உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, July 03, 2009

சாவியின் அணிந்துரை!

நான் ஏன் சிறுகதைத் தொகுப்புப் புத்தகம் போடவில்லை என விளக்கமாக ஒரு பதிவினை என் இன்னொரு பிளாகில் ‘தொகுதிக்கு வேணும் ஒரு தகுதி’ என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அதில், இருபது சிறுகதைகளை இருபது பிரபலங்களிடம் தந்து ஒவ்வொன்றுக்கும் விமர்சனம் கேட்டு வாங்கியதையும், இருபது கதைகளையும் என் குருநாதர் சாவி அவர்களிடம் தந்து அணிந்துரை எழுதி வாங்கியதையும் சொல்லியிருந்தேன். பின்னர், என்னுடைய கோபத்தால் அந்தப் புத்தகத் தொகுப்பு வெளிவராமல் போனது பற்றியும், நான் பதிப்பகத்தாரிடம் தந்த தாஸ்தாவேஜுகள் அனைத்தையும் திரும்ப வாங்கிக்கொண்டு வந்து, ஒரு மூட்டையாகக் கட்டிப் பரண் மேல் போட்டுவிட்டேன் என்பதையும் கூட அதில் குறிப்பிட்டிருந்தேன்.

எனது அந்தப் பதிவினைச் சமீபத்தில் என் தந்தையார் படித்துவிட்டு, சாவி எழுதித் தந்த அந்த முன்னுரையைப் படிக்க விரும்பி, தேடிப் பார்த்துத் தரும்படி ஆவலுடன் கேட்டார். மூக்கில் கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு, புழுதியும் ஒட்டடையும் படிந்து கிடந்த பரண் மீதிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே இறக்கி வைத்து, போன ஞாயிற்றுக்கிழமைதான் அவற்றைக் கண்டெடுத்தேன்.
சாவி சார் தம் கைப்பட எழுதித் தந்த அந்த அணிந்துரையை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நானே மீண்டும் இப்போதுதான் படிக்கிறேன். படிக்கும்போது அவரின் ஞாபகங்கள் மேலிட, நெஞ்சம் நெகிழ்கிறது; கண்கள் கசிகின்றன.

இதோ, அவர் எழுதித் தந்த அணிந்துரை:

“எண்பத்தைந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நான், பத்திரிகைத் துறையில் ஏறத்தாழ அறுபது ஆண்டுக் காலம் உறவாடியிருக்கிறேன். எத்தனையோ பேர் என்னிடம் பயிற்சி பெறவும், பணியாற்றவும் வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வந்த வேகத்திலேயே திரும்பியும் போயிருக்கிறார்கள். காரணம் என்ன என்று அவர்களைக் கேட்டால், ‘ஸாரோட முன்கோபம்’ என்பார்கள். இருக்கலாம். ஆனால், உண்மையில் காரணம் இல்லாமல் எனக்குக் கோபம் வருவதில்லை. அந்தக் காரணம்கூட என்னிடம் பணிபுரிபவர்கள் நல்ல முறையில் வரவேண்டும், பத்திரிகைத் தொழிலைச் சரியாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான்.

இப்படி என் வட்டத்தில், நான் பார்த்த இளைய தலைமுறை பத்திரிகைத் தொழில் ஆர்வலர்களில் என்னைப் பளிச்சென்று கவர்ந்த ஒருவன் ரவிபிரகாஷ்தான். சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அதை அப்படியே செயல்படுத்தும் அவனது ஆற்றல் என்னைப் பிரமிக்க வைத்தது. இன்று, திறமைமிக்க ஒரு முழு எழுத்தாளனாக வளர்ந்திருக்கும் ரவிபிரகாஷை நான் ‘அவன்’ ‘இவன்’ என்று பேசுவது மரியாதைக்குறைவால் அல்ல. ரவி மீதுள்ள அன்பால், அபிமானத்தால், பாசத்தால், நெருக்கத்தால்!

நான் நடத்திய சாவி இதழில் அவன் உதவி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த புதிதில், ஒரு நாள் என் பார்வைக்கு வரவேண்டிய ப்ரூஃபை என் அனுமதி இல்லாமலேயே அவனே படித்துச் சில திருத்தங்களைச் செய்து எனக்கு அனுப்பி வைத்தான். ‘ஆசிரியருக்குப் போகவேண்டிய ப்ரூஃபை யாரைக் கேட்டு நீ பார்த்தாய்? அவரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளப்போகிறாய்!’ என்று மற்ற உதவி ஆசிரியர்கள் அவனைப் பயமுறுத்தியதாகப் பின்னர் அறிந்தேன். ஆனால், அந்த ப்ரூஃபை அவன் திருத்தியிருந்ததைப் பார்த்து நான் கோபப்படவில்லை. மாறாக, மகிழ்ச்சிதான் அடைந்தேன். காரணம், நானே திருத்தியிருந்தால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்குச் சிறப்பாகவும் கச்சிதமாகவும் இருந்தன அவனுடைய திருத்தங்கள்.

