உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, July 30, 2009

கண்ணனிடமிருந்து ஒரு கடிதம்!

ன்புள்ள திரு.ரவிபிரகாஷ் அவர்களுக்கு,

வணக்கம். ‘உங்கள் ரசிகன்’ என்கிற உங்களின் வலைப்பூவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதில், ‘கண்ணன் எத்தனைக் கண்ணனடி’ என்கிற தலைப்பிலான பதிவைப் படித்துக்கொண்டே வந்தவன் ஓரிடத்தில் சட்டென்று பரவசமாகிவிட்டேன். எதிர்பாராத இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டிருந்த கண்ணன்களில் நானும் ஒரு கண்ணன்.

ஆமாம். நான் சிறு வயதில் சங்கீதமங்கலம் கிராமத்தில் தங்களுடன் பழகிய கண்ணன். தங்களின் பதிவைப் படித்தபோது, கால யந்திரத்தில் ஏறி, 30 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய காலத்துக்கே போய்விட்டாற் போன்ற ஓர் இனிமையான, மகிழ்ச்சியான உணர்வில் நான் திளைத்தேன்.

ஒரு சிறு திருத்தம். என் இனிஷியல் ‘கே’ இல்லை. ‘ஜி’. என் அப்பா பெயர் கோவிந்தன். தவிர, என் அசல் பெயர் விஜய்கிருஷ்ணன். ஆனால், கண்ணன் என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள்.

நான் தொடர்ந்து ஆனந்த விகடன் வாசித்து வருகிறேன். அதில் உங்கள் பெயரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்னோடு பழகிய ரவிதான் இந்த ரவிபிரகாஷ் என்று என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க இயலவில்லை. உங்களை வெறும் ரவியாக மட்டுமே எனக்குத் தெரியும். தவிர, வலைப்பூவின் முகப்பில் போட்டிருக்கும் உங்கள் புகைப்படமும் எனக்குப் பரிச்சயமானதாக இல்லை. என் மனதில் இருக்கிற உங்கள் முகத்தின் பிம்பம் வேறு.

அப்போது நீங்கள் விழுப்புரம் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்துவிட்டு, கிராமத்துக்கு வந்து உங்கள் பெற்றோருடன் தங்கி, அருகில் உள்ள அனந்தபுரம் டவுனில் தட்டச்சுப் பயிற்சியில் சேர்ந்திருந்தீர்கள் என்று ஞாபகம். ராஜகோபால் செட்டியார் கடைக்குப் பக்கத்தில் உள்ள பாய் டெய்லர் கடைதான் நாம் வழக்கமாகச் சந்திக்கும் இடம்.

அனந்தபுரம் பனமலை குமரன் தியேட்டரில் ‘ஐந்து லட்சம்’, ‘அன்பளிப்பு’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’ எனப் பல படங்களை நாம் இருவரும் ஒன்றாகப் பார்த்து ரசித்திருக்கிறோம். ‘அன்னக்கிளி’ படம் விழுப்புரத்தில் வெளியானபோது, நாம் இருவரும் கிளம்பிப் போய்ப் பார்த்தோமே, ஞாபகமிருக்கிறதா? எனக்குத் தெரிந்து இளையராஜாவின் அந்த முதல் படத்திலிருந்தே நாம் இருவரும் அவரின் தீவிர ரசிகர்களாகிவிட்டோம். அப்போதெல்லாம் நீ ‘சாமக்கோழி, ஏ... கூவுதம்மா’ பாடலைத்தான் அடிக்கடி பாடிக்கொண்டு இருப்பாய். அதை விட்டால், ‘ஒரு மஞ்சக் குருவி, என் நெஞ்சைத் தடவி...’ பாடல். ‘ஓரம்போ ருக்குமணி வண்டி வருது’ பாடல் தமிழ்நாட்டையே கலக்கிக்கொண்டு இருந்த காலம் அது. எங்கே திரும்பினாலும், ஸ்பீக்கர்கள் ‘ஓரம்போ... ஓரம்போ’ என்று கத்திக்கொண்டே இருக்கும்.

’கல்கி’ பத்திரிகையில் உன்னுடைய சிறுகதை ஒன்று முதன்முதலாக வெளியானபோது உன் அப்பாவுக்கு அத்தனை மகிழ்ச்சி! தபாலில் வந்திருந்த கல்கி பத்திரிகையை உன் அப்பா எடுத்துக்கொண்டு போய், உள்ளூர் சிவன் கோயில் குருக்கள், தெரிந்தவர்கள், சக ஆசிரியர்கள்... என் தந்தையார் உள்பட கிட்டத்தட்ட சங்கீதமங்கலம் கிராமத்தில் இருந்த அத்தனை பேருக்குமே காண்பித்துப் பெருமையாகச் சொல்லி மகிழ்ந்தது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. சில மாதங்கள் கழித்து உனது இன்னொரு கதை கூட வேறு ஒரு பத்திரிகையில் வந்ததென்று ஞாபகம். உன் நண்பன் என்கிற முறையில் எனக்குமே அது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. எனக்கும் கதை எழுதக் கற்றுக்கொடுக்கும்படி கேட்பேன். மனதில் தோன்றுவதை எழுத வேண்டியதுதான்; அதில் கற்றுக் கொடுக்க ஒன்றுமில்லை என்பாய்.

