உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, July 05, 2009

ஏன் படிக்கவேண்டும்?

நமது கல்வி முறையில் உள்ள ஒரு பெரிய குறை - அது வாழ்க்கையை நடத்தக் கற்றுத் தருகிறதே தவிர, வாழக் கற்றுத் தருவதில்லை.

‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்’ என்றார் மகாகவி பாரதி.

‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சீறிய பாரதி, இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் கல்வி தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதே பாடலில் அந்த வரிகளுக்கு முன்பாக,

‘அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்’ என்கிறார் மகாகவி பாரதி.

மக்கள் அத்தனை பேருக்குமான கல்வியை ஏற்றத் தாழ்வில்லாமல் ஒன்றாய் அளித்திடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கல்வி பிற்காலத்தில் வளம் கொழிக்கும் வியாபாரமாகப் போகிறது என்று அவருக்கு அன்றைக்கே தோன்றியிருக்கிறது போலும்!

காசிருந்தால்தான் இன்றைக்கு ஒருவன் கல்வி கற்க முடியும். ஒவ்வொரு விலைக்கு ஏற்ப ஒரு கல்வி என்று கடைச்சரக்காகிவிட்டது கல்வி. இத்தகைய ‘காசுக்குக் கல்வி’ முறை வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தனியார் பள்ளிகள் என்கிற ஒரு விஷயமே கிடையாது. கேட்டால் சிரிப்பார்கள். எல்லோருக்கும் ஒரே விதமான, சமமான, பாரதியார் விரும்பிய கல்வி அங்கேயெல்லாம் இருக்கிறது.

சரி, காசுக்கேற்ற கல்வியும்தான் எந்த லட்சணத்தில் இருக்கிறது! வளர்ந்துவிட்ட இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் பள்ளிக் குழந்தைகள் கழுதைகளைப் போல புத்தகப் பொதி சுமந்து செல்கிறார்கள். ஒரு டிவிடியில் அவர்களின் அத்தனைப் புத்தகங்களையும் பதிந்துகொள்ள முடியும். ஓர் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கணினியை இயக்கக் கற்றுக்கொடுத்தால், நம்மை விட வேகமாகவும் ஆர்வமாகவும் அவன் அதை இயக்குவான். வீட்டுக்கொரு இலவச டி.வி. கொடுக்கிற அரசாங்கம் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் போதிய கணினிகளை இலவசமாகக் கொடுக்கலாமே! தனியார் பள்ளிகளும் தாராளமாகத் தங்கள் பள்ளியை கணினிமயமாக்கலாமே! புத்தக மூட்டைகளை வீட்டு உபயோகத்துக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாமே?

படிப்பு எதற்கு என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். நல்ல வேலையில் அமர்வதற்கு என்றுதான் பதில் வரும். ஆக, பெற்றோர்களின் கவனம் எல்லாம் தங்கள் மகன் அல்லது மகள் புத்திசாலியாக ஆக வேண்டும் என்பதில் இல்லாமல், என்ன படிப்பு படித்தால் அவன் நல்ல வேலையில் அமர்ந்து கை நிறையச் சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடுவதிலேயே இருக்கிறது. திரும்பத் திரும்ப டாக்டர், இன்ஜினீயர் என்று அவர்கள் தங்கள் குழந்தைகளை பிரெயின் வாஷ் செய்து வருவதற்கு இதுதான் காரணம். இன்றைக்கு அந்த இரண்டோடு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேறு சேர்ந்துகொண்டு இருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்குப் பிடிக்கவே இல்லை என்றாலும்கூட, பெருந்தொகை செலவிட்டு, கட்டாயப்படுத்தி அவர்களைத் தாங்கள் விரும்பிய படிப்பில்தான் சேர்க்கிறார்கள்.