‘சாவி’யில் ரவி பணியாற்றியவரை, ஒவ்வொரு நாளும் நானும் அவனும் பத்திரிகை சம்பந்தமாகச் சந்தித்துக்கொண்டபோதெல்லாம் அவனுள் மண்டிக்கிடந்த பத்திரிகை ஆசிரியர் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அதைக் கண்டு எனக்கு ஒரு சிறந்த வாரிசு உருவாகி வருவதாகவே உணர்ந்தேன்.

அற்புதமான உழைப்பாளி அவன். பல நாட்களில், நான் இரவு தூங்கப் போகும்போது பார்த்தால், அவன் கருமமே கண்ணாக இருந்து வேலை பார்த்துக்கொண்டு இருப்பான். காலையில் எழுந்து பார்த்தால், அப்போதும் வேலைதான். அண்ணா நகரில் என் வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த நாட்கள் அவை. இப்படி ஒரு ‘வொர்க்ஹாலிக்’கா என்று நான் வியந்துபோயிருக்கிறேன்.

கதை எழுதுவதில் கவனம் செலுத்தினால் பத்திரிகை வேலையில் கவனம் சிதறும் அல்லது குறையும் என்பதால், என்னிடம் பணிபுரிபவர்களை நான் அதிகம் எழுத அனுமதிப்பதில்லை. ஆனால், ரவிபிரகாஷை என்னால் அப்படி ‘அமுக்கி வைக்க’ முடியவில்லை. ஏனெனில், அவன் எழுதிய சில கதைகள் ‘இவற்றை வெளியிட்டே ஆக வேண்டும்’ என்ற கட்டாயத்தை எனக்கு ஏற்படுத்தின.

தனது உழைப்பாலும் ஜர்னலிஸத் திறமையாலும் கணிசமான உயரத்தில் ஓங்கி நிற்கும் ரவிபிரகாஷ் என்னால் வளர்க்கப்பட்டவன் என்பதை எண்ணி இறும்பூது எய்துகிறேன். இன்று அவன் ஆனந்தவிகடன் ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் தலைமையில் இயங்கும் ஆசிரியர் குழாமில் பங்கு பெற்றுச் சிறப்பாகப் பணியாற்றி வருவது கண்டு பெருமைப்படுகிறேன்.

ஒரு பெண்ணைப் பெற்ற தந்தை, அவளை நல்ல முறையில் வளர்த்து, ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட வைக்கும்போது எத்தனை மகிழ்ச்சியும் பெருமையும் அடைவாரோ, அந்த நிலையில் நான் ஆனந்தப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். அத்துடன், நான் வாழ்க்கைப்பட்ட புக்ககத்துக்கே அவனும் போய்ச் சேர்ந்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!

ரவிபிரகாஷ் எழுதிய இருபது கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் எந்தக் கதை ‘ஒசத்தி’, எது ‘சுமார்’ என்று பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்கு எல்லாமே உயர்ந்த கதைகளாக அமைந்துள்ளன. வெல்லப் பிள்ளையாரில் எந்தப் பக்கம் ருசி அதிகம், எந்தப் பக்கம் ருசி குறைவு என்று சொல்ல முடியாதல்லவா, அதைப் போலத்தான்!

தெளிவான எளிய நடையில், சரளமாகக் கதை சொல்லும் பாணியில் கைதேர்ந்த ரவிபிரகாஷ்! சபாஷ்! கீப் இட் அப்!

- சாவி.

குறிப்பு: என் சிறுகதைத் தொகுப்பு வெளிவராததில் எனக்கொன்றும் பெரிய வருத்தமில்லை. சாவி உயிருடன் இருக்கும்போதே அவரின் இந்த அணிந்துரையோடு இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து ஆசி பெற முடியவில்லையே என்கிற ஒரே வருத்தம்தான்!

5 comments:

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல...
 
"என் இன்னொரு பிளாகில் ‘தொகுதிக்கு வேணும் ஒரு தகுதி’ என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தேன்"

உங்கள் பழைய பிளாக் திறக்க மாட்டேங்குது. இங்கே ஒரு link கொடுங்களேன்.
 
எனக்கு ஒரு மனக் குறை!
சில பதிவுகளில் சஸ்பென்ஸ் வைத்துவிடுகிறீர்கள். விடை சொல்வதில்லை.
இந்தப் பதிவில் -------
ஏன் அதை வெளியிடவில்லை என்பது மண்டை காய வைக்கிறது
 
* நன்றி பட்டர்ஃப்ளை!
* ‘என் டயரி’ பிளாகுக்கான லின்க்கை உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பினேனே, பார்த்தீர்களா திரு. நடராஜன்? ஒரு ஆர்வம்தான்!
* ‘இந்தப் பதிவில் ........ ஏன் அதை வெளியிடவில்லை என்பது மண்டை காய வைக்கிறது’ என்று எழுதி, என் மண்டை காய வைத்துவிட்டீர்கள் லதானந்த்ஜி! எதை நான் வெளியிடவில்லை? சொன்னால் தேவலை!
 
ரவிப்ரகாஷ் சார்,

சாவி அணிந்துரை அளித்த உங்கள் சிறுகதை தொகுப்பின் பெயர் என்ன ?
அது எங்கு கிடைக்கும் ?