உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, November 23, 2009

தாயுமானவர்!

டல்நிலை சரியில்லாத காரணத்தால் கலைஞர் தன் 60-வது பிறந்த நாள் விழாவுக்கு வரப்போவது இல்லை என்பதை அறிந்த பத்திரிகையாளர் சாவி அவர்கள் வருத்தப்பட்டுக் கடிதம் எழுதி அனுப்ப, அவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து கலைஞர் தம் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் கிளம்பி வந்து வாழ்த்தினார் என்று ஒரு துணுக்குச் செய்தியை நேற்று தினகரன் நாளிதழுடன் இணைப்பாக வந்த ‘வசந்தம்’ புத்தகத்தில் படித்தேன். சாவி எழுதிய ‘என்னுரை’ என்னும் புத்தகத்திலிருந்து எடுத்து அந்தத் துணுக்கைப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்ததும், பத்திரிகையாளர் சாவி பற்றிய எண்ணங்கள் மேலெழுந்தன.

1992-ல், நான் சாவி பத்திரிகையில் வேலை செய்துகொண்டு இருந்த சமயம்... என் திருமணம் வியாழனன்று திருச்சியில் நடைபெற இருந்தது. சாவி இதழ் வேலைகளை புதன் விடியற்காலை வரை இருந்து முடித்துவிட்டு, உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து, குளித்துவிட்டு, 9 மணி அளவில் கிளம்பி ஒரு வேனில் திருச்சிக்குச் சென்றோம். ஜானவாசத்தில் கலந்துகொண்டு, மறுநாள் திருமணம் முடிந்து, வெள்ளிக்கிழமையன்று சென்னை திரும்பிவிட்டோம். சனிக்கிழமையிலிருந்து மீண்டும் அலுவலகம் போகத் தொடங்கிவிட்டேன். அடுத்த செவ்வாய்க் கிழமை இரவுக்குள் அடுத்த புத்தகத்தை முடிக்க வேண்டுமே!

எடிட்டோரியலில் சாவி அவர்கள் தவிர, நான் மட்டுமே இருந்ததால், என் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்க முடியவில்லை. இதைப் பற்றி அடிக்கடி என்னிடம் சொல்லி வருத்தப்படுவார் சாவி.

உறவினர்கள், நண்பர்கள் என புதுமணத் தம்பதிகளான எங்களை விருந்துக்கு அழைக்கும் ஒவ்வொருவர் வீட்டுக்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையையும் ஒதுக்கிப் போய் வந்தோம். அப்படி ஒருமுறை சாவி பத்திரிகையில் விளம்பரத் துறை மேலாளராக இருந்த சீனிவாசக மணி (இப்போது ‘கோபுர தரிசனம்’ என்னும் ஆன்மிக மாத இதழை 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்) அழைப்பின் பேரில் அவர் இல்லத்துக்கும் சென்றோம். அந்தச் சமயத்தில்தான் ஒரு பெரிய விபத்தில் சிக்கி, என் மனைவியின் முகம் அடிபட்டுக் கிழிந்து, தையல் போட்டு... அது ஒரு பெரிய பயங்கரம்! அது பற்றி முன்பே விரிவாகப் பதிவிட்டுள்ளேன்.

விபத்து நடந்ததற்கு மறுநாள், திங்கள் கிழமையன்று நான் வழக்கம்போல் சாவி அலுவலகத்துக்குப் போனேன் - சற்றே தாமதமாக! சாவி அவர்கள் சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு மேல் அலுவலகம் இயங்கும் இடத்துக்கு வந்தார் (சாவி சாரின் வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த சமயம் அது). “என்ன ரவி இன்னிக்கு லேட்? வழக்கமா பத்து மணிக்குள்ளே வந்துடுவியே?” என்றார். “நேத்திக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் சார்...” என்று தொடங்கி, நடந்ததை விவரித்தேன். “அடடா! இப்போ எப்படி இருக்கு உன் வொய்ஃபுக்கு?” என்றார். “கீழே விழுந்ததுல கருங்கல் குத்தி, தாடையில வெட்டியிருக்கு. முகவாய்க்கட்டை கிட்டே ஒரு வெட்டு. தையல் போட்டிருக்கு சார்! சரியாக எப்படியும் ஒரு மாசமாவது ஆகும்னு தோணுது!” என்றேன். “த்சொ... த்சொ! கவலைப்படாதே ரவி! திருஷ்டி கழிஞ்சுதுன்னு நினைச்சுக்கோ! சரியாயிடும்” என்று ஆறுதல் சொல்லிவிட்டுக் கொஞ்ச நேரம் இருந்து, பத்திரிகை வேலைகளைக் கவனித்துவிட்டுத் தன் வீட்டுக்குள் போய்விட்டார்.

