உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, November 11, 2009

சினிமா ஸ்டில்லுக்கு ஒரு சிறுகதை!

த்திரிகை வேலையில் சேருவதற்கு முன்பு நிறைய கதைகள் எழுத வேண்டும், எல்லாப் பத்திரிகைகளிலும் என் பெயர் வர வேண்டும் என்கிற ஆசை இருந்தது. எழுதினேன். கல்கி, விகடன், சாவி, தினமணிகதிர், குங்குமம், அமுதசுரபி, அலிபாபா, மங்களம் என பல பத்திரிகைகளில் என் சிறுகதைகள் வெளியாகின.

1986-ல் சாவியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்த பின்பு, அதுவும் சேர்ந்த இரண்டு ஆண்டுகளிலேயே அதன் முழுப் பொறுப்பையும் என் வசம் ஆசிரியர் சாவி ஒப்படைத்த பின்பு, நானே கதை எழுதி, நானே அதை ‘சாவி’யில் வெளியிட்டு விடலாம் என, ஒரு கதை அச்சில் வருவது அத்தனை சுலபமாக ஆன பிறகு, கதை எழுதுவதிலும், பத்திரிகையில் என் பெயர் பார்த்துப் பரவசப்படுவதிலும் எனக்கிருந்த ஆர்வம் விட்டுப் போயிற்று.

விகடனில் சேர்ந்த பின்பு ஆரம்ப நாட்களில் சில கதைகள் எழுதினேன். ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஊக்குவித்ததன்பேரில் ‘ஏடாகூடக் கதைகள்’ எழுதினேன். பின்பு, மிக அவசியமாக இருந்தாலொழிய நான் சிறுகதைகள் எழுதுவதில்லை. கதைகள் படிப்பதில் உள்ள ஆர்வம், எழுதுவதில் எனக்கு விட்டுப் போயிற்று.

இன்றைக்கு எழுதக்கூடிய பல இளம் எழுத்தாளர்கள் மிகவும் சுவாரசியமாகவே எழுதுகிறார்கள். அவர்களைப் படிக்கும்போதும், ஏதேனும் ஒரு நல்ல சிறுகதையை வாசிக்கும்போதும், நானும் எழுத வேண்டும் என்கிற ஒரு வேகம் எனக்குள் எழுவதுண்டு. உடனடியாக உட்கார்ந்து எழுதினால் உண்டு. அப்போது பார்த்து வேறு ஏதேனும் முக்கிய வேலை வந்தாலோ, கணினி தகராறு செய்தாலோ, கரன்ட் கட் ஆனாலோ, உடல் நிலை மந்தமாக இருந்தாலோ... கதை எழுதும் ஆர்வமும் வேகமும் குறைந்துவிடுகிறது. கெடுபிடியாக நிர்பந்தித்து என்னை எழுதச் சொன்னாலொழிய, எழுதவே தோன்றுவதில்லை எனக்கு.

ஒருமுறை திரு.கண்ணன் சில விஷுவல் டேஸ்ட் புகைப்படங்களைக் கொடுத்து, அவற்றுக்கு ஒரு பக்கக் கதைகள் எழுதித் தரும்படி சொன்னார். மறுநாளே வேண்டும் என்று கேட்டார். ஒரே ராத்திரியில் பத்து கதைகள் எழுதினேன். (நிர்பந்தம்!) அவற்றிலிருந்து செல்வமே, தண்ணீர் தண்ணீர், உயர்ந்தவன், வீரன், வசீகரா, இரண்டாவது காதல், மாடல் என ஏழு கதைகள் அந்த வார விகடனில், ஒரு பக்கம் புகைப்படம், எதிர்ப் பக்கம் கதை என்கிற முறையில் வெளியாகின.

அவற்றில் ‘செல்வமே’ கதையை மட்டும் இங்கே தருகிறேன். ஏழிலேயே மிகச் சிறப்பான கதை அதுதான் என்பது காரணம் அல்ல; அது என் எண்ணமும் அல்ல! உண்மையில், மற்ற ஆறு கதைகளும்கூட சிறப்பானவையா, அல்லது அனைத்துமே சுமார் ரகமா, அறுவையா என்பதெல்லாம் வாசகர்களின் ரசனைக்கு உரியவை. கண்ணன் எழுதச் சொன்னார்; எழுதினேன். அவ்வளவுதான்! அவர் தேர்ந்தெடுத்த ஏழு கதைகளில் இதை மட்டும் இங்கே கொடுப்பதற்குக் காரணம், இதன் சுத்தமான தமிழ் நடை. (சொல்ல முடியாது; எனக்கே தெரியாமல் இதில் அந்நிய பாஷைகளும் கலந்திருக்கலாம்!)

செல்வமே...

‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்னும் திரைப்பட ஸ்டில் அது. பாரம்பரிய நகைகள் அணிந்த ஜமீன்தார் குடும்பத்துப் பெண்மணி போன்ற தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன் தன் பத்து வயது மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வருகிறார். ஆசிரியருடன் ஏதோ பேசுகிறார். அவர்களின் பணியாள் போன்று ஒருவர் சற்று ஒதுங்கி நிற்கிறார். அந்த ஸ்டில்லில் உள்ள காட்சி இதுதான்!

இனி கதை...
திருமகளே பூதலத்தில் கால் பதித்து நடந்து வந்தாற்போன்று அந்தப் பெண்ணரசி தன் மகனைக் கைப்பிடித்து அழைத்து வந்தாள்.

“ஐயா! தங்களின் கற்பிக்கும் ஆற்றல் குறித்து ஆன்றோரும் சான்றோரும் ஏன்றோரும் கூறக் கேட்டுப் பெரிதும் உவகை கொண்டுள்ளனர் இந்த மைந்தனை ஈன்றோர். எனவே, தம் புத்திரனை உங்கள் பள்ளியில் சேர்த்துத் தமிழ் பயிற்றுவிக்க விரும்புகிறார் எம்பிராட்டி. ஆவன செய்வீர்!” என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொண்டான் உடன் வந்த ஏவலாள்.

“நல்லது. அவ்வண்ணமே ஆகட்டும்! அதற்கு முன், நான் இச்சிறுவனின் கல்வித் தரத்தைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன்” என்ற உபாத்தியாயர் சிறுவன் பக்கம் திரும்பி, “இளையோனே! ஐம்பெருங் காப்பியங்கள் எவை?” என வினவினார்.

“சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி ஆகியன ஐயா!” எனப் பணிவுடன் விடை பகன்றான் பாலகன்.

“நன்று பகன்றனை! ஐம்புல நுகர்ச்சியினால் மரிப்பன யாவை?” என அடுத்த வினா வந்து விழுந்தது.

“சுவையாலிறப்பது மீன்; நாற்றத்தால் வண்டும், பரிசத்தால் ஆனையும், ஓசையால் அசுணமும், ஒளியால் விட்டிலும் ஐயா!”

“நல்லது. திருவாசகத்திலிருந்து ஒரு செய்யுளைச் சொல்வாயாக!”

அடுத்த மணித்துளி தொடங்குவதற்குள்ளாக அந்தச் சிறுவன் தன் இனிய குரலெடுத்துப் பாடத் தொடங்கினான்.

“அடடா! என்னே இனிமை... என்னே இனிமை! காதினில் தேன்மழை பெய்துவிட்டாய். உன்னைப் பெற்றதன் மூலம் பெரும்பேறு பெற்றுவிட்டனர் உந்தன் பெற்றோர். உன்னை மாணாக்கனாக அடைவதன் மூலம் இன்று நானும் இறும்பூது எய்துகிறேன். இறுதியாக ஒரு கேள்வி. ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்னும் குறட்பா எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறதென்று சொல் பார்க்கலாம்?”

“அறிவுடைமை என்னும் அதிகாரத்தின் கீழ் வருகிறது ஐயா!” என நவின்ற அச் சிறுவன் தொடர்ந்து மொழியலானான்...

“இதன் ஈற்றடியை மாற்றாமல் இதே போன்று வேறொரு குறட்பாவும் உள்ளது ஐயா!”

உபாத்தியாயர் உள்ளபடியே சிலிர்த்துப் போனார். “என்னது! ‘அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்று முடிகிற இன்னொரு குறட்பாவும் உள்ளதா?! அதை நான் அறிகிலேனே! எங்கே, விளம்பு?!” என்று சொல்லவொண்ணா தாகத்துடன் வினவினார்.

“ஆமாம் ஐயா! அக் குறள் ‘மெய்யுணர்தல்’ எனும் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்பதே அஃது!”

“அம்மம்ம..! என் வியப்பை மேன்மேலும் மிகுதியாக்கிக் கொண்டே போகிறாய்!” என பூரிப்பால் விழிகளை விரித்த உபாத்தியாயர், அருகில் நின்ற அச் சிறுவனின் தாயார் பக்கம் திரும்பி, “இப்படி ஒரு நல்முத்தினைப் புத்திரனாகப் பெற தங்கள் மணி வயிறு மா தவம் செய்திருக்கிறது. அது இருக்கட்டும் அம்மா! தாங்கள் இங்கு வந்ததிலிருந்து ஒரு வார்த்தையும் பேசாமல் குறுநகை பூத்தபடியே மோனத் தவம் பயில்கின்றீரே, ஏனம்மா?” என்று உசாவினார்.

இடைமறித்த ஏவலாள் பகன்றான்... “ஐயன்மீர்! பிறவியிலிருந்தே செவிப் புலனை இழந்திருந்ததால், பேசும் திறனையும் இழந்துவிட்ட பரிதாபத்துக்குரியவர் எம்பிராட்டி!”

***

2004-ல் வெளியான கதை இது. இதற்குச் ‘செல்வமே’ என்று தலைப்பிட்டிருக்கிறேன். எதற்காக இந்தத் தலைப்பை வைத்தேன் என்று தெரியவில்லை. கதை எழுதிய சமயத்தில் இந்தத் தலைப்பு வைக்க ஏதேனும் காரணம் இருந்திருக்க வேண்டும். யோசித்தால் அகப்படக்கூடும்!
.
.

11 comments:

கல்விச் செல்வத்துக்கு ஈடு இணை ஏது? அதனால் செல்வத்தைக்காட்டிலும் உயர்ந்த செல்வமே என்று சிறுவனின் தாயார் அச் சிறுவனை நினைத்ததினால் இந்த தலைப்பு வைத்திருப்பீர்களோ? மிக நல்ல திருப்பத்துடன் அருமையான கதை.

ரேகா ராகவன்.
 
//எதற்காக இந்தத் தலைப்பை வைத்தேன் என்று தெரியவில்லை. //

'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்ற குறள் காரணமோ?
 
//‘கனவு மெய்ப்பட வேண்டும்’//

இந்தப் படம் புற்று நோயால் இறந்த இசையமைப்பாளர் மகேஷ் (நம்மவர் புகழ்) அவர்களின் கடைசி படம். அதில் ரம்யா கிருஷ்ணன் பாடிய 'தாழம்பூவே வாடா' நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று.
 
அருமையான பதிவு சார்.. பதிவில் உள்ள தூய தமிழ் வார்த்தைகள் சிலவற்றுக்கு, அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை கிளப்பி விட்டது. அர்த்தத்தை கேட்டால், அப்புறம் அது பதிவை விட பெரிதாகி விடும் :-).

சார், ‘செல்வமே’... பெயர் காரணம் இதுவோ ? :
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் !! ஆகவே, குறு நகையின் மௌன அர்த்தம் - 'செல்வமே'...

உண்மையான பெயர் காரணம் யோசித்து அகப்பட்டவுடன்; அப்படி அகப்பட்டது எழுதும் போதும் அகப்பட்டால் இயன்றால் எழுதவும் சார் !
 
புனைந்த நும் கதையில் நனைந்ததெம் நெஞ்சம்.
-- கே.பி.ஜனா
 
நல்லா இருந்தது கதை.
 
இரண்டாம் ரா.கி. ரங்கராஜனே! வாழ்த்துக்கள்!
அதெப்படி அவ்வளவு எளிமையாய் இருக்கிறீர்கள்?
விகடன் is gifted!
 
இந்தகாலத்துலதான் ஸ்கூல் அட்மிஷன்ல இன்டர்வியூன்னுல்ல நினைச்சேன்

:))

கதை அருமை.
 
‘யார் யார் வாய்க் கேட்பினும்’ என்பதற்குப் பதிலாக ‘எத்தன்மைத்தாயினும்’ என்று மாற்றினால் வேறு குறள் கிடைக்கிறது என்பது இந்தக் கதை மூலம் நான் அறிந்துகொண்ட புதிய தகவல்.
 
ரேகா ராகவன்: இருக்கலாம்!

SRK: இதுவும் கச்சிதமா பொருந்துதே!

SRK: அருமையான தகவல். தாங்கள் கொடுத்த லின்க்கால் பாட்டையும் கேட்டு மகிழ்ந்தேன். பழைய பராசக்தி, ரத்தக்கண்ணீர் கால பாட்டு மாதிரி மனதை உருக்குகிற பாட்டு!

பொன்னியின் செல்வன்: இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. \\உண்மையான பெயர் காரணம் யோசித்து அகப்பட்டவுடன்; அப்படி அகப்பட்டது எழுதும் போதும் அகப்பட்டால் இயன்றால் எழுதவும்// இதுதான் புரியவில்லை!

கே.பி.ஜனா: கவிதை வரி போல் பாராட்டியிருப்பதற்கு நன்றி!

விக்னேஷ்வரி: பாராட்டுக்கு நன்றி!

லதானந்த்: \\இரண்டாம் ரா.கி. ரங்கராஜனே!// இதெல்லாம் ரொம்ப ஓவருங்க! ரா.கி.ரா. காதுல விழுந்துதுன்னா வருத்தப்படுவாரு!

மங்களூர் சிவா: பாராட்டுக்கு நன்றி!

கிருபாநந்தினி: மகிழ்ச்சி!
 
மொஹமத் ஃபெரோஸ், கே.வடிவேலன், கிருபாநந்தினி, கே.பி.ஜனா, இடுகைமான், அமல்ராஜ், சி.எஸ்.கிருஷ்ணா, கார்த்திக்6, செந்தழல்ரவி ஆகியோர் இந்தப் பதிவுக்கு தமிழிஷ்-ஷில் ஓட்டளித்துத் தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்தியிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!