உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, August 10, 2016

சாவி-100 (X)

சாவி-100 பதிவுகளின் தொகுப்பு இங்கே நிறைவு பெறுகிறது.  ஆனால், என் மனம் நிறைவு பெறவில்லை. முன்பே சொன்னது போல, என் முன்னோர் செய்த புண்ணியம்தான்  சாவி சாரிடம் என்னைக் கொண்டு வந்து சேர்த்தது என நம்புகிறேன். என் எதிர்காலத்தைப் பற்றி மிகக் கவலை கொண்டிருந்த என் தந்தையார் நான் பெரியவர் சாவியின் சிஷ்யனாகச் சேர்ந்துவிட்டேன் என்பதை அறிந்த பின் கவலையை விட்டு, தைரியம் வரப் பெற்றார். என் வாழ்க்கையின் முக்கியத் திருப்புமுனை என நான் கருதுவது ‘சாவி’ பத்திரிகையில் பெரியவர் சாவி அவர்களின் நேரடி சீடனாகச் சேர்ந்ததைத்தான். என் இரண்டாவது திருப்புமுனை, ஆனந்த விகடனில் சேர்ந்து, பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் அபிமானத்துக்கு ஆளானது. 

எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களைப் பற்றி, ‘என் புகுந்த வீடு’ தொடர் பதிவுகள் எழுதி வருகிறேன். தொடர்ந்து எழுதுவேன். அதே போல் ‘என் பிறந்த வீடு’ என்னும் தலைப்பில், நான் சாவி பத்திரிகையில் சேர்ந்ததில் தொடங்கி, அவருடனான அனுபவங்களை வாரந்தோறும் எழுதவிருக்கிறேன்.

இரண்டு தொடர்களையும் இனி இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதிட, போதிய நேரமும் உடலில் தெம்பும் உள்ளத்தில் உற்சாகமும் தந்து ஆசீர்வதித்து அருளுமாறு, மகாஸ்ரீ அரவிந்த அன்னையை மனம் கனிந்து வேண்டுகிறேன்.

இனி, சாவி-100 பதிவுகளின் நிறைவுத் தொகுப்பு:

91) அந்தக் காலத்துப் பத்திரிகைகளில் ‘சந்தனு சித்ராலயா’ விளம்பரங்கள் வந்தது சீனியர்கள் பலருக்கும் தெரிந்திருக்கலாம். மதுரையில் வசித்த ஓவியர் சந்தனுவின் ஓவியத் திறமையை அறிந்து, அவரை சென்னைக்கு வரவழைத்து அதிக சம்பளத்தில் தன் ‘வெள்ளிமணி’ பத்திரிகைக்கு கார்ட்டூனிஸ்ட்டாக நியமித்தார் சாவி.

92) போட்டோ போலவே வாஷ் டிராயிங் செய்வதில் வல்லவர் ஓவியர் வர்ணம். அவரை அழைத்து வந்து, பிரபல நாவலாசிரியர்களின் கதைகளுக்கு வரையச் சொல்லி, புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததும் சாவிதான்.

93) ‘கோல்டன் பீச்’ உருவாக்கத்தில் சாவிக்கும் முக்கியப் பங்கு உண்டு. வி.ஜி.பன்னீர்தாஸுக்குப் பல அரிய யோசனைகளைச் சொல்லி, தங்கக் கடற்கரையை வடிவமைத்தவர் சாவி. அவர் தமது கையால் அங்கு நட்ட தென்னைகள் இன்னமும் அங்கு இருக்கக்கூடும்.

94) ‘வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது’ என அந்தக் காலத்தில் வட இந்தியாவைப் புகழ்ந்தும், தென்னிந்தியாவை மட்டம் தட்டும் விதமாகவும் அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும்  சொல்வது வழக்கம். இதைச் சகித்துக்கொள்ள முடியாத சாவி, இந்த எண்ணத்தை மாற்ற விரும்பினார்.  ஜீவ நதிகளோ, கனிம வளங்களோ அதிகம் இல்லாத நிலையிலும், இங்கே தமிழ்நாட்டில்தான் அதிகமான தொழில்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டும் விதமாக, முக்கியமான தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்த்து, அவற்றின் அதிபர்களை பேட்டி கண்டு, பல கட்டுரைகள் எழுதினார் சாவி. அந்தத் தொடர் கட்டுரைகளுக்கு அவர் கொடுத்த தலைப்பு, ‘தெற்கு வளர்கிறது!’.

