உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, December 11, 2009

கல்லூரிகளில் சில கழிசடைகள்!

ப்போதெல்லாம் நாளேடுகளைப் புரட்டவே நடுக்கமாக இருக்கிறது எனக்கு. எந்த நாளேட்டை எடுத்தாலும், மனித மனங்களின் வக்கிரங்களை வகை வகையாகப் பிட்டு வைக்கும் செய்திகளாகவே நிரம்பிக் கிடக்கிறது. மனித சமுதாயத்தின் ஒட்டு மொத்த உடம்புமே அழுகி விட்டதா, அல்லது நாளேடுகள்தான் பரபரப்புக்காக அப்படியான செய்திகளை மட்டுமே துருவித் துருவி வெளியிடுகின்றனவா என்பது புரியவில்லை. இரண்டில் பின்னதுதான் உண்மை என்று நம்புவதில் ஓர் ஆறுதல் கிடைக்கிறது.

நாளைய இந்தியா மாணவ சமுதாயத்தின் கையில்! ஆனால், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைச் செய்தித் தாள்களில் படிக்கையில், மனம் ரணமாகிறது. தங்களை மேம்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்கள் தேசத்தை எப்படி மேம்படுத்தப் போகிறார்கள் என்று கவலையாக இருக்கிறது.

ஆண், பெண், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், ஏழை, பணக்காரர், முதியவர், குழந்தை என அனைவரையும் பாகுபாடின்றிச் சுமந்து செல்லும் ரயிலின் சமத்துவ குணத்தைப் போற்றிப் பாடும் பாட்டு ஒன்றை என் சின்ன வயதில் பள்ளிப் பாடத்தில் படித்திருக்கிறேன். ஆனால், இன்ன ரயிலில் இன்ன கல்லூரி மாணவர்கள் வரக்கூடாது என்று வேறு ஒரு கல்லூரி மாணவர்கள் கட்டளையிட்டார்களாம். அதை மீறி வந்ததால், உருட்டுக்கட்டைகளும் கத்திகளுமாகப் போருக்குக் கிளம்பிவிட்டார்கள். இரண்டு கல்லூரி மாணவர்களும் ரயில்வே ஸ்டேஷனில் அடிதடியில் இறங்க, பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தார்களாம்.

பொதுமக்கள் ஓட்டம் பிடிக்க வேண்டுமென்றால், அங்கே எந்த அளவுக்கு அராஜகம் நிகழ்ந்திருக்க வேண்டும்? இவர்கள் படிக்க வந்த மாணவர்களா அல்லது வன்முறைக்குப் பயிற்சி எடுக்க வந்த ரவுடிக் கும்பலா என்று சந்தேகமாக இருக்கிறது. திமிரெடுத்துப் போய்த் திரிந்த குறிப்பிட்ட இந்தச் சில கல்லூரி மாணவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதோடு, அவர்களுக்குச் சட்டபூர்வமான தண்டனையும் அளிக்க வேண்டும். வழக்கமாக அரசாங்கம் இந்த மாதிரி விஷயங்களில் ‘சம்பந்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு...’ என்று ஏதோ மழுப்பி, அவர்களுக்குத் தண்டனை கிடைக்காமல் பார்த்துக் கொள்ளும். ஆனால், இந்த வன்முறையில் சம்பந்தப்படாத மற்ற பல நல்ல மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, குற்றம் புரிந்த மாணவர்களுக்குரிய தகுந்த தண்டனையை நிறைவேற்றுவதுதான் பொறுப்புள்ள ஓர் அரசுக்கு அழகு! ஆனால், இங்கே அடியாட்களைப் பேணிப் பாதுகாப்பதும், மாணவர்களுக்குக் கொம்பு சீவி விடுவதும்தானே நமது அரசாங்கங்களின் வேலையாக இருக்கிறது!

கல்லூரி மாணவிகள் மட்டும் சளைத்தவர்களா? ஆண்-பெண் சம உரிமை கேட்பதே ஆண் செய்யும் அதே அக்கிரமங்களைத் தானும் செய்வதற்குத்தான் என்பதுதானே பல பெண்களின் எண்ணமாக இருக்கிறது. அதை நிரூபிப்பது போல் ஒரு செய்தி. கல்லூரி மாணவிகள் ஐம்பது பேருக்கு மேல் வகுப்பறையில் தங்கள் செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தார்களாம். அதைத் தட்டிக்கேட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துவிட்டார்கள். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கே போன பத்திரிகையாளர்களை கல்லூரி வாட்ச்மேன்கள் தாக்கினார்கள் என்பது நியூஸ்.

