உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, November 04, 2009

ஒரு ஏடாகூடக் கதை!

ன் ‘ஏடாகூட கதைகள்’ முதல் பதிப்பு முழுக்க விற்றுத் தீர்ந்து, இரண்டாவது பதிப்பு சில மாதங்களுக்கு முன் போடப்பட்டு, ஐந்நூறு பிரதிகளுக்கு மேல் - சரியாகச் சொல்வதானால், 694 பிரதிகள் - விற்றிருக்கும் மகிழ்ச்சியான தகவலை இன்று கேள்விப்பட்டேன்.

விகடனில் முன்பு நான் வாராவாரம் ஒரு ஏடாகூட கதை எழுதி வந்தபோது முதல் வாசகராக அதை ரசித்துப் படித்து, அந்தக் கதையை மேலும் மெருகேற்றுவதற்கான யோசனைகளைச் சொன்னவர் எங்கள் மதிப்புக்குரிய சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். அவர் தற்சமயம் வெளிநாட்டில் இருப்பதால், அவருக்கு என் மானசிக நன்றிகளை உடனடியாகத் தெரிவித்துக் கொண்டேன்.

விகடனில் எழுதிய எட்டு கதைகள் போக, இந்தப் புத்தகத்தில் மேலும் எட்டு கதைகள் எழுதிச் சேர்த்துள்ளேன்.

உயிரெழுத்துக்களே இல்லாத கதை, நம் விருப்பத்துக்கேற்ப வடிவமைத்துக் கொள்ள முடிகிற கதை, ஒரே ஒரு வாக்கியத்தில் அமைந்த முழு நீளக் கதை, வாசகர்களையே துப்புக் கண்டுபிடிக்க வைக்கும் புதுமையான க்ரைம் கதை, பக்கங்கள் மாறிப் போனதால் வந்த விபரீதக் கதை என இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு ஏடாகூடம் செய்திருக்கிறேன்.

புத்தகத்துக்காக மேலும் எட்டு கதைகளை நான் தயார் செய்துகொண்டு இருந்தபோதுதான், மதிப்புக்குரிய எழுத்தாள நண்பர் புஷ்பாதங்கதுரை அவர்கள் என்னை ஒரு புதுமையான கதை எழுத முடியுமா என முயற்சி செய்யும்படி சொன்னார். அதாவது, வினைச் சொற்களே இல்லாத கதை.

“எப்படி சார் அது போல எழுத முடியும்? சாத்தியமே இல்லையே! வினைச் சொல் இல்லாமல் வாக்கியம் எப்படி முழுமை அடையும்?” என்றேன்.

“முடியும். ஆங்கிலத்தில் ‘வெர்ப்’ இல்லாமல் அப்படி ஒரு கதை வந்திருக்கிறது. நான் படித்திருக்கிறேன். உதாரணமாக ‘என் பெயர் ரவி’. இதில் வினைச் சொல் நேரடியாக இல்லை. மறைந்திருக்கிறது. ‘என் சொந்த ஊர் விழுப்புரம்’. ‘இப்படிச் சில வாக்கியங்கள் எழுதலாம். முழுக் கதையையும் எழுத முடியுமா’ என்று யோசிக்காதே! முயன்று பார். உன்னால் முடியும்” என்று ஊக்குவித்தார்.

முயன்றேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். வினைச் சொற்களே இல்லாமல், புத்தகத்தில் ஆறு பக்க அளவில் ஒரு முழுமையான கதையை எழுதிவிட்டேன். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளிலேயே என்னை மிகவும் சிரமப்படுத்திய கதை அது. படிப்பவர்களை நிச்சயம் சிரமப்படுத்தாது.

பொதுவாக, நன்கு விற்பனையாகிக்கொண்டு இருக்கும் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதையை இங்கே வலைப்பூவில் வெளியிடுவது சரியில்லைதான். என்றாலும், இன்றைய எனது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள மிகச் சிறிய கதையை இங்கே பதிவிடுகிறேன்.

ப்ரியாவின் கடிதம்!