95) சாவி சாரின் முன் பற்களுக்கு இடையில் சிறிய இடைவெளி இருக்கும். இயக்குநர் சரண், தன் வீட்டில் சாவி சாரின் படத்தைத் தனக்கே உரிய குறும்புடன் (ஆனந்த விகடனில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணியாற்றியவரல்லவா?!) அவரின் முன்பற்களின் இடைவெளியை ‘சாவி’ (Key) உருவமாகக் கற்பனை செய்து வரைந்து வைத்திருந்தார். இதைப் பற்றி சாவி சாரின் இரண்டாவது மகள் ஜெயஸ்ரீ தன் அப்பாவிடம் சொல்ல, சாவி சார் என்னிடம் ‘அந்தப் படத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டு வாயேன்’ என்றார். நான் போய் சரணிடம் கேட்டதும், அவர் பதறிவிட்டார். ‘ஐயையோ! சாவி சார் தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறார்’ என்று தயங்கியபடியே அதை என்னிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால், சாவி சார்தான் ரசனையின் நாயகராயிற்றே! சரணின் கற்பனையை வெகுவாக ரசித்ததோடு, தனது ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்துக்கு அட்டைப்படமாக அதை வைத்து லேஅவுட் செய்யச் சொல்லிவிட்டார்.

96) பண்பட்ட எழுத்தாளர் லக்ஷ்மியின் மீது சாவிக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஆனந்த விகடன் காலத்துப் பழக்கம். ‘மோனா’ மாத நாவல் தொடங்கியபோது, முதல் நாவலாக லக்ஷ்மி எழுதிய கதையைத்தான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தார் சாவி. ஆனால், அப்போதைய சூழலில் உடனடியாக நாவல் எழுதித் தரமுடியாத நிலை லக்ஷ்மிக்கு. இருந்தாலும், மோனா வெளியீட்டை நிறுத்தி வைத்து, சில மாத காலத்துக்குப் பின்பு, லக்ஷ்மியிடமிருந்து கதை கிடைத்த பின்பு, தான் எண்ணியபடியே அதைத்தான் மோனாவின் முதல் நாவலாக வெளியிட்டார் சாவி. அது, லக்ஷ்மியின் ‘உறவுகள் பிரிவதில்லை’.

97) எழுத்தாளர் சுஜாதாவின் அபார எழுத்துத் திறமை பற்றிச் சொல்லும்போது, ‘அவர் சலவைக் கணக்கு எழுதினால்கூட பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரம் செய்யத் தயாராக இருக்கும்’ என்று புகழ்ந்து சொல்வது இன்றைக்கும் பத்திரிகை உலகில் வழக்கமாக இருக்கிறது. இதற்கு வித்திட்டவர் சாவிதான். சுஜாதாவின் சலவைக் கணக்குக் குறிப்பைக் கேட்டு வாங்கி, ஒரு தமாஷுக்காக சாவி தமது பத்திரிகையில் வெளியிட்டதிலிருந்துதான் சுஜாதாவின் எழுத்தாற்றலைப் புகழ்வதற்கான ஒரு வழிமுறையாகவே அது ஆகிவிட்டது.

98) இன்றைக்கு, பிறக்கிற குழந்தைகள் உள்பட கையில் உள்ள ஸ்மார்ட் போனில் நெட் பிரவுஸிங் செய்கிற கணினி யுகமாகிவிட்டது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு, இன்டர்நெட் பயன்பாடு மெதுமெதுவே தலைகாட்டிக்கொண்டிருந்த நேரத்தில், அதை எப்படிக் கையாள்வது என்று பலரும் திணறிக்கொண்டிருந்த கால கட்டத்தில், தமது 85-வது வயதில், தனக்கென்று வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வைத்துக்கொண்டு, அதில் கம்போஸ் செய்யப் பழகியதோடு, இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பவும் கற்றுக் கொண்டுவிட்டார் சாவி என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்!

99) நட்புக்கு மரியாதை கொடுப்பதில் சாவிக்கு நிகர் வேறு யாருமில்லை. 2001-ம் ஆண்டு,  ‘சாவி-85’ புத்தக வெளியீட்டு விழா, சென்னை, நாரத கான சபாவில் நடந்தது. புத்தகத்தை வெளியிட்டவர் சாவியின் நெருங்கிய நண்பர் கலைஞர் மு. கருணாநிதி. புத்தகத்தைப் பற்றிப் பேச எழுந்த கலைஞரைத் தடுத்து, “நீங்கள் பேசி முடித்தால் கூட்டம் கலைந்துவிடும். அதனால், முதலில் நான் நன்றியுரை சொல்லிவிடுகிறேன்” என்ற சாவி, கலைஞருக்கும் தனக்குமான ஆழ்ந்த நட்புக்கு ‘கர்ணன் - துரியோதனன்’ நட்பை உதாரணமாகக் காட்டி, தொண்டை கரகரக்க பரவசமும் நெகிழ்ச்சியுமாகப் பேசிக்கொண்டு இருந்தபோதே, ‘மார் வலிக்கிறது’ என்றபடி மேடையிலேயே மயங்கி விழுந்தவர்தான்; அதன்பின், பதினைந்து நாட்களுக்கு மேல் ‘அப்போலோ’ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ‘கோமா’ ஸ்டேஜிலேயே இருந்து, கடைசி வரை கண் திறவாமலே அமரரானார்.

100) எழுத்தாளர் மணியன் ஒருமுறை சொன்னதுபோல், ‘சா’ என்றால் சாதனை, ‘வி’ என்றால் விடாமுயற்சி என வாழ்ந்துகாட்டிய பெருமகனார் பத்திரிகையுலகப் பிதாமகர் சாவி.    

(அடுத்த வாரத்திலிருந்து ‘என் பிறந்த வீடு’ தொடர் பதிவுகள் தொடங்கும்.)

8 comments:

வணக்கம் ரவி ப்ரகாஷ் . அப்பாவின் நூற்றாண்டை ரொம்பவும் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் . இதைவிட அப்பாவின் வாழ்க்கை பக்கங்களை சிறப்பாக எழுதமுடியாது. உங்களுடைய ஆத்மார்த்தமான மரியாதை வெளிப்படுகிறது. எழுத்தில் அநுபவமும் மெருகும் மிளிர்கிறது.தெரிந்த தகவல்களாக இருந்தாலும் (எங்களுக்கு) மிக ஸ்வாரஸ்யமாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.மனம் நெகிழச் செய்து விட்டீர்கள். அந்த காலகட்டத்திற்கே எங்களை அழைத்துச் சென்று நிகழ்வுகள கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள்.Enjoying every bit of it. words are not enough to thank you for making Appa's centenary a most memorable one. அப்பாவின் ஆசிகள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. பிறந்த வீடு ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
 
சாவி தொடர் நிறைவு. ஆம் நிறைவாகத்தான் இருந்தது.
 
பற்பல சுவையான செய்திகளும்...
பல அறியாத புதிய தகவல்களும்...

"சாவி 100" புத்தகம் எப்ப சார் ரெடி?
 
தொடர்ந்து வாசித்து வருகிறேன் இந்த தொடரை. அருமையான விறுவிறுப்பான தொகுப்பினை வாசித்த அனுபவம். நன்றி ஸார்.
 
மிக நெகிழ வைத்த பதிவுகள். ஒரு பெருந்தன்மை படைத்த பெரிய மனிதரைப் பற்றிய
கருத்துகளை,எழுத்துகளை மீண்டும் அந்தக் காலத்துக்குப் போகச் செய்துவிட்டது. நன்றி
திரு ரவி பிரகாஷ்.
 
அனைத்து பகுதிகளையும் தொடர்ந்து வாசித்து, பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். எத்தனை எத்தனை தகவல்கள்...... என் பிறந்த/புகுந்த வீடு பதிவுகளைத் தொடர காத்திருக்கிறேன்.
 
பத்திரிக்கையுலக பிதாமகரை பற்றி நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது! அவர் வழிக்காட்டுதல் என் போன்றோருக்கு கிடைக்காமல் போய்விட்டதை எண்ணி வருத்தமும் ஏற்படுகின்றது!
 
எங்கள் ப்ளாகின் "சாவி" பற்றிய பதிவிலிருந்து இங்கே வந்தேன். மற்றப் பதிவுகளையும் படிக்கணும்.