இந்தப் பெண்கள் படிக்கத்தான் போனார்களா அல்லது ஏதாவது தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளப் பயிற்சியெடுக்கப் போனார்களா? கல்லூரி வளாகத்துக்குள் செல்போன் கூடவே கூடாது என்று யாராவது கல்லூரி முதல்வர் கண்டிப்புக் காட்டினால், மாணவர்களின் உரிமைப் பிரச்னையில் கை வைக்கிறார் என்று அவருக்கு எதிராகப் பொங்கியெழ இங்கே சில பத்திரிகைகளும் சில அதிமேதாவிகளும் தயாராகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

செல்போன் இன்றைய காலத்துக்குத் தேவையான நல்லதொரு அறிவியல் சாதனம்தான். அதை முறையாகப் பயன்படுத்துவதில் தவறில்லைதான். ஆனால், பாழாய்ப் போன நம்ம ஜனங்கள் எதைத்தான் ‘முறை’யாகப் பயன்படுத்துகிறார்கள்? எதையுமே முறைகெட்டுப் பயன்படுத்தித்தானே அவர்களுக்குப் பழக்கம்! அப்படியிருக்க, அவர்களின் அடுத்த தலைமுறையான மாணவர்கள் மட்டும் முறையாகப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பது வீணல்லவா? அவர்கள் செல்போனை, பேசுவதைவிட ஆபாசப் படம் பார்ப்பதற்கும், ஆபாச எஸ்.எம்.எஸ்-கள் அனுப்புவதற்கும்தானே அதிகம் பயன்படுத்துகிறார்கள்? எனவே, சில நன்மைகள் இருந்தபோதிலும் செல்போனை மாணவர்கள் உபயோகிப்பதைத் தடை செய்வதில் தப்பில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. செல்போன் வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்களாம் இந்தப் பிள்ளைகள்?

மாணவர்களின் அராஜகப் போக்கோடு ஒப்பிடும்போது மாணவிகளின் போக்கு ஒன்றும் மோசமானது இல்லை என்று தோன்றும். ஆனால், எனக்கென்னவோ இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் மாணவிகளும் கத்தியும் உருட்டுக் கட்டைகளும் ஏந்திப் பொது இடத்தில் அடிதடி, வெட்டுக் குத்து என்று இறங்குவார்கள் என்றுதான் தோன்றுகிறது. இது ஏதோ என் அதீத கற்பனை இல்லை; இன்னும் சில ஆண்டுகளில் நாம் நாளேடுகளில் படிக்கப்போகிற செய்திதான்!

வகுப்பறையில் செல்போனில் பாடல் கேட்ட குறிப்பிட்ட சில மாணவிகளை உடனே சஸ்பெண்டு செய்ய வேண்டும். அது கூடப் போதாது. இந்த ஆண்டு அவர்கள் தேர்வு எழுத முடியாதபடி தடை செய்ய வேண்டும். ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. இதனால் அந்த மாணவிகளின் குடும்பங்கள் ஒன்றும் நடுத்தெருவுக்கு வந்துவிடாது. இவர்களுக்குக் கொடுக்கும் கடுமையான தண்டனை, மற்ற மாணவிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருந்து, ஒழுங்காகப் படித்து முன்னேறுகிற வழியைப் பார்க்கும் எண்ணத்தை ஏற்படுத்தும்.

“மாணவன், மாணவி என்ற வார்த்தைகளே தவறானவை. மாணாக்கன், மாணாக்கி என்பவையே சரியான சொற்கள். மாண்பினை ஆக்குபவன் மாணாக்கன். மாண்பினை அவிப்பவன்தான் மாணவன். எனவே, மாணாக்கன் என்றே சொல்வோம்” என்று திருத்தியிருக்கிறார் பள்ளிப் பருவத்தில் எனக்குப் பாடம் எடுத்த தமிழய்யா மறைந்த திரு.அ.க.முனிசாமி. ஆனால், இன்றைய மாணவர்களைப் பார்த்தால் மாண்பினை ஆக்க வந்தவர்கள் மாதிரி தெரியவில்லை; மாண்பினை அவிக்க வந்தவர்களாகத்தான் தெரிகிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிச் சம்பாதித்து, தாங்கள்தான் அந்தக் காலத்தில் சரியாகப் படிக்காமல், கல்லூரியில் சேருவதற்குக்கூடக் குடும்பத்தின் வறுமை இடங்கொடுக்காமல், இப்படிக் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறோம்; தங்கள் பிள்ளைகளாவது நன்கு படித்து முன்னேறி, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரட்டும்; வறுமையிலிருந்து மீண்டு சுகமாக வாழட்டும் என்று தங்கள் ஆசைகளையெல்லாம் தியாகம் செய்து பணம் சேர்த்து, லட்சம் லட்சமாகக் கொடுத்துத் தங்கள் பிள்ளைகளைக் கல்லூரிகளில் சேர்த்தால், இந்தக் கழிசடைகள் நடந்துகொள்கிற லட்சணம் இப்படியிருக்கிறது.

