உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, November 08, 2009

அசோகமித்திரனும் எனது மித்திரனும்!

‘மழை பெய்தால் கேணி நிறையும் என்பது நியதி. ஆனால் நேர்மாறாக, மழை பெய்ததால் ஒரு கேணி வற்றியது’ என்று இந்தப் பதிவுக்கு சுவாரஸ்யமான ஓர் ஆரம்ப வாக்கியத்தை யோசித்து வைத்திருந்தேன். ஆனால், என் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக (ஆசைக்கு என்று தப்பர்த்தம் செய்துகொள்ளாதீர்கள்) வழக்கம்போல் கேணி நிரம்பி வழிந்தது.

ஞாநியின் கேணிக் கூட்டத்தைச் சொல்கிறேன். கேணியைச் சுற்றித் தண்ணீர் நின்றதால், கேணிக் கூட்டம் கூடத்துக் கூட்டமாகியது. ஹாலில் இடம் போதாமல், வெளியே ஜன்னல் அருகே நின்றபடியெல்லாம் ஆர்வத்துடன் கவனித்தார்கள். அடாது மழையிலும் விடாது வந்திருந்தவர்களைக் கண்டு பெருமையும் ஆச்சரியமும் கொண்டேன்.

இன்றைய முக்கிய விருந்தினர் எழுத்தாளர் அசோகமித்திரன். இவரைப் பற்றி என் இன்னொரு வலைப்பூவான ‘என் டயரி’யில் ஜூன் 26-ம் தேதியே எழுதியுள்ளேன். அதைப் படிக்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள வரியைச் சொடுக்கவும்.

(அசோக)மித்திரனின் மித்திரன் நான்!

அசோகமித்திரனை இந்தக் கூட்டத்துக்கு அழைத்து வந்த நண்பர் பாஸ்கர் சக்தியிடமும் ரமேஷ்வைத்யாவிடமும் வரும் வழியிலேயே காரில் அவர் என்னைப் பற்றி விசாரித்ததாகச் சொன்னார்கள். எத்தனைப் பெரிய எழுத்தாளர் அவர்! பாலு மகேந்திரா, கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் அவரின் ரசிகர்கள். அப்படியான ஒருவர் மிகச் சாமானியனான என்னை நினைவு வைத்து விசாரிக்க வேண்டுமானால், அது எனக்கு எத்தனைப் பெரிய பாக்கியம்!

அவர் உள்ளே நுழைந்ததுமே ஓடிச் சென்று அவர் முன் நின்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்குள், அவரே “ரவிபிரகாஷ்” என்று வாஞ்சையுடன் என் கையைப் பற்றிக் கொண்டதை நினைக்கையில் நெஞ்சு நெகிழ்கிறது.

மிகத் தளர்ந்திருந்தார். 78 வயதுக்குண்டான தளர்ச்சி அல்ல அது. 98 வயதுத் தளர்ச்சி!