75 முதல் 80 வரையில், கிட்டத்தட்ட நாலைந்து வருடங்கள் நீங்கள் சங்கீதமங்கலத்தில் தங்கியிருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அப்பாவுக்கு சங்கீதமங்கலம் கிராமப் பள்ளிக்கூடத்தில் மட்டுமல்லாது, க்லயாணம்பூண்டி, நங்காத்தூர், அன்னியூர் எனப் பக்கத்துப் பக்கத்து ஊர்களிலேயே மாறுதல் கிடைத்ததால், குடும்பத்தை மாற்றாமல் ஒரே ஊரிலேயே அத்தனை வருடங்கள் தங்கியிருக்க முடிந்ததென்று நினைக்கிறேன்.

நீ உள்ளூர் மற்றும் வெளியூர் கோயில் விழாக்களில் கலந்துகொண்டு புராணச் சொற்பொழிவுகள் செய்வதை நான் ஆச்சரியத்தோடு கேட்டு ரசித்திருக்கிறேன். புராணப் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு டாண் டாணென்று நீ பேசியதை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை.

அதன்பின், உன் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட்டது. நீயும் விழுப்புரம் சென்று செட்டிலாகிவிட்டாய் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேல் ஆகியிருக்கும், நீங்கள் கிராமத்தை விட்டுச் சென்று. அப்படி ஒரு சமயத்தில்தான் உன்னை உன் தாயாரோடு நான் கடலூரில் வைத்துப் பார்த்தேன். ரொம்பக் காலம் கழித்து உன்னைக் கண்டதும் சந்தோஷமாகி ஓடி வந்து உன் கையைப் பற்றிக் குலுக்கிப் பேசினேன். எனக்கு உன்னை தூரத்தில் பார்த்ததுமே அடையாளம் தெரிந்தது. ஆனால், உனக்கு என்னைத் தெரியவில்லை. அத்தனை தூரம் பழகிய என்னை மறந்துவிட்டாய் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஞாபக சக்தி உனக்கு அதிகம். அதனால்தானே ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று உன்னால் தட்டுத் தடுமாறாமல் சொற்பொழிவுகள் செய்ய முடிந்தது? அப்படியும் என்னை மறந்துவிட்டிருக்கிறாய் என்றால், நீ ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் கொடுக்கிற மரியாதை அதுதான் என்று எனக்குக் கோபமாகிவிட்டது. நானாவது என்னை யாரென்று அப்போது தெரியப்படுத்திக்கொண்டு இருக்கலாம். என்னவோ ஒரு அசட்டுக் கோபம்.

இந்த விஷயத்தை இத்தனைக் காலமும் நினைவு வைத்திருந்து எழுதியதிலிருந்து, நீ பழைய நட்பை மறக்கவில்லை என்பது புரிகிறது. உன்னை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறேன். ஆனால், உன் அலுவலகத்திலோ, என் அலுவலகத்திலோ வைத்துச் சந்திக்க விரும்பவில்லை. அப்படிச் சந்தித்தால், அது பழைய நண்பர்களின் இனிமையான சந்திப்பாக இல்லாமல், ஏதோ இரண்டு அலுவலர்களின் சந்திப்பாகத்தான் அமையும். கீழே என் முகவரியைக் கொடுத்துள்ளேன். நான் இங்கே சென்னையில், பெரம்பூரில்தான் இருக்கிறேன். அவசியம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வரவும். வருவதற்கு முன் எனக்கு போன் செய்துவிட்டு வர வேண்டுகிறேன்.

எனக்குத் திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள். அகிலா, ஆர்த்தி. பெரிய ஃபுல்ஸ்டாப்! மேற்கொண்டு இ, ஈ-க்களுக்கு முயற்சி செய்யவில்லை. பெரியவள் அகிலாவுக்குத் திருமணமாகி, ஹைதராபாதில் இருக்கிறாள். அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். சாய்கணேஷ் என்று பெயர். ஆமாம், நான் தாத்தாவாகிவிட்டேன். சின்னவள் கல்லூரியில் செகண்ட் இயர் படிக்கிறாள்.

நீ நலமாக இருக்கிறாயா? மரியாதையாக ஆரம்பித்து, ஏக வசனத்துக்கு என்னையுமறியாமல் மாறிவிட்டதற்கு மன்னிக்கவும். அப்பா, அம்மா இருவரும் நலமா? விவரமாகக் கடிதம் அனுப்பவும்.

பல காலம் கழித்து ஒரு பழைய நண்பனைக் கண்டெடுப்பதுதான், உள்ளதிலேயே மிகவும் சந்தோஷமான விஷயம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.

உன் வரவை ஆவலோடு எதிர்பார்க்கும்,

உன் அன்புள்ள,

கோ.கண்ணன்.

*****

குறிப்பு: சென்ற ஞாயிறன்று, கண்ணன் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பியிருந்த இ-மெயிலின் தமிழாக்கம் இது.

2 comments:

வண்ணத்துப்பூச்சியார்:

பதிவு அருமை.
எனக்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கும் அவருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
பிளாக் எழுத விருப்பமில்லை என்று கூறும் சிலருக்கு இந்த பதிவை படிக்க சொல்ல வேண்டும்.
வாழ்த்துகள் சார்.
 
நன்றி பட்டர்ஃப்ளைஜி!

என் இன்னொரு வலைப்பூவான ‘என் டயரி’யின் புதுத் தோற்றத்தை நீங்கள் பாராட்டினாலும் பாராட்டினீர்கள், என் மகள் ஷைலஜா உற்சாகமாகி இந்த வலைப்பூவுக்கும் புதுச் சட்டை போட்டுவிட்டாள். எனக்குத்தான் இந்த சூட்சுமமெல்லாம் பிடிபடமாட்டேனென்கிறது!