தவறு செய்த அத்தனை மாணவ, மாணவிகள்மீதும் கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கல்லூரிகளுக்குள் கண்ட நாய்களையும் சேர்க்காமல் வெளியே அடித்துத் துரத்துங்கள். வெளியே எத்தனையோ ஆயிரம் தங்கமான ஏழைக் குழந்தைகள் படிக்க வழியின்றி, கல்லூரியில் டொனேஷன் கொடுத்துச் சேர வாய்ப்பின்றிச் சோர்ந்து போய் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்லூரிகளில் இடம் கொடுத்துச் சேர்த்துகொண்டு கல்வி புகட்டுங்கள்.

இதர சாத்தான்களுக்குப் பாடம் புகட்டுங்கள்!


.

6 comments:

//கல்லூரிகளுக்குள் கண்ட நாய்களையும் சேர்க்காமல் வெளியே அடித்துத் துரத்துங்கள். வெளியே எத்தனையோ ஆயிரம் தங்கமான ஏழைக் குழந்தைகள் படிக்க வழியின்றி, கல்லூரியில் டொனேஷன் கொடுத்துச் சேர வாய்ப்பின்றிச் சோர்ந்து போய் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்லூரிகளில் இடம் கொடுத்துச் சேர்த்துகொண்டு கல்வி புகட்டுங்கள்//

நல்லாவே சொல்லியிருக்கீறீர்கள். அருமையான தேவையான பதிவு. சம்பந்தப்பட்டவர்கள் இனிமேலாவது விழித்துக்கொள்வார்களா?

ரேகா ராகவன்.
 
சவுக்கடியா அடிச்சிருக்கீங்க! போட்டுப் பொரட்டியெடுத்துட்டீங்க ரவி சார்! பொளேர்னு உறைக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க. (இத்தனைப் பாராட்டியிருக்கேனே, இதுக்கு நன்றி உபகாரமா என்னோட வலைப்பூவையும் (http://padithurai.blogspot.com) வந்து பார்த்து கருத்து சொன்னீங்கன்னா நன்றி உடையவளா இருப்பேங்ணா! :)
 
என்னது? அரசாங்கம் மாணாக்கன் மாணாக்கியை பார்த்துக்கொள்ள வேண்டுமா? அப்புறம் மானாட மயிலாட எல்லாம் யார் பாத்துக்கறது! :-)

// நாளேடுகள்தான் பரபரப்புக்காக அப்படியான செய்திகளை மட்டுமே துருவித் துருவி வெளியிடுகின்றனவா என்பது புரியவில்லை. இரண்டில் பின்னதுதான் உண்மை என்று நம்புவதில் ஓர் ஆறுதல் கிடைக்கிறது. //

நாளேடும் ஒரு வியாபாரம்தானே! மக்களும், நாளேட்டில் தலையங்கமோ அல்லது ஆராய்ச்சி கட்டுரையோவா படிக்கிறாங்க? ஏதோ பரபரப்பா சுத்தி நடக்கிற நாலு விஷயத்தை பத்தி பேசிட்டு போய்கிட்டேதான் இருக்காங்க.

// இந்த வன்முறையில் சம்பந்தப்படாத மற்ற பல நல்ல மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, குற்றம் புரிந்த மாணவர்களுக்குரிய தகுந்த தண்டனையை நிறைவேற்றுவதுதான் பொறுப்புள்ள ஓர் அரசுக்கு அழகு! //

ஆம்! குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கண்டிப்பாக தண்டிக்கப் படவேண்டும்.

// இந்தப் பெண்கள் படிக்கத்தான் போனார்களா அல்லது ஏதாவது தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளப் பயிற்சியெடுக்கப் போனார்களா? //

இந்தப் பொண்ணங்களே இப்படித்தான்!



சார், கோபம் கொப்பளிக்கிறது பதிவில். நியாயமான கோபமும் கூட.
நல்ல பதிவு சார்.
 
திரு.ரேகா ராகவன், நன்றி!
 
திருமதி கிருபாநந்தினி! கடைசியில உங்க வலைப்பூவைப் பார்க்கிறதுக்குதான் இத்தனைப் பாராட்டுமா? :( அவசியம் உங்க வலைப்பூவைப் பார்க்கிறேன்.
 
திரு.பொன்னியின் செல்வன், விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி!