உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, October 14, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 1

போகமுடியுமா, முடியாதா?

சிங்கப்பூர் என்றதுமே உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? எனக்குச் சட்டென்று, “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், நாலே ஆண்டுகளில் தமிழ்நாட்டை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுகிறேன்” என்று கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தேர்தலுக்குத் தேர்தல் நம் அரசியல்வாதிகள் விடும் வாய்ச்சவடால் வாக்குறுதிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. ‘அப்படியென்ன சிங்கப்பூர் உசத்தி? ஏன் இந்த அரசியல்வாதிகள் எல்லாரும் சொல்லிவைத்தாற்போல் தமிழ்நாட்டை அமெரிக்காவாக ஆக்கிக் காட்டுகிறேன் என்றோ, லண்டன் மாதிரி ஆக்கிக் காட்டுகிறேன் என்றோ சொல்லாமல், சிங்கப்பூராக மாற்றிக் காட்டுகிறேன் என்றே சொல்கிறார்கள்?’ என்று மனசுக்குள் ஒரு சந்தேகமும் எழுவதுண்டு.

இந்தச் சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது சிங்கப்பூரில் என்று ஒருமுறை நேரிலேயே போய்ப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையும் தோன்றியிருக்கலாம். எனக்கும் தோன்றியது.

‘ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா’ என்று பழைய தமிழ்த் திரைப்படம் ஒன்றில் பாடுகிற பாட்டு மட்டும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அப்போதிலிருந்தே சிங்கப்பூருக்கு ஒருமுறை போய்வந்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆனால், ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அதற்கு வக்கு வேண்டுமே?

மிக எளிமையான, நடுத்தரத்தைவிட ஒருபடி கீழான குடும்பத்தில் பிறந்த எனக்கு அதைப் பற்றிக் கனவு காணக்கூட யோக்கியதை இல்லை என்பதால், ஆசையை அப்படியே மனசுக்குள் அமுக்கிவிட்டேன்.

இயல்பாகவே பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவன் நான். பள்ளி வயதில் நான் போன ஒரே சுற்றுலாத் தலம் திருவண்ணாமலை அருகில் உள்ள சாத்தனூர். சாத்தனூரில் பல திரைப்படங்களின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. நான் டூர் சென்றபோது, ‘அடேடே, இந்த இடத்தில்தானே எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ‘மாணிக்கத் தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன..’ என்று பாடி ஆடுவார்கள்? ஆஹா, இங்கேதானே ‘நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்’ என்று எம்.ஜி.ஆர் பாட, ‘என் இடது கண்ணும் துடித்தது, உன்னைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்’ என்று ஜெயலலிதா பாடுவார்? அடடே… இந்த இடத்தில்தானே ‘காதல் மலர்க் கூட்டம் ஒன்று வீதி வழி போகுமென்று யாரோ சொன்னார், யாரோ சொன்னார்’ என்று பாடியபடி சிவாஜி கணேசன் ஸ்டைலாக நடந்து வருவார்?’ என்று சினிமாவோடு அந்த இடங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தேன். அதனால் சாத்தனூருக்குச் சென்று வந்ததே ஸ்விட்சர்லாந்துக்குப் போய் வந்ததான ஒரு திருப்தியை எனக்குக் கொடுத்திருந்தது அந்தச் சின்ன வயதில்.

வளர்ந்து பெரியவனாகி, திருமணம் ஆனதும், மனைவியை அழைத்துக்கொண்டு நான் முதன்முதலில் போன இடமும் சாத்தனூர் டேம்தான்.

சாவி பத்திரிகையில் பணியாற்றும்போது, சாவி சார் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை எங்களை (எங்களை என்றால் ஆசிரியர் குழுவிலிருந்த ஒரு நாலைந்து பேர்) ஊட்டி, வெலிங்டன், குன்னூர், பெங்களூரு என ஏதேனும் ஓர் ஊருக்கு, பத்திரிகை புதுப்பொலிவுக்கான டிஸ்கஷன் என்கிற பெயரில் அழைத்துச் செல்வார். அப்படித்தான் என் பால்ய கால பயண விருப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறத் தொடங்கின.

பின்னர் குடும்பத்தோடு ஊட்டி, கொடைக்கானல், ஹைதராபாத், பெங்களூரு, மைசூர், கேரளா எனப் பல இடங்களுக்கு ஆண்டுக்கொருமுறை பயணப்பட்டேன். போன ஆண்டு இன்னும் கொஞ்சம் அகலக்கால் வைத்துப் பார்க்கலாமே என்று டெல்லி, ஆக்ரா, சண்டிகர், மாண்டி, குலு-மனாலி, ரோட்டாங்பாஸ் என ஒரு நடை போய்வந்தேன்.

இந்த ஆண்டு கொஞ்சம் பொருளாதாரத் தெம்பு வந்து, சிங்கப்பூர்-மலேசியா சென்று வரலாம் என்று என் சிறு வயதுக் கனவை நிறைவேற்றும் உத்தேசத்துடன், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தேன். அடிவயிற்றில் கத்தி சொருகின மாதிரி உணர்ந்தேன்.

டெல்லி டூருக்குக் கிட்டத்தட்ட ஒண்ணேகால் லட்சம் ரூபாய் செலவானது. இந்த முறை சிங்கப்பூர் டூருக்கு ரூ.2 லட்சம் வரை செலவழிக்கலாம் என்று பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்தேன். ஆனால், ஃப்ளைட் டிக்கெட், விசா செலவு, அங்கே தங்குகிற செலவு, சாப்பாட்டுச் செலவு, சுற்றிப் பார்க்கிற செலவு என எல்லாமாகக் கணக்குப் போட்டுப் பார்த்ததில், ஒரு வார கால சிங்கப்பூர்-மலேசியா சுற்றுலாவுக்கு, எங்கள் நாலு பேருக்குக் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் தேவை எனத் தெரிந்தது.

‘இது நமக்குச் சரிப்பட்டு வராது. மிஷன் கேன்சல்… மிஷன் கேன்சல்’ என்று அலறி, சிங்கப்பூர் டூரையே கேன்சல் செய்துவிட்டேன். ஆக, குடும்பத்தாரை ஆசை காட்டி மோசம் செய்துவிட்டேன்.

ஏக குஷியில் இருந்தவர்கள் சோர்ந்து போனார்கள். ‘எங்கேயும் போக வேண்டாம். இந்த வெண்டைக்காயையும் வத்தக் குழம்பையும் சாப்பிட்டுக்கிட்டு இங்கேயே வீட்டுக்குள் அடைஞ்சு கிடக்கிறோம் நாங்க’ என்று கடுப்புடன் உணவு பரிமாறினார் மனைவி. சிங்கப்பூர் டூர் போகவில்லை என்கிறபட்சத்தில், ஏற்கெனவே போன இந்திய டூர்கள் அனைத்தும் பிரயோஜனமற்றவை என்பதான எண்ணம் அனைவருக்குமே வந்திருந்தது.

நானும் இதற்கு என்ன செய்யலாம், சிங்கப்பூர் பயணத்தை எப்படிச் சாத்தியமாக்கலாம் என்று யோசனையில் ஆழ்ந்தேன்.

ஆபத்பாந்தவனாக உதவிக்கு வந்தார் டிராவல் ஏஜென்ட் பாலச்சந்தர்.


(பயணம் தொடரும்)

3 comments:

வணக்கம் ஸார். எப்படி இருக்கீங்க? இந்தத் தொடரை படிப்பதற்கு முன்பே இதை பதிவிடுகிறேன். எங்களது சென்னை மெயில் வார செய்தித்தாளில் தங்களது சுற்றுலா அனுபவ தொடரை வாரம்தோறும் பிரசுரிக்க ஒப்புதல் தருவீர்களா? & நெல்லை விவேகநந்தா (ஜெயமுருகானந்தம்)
 
//சிங்கப்பூர் டூர் போகவில்லை என்கிறபட்சத்தில், ஏற்கெனவே போன இந்திய டூர்கள் அனைத்தும் பிரயோஜனமற்றவை என்பதான எண்ணம் அனைவருக்குமே வந்திருந்தது// appidi.
 
தாராளமாக. எனக்கொரு பிரதி அனுப்புவீர்கள்தானே? நிற்க. தாங்கள் ஏற்கெனவே சக்திவிகடனில் பணிபுரிந்த முருகானந்தமா?