பொன் கிடைத்தாலும், கிடைக்காத ஒரு புதன் கிழமை காலையில்தான் ப்ரியதர்ஷினி காணாமல் போனாள். ஆனால், அந்த விஷயம் அவளின் பெற்றோருக்கு, அன்று சாயந்திரத்துக்கு மேல்தான் தெரிய வந்தது.

எப்போதும்போல் ப்ரியா காலையில் கம்ப்யூட்டர் கிளாஸுக்குக் கிளம்பிப் போனாள். மதியம் 12 மணிக்கு மேல்தான், அவள் இன்னும் வீடு திரும்பாதது செண்பகாவுக்கு உறைத்தது. கணவரின் ஆபீஸுக்கு போன் போட்டாள்.

“வந்துருவாடி! அவ என்ன குழந்தையா..? எல்லாம் வருவா. யாராவது ஃப்ரெண்ட் வீட்டுக்கு, இல்லேன்னா உன் தங்கை ஒருத்தி இருக்காளே, மாம்பலத்துல, அங்கே போயிட்டு, சாயந்திரத்துக்கு மேல வராளோ என்னவோ?” என்றார் ஜெயராமன், வேலைக்கு நடுவில் அசுவாரசியமாக.

ப்ரியதர்ஷினியின் அறைக்குள் போய், என்ன தேடுகிறோம் என்றே தெரியாமல் குத்துமதிப்பாக எதையோ தேடிக்கொண்டு இருந்தபோதுதான், செண்பகாவின் கையில் ‘அது’ கிடைத்தது. ப்ரியதர்ஷினி பெயரில், கம்ப்யூட்டர் கிளாஸ் முகவரிக்கு வந்திருந்த ஒரு கடிதத்தின் கவர் அது. குப்பைத் தொட்டியில் சுருண்டு கிடந்த அதை எடுத்து மேஜை மேல் வைத்து நீவிப் பார்த்தாள் செண்பகா.

ஃப்ரம் அட்ரஸ், புரிந்தும் புரியாத கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. எழுதினவன் பெயர் விக்ரம் என்பதும், வில்லிவாக்கத்திலிருந்து எழுதியிருக்கிறான் என்பதும் மட்டும் செண்பகாவுக்குப் புரிந்தது.

திக்... திக்... திக்கென்று கடிகார முள் நகர, ஒருவாறு மாலை ஏழு மணி ஆயிற்று. கணவர் வீடு திரும்பியதும் காபி தந்துவிட்டு, “நம்ம ப்ரியா இன்னும் வரலைங்க. எனக்கென்னவோ...” என்று இழுத்தாள். “யாரோ விக்ரம்னு ஒருத்தன் அவ பேருக்கு ஒரு லெட்டர் போட்டிருக்கான்போல. கவர் மட்டும் கிடந்தது. அந்த அட்ரஸ்ல வேணா போய் விசாரிச்சுப் பார்ப்பமா?” என்று நீட்டினாள்.

உடனே அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் ஜெயராமன்.

“ஓ... அந்தப் பொண்ணோட பேரண்ட்ஸ்தானா நீங்க?” என்றார், உதட்டில் பைப்புடன், மீசையில்லாத பிரகாஷ்ராஜ் ஜாடையில் இருந்த விக்ரமின் அப்பா வெங்கட்ராமன்.

“என் பொண்ணை உங்களுக்குத் தெரியுமா?”

“விக்ரம் சொல்லியிருக்கான். உங்க மகளை அவன் இழுத்துக்கிட்டு ஓடியிருப்பான்னு நினைக்கிறீங்களா மிஸ்டர் ஜெயராம்?”

“அதில்லை... இருந்தாலும்...”

“என் பையனை நீங்க நம்ப வேண்டாம். உங்க பொண்ணை நம்பலாம் இல்லியா? நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடந்திருக்காதுன்னுதான் எனக்குத் தோணுது. எப்படின்னு கேக்கறீங்களா? ஒன் செகண்ட்..!” என்றவர், மேஜைக்குச் சென்று இழுப்பறையை இழுத்து, ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு வந்தார்.