அதன்பின் அவர் அலுவலகத்துக்கு வரவில்லை. மறுநாள் செவ்வாய்தான் இதழ் முடிப்பதால், எனக்கும் அன்றைக்கு அவரிடத்தில் வேலை இருக்கவில்லை. நான் வழக்கம்போல் என் வேலைகளை மாலை 6 மணி வரையில் பார்த்துவிட்டு, 7 மணி சுமாருக்கு சாவி சாரிடம் போய்ச் சொல்லிவிட்டு, மாம்பலத்தில் உள்ள என் தங்கை வீட்டுக்குக் கிளம்பிப் போனேன். (விபத்துக்குப் பின்பு தங்கை வீட்டுக்குத்தான் மனைவியை அழைத்து வந்திருந்தேன்.)

வீட்டுக்குள் நுழைந்ததுமே ஆப்பிள் பழங்கள், ஹார்லிக்ஸ் பாட்டில் எனக் கண்ணில் தட்டுப்பட்டன. “யார் வந்துட்டுப் போனாங்க?” என்று என் தங்கையிடம் விசாரித்தேன். “என்னண்ணா, தெரிஞ்சுதான் கேக்கறியா? தெரியாம கேக்கறியா?” என்று கேட்டாள். “நான் இப்பத்தானே ஆபீஸ்லேர்ந்து வரேன்! எனக்கெப்படித் தெரியும்? யார் வந்தது? சொல்லு” என்றேன். “சாவி மாமா, மாமி ரெண்டு பேரும் வந்திருந்தாங்க. மத்தியானம் 3 மணிக்கு வந்துட்டு, இவ்வளவு நேரம் இருந்துட்டு, இப்பத்தான் ஒரு அரை மணி முன்னே கிளம்பிப் போறாங்க! ஏன், அவர் உன் கிட்டே சொல்லலியா இங்கே வரப் போறது பத்தி?” என்று கேட்டாள் தங்கை.

சொல்லவில்லை. என் மனைவியின் உடல் காயங்கள் குணமாகிற வரைக்கும் மாம்பலத்தில் உள்ள என் தங்கை வீட்டில்தான் தங்கியிருக்கப் போகிறேன் என்பதைப் பேச்சு வாக்கில் சாவி சாரிடம் சொல்லியிருந்தேன். மற்றபடி மாம்பலம் முகவரியை அவருக்குச் சொல்லவில்லை. யாரிடம் விசாரித்தார், எப்போது கிளம்பிப் போனார், எப்போது திரும்பி வந்தார் என்று எதுவும் எனக்குத் தெரியாது. அவரிடம் விடைபெற்றுக் கிளம்பி வருகிறபோதுகூட, “உன் வீட்டுக்குப் போயிட்டு வந்தோம்” என்று சாவி சாரோ, அவரின் மனைவியோ என்னிடம் சொல்லவில்லை. சந்தடியில்லாமல் போய்விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