அவரைப் பற்றி ஞாநி தமது அறிமுக உரையில் சொன்ன ஒரு விஷயம் என்னைக் கவர்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை பேட்டி காண்பதற்காகச் சென்றிருந்தாராம் ஞாநி. அப்போது இந்திரா பார்த்தசாரதி ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக்கொண்டு இருந்திருக்கிறார். பேட்டி ஒன்றரை மணி நேரம் நீடித்தது. அந்தச் சமயத்தில் அங்கே வேறொருவரும் இருந்துள்ளார். ஞாநி இந்திரா பார்த்தசாரதியை பேட்டி எடுத்துக்கொண்டு இருக்க, அத்தனை நேரமும் அந்த மற்றொரு நபர் மும்முரமாக இந்திரா பார்த்தசாரதி ஊருக்குப் புறப்படுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை (படுக்கைகளைக் கட்டி வைப்பது, சட்டைகளை மடித்து சூட்கேஸில் வைப்பது, அறையை ஒழுங்குபடுத்துவது போன்றவற்றை) செய்துகொண்டு இருந்தாராம். பேட்டி முடிந்து கிளம்புகிற நேரத்தில் இந்திரா பார்த்தசாரதி அவரை ஞாநிக்கு, ‘இவர் மிஸ்டர் தியாகராஜன்’ என்று அறிமுகம் செய்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல; எழுத்தாளர் அசோகமித்திரன்தான். அவரின் பல கதைகளைப் படித்து அவரின் பெரிய ரசிகனாகவே ஆகியிருந்தபோதிலும், ‘அசோகமித்திரன்’ என்ற பெயர்தான் பரிச்சயமாகியிருந்ததே தவிர, தியாகராஜன் என்று தனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டவர்தான் தன் அபிமான எழுத்தாளர் அசோகமித்திரன் என்று ஞாநிக்கு அப்போதும் தெரியவே இல்லையாம். பின்னாளில் தெரிய வந்தபோது, தாமே ஒரு பெரிய எழுத்தாளராக இருந்தபோதிலும் அந்த நினைப்பே இல்லாமல், வேறொரு எழுத்தாளரின் பேட்டியில் குறுக்கிடாமல் அவரின் நண்பனாக மட்டுமே அங்கே இருந்து, அவரின் பயண ஏற்பாடுகளைக் கவனித்த அசோகமித்திரனின் பெருந்தன்மை, அவரின் மீதான மதிப்பை இன்னும் அதிகப்படுத்திற்று என்றார் ஞாநி.

அசோகமித்திரன் தமது உரையின்போது ‘சாவி’யில் வெளியான தன் தொடர்கதை ‘மானஸரோவர்’ பற்றிக் குறிப்பிட்டார். “எதையும் செய்து முடித்துவிடலாம் என்று ரொம்ப சுலபமாகச் சொல்லிவிடுவார் சாவி. திடீரென்று தொடர்கதை கேட்டால் எப்படி சார் என்னால் எழுதமுடியும் என்று நான் கேட்டபோது, ‘அதெல்லாம் முடியும். முதல்லே ஒரு மூணு அத்தியாயம் எழுதிக் கொடுங்க. அப்புறம் வாராவாரம் எழுதிக் கொடுங்களேன். என்ன பிரமாதம்?’ என்று சுலபமாகச் சொல்லிவிட்டார் சாவி. முடியாது என்றே ஒன்றே அவர் வாயிலிருந்து வராது. கோபக்காரர் அது இது என்று அவர் மீது பலவிதமான விமர்சனங்கள் உண்டு. ஆனால், தன்னம்பிக்கை மிகுந்தவர். அவரைப் போல ஒரு பத்திரிகையாளரைப் பார்ப்பதரிது. அவரின் தூண்டுதலால்தான் என்னால் ‘மானஸரோவர்’ எழுத முடிந்தது” என்று குறிப்பிட்டார் அசோகமித்திரன்.

இரண்டு, மூன்று கூட்டத்துக்கு முன்பேயே அவர் கலந்து கொள்வதாக இருந்தது. அவர் உடல் நிலை சீர்கெட்டதால் அப்போது முடியாமல் போய்விட்டது. அது பற்றியும் அவர் சொன்னார்.

தனக்கு நினைவு மறதி அடிக்கடி வந்தது என்றும், 78 வயதுக்காரனுக்கு மறதி சகஜம்தானே என்று நினைக்கலாம்; ஆனால், தனக்கு வந்த மறதி அப்படியானது அல்ல என்று தான் உணர்ந்துகொண்டதாகவும் சொன்னார். ஒரு நாள் வழக்கம்போல் செக்கப்புக்குப் போய்விட்டுக் காலை 11 மணிக்கு வீடு திரும்பி, ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தவர் மாலை 6 மணி வரையில் அப்படியே உட்கார்ந்துகொண்டு இருந்ததாகவும், மனைவி பயந்து அக்கம்பக்கத்து வீட்டு நண்பர்களைக் கூப்பிட்டு அவர்களின் உதவியோடு அவரைத் தூக்கிக்கொண்டு போய்ப் படுக்கையில் போட்ட பின்பும் பிரக்ஞையில்லாமல் 24 மணி நேரம் அப்படியே கிடந்ததாகவும், பின்னர் அவரின் பிள்ளைக்குத் தகவல் அனுப்பி, அவர் வந்து அப்பாவைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் சொன்னார்.