உண்மையில், படிப்புகளில் உசத்தி தாழ்த்தி என்பது இல்லை. எந்தப் படிப்புமே நல்ல படிப்புதான். பெற்ற அந்தப் படிப்பை நாம் வாழ்க்கையில் என்ன விதமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்பதில்தான் நமது வெற்றியும் தோல்வியும் உள்ளதே தவிர, படிப்பில் இல்லை. என்னுடைய உறவினர் பையன் ஒருவனைக் கட்டாயப்படுத்தி டாக்டருக்குப் படிக்க வைத்தார்கள். அவனும் கஷ்டப்பட்டுப் படித்து எம்.பி.பி.எஸ். ஆகிவிட்டான். தனியாகக் கிளினிக் வைத்தான். கைராசியில்லாத டாக்டர் என்று பெயர் எடுத்துவிட்டான். கிளினிக் ஈயாடியது. மூடிவிட்டு அரசு சுகாதார மையத்தில் சொற்ப சம்பளத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.

கல்வியின் முக்கிய அம்சம் கைத்திறன் வேலைகள். ஆனால், இன்றைய கல்வித் திட்டத்தில் கைத்திறன் வேலைக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது? புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுப்பது தவிர, சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க நமது கல்வி எங்கே கற்றுத் தருகிறது?

நினைவாற்றல் என்பது தேவையில்லை என்று சொல்லவில்லை. அது அவசியம்தான். ஆனால், ஓரளவுக்கு. சில தமிழ்ப் பாடல்களை, கணித, அறிவியல் சூத்திரங்களை மனதில் பதித்துக்கொள்வது அவசியம்தான். ஆனால், கேள்விக்கான பதில்களையுமல்லவா மாணவர்கள் உருப்போடுகிறார்கள்!

‘ஏட்டுச் சுரைக்காய் கவைக்கு உதவாது’ என நம் முன்னோர் அன்றைக்கே சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் என்ன பயன்? ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் நீங்கள் சேர வேண்டும் என்றால், வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் இருந்து பயனில்லை. மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பதில்கள் மட்டும் போதாது. கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூக்கள் எனப் பல பெரிய தொழில் நிறுவனங்கள் வந்து முகாமிட்டுத் தேர்வு செய்கின்றனவே, அவர்கள் வெறும் படிப்பை மாத்திரமா பார்த்துவிட்டுத் தேர்வு செய்கிறார்கள். இல்லை. ஒரு மாணவன் என்ன கற்றுக்கொண்டிருக்கிறான் என்று மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை; கற்றுக்கொண்டவற்றிலிருந்து என்ன புரிந்துகொண்டு இருக்கிறான் என்பதை அவர்கள் பிரத்யேகமாகச் சோதித்து அறிகிறார்கள். இதனால்தான் முதல் மதிப்பெண் எடுத்தவன் வேலைக்குத் தேர்வாகாமல் போய்விட, ஐம்பத்தாறாவது நிலையில் இருப்பவனாக இருந்தாலும், அவனை நல்ல சம்பளம் கொடுத்து அள்ளிக்கொள்கின்றன நிறுவனங்கள்.

கல்வி என்பது நமக்கு என்னென்ன வழங்க வேண்டும்? நான்கு அடிப்படைத் திறன்களைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வைக் கண்டுபிடிக்கும் திறமையை அளிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் இது ஏன் இப்படி இருக்கிறது, இதை மாற்றினால் என்ன ஆகும் என்று ஆராய்ந்து தெளியும் புத்தியைத் தரவேண்டும். எதையும் லாஜிக்கலாக யோசித்து முடிவெடுக்க நமக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். புதுசாக ஒரு விஷயத்தை உருவாக்கும் திறமையை அளிக்க வேண்டும்.

ஆனால், நமது இன்றைய கல்வி இதையெல்லாம் செய்கிறதா? இல்லை. மனப்பாடம், தேர்வு, மதிப்பெண் இதிலேயே சுற்றிச் சுழன்றுகொண்டு இருக்கிறது.

நான் விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப்பள்ளியில் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் படிக்கும்போது, வாரம் ஒரு முறை மாணவர் சங்கக் கூட்டம் நடக்கும். அதில் மாணவர்கள் பெயர் கொடுத்துக் கலந்துகொண்டு பேச வேண்டும். நான் தவறாமல் பேசுவேன்.