அது - விக்ரமுக்கு ப்ரியதர்ஷினி எழுதிய பதில் கடிதம்.

“இதைப் படிச்சுப் பாருங்க!”

வாங்கிப் படித்தார் ஜெயராமன்.

ன்புள்ள விக்ரம்,
நலம். நலமறிய அவா.
உங்கள் கடிதம் கிடைத்தது. விவரம் அறிந்தேன்.
உங்கள் முடிவைத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.
வருகிற புதன்கிழமை காலையில்
கம்ப்யூட்டர் கிளாஸுக்குப் போவதுபோல் கிளம்பி
ஒன்பது மணி சுமாருக்கு பூக்கடை பஸ் ஸ்டாண்டில்
நுழைவாயிலருகே உள்ள பத்மினி பட்டாணிக்கடை அருகில்
என்னைக் காத்திருக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.
தேவையான துணிமணிகள், பணம் இவற்றுடன்
நீங்களும் சரியாக அதே நேரத்துக்கு வந்துவிடுவீர்கள் என்றும்,
அங்கிருந்து பஸ் பிடித்து, யாருக்கும் தெரியாமல்
நாம் இருவரும் உடனே பெங்களூரு சென்றுவிடலாம் என்றும்,
நாம் தங்குவதற்கென்று முன்னேற்பாடாக
ஏற்கெனவே அங்கு ஒரு வீடு வாடகைக்குப் பேசி வைத்திருப்பதாகவும்
அத்துடன், இதற்காக நீங்கள் முன்பே உங்கள்
வேலையையும் அங்கு டிரான்ஸ்ஃபர் செய்துகொண்டு விட்டதாகவும்
இன்னும் இது தொடர்பாக
நீங்கள் எழுதியிருந்தவற்றைப் படித்தேன்.
இதற்கு நான் எப்படி உடன்படுவேன் என்று நம்பினீர்கள், விக்ரம்?
நீங்கள் என் உயிர்; நான் உங்கள் உடல்.
அதை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை.
உங்களைப் பிரிந்து என்னால் வாழ முடியும் என்றே தோன்றவில்லை.
உண்மைதான். உங்கள் அறிவுக்கு நான் மயங்கியது நிஜம். ஆனால்,
என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய எனது
நடமாடும் தெய்வங்களாக விளங்கும்
பெற்றோரை மறந்து, உடன்பிறந்தோரை மறந்து உங்களுடன்
மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று தோன்றவில்லை. எனவே, இவர்களுடனே
வாழ்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். ஆமாம்...
என் குடும்ப நலன்தான் எனக்கு முக்கியம்.
உணர்ச்சிவசப்பட்டோ, அவசரப்பட்டோ
சிந்தனைகளைச் சாகடித்தோ திடீரென்று
எடுத்த முடிவல்ல இது. உங்கள் மேல் எனக்குள்ள
காதலைவிட, குடும்பத்தின் மீதுள்ள பாசம் அதிகம். அந்த
ஆழ்ந்த அன்பின் அடிப்படையில்தான் இதை எழுதுகிறேன்.
என்னை மன்னித்துவிடுங்கள். மறந்தும் விடுங்கள்.
உடன் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிடுவோம்.
என்று நீங்கள் அவசரப்பட்டபோதெல்லாம்
இத்தனை நாட்கள் நான் மறுத்து வந்ததற்குக் காரணம்
என் பெற்றோரை மீறி எதுவும் செய்ய விரும்பாததுதான்.
எப்படியாவது என் குடும்பத்தாரிடம் சம்மதம் பெற்றுவிட முடியாதா,
அவர்களின் பரிபூரண ஆசியோடு, மகிழ்ச்சிகரமாக
எல்லோர் திருமணம்போல் நம் திருமணமும் நிகழாதா என்ற
ஏக்கம் எனக்கு நிறையவே உண்டு. ஆனால், இது
நப்பாசைதான். என் ஆசை நிராசையாகிவிட்டது. இனி வேறு வழியில்லை.
தயவுசெய்து என்னை மறந்து விடுங்கள். நானும்
உங்களை மறந்து, பெரியவர்கள் முடிவு செய்யும் வரனை
ஏற்பதென்று தீர்மானித்துவிட்டேன். அவர்களை மீறி உங்களைக்
கணவராக ஏற்க என் மனச்சாட்சி இடம் தரவில்லை.
பெரியவர்களாகப் பார்த்துச் செய்யும் திருமணங்களில்தான்
நமது எதிர்காலம் நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன்.
மீண்டும் சொல்கிறேன், தயவுசெய்து என்னை மறந்துவிடுங்கள்.
அன்புடன், ப்ரியதர்ஷினி.