டாக்டர்கள் இவரைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, உடம்பில் உப்புச் சத்து சாதாரணமாக 135 இருக்க வேண்டும் என்றும், இவர் உடம்பில் மிகக் குறைவாக இருப்பதாகவும், அதனால்தான் இப்படியான உடல் தளர்ச்சி, நிற்க முடியாமல் தள்ளாடுதல், நினைவு பிறழ்தல் போன்றவை ஏற்படுகிறது என்றும் சொன்னார்களாம். “உப்பு என்று லேசாகச் சொல்கிறோம். ஆனால், நம் உடம்புக்கு உப்புச் சத்துக்கு எத்தனை முக்கியமானது என்பதை இந்த 78 வயதில்தான் நான் தெரிந்து கொண்டேன்” என்றார் அசோகமித்திரன். இதனால்தான் பெரியவர்கள், ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று சொல்லி வைத்தார்கள் போலும்!

‘சாவி’ வார இதழில் வெளியான தனது ‘மானஸரோவர்’ தொடர்கதை பற்றிப் பேசும்போது, “அப்போதுதான் ரவிபிரகாஷை நான் பார்த்தேன். அவர் அப்போது மாம்பலம், கோதண்டராமர் கோயில் தெருவில் குடியிருந்தார்” என்று குறிப்பிட்டார் அசோகமித்திரன். இத்தனை வயதிலும், இத்தனை உடல் உபாதைக்குப் பிறகான நினைவு மறதியிலும் மிகச் சரியாக நான் குடியிருந்த தெருப் பெயர் முதற்கொண்டு அவர் குறிப்பிட்டுச் சொன்னது என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது. அவரே ஒருமுறை ‘மானஸரோவர்’ அத்தியாயத்தை எடுத்துக்கொண்டு அந்தத் தெருவுக்கு வந்து, என் வீட்டைக் கண்டுபிடித்து, நேரிலேயே என்னிடம் கொடுத்துவிட்டுப் போன சம்பவத்தைதான் மேலே கொடுத்துள்ள ‘லின்க்’கில் உள்ள பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

அசோகமித்திரனின் குரல் பலகீனமாக, மிக மென்மையாக ஒலித்ததால், சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த என் போன்றவர்களுக்கு அவர் பேசியது தெளிவாகக் காதில் விழவில்லை. ஆனாலும், குறும்பு குறையாமல், நகைச்சுவையோடு அவர் பேசினார் என்பது மட்டும் அவ்வப்போது எழுந்த குபீர் சிரிப்பலைகளால் தெளிவாகத் தெரிந்தது.

‘தண்ணீர்’ என்று அவர் எழுதிய ஒரு சிறுகதையைப் பற்றிப் பலர் பாராட்டிப் பேசினார்கள். தண்ணீர் பிடிக்க ஒரு குடும்பம் படும் கஷ்டம் பற்றியும், தண்ணீர் விநியோகம் முறையாக இல்லாதது பற்றியும் அவர் எழுதிய அந்தச் சிறுகதை பரவலான கவனம் பெற்று, அதன் பிறகுதான் மாநகராட்சி விழித்துக்கொண்டு, தண்ணீர் சப்ளையை முறைப்படுத்திற்று என்று ஓர் அரிய தகவலைச் சொன்னார் குடிநீர் வாரியத்திலிருந்து வந்து கலந்து கொண்ட ஒருவர்.