பத்திரிகையுலகில் அவர் ஒரு பெரிய ஜாம்பவான். அவரைச் சந்திக்கப் பெரிய பெரிய பிரமுகர்கள் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு, வந்து போவது எனக்குத் தெரியும். திரைப்பட இயக்குநர்கள் கே.பாலசந்தர், மகேந்திரன் மற்றும் மனோரமா, நல்லி குப்புசாமி, பாலு ஜுவல்லர்ஸ் அதிபர் பாலசுப்ரமணியம், தூர்தர்ஷன் இயக்குநர் ஆர்.நடராஜன், வாணி ஜெயராம், வைரமுத்து எனப் பலர் வந்து போயிருக்கிறார்கள். கலைஞரே நாலைந்து முறை சாவியின் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார். அத்தனைப் பெரியவரான சாவி, தன்னிடம் பணிபுரிகிற ஓர் ஊழியன் வீட்டுக்குச் சத்தமே செய்யாமல் போய், அடிபட்டுக் கிடந்த அவன் மனைவிக்கு தைரியமும் ஆறுதலும் சொல்லி, அங்கே உபசரிக்கப்பட்ட காபியை மறுக்காமல் வாங்கிக் குடித்து, அவர் உட்காரப் போடப்பட்ட நைந்தும் கிழிந்தும் போன ஈஸிசேரில் எந்த பந்தாவும் இல்லாமல் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் படுத்திருந்து, ஏதோ குடும்ப உறவினர் போன்று அவனது குடும்பத்தாரிடம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுத் திரும்பியது என்ன சாமான்யமான விஷயமா?!

சாவி அவர்களின் மனைவி ஜானகி அம்மையார் என் மனைவியின் அருகில் உட்கார்ந்து இதமான வார்த்தைகள் சொல்லி, “காயங்கள் சீக்கிரம் ஆறிவிடும். தடங்கள் எதுவும் இருக்காது, பயப்படாதே!” என்று தலையை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

சாவியும் அவர் மனைவியும் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததுமே என் தங்கைக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. பதறிப் போய்விட்டிருக்கிறார்கள். ஆனாலும், சாவி சார் சிரித்துக் கொண்டே, “ஒன்றும் பதறாதீர்கள். அவசரமே இல்லை. நான் ஒரு மணி நேரம் இருந்துவிட்டே போகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சாவகாசமாக அவர்களுடன் பேசிவிட்டே கிளம்பியிருக்கிறார். ஆனால், அவரும் அவர் மனைவியும் என் வீட்டுக்குப் போனது பற்றியோ, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தது பற்றியோ என்னிடத்தில் சொல்லவில்லை. அன்றைக்கு மட்டுமல்ல, அடுத்த நாள் அவரைச் சந்தித்தபோதும் சொல்லவில்லை.

அதன்பின் அவரிடம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். கடைசி வரையிலும் அவர் இது சம்பந்தமாக என்னிடம் பேசவில்லை. நானும், “வீட்டுக்கு வந்திருந்ததாகக் கேள்விப்பட்டேன் சார்! ரொம்ப நன்றி!” என்று சொல்லவில்லை.

அப்படிச் சொல்லியிருக்க வேண்டுமா, அதுதான் முறையா, சொல்லாமல் விட்டது எனக்கு நன்றி உணர்வு இல்லை என்பதைக் காட்டுகிறதா, சாவி சார் அதை எதிர்பார்த்திருப்பாரா, நான் கண்டுகொள்ளாமல் விட்டதில் அவர் என்னைப் பற்றி என்ன எண்ணியிருப்பார் என்கிற கேள்விகளெல்லாம் எனக்கு அப்போது தோன்றவே இல்லை. மனசு பூராவும் நெகிழ்ந்திருந்தது மட்டும் நிஜம். மற்றபடி அதை வெளிப்படுத்தத் தெரியவில்லை.

வெளிச் சம்பிரதாய நன்றி நவிலல்களைத் தாண்டி, இந்தச் சாதாரண ரவிபிரகாஷை அவனது கோப தாபங்களோடு, பலம் மற்றும் பலவீனங்களோடு அவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தார். அவன் மேல் அக்கறையும் அன்பும் கொண்டிருந்தார். அதனால்தான், பின்னாளில் அவன் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்து, ஆறு மாதங்களில் நிரந்தர ஊழியனாக ஆன பின்பு, சாவி அவர்களின் சதாபிஷேகத்தில் கலந்து கொண்டபோது, அவர் அவனை அன்புடன் அருகில் அழைத்து முதல் கேள்வியாக இப்படிக் கேட்டார்...

“அவா உன்னை நல்லா வெச்சுண்டிருக்காளா?”