ஆரம்பத்தில் எல்லாம், கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பதை என் மாமாவிடம் எழுதி வாங்கிக்கொண்டு, அதைத் தலைகீழ் மனப்பாடம் செய்துகொண்டு போய், அங்கே ஏற்ற இறக்கத்துடன் பேசிக் கைத்தட்டல் வாங்கிவிடுவேன். ஆனால், இதில் ஓர் ஆபத்து இருந்தது. பேசிக்கொண்டே இருக்கும்போது நடுவில் ஒரு வரி மறந்துவிட்டால் போச்சு! லிங்க் விட்டுப் போய்விடும். அடுத்து என்ன பேச வேண்டுமென்றே தெரியாது. மொத்தமும் மறந்து போய்விடும். இதனால் சபை நடுவே திருதிருவென்று முழிக்கும்படியாகி, கேலிப் பொருளாகிவிடுவோம். இப்படி இரண்டொரு முறை நடக்கவும், நான் சுதாரித்துக்கொண்டேன்.

என்ன பேச வேண்டும் என்பதை எழுதி வாங்கிக்கொள்வதோடு சரி; அதை ஒரு வரி கூட மனப்பாடம் செய்வதில்லை. மாறாக, அதிலிருந்து நாம் சொல்ல வருவது என்ன என்று புரிந்து கொள்வேன். முக்கிய வார்த்தைகளை மட்டும் ‘கீ வேர்ட்ஸ்’ ஆகக் குறித்துக்கொண்டு போய், கூட்டத்தில் எனக்குத் தெரிந்ததை என் சொந்த மொழியில், சொந்த வாக்கியங்களில் இயல்பாகச் சொல்லத் தொடங்கினேன். அதன்பிறகு மேடை பயமும் இல்லை; என் பேச்சில் மறதியும் தடுமாற்றமும் இல்லை.

இதுவே தேர்வுக்குப் பொருந்தும். ஒரு பதிலை மனப்பாடம் செய்துகொண்டு போனால், நடுவில் ஒரு வார்த்தை மறந்தாலும் மொத்த பதிலும் மறந்துவிடும். எனவே, மனனம் செய்யக் கூடாது. புரிந்துகொள்ள வேண்டும். நாம் புரிந்துகொண்டதைத் தெளிவாக விவரித்து எழுத நமக்கு மொழியறிவு முக்கியம். இங்கேதான் தாய்மொழி வழிக் கல்வி என்பது முக்கியமாகிறது. காரணம், வீட்டில் பேசிப் பழகும் மொழி தாய்மொழி. நம் எண்ணங்களைப் பிறருக்கு எளிதாகவும் தெளிவாகவும் புரியவைக்கும் மொழி அது. எனவே, பாடங்களைத் தமிழில் படித்தால் அதை மனப்பாடம் செய்ய வேண்டிய தேவையிருக்காது. மனதில் வீணான பாரமோ, குழப்பமோ இருக்காது.

தாய்மொழிக் கல்வி என்பதையே புரிந்துகொள்ளாத சிலர், ‘அறிவியலை எப்படித் தமிழில் படிப்பது? ஒவ்வொரு அறிவியில் வார்த்தைக்கும் தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வார்த்தைகளும் கடினமாக இருக்கும். அதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்காதா?’ என்கிறார்கள். தமிழில் படிப்பது என்பதற்கு இதுவா அர்த்தம்? ரேடியோவை ரேடியோ என்று சொல்லுங்கள். செல்போனை செல்போன் என்றே சொல்லுங்கள். அதற்கு ஏன் வீணாக வானொலி, கைபேசி, அலைபேசி என்று மண்டையைப் போட்டு உருட்டுகிறீர்கள்? மொழி என்பது தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்துவதற்கானது. பஸ்ஸும் ரேடியோவும் செல்போனுமே சுலபமாகப் புரிகிறபோது, அதை வேலைமெனக்கெட்டுத் தமிழ்ப்படுத்த வேண்டுமா?

அதே போல, விஞ்ஞானச் சொற்களையும் ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு என்றே சொல்லுங்களேன். கரியமில வாயு, பிராண வாயு என்று ஏன் பிராணனை வாங்குகிறீர்கள்? அவற்றைக்கொண்டு மாணவனுக்கு நீங்கள் என்ன புரியவைக்கப் போகிறீர்கள் என்கிற வழிமுறையைத்தான் தமிழில் விளக்க வேண்டுமேயல்லாது, மேலும் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கல்ல தமிழ்க் கல்வி.