ஜெயராமன் தம்பதி அந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும், “பார்த்தீங்களா... என் பையனே கூப்பிட்டிருந்தாலும், உங்க பொண்ணு அவனோடு ஓடிப் போகத் தயாராக இல்லை. நான் உங்க பொண்ணை நினைச்சுப் பெருமைப்படறேன் மிஸ்டர் ஜெயராம்!” என்றார் வெங்கட்ராமன்.

கடிதம் ஒரு மன நிறைவைத் தந்தாலும், மீண்டும் ஒருமுறை ப்ரியதர்ஷினியின் கடிதத்தைப் படித்துப் பார்த்தார் ஜெயராமன். ஏதோ நெருடுகிற மாதிரி இருந்தது. மறுபடியும் படித்தார்.

“அடக் கடவுளே!” என்று கத்தினார்.

“என்ன... என்ன..?”

“அவங்க திட்டமிட்டபடி பெங்களூருக்கு ஓடிட்டாங்க!” என்றார்.

“எப்படிச் சொல்றீங்க? உங்க பொண்ணுதான்...”

“நோ..! அவ நம்ம கண்ணுல மண்ணைத் தூவுறதுக்காக லெட்டர்ல ஒரு திரிசமன் பண்ணியிருக்கா. இந்த லெட்டரை நான் சொல்ற விதத்துல மறுபடியும் ஒரு தடவை படிச்சுப் பாருங்க, புரியும்!” என்று அந்தக் கடிதத்தை வெங்கட்ராமனிடமே திரும்பத் தந்தார் ஜெயராமன்.

வாங்கிப் படித்துவிட்டு, “அட, ஆமாம்!” என்று அயர்ந்து போனார் வெங்கட்ராமன்.

(ஓடிப்போனவர்கள் திருமணம் செய்துகொண்டு சில நாட்களுக்குப் பின் தங்கள் பெற்றோர்களைத் தேடி வந்து ஆசி வாங்கியதும், இவர்களும் பெரிய மனது பண்ணி அவர்களை மன்னித்துத் தங்களோடு சேர்த்துக் கொண்டதும் இந்தக் கதைக்குத் தேவையில்லாத விஷயங்கள்.)

ன்ன வாசகர்களே, நீங்களும் மறுபடியும் ஒருமுறை அந்தக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள். ஆனால், ஒரு வரி விட்டு ஒரு வரியாக! அதாவது, முதல் வரிக்கு அடுத்து மூன்றாவது வரி; அடுத்து ஐந்தாவது வரி... இப்படிப் படித்தால், அந்தக் கடிதத்தில் ப்ரியதர்ஷினி செய்திருக்கும் திரிசமன் என்னவென்று தெரியும்.

அது இருக்கட்டும்... அந்தக் கடிதத்தில் ஜெயராமனுக்கு நெருடிய விஷயம் எது? ஒரு முற்றுப் புள்ளிதான்!

‘உடன் பதிவுத் திருமணம் செய்துகொண்டு விடுவோம்.’ என்று முற்றுப் புள்ளியோடு முடிந்த வாக்கியம், ‘என்று நீங்கள் அவசரப்பட்டபோதெல்லாம் என்று தொடர்கிறதே, ஏன்? அதுதான் நெருடல்! இந்த நெருடல் இருந்ததால்தான், அந்தக் கடிதத்தில் உள்ள வரிகளை மீண்டும் படிக்க ஆரம்பித்தார் ஜெயராமன்.
.

