஆந்திராக்காரர்.

தினேஷ்குமார்
krdineshkumar(at)gmail(.)com
 
இளநீர் அருந்துபவர் - ஆந்திரர்<
மாடு வளர்ப்பவர் - கன்னடியர்
 
ஆசிரியர் அவர்களுக்கு,

இளநீர் பருகுபவர் ஆந்திரர்,
மாடு வளர்ப்பவர் கன்னடர் .

இந்த பதில் சரி என நம்புகிறேன் :)

தீபன்
deepanadhi@gmail.com
machaanblog.blogspot.com
 
ஆசிரியர் அவர்களுக்கு,

இளநீர் பருகுபவர் ஆந்திரர்,
மாடு வளர்ப்பவர் கன்னடர் .

இந்த பதில் சரி என நம்புகிறேன் :)

தீபன்
deepanadhi@gmail.com
machaanblog.blogspot.com
 
ஆசிரியர் அவர்களுக்கு,

இளநீர் பருகுபவர் ஆந்திரர்,
மாடு வளர்ப்பவர் கன்னடர் .

இந்த பதில் சரி என நம்புகிறேன் :)

தீபன்
deepanadhi@gmail.com
machaanblog.blogspot.com
 
இதோ விடை (தாவு தீர்ந்து விட்டது.)
இளநீர் -- ஆந்திரக்காரர்
மாடு-- கன்னடக்காரர்

--கமலா
kamala@gmail.com
 
சார், புதிருக்கு விடை இரண்டு தடவை போட்டேன். அது வெளியாகவில்லையே.=
கமலா
 
நன்றி திரு.பத்மநாபன்! பொக்கிஷம் பகுதியில் இடம்பெற்ற காலப் பெட்டகம் என்கிற ஆனந்த விகடனின் 75 ஆண்டுக்கால சரித்திரப் பக்கங்கள் (1926 முதல் 2000 வரை) தனிப் புத்தகமாக வெளியாக உள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியின்போது கிடைக்கும். அது விகடனின் காலப் பெட்டகம் மட்டுமல்லாது, இந்த தேசத்தின் காலப் பெட்டகமாகவும் திகழ்கிறது என்பதே உண்மை. முடிந்தால் வாங்கி மகிழுங்கள். நன்றி!
 
பின்னூட்டத்துக்கும் போட்டியில் பங்கேற்றமைக்கும் என் நன்றிகள் கமலா! உங்கள் புதிர் விடைகள் கிடைத்தன. அதை உடனே வெளியிட்டுவிட்டால், மற்றவர்கள் அதைப் பார்த்துக் காப்பியடித்துவிடமாட்டார்களா? போட்டி முடிவு தேதி ஜனவரி 15 வரை கொடுத்துள்ளேனே! மற்றவர்களும் பங்கேற்க வேண்டாமா? :)
 
விகடன் பொக்கிஷம் புத்தகத்தைப் பரிசாகப் பெற ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், எத்தனைதான் தலையைப் பிய்த்துக் கொண்டாலும், புதிருக்கான விடையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. சாரி, எனக்கு அதிர்ஷ்டமில்லை!
 
ஹும்.. இந்த தடவையும் சொக்கன் தான் பரிசு தட்டிச் செல்கிறாரா?!