திருமணம் செய்துகொடுத்த மகளைச் சிறிது காலத்துக்குப் பின்பு பார்க்கும் ஒரு தகப்பன் கேட்கும் கேள்வியல்லவா இது!
.

17 comments:

என்ன ஒருஅன்பு! அதை வெளிப்படுத்திய விதம் என்ன ஒரு பண்பு! விவரமும் வார்த்தைகளும் அங்கே தேவையா என்ன? அவருக்கு அது தெரியும். உங்களுக்கு அது புரியும். அப்புறம் என்ன? அதுதான் அந்த மௌனம்! அதன் அழகே தனி! அதை நான் ரசித்தேன்.
 
உங்களது ஒவ்வோர் இடுகையும் மிகச் சிறப்பாக உள்ளது.
பாராட்டிப் பாராட்டி போர் அடிக்கிறது.
அருமையான் பதிவு.
 
மேன் மக்கள் மேன் மக்களே..:)
 
Nice post. I enjoyed it Ravi.
 
சாவி ரொம்பக் கோபக்காரர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது உண்மைதான் போலும்!
 
/ அதன்பின் அவரிடம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். கடைசி வரையிலும் அவர் இது சம்பந்தமாக என்னிடம் பேசவில்லை. நானும், “வீட்டுக்கு வந்திருந்ததாகக் கேள்விப்பட்டேன் சார்! ரொம்ப நன்றி!” என்று சொல்லவில்லை. /

பெருமிதம் கொள்ளும் போது, 'நன்றி' எனும் வார்த்தையும் சிறியதுதான்.

/ “அவா உன்னை நல்லா வெச்சுண்டிருக்காளா?”.... /


மிக முத்தாய்ப்பான கேள்வி... ஆழ்ந்த கரிசனமான கேள்வி ...
 
அவரைப் பற்றி நான் ஒரு பதிவிட நினைத்திருந்தேன் அதற்குள் நீங்கள் போட்டுவிட்டீர்கள். அவரின் அன்பை பற்றி மிக அருமையாக விளக்கி அவருக்கு மேலும் புகழ் சேர்த்திருக்கிறீர்கள். மிக நல்ல பதிவு.

ரேகா ராகவன்.
 
படிக்கும்போதே மனசு நெகிழ்கிறது.. ”சாவி ” வளர்த்த ‘எழுத்தாளர்கள்’ லிஸ்ட்டில் நானும் உண்டு .. அந்த வகையில் இன்னும் கூடுதலாகவே பெருமிதம் எனக்கும் இதைப் படிக்கும்போது
 
அவரைப் பற்றிய பிரமிப்பு எப்போதுமே எனக்குண்டு. அது இன்னும் கூடியிருக்கிறது இந்த இடுகையைக் கண்டு.

சாவி-யில் கதை வரவேண்டுமென்பது என் வாழ்நாள் லட்சியமாக இருந்து, ஒரு சந்தர்ப்பத்தில் நடந்தது!

இதைப் படிக்கும்போது நான் எனக்கு வாய்த்த முதலாளிகளை நினைத்துக் கொண்டேன்..

ம்ஹ்ம்..
 
* நன்றி கே.பி.ஜனார்த்தனன்!

* லதானந்த்! பாராட்ட போரடிக்கிறது என்றால் பரவாயில்லை; என் பதிவு போரடிக்கிறது என்றால்தான் கஷ்டம். அப்படியிருப்பின் தக்க ஆலோசனைகளைச் சொல்லுங்கள்.

* கேபிள் சங்கர்! நச்சென்று ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்!

* Thank you Mr.Krishna Prabhu!

* அசரீரி! புதிய வரவான தங்களை அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் சொன்ன இரண்டு வரிகளுமே முற்றிலும் உண்மை!

* பொன்னியின் செல்வன்! இந்தப் பதிவுக்கான கடைசி வரியில் சரியான வார்த்தை வராமல் திண்டாடினேன். அக்கறையான கேள்வி, ஆதங்கம் நிரம்பிய கேள்வி, அனுசரணையான கேள்வி என்று என்னென்னவோ யோசித்துப் பார்த்து, எதுவும் சரியாக இல்லாமல் விட்டுவிட்டேன். நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் சொன்னதுதான் சரியான, கச்சிதமான, மிகப் பொருத்தமான வார்த்தை. அது ஆழ்ந்த கரிசனமான கேள்விதான்! வெல்டன் பொன்னியின் செல்வன்! நன்றி!

* சாவி அவர்களைப் பற்றி அவசியம் பதிவிடுங்கள். ஆர்வமாக இருக்கிறேன்.

* நன்றி ரிஷபன்!

* பரிசல்காரன்... சாவியில் உங்கள் கதை வெளியாகியிருக்கிறதா! எந்த ஆண்டு, என்ன தலைப்பில்? அறிய ஆவலாக இருக்கிறேன்.
 
வழக்கம்போல் நெகிழ்ச்சியான இடுகை. சாவி சாரை குறித்து பேசவும், எழுதவும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன...

அவரால் பத்திரிகையாளராக மாறியவன் - அவரிடம் திட்டு வாங்கி தொழிலை கற்றுக் கொண்டு வளர்ந்தவன் என்ற முறையில் இந்த இடுகையை இன்னும் நெருக்கமாக உணர முடிகிறது...

தோழமையுடன்
பைத்தியக்காரன்
 
* பைத்தியக்காரன்! (ஸாரி, தங்கள் பெயர் தெரியாததால் இதையே குறிப்பிட வேண்டியதாயிற்று! பித்தன், பைத்தியக்காரன் என்று சிவனுக்கும் பெயர் உண்டு!) சாவியிடம் திட்டு வாங்கி, அவரால் பத்திரிகையாளராக ஆனவர் என்று உங்கள் குறிப்பைப் பார்த்ததும் உங்களைப் பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன். முடிந்தால் என் இ-மெயிலுக்குத் தொடர்பு கொள்ளுங்களேன்!
 
நானும் பெரியவர்களை பாராட்டவும், அவர்களுக்கு நன்றி சொல்லவும் கூச்சப்படுபவனாக இருந்திருக்கிறேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாவி சாரை சந்தித்த போது பேச்சு மூச்சில்லாமல் நின்றிருந்த கணத்தை ஞாபகப் படுத்தியது இந்தக் கட்டுரை.
 
‘நன்றி’ சொல்லக் கூச்சப்படுவது என்பது வேறில்லை சத்யராஜ்குமார், அவர்களின் உதவிக்கு/அன்புக்கு முன் நாம் எம்மாத்திரம், இதை நன்றி சொல்லித் தீர்க்க முடியுமா என்கிற நம் தயக்கமே ஆகும். உங்கள் பேச்சு மூச்சற்ற நிலை அதைத்தான் காட்டுகிறது.
 
வெளிச் சம்பிரதாய நன்றி நவிலல்களைத் தாண்டி, இந்தச் சாதாரண ரவிபிரகாஷை அவனது கோப தாபங்களோடு, பலம் மற்றும் பலவீனங்களோடு அவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தார். அவன் மேல் அக்கறையும் அன்பும் கொண்டிருந்தார். அதனால்தான், பின்னாளில் அவன் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்து, ஆறு மாதங்களில் நிரந்தர ஊழியனாக ஆன பின்பு, சாவி அவர்களின் சதாபிஷேகத்தில் கலந்து கொண்டபோது, அவர் அவனை அன்புடன் அருகில் அழைத்து முதல் கேள்வியாக இப்படிக் கேட்டார்...

“அவா உன்னை நல்லா வெச்சுண்டிருக்காளா?”

திருமணம் செய்துகொடுத்த மகளைச் சிறிது காலத்துக்குப் பின்பு பார்க்கும் ஒரு தகப்பன் கேட்கும் கேள்வியல்லவா இது!" ------------நெகிழ வைத்த வரிகள். அதிலும் கடைசியில் உள்ள இரண்டு வரிகளும் ஆத்மார்ந்த உன்னத மனித உறவின் வெளிப்பாடு. பதிவு அருமை.
 
முதல் வருகையின்போதே விரிவான பின்னூட்டத்துடன் வந்து மனதை நெகிழ்த்திவிட்டீர்கள். நன்றி சித்ரா!
 
நெகிழ்ச்சியாக இருக்கிறது.