மழையைச் சாக்கிட்டு இந்த முறை கேணி கூட்டத்துக்குப் போகாமல் இருந்துவிடலாமா என்று கிளம்புவதற்குச் சற்று முன்னர் வரை யோசித்துக் கொண்டு இருந்தேன். எனினும், சட்டென்று பேண்ட், சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, கலந்து கொள்ள இருப்பவர் என் அபிமான எழுத்தாளர் அசோகமித்திரன் என்பது. மற்றொன்று, அடாது மழையிலும் விடாது கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிற ஞாநி + பாஸ்கர்சக்தியின் ஆர்வம்.

கேணிக் கூட்டத்துக்குப் போனதில், அசோகமித்திரனைச் சந்தித்துப் பேசியதைவிட என்னை மகிழ்வித்த ஒரு விஷயம், நண்பர் ரமேஷ்வைத்யாவைச் சந்தித்துப் பேசியதுதான். சிகிச்சைக்குப் பிறகு பூரண தெளிவோடும் ஆரோக்கியத்தோடும் அவரைப் பார்த்தது சந்தோஷமாக இருந்தது.

அவர் சிகிச்சையில் இருந்த பெரும்பாலான நாட்கள் வெறும் சைக்கோதெரபிதானாம். கடைசி நாலைந்து நாட்களில்தான் மாத்திரை கொடுத்தார்களாம். அதைக் காலையில் விழுங்கிவிட்டால், அடுத்து மூன்று நாட்களுக்குக் குடிக்க முடியாதாம். மீறிக் குடித்தால், பக்க வாதம் தாக்கலாம்; நாக்கு இழுத்துக் கொள்ளலாம்; மூளை பாதிக்கப்படலாம்; ஏன், மரணமேகூட நிகழலாம் என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார்களாம் மருத்துவர்கள். குடிதான் என்றில்லை; இருமல், ஜலதோஷத்துக்கு எடுத்துக் கொள்ளும் மருந்திலும்கூடக் கொஞ்சம் ஆல்கஹால் இருப்பதால், அதுவும் ஆபத்துதான்; அவ்வளவு ஏன், ஷேவ் செய்துவிட்டுத் தடவிக் கொள்ளும் ஆஃப்டர் ஷேவ் லோஷனைக் கூடத் தடவக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்களாம்.

இத்தனை வீர்யமான மருந்தா என்று பயந்து, “இதனால் வேறு சைட் எஃபெக்ட்ஸ் எதுவும் இல்லையா?” என்று கேட்டேன். ரமேஷ் வைத்யா தனது வழக்கமான குறும்புத்தனம் மாறாமல், “வேலை போச்சு, வீடு போச்சு, குடும்பம் போச்சு! குடியினால் ஏற்பட்ட இந்த சைட் எஃபெக்ட்ஸை விடவா பெரிய சைட் எஃபெக்ட்ஸ் இதுல வந்துடப் போகுது!” என்றார் சிரித்துக் கொண்டே.

இந்த முறை அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. நல்லதே நடக்கட்டும்!
.

9 comments:

/
“வேலை போச்சு, வீடு போச்சு, குடும்பம் போச்சு! குடியினால் ஏற்பட்ட இந்த சைட் எஃபெக்ட்ஸை விடவா பெரிய சைட் எஃபெக்ட்ஸ் இதுல வந்துடப் போகுது!” என்றார் சிரித்துக் கொண்டே.
/

:(
 
ரமேஷ் வைத்யா அண்ணனுக்கு இன்னும் பல "நீ வருவாய் என" கிடைக்க வாழ்த்துக்கள்.
 
நல்லா பிரசன்ட் பண்ணி இருக்கீங்க ரவி... நானும் உங்களோட வரிசையில் (கடைசியில்) அமர்ந்திருந்ததால் ஒரு சில சம்பாஷனைகள் சரியாக கேட்கவில்லை.

இனிமேல்தான் கேணி அனுபவத்தை பதிவிட வேண்டும். உங்களை கேணியில் சந்தித்ததில் மகிழ்ச்சி.பதிவிற்கு நன்றி...
 