17 comments:

சார்... அருமை...உங்களின், இந்த புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி இவற்றை பார்த்து ஏற்கனவே பிரமித்து இருக்கிறேன்.. இதில், இந்த கதையின் திருப்பமே, மத்தியில் உள்ள ஒரு 'புள்ளியில்' ஆரம்பிக்கிறதே !! வாய்ப்பு கிடைக்கும் போது 'ஏடாகூடம்' படித்து விட வேண்டியது தான்...
 
ரெண்டு தடவ படிக்க வெச்சிட்டீங்க. அருமை.

பிரபாகர்.
 
சார்,

நான் ரொம்பவும் ரசிச்சுப் படிச்ச புத்தகம் இது. விற்பனையளவிலும் வெற்றியடைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் :)

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.
 
ப்ரியாவின் கடிதம் ஒரு கிளாசிக் ஏடாகூடக் கதை. மிகவும் ஆர்வத்துடன் படித்தேன். நல்ல நடை. மாத்தி யோசின்னு சொன்னது இந்த கதையில் நன்றாகவே வந்துள்ளது.

ரேகா ராகவன்.
 
வினைச்சொற்கள் இல்லாத கதையை படிக்க ஆர்வமாக இருக்கிறது.
 
போனாள் என்பது இறந்த காலத்தை குறிக்கும் வினைச்சொல் தானே! சரியா தவறா என்று தெரியவில்லை. நீங்களே சொல்லவும்.
 
'பிரியாவின் கடிதம்' படித்தேன். அசத்தல்
என்று சொல்வதற்கு இல்லை
சார். இதில் என்ன விசேஷம் இருக்கிறது
என்று இப்படி எழுதினீர்கள்
என்பது தெரியாமல் குழம்பி
விழிக்கிறேன். இதுபோல் கதைகளை
மீண்டும் படித்தால் அபாரமாக
தலை சுற்றிவிடும் அபாயம்
இருப்பதால் உடனே போடுகிறேன்
இந்த கமெண்டை. அந்தத் திசைக்கே
ஒரு கும்பிடு!

--கே.பி. ஜனா
(நெருடலாக இருந்தால் தயவு செய்து
ஒவ்வொரு வரி விட்டு படிக்கவும் )
 
உங்களோட கதைகள் விகடனில் வரும்போது நான் பத்தாவது படிச்சிகிட்டு இருந்தேன்னு நினைக்குறேன். எனக்கு அதுல ரொம்ப பிடிச்சது முதல் கதைதான்.. அதுக்கு ஏத்த மாதிரி தலைப்புக்க்களும் ரொம்ப பிடிக்கும். சித்ராட்சசி, சேலை அப்படிங்கிற ஒரே வார்த்தையை வெச்சு எழுதி இருந்த க்யூட் கதை, என எல்லாமே ரொம்ப அழகா இருக்கும். எழுத்து மேல இருந்த ஆர்வத்துல நானும் இப்போ சினிமாத்துறையில தான் இருக்கேன்.
 
கவிதைக் காதலன்
‘ஏடாகூடம்’ என்று தலைப்பு வைத்திருப்பதால் ‘அந்த மாதிரி’கதையாக இருக்குமோ என்று பயந்துகொண்டே படித்தேன்.நல்லவேளை, அப்படி எதுவும் இல்லை என்பதோடு, கதையில் நீங்கள் செய்திருந்த புதுமை அபாரமாக இருந்தது!
 
பல புதுமையான கதை முயற்சிகளை சாவியில் பார்த்திருக்கிறேன். அதை பின்புலத்திலிருந்து இயக்கிய உங்கள் முயற்சிகள் விகடனில் தொடர்ந்து புத்தகமாகி நன்கு விற்பனையாவதில் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்!
 
* நன்றி பொன்னியின்செல்வன்!

* நன்றி பிரபாகர்! அது சரி, நீங்க புது கெட்டப்ல இருக்கிற மாதிரி தெரியுதே?

* பாராட்டுக்களுக்கு நன்றி சொக்கன்!

* நன்றி ரேகாராகவன்!

* வேற வினையே வேண்டாம், பின்னோக்கி! :-) ஒரு கதையை வழக்கம்போல் படித்தால் ஒரு முடிவும், அதே கதையை கடைசி வரியிலிருந்து ஒவ்வொரு வரியாக ஆரம்ப வரி வரை பின்னோக்கி படித்தால் வேறொரு முடிவும் வருகிற கதையும்கூட எழுதியிருக்கிறேன்!

* வணக்கம் பிளாக்பாண்டி! போனாள் என்பது சந்தேகமில்லாமல் வினைச் சொல்தான். ஆனால், நான் இங்கே தந்திருப்பது வினைச் சொல் இல்லாத கதை அல்ல!

* இப்படி ஒரு அசத்தலான விமர்சனம், இதே கதை ஆனந்த விகடனில் வெளியான சமயத்தில் வரவில்லையே என்று ஆதங்கமாக இருக்கிறது கே.பி.ஜனா!

* புதிய விருந்தினரான கவிதைக் காதலனை அன்போடு வரவேற்கிறேன். உங்களுக்குப் பிடித்த மாதிரியே எங்கள் சேர்மன் திரு.பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் ரொம்பப் பிடித்த கதை ‘சேலை’ வார்த்தையை வைத்து விளையாடிய கதைதான்! நன்றி கவிதைக் காதலன்! திரைத் துறையில் சாதிக்க வாழ்த்துக்கள்!

* கிருபாநந்தினி! ஏடாகூடம் என்பது அப்படியான வார்த்தையா! குளறுபடி, ஏறுக்குமாறு என்றுதானே அர்த்தம்! புதுசு புதுசாக் கெளப்புறாய்ங்களேய்யா! அந்தப் புத்தகத்தில் எந்தக் கதையுமே நீங்க சொல்ற ‘அந்த மாதிரி’ கதை இல்லீங்க. தைரியமா நம்ம்ம்ம்ம்பிப் படிக்கலாம்!

* வாழ்த்துக்களுக்கு நன்றி சத்யராஜ்குமார்!
 
பின்னோக்கி, ஜே.என்.டியூப், ஸ்பைஸ் 74, சி.எஸ்.கிருஷ்ணா, கே.பி.ஜனா, சுதிர் 1974, கே.கிருபாநந்தினி, அனுபகவான், அசோக் 92, வினோ 23 - தமிழிஷ்ஷில் ஓட்டளித்து இந்தப் பதிவுக்கு ஆதரவளித்த இவர்கள் அனைவருக்கும் நன்றி!
 
சார் மிக அருமை. வாழ்த்துக்கள்.
சென்னை வரும்போது கண்டிப்பாக இந்த புத்தகம் வாங்கவேண்டும்.
 
உங்களது கதை தொகுப்பு மேலும் பல பிரதிகள் விற்க வாழ்த்துக்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் - என்பதை நினைவூட்டுவது போல இருந்தது ப்ரியாவின் கடிதம்!
அடுத்த முறை சென்னை வரும்போது வாங்கி விட வேண்டும்.

வெங்கட் நாகராஜ்
புதுதில்லி.
http://www.venkatnagaraj.blogspot.com
 
மங்களூர் சிவா, புது டெல்லி வெங்கட் நாகராஜ் இருவருக்கும்... வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி!
 
விகடன் பிரசுரத்தின் 'ஏடாகூட கதைகள்' எழுதியவர் நீங்கள் தானா? என்று ஒரு நிமிடம் யோசித்தேன், சிறிது இடைவெளிக்கு பிறகு தெளிவாக பார்த்தால் தெரிகிறது. மிகவும் அற்ப்புதம்.
 
ஏடாகூடக் கதைகள் என்பதை விட மாறுபட்ட சிந்தனைக்(lateral thinking) கதைகள் என்பது பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் வாசகர்களை சுண்டி இழுத்திருக்காதே. ஏடாகூடமாக எதையாவது உளறிராதே என்பார்கள். ஆனால் நீங்கள் இப்படி ஏடாகூடமாக எக்கசக்கமாக எழுத வேண்டுகிறேன்.