மேல் நிலைப்படிப்பு வந்த பிறகுதான் விருப்பப்பாடம் என்று ஒரு மாணவன் தான் விரும்பிய படிப்பை எடுத்துப் படிக்க முடிகிறது. அதுவே தவறு என்பது என் கருத்து. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு மாணவனுக்கு ஒரு பாடத்தில் விருப்பம் இருக்கும்; வேறொன்றில் இருக்காது. ஐந்தாம் வகுப்பு வரை கணிதம், சரித்திரம், பூகோளம், அறிவியல் எனப் பலவற்றையும் ஓர் அறிமுகமாகக் கற்றுத் தந்துவிட்டு, அவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்று பார்த்து, ஆறாம் வகுப்பிலிருந்தே அந்தப் பாடத்தில் சிறப்புக் கவனம் செலுத்தவும், அதில் உச்ச நிலைக்குப் போகவும் பயிற்றுவிக்க வேண்டும்.

எனக்குச் சரித்திரம், பூகோளம் என்றால் வேப்பங்காய். தமிழும் கணிதமும் விருப்பமாக இருந்தது. என் பள்ளி மார்க்குகளைப் பார்த்தால் இந்த இரண்டிலும்தான் நான் தொடர்ந்து அதிக மார்க்குகள் வாங்கினேன். ஆனாலும், இன்றைய கல்வித் திட்டத்தால், தமிழ்ப் பாடமாக என்ன கொடுக்கப்பட்டிருந்ததோ அதை மட்டும்தான் நான் படிக்க முடிந்ததே தவிர, அதைத் தாண்டி என் தமிழறிவு விருத்தியாகவில்லை. கணிதமும் அப்படித்தான்.

இப்படி, ஒவ்வொரு மாணவனின் விருப்பத்துக்கும் திறனுக்கும் ஏற்ப அவனைப் பயிற்றுவிப்பதற்குரிய திட்டத்தைக் கல்வியாளர்கள் தீட்ட வேண்டும். தமிழில் சிறந்து விளங்கும் மாணவனைச் சொந்தமாய்க் கதை, கட்டுரைகள் எழுதிக் காட்டச் சொல்லவேண்டும். அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவனை அறிவியல் உண்மைகளைப் பிராக்டிகலாகச் செய்து பார்க்கச் சொல்லிப் பழக்க வேண்டும். சிறு சிறு கண்டுபிடிப்புகளைச் செய்யச் சொல்லி ஊக்குவிக்க வேண்டும். பூகோளத்தில் பிரியமுள்ள மாணவனுக்கு இயற்கைச் சூழல் உள்ள பல இடங்களுக்கும் சுற்றுலா அழைத்துப் போய் நேரடியாகக் காண்பிக்க வேண்டும். இதையெல்லாம் சாத்தியப்படுத்துவது எப்படி என்று கல்வியாளர்களும் அரசாங்கமும்தான் ஒன்றாக அமர்ந்து யோசித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.

கல்வியாளர்கள் மட்டுமின்றி, சமூக அக்கறையுள்ள பெரியவர்கள், உளவியல் நிபுணர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் உள்ள ஒரு குழுதான் இதைச் சரியான முறையில் சாத்தியப்படுத்த முடியும்.

ஏட்டுக் கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டி, செயல்முறைக் கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டால், தேர்வுகளும் மார்க்குகளும் தாமாகவே முக்கியமற்றுப் போய்விடும்.

தனக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்று சுய பரிசோதனை கொள்வதற்காகத்தான் தேர்வுகளும் மதிப்பெண்களும் உள்ளனவே தவிர, அதில் அச்சம் கொள்ள எதுவும் இல்லை என்பது மாணவனுக்குத் தன்னால் புரிந்துபோகும். இதையெல்லாம் செய்யாமல், மதிப்பெண் முறையை மாற்றி கிரேடு முறை கொண்டு வந்துவிடுவதால் மட்டும் எந்தப் பயனும் விளையப் போவது இல்லை.

என் பாட நோட்டில் வகுப்பாசிரியர் ஒருமுறை எல்லாப் பக்கங்களிலும் சிவப்பு மையால் ரைட் போட்டு, ‘குட்’, ‘குட்’ என்று போட்டுக் கொடுத்தார். எனக்கு ரொம்பச் சோகமாகிவிட்டது. அன்று முழுக்க நான் மிக வருத்தத்தில் இருந்தது இன்றைக்கும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. காரணம், அவரிடம் ‘குட்’ வாங்கியது அதுதான் முதல் தடவை. அதற்கு முன்னெல்லாம் அவர் ‘வெரி குட்’ என்றுதான் எனக்குப் போடுவார். டீகிரேடு ஆகிவிட்டால் வருத்தம் இருக்குமா, இருக்காதா?

எனவே, மீண்டும் சொல்கிறேன்... தேர்வுகளும் மதிப்பெண்களும் ஒரு விஷயமே இல்லை. கல்வி முறை மாறினால், தேர்வு முறைகளும் மதிப்பெண் முறைகளும் தன்னால் மாறிவிடும்.

காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அந்த நோய்க்கு மருந்து கொடுக்க வேண்டுமே தவிர, காய்ச்சலுக்கு வெறுமே ஜுர மாத்திரை முழுங்கிப் பயனில்லை.

சரியான பதில்களைச் சொல்வதற்கு உங்கள் குழந்தைகளைப் பழக்காதீர்கள்; சரியான கேள்விகளைக் கேட்கப் பழக்குங்கள்!

5 comments:

இந்தப் பதிவிலும் நீங்கள் மதிப்பெண் முறை இருக்கலாம் என்றுதான் சொல்லியிருக்கிறீர்களே தவிர, அது மாணவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் என்பதை ஒப்புக்கொள்ளவே இல்லையே! 99 மதிப்பெண் பெற்றவர் புத்திசாலி, 98 மதிப்பெண் பெற்றவர் முட்டாளா? இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது!
- கிருபாநந்தினி, மைசூர்
 
சரியான பதில்களைச் சொல்வதற்கு உங்கள் குழந்தைகளைப் பழக்காதீர்கள்; சரியான கேள்விகளைக் கேட்கப் பழக்குங்கள்!
////

அருமை...
 
என் கருத்து இதுதான்!
என்ன முறையை வேண்டுமானாலும் கடைப்பிடியுங்கள்! ஆனால் தகுதிவாய்ந்தவர்களை இனம் கண்டு, பொறுப்புக்களில் அமர்த்தும் விதமாய் அது இருக்கட்டும்.
 
//விஞ்ஞானச் சொற்களையும் ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு என்றே சொல்லுங்களேன். கரியமில வாயு, பிராண வாயு என்று ஏன் பிராணனை வாங்குகிறீர்கள்

Tamil vali kalvi yengira peyaril Kuttyai kulapugiravargalukku nanraga kuttu vaithulleergal..Peyargalai tamil paduthamal vilakkagal mattum tamilil irundhal uruppadiyaga irukkum..UM.Krish
 
* கிருபாநந்தினி, தேர்வு முறை, மதிப்பெண் முறை என்பதெல்லாம் மாணவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பெரியவர்களாகிய நாம் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையைக் குலைக்கச் செய்கிறது.கணிதத்தில் 100 மதிப்பெண் வாங்காமல் 99 வாங்கிய தன் பிள்ளையைப் போட்டு அடிஅடியென்று அடித்த ஒரு தகப்பனை எனக்குத் தெரியும். அதுதான் தவறே தவிர, மதிப்பெண் முறையே தவறு அல்ல. தவிர, கல்வித் திட்டம் மாறும்போது தேர்வு, மதிப்பெண் பற்றிய நமது மதிப்பீடுகளும் மாறும் என்பதே என் கருத்து.

* நன்றி பட்டர்ஃப்ளை!

* சரியாகச் சொன்னீர்கள் லதானந்த்ஜி!

* பின்னூட்டத்துக்கு நன்றி யு.எம்.கிரிஷ்! தமிழ்ப்படுத்துகிறேன், தமிழ்ப்படுத்துகிறேன் என்று இங்கே ரொம்பப் பேர் தமிழைப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.