அருமையான கட்டுரை. நேரில் பார்ப்பது போன்ற உணர்வு
 
அறுபது தாண்டியவர்களே சோகச் சித்திரங்களாக காட்சி தருகையில் திரு.அசோக மித்திரன் 78 வயதிலும் நகைச்சுவையாக உரையாற்றியது மகிழ்ச்சி தருகிறது. -- கே.பி. ஜனா
 
சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒப்பற்ற எழுத்தாளராகிய திரு.அசோகமித்திரனின் அன்புக்குத் தாங்கள் பாத்திரமாகியிருப்பது உண்மையிலேயே தங்களின் பாக்கியம்தான்! அருமையான பதிவு!
 
இந்த முறையாவது கேணி கூட்டத்துக்கு வரவேண்டும்,எல்லோரையும் சந்தித்து அளவளாவ வேண்டும் என்று நினைத்திருந்தேன்.மழை வந்து அந்த எண்ணத்தில் மண் விழுந்தது. அசோகமித்திரன் கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் ரசித்து படித்த பதிவு.

ரேகா ராகவன்.
 
மங்களூர் சிவா:
அவர் சிரித்தார்; நீங்கள் இங்கே அழுகைக் குறி இட்டிருப்பதை, அப்போது நான் என் மனசுக்குள் உணர்ந்தேன்!

ராஜு:
உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் மகிழ்கிறேன்!

கிருஷ்ண பிரபு:
சக பதிவர் ஒருவரைச் சந்தித்த மகிழ்ச்சி எனக்கும். கூட்டம் என்பதால் அதிகம் பேச முடியவில்லை. அது சரி, இன்னொரு முறை சந்திக்காமல் போய்விடப் போகிறோமா என்ன?

பின்னோக்கி:
பாராட்டுக்களுக்கு நன்றி! பின்னோக்கி என்பதை பின்னே நோக்கி என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் PIN போல கூர்மையாக நோக்குபவர் என்றுதான் நான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.

கே.பி.ஜனார்த்தனன்:
உண்மைதான்! அவர் பேசிய சாராம்சத்தையும், அதில் வார்த்தைக்கு வார்த்தை தொனித்த நகைச்சுவையையும் நான் பதிவு செய்யவில்லை. அதை நேரில் அனுபவித்த சந்தோஷத்தை மட்டுமே பதிவிட முடிந்தது. தங்கள் பாராட்டுக்கு நன்றி! தவிர, ‘சோக’ எதிர்ப்பதம் ‘அசோக’ என்பதை வைத்து வழக்கம்போல் தங்கள் வார்த்தை விளையாட்டை ரசித்தேன்!

கிருபாநந்தினி:
உண்மைதான்! பத்திரிகையுலக ஜாம்பவான் சாவி, விகடன் சேர்மன் பாலசுப்ரமணியன், ‘அமுதசுரபி’ விக்கிரமன், பல பிரபல எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலை வித்தகர் ஆரூர்தாஸ், செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமி போன்ற பல மேன்மக்களின் தொடர்பும், அன்பும் கிடைத்திருக்கும் சாமானியனான நான் பெரும் பாக்கியவான்தான். பத்திரிகைத் துறைக்கு நன்றி! நன்றி தங்களின் பாராட்டுக்கும்!

கல்யாணராமன் ராகவன்:
பாராட்டுக்கு நன்றி!
 
இந்தப் பதிவுக்கு ‘தமிழிஷ்’ஷில் ஓட்டளித்து தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்திய பின்னோக்கி, பவன், வெங்கட்நாகராஜ், கிருபாநந்தினி, சி.எஸ்.கிருஷ்ணா, பூபதி, கே.பாலா, கே.பி.ஜனா, அனுபகவான், வினோ23, இடுகைமான், ஜ்யோவ்ராம்சுந்தர் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி!