உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, August 04, 2016

சாவி-100 (IV)

வாரியார் சுவாமிகளின் பொன்மொழிகள், கி.வா.ஜ. சிலேடைகள் எனப் பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மரியாதைக்குரிய என் குருநாதர் சாவி அவர்கள் ஒரு கருத்தை நம் மனதில் பதியவைப்பதற்காகச் சொன்ன அழகழகான உவமானங்களைத் தொகுத்தே ஒரு புத்தகம் வெளியிடலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நேரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த ‘பிள்ளையார்’ உதாரணம், பத்திரிகையை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு ‘சிராத்தம்’ உதாரணம்... என சாவி சார் சொன்ன அருமையான உவமான உதாரணங்களில், சட்டென்று என் நினைவுக்கு வருவனவற்றை இங்கே தருகிறேன்.

31) ஒரு பத்திரிகையில் சிறுகதை ஒன்றை நான்கரை பக்கங்களுக்கு லே-அவுட் செய்திருந்தார்கள். மீதி அரைப்பக்கத்துக்கு ஒரே ஒரு சின்ன ஜோக்கை மட்டும் வைத்து வடிவமைத்திருந்தார்கள். அந்த இடத்தில் தாராளமாக இரண்டு ஜோக்குகளை வைத்து லே-அவுட் செய்ய முடியும். ஆனால், கைவசம் தேர்வான ஜோக் வேறு இல்லையோ என்னவோ, ஆர்ட்டிஸ்ட் அந்த ஒரே ஒரு ஜோக்கை மட்டும் வைத்து வடிவமைத்திருந்தார். ஆனால், இடம் காலியாகத் தெரியக்கூடாது என்பதற்காக ஜோக்கையும் படத்தையும் லேசாகச் சாய்த்து வைத்து, மேலும் கீழும் கோடுகள் போட்டு, அந்த அரைப் பக்கத்தை நிரப்பியிருந்தார். 

அதை என்னிடம் காண்பித்து சாவி சார் சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அவர் சொன்னார்... “இதப் பார்த்தியா... இது எப்படி இருக்குன்னா... எப்பவாவது நீ காலியான ரயில்ல பிரயாணம் செஞ்சிருக்கியா? அப்ப ஒருவேளை நீ கவனிச்சிருக்கலாம். எதிரெதிர் சீட்டுகள் காலியாக இருக்கும். அப்போ சில பேர் என்ன பண்ணுவாங்க தெரியுமா? அவங்க உட்கார ஜன்னலோரமா ஒரு சின்ன இடம் போதும். ஆனா, அவ்ளோ இடம் காலியா இருக்கே, அனுபவிக்கணும்னு அவங்களுக்குள்ளே ஒரு எண்ணம் வரும். அதனால, சரிஞ்சு உட்கார்ந்து, கால்களை எதிர்சீட்டுல நீட்டிக்கிட்டு, எல்லா இடத்தையும் ஆக்கிரமிச்சுக்கிட்டு கோணல் மாணலா உட்கார்ந்திருப்பாங்க. பார்க்கவே ஆக்வேர்டா இருக்கும். அப்படி இருக்கு இந்த லே-அவுட்.”

இதைக் கேட்ட பிறகும் ஒருவரால் அப்படியொரு லே-அவுட்டைச் செய்ய முடியுமா என்ன?!

32) எதைப் பற்றி எழுதினாலும், சுற்றி வளைத்து எழுதாமல், நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடவேண்டும் என்பார் சாவி. “பெங்களூர் மசாலா தோசை சாப்பிட்டிருக்கியா? அது போல வேறெங்கயும் வராது; அத்தனை சுவையா இருக்கும்.  மசால் தோசை ஆர்டர் பண்ணி வந்தவுடனே, ஓரத்துலேர்ந்து கிள்ளிக் கிள்ளித் தின்னக்கூடாது. எடுத்த எடுப்புல நடுவுல கைவைச்சு மசாலாவோட எடுத்துத் தின்னணும். அப்பத்தான் சுவையா இருக்கும். பெங்களூர் மசாலா தோசையை அப்படித்தான் சாப்பிடணும். அது போலத்தான் கட்டுரையோ, கதையோ ... எதை எழுதினாலும், ஆரம்ப வரியிலேயே எதைப் பத்தி எழுதப் போறோம்கிறதை வாசகர்களுக்குப் புரிய வைக்கிற மாதிரி, எடுத்த எடுப்பிலேயே மெயின் பாயிண்ட்டைத் தொட்டுடணும்!” என்பார். சொல்லும்போதே பெங்களூர் மசாலா தோசையின் சுவை நாக்கில் ஊறுவதோடு, எப்படி எழுத வேண்டும் என்கிற ஞானமும் நம் புத்தியில் ஊறும்.

33) எப்படித் தொடங்குவது என்று சொல்லித் தந்த என் ஆசான், எந்த எந்த விஷயத்தை எப்படி எப்படி எழுதவேண்டும் என்பதையும் சொல்லித் தந்திருக்கிறார். “ஒரு விஷயத்தை எப்படி பிரசெண்ட் பண்ணணும்னு ஒரு முறை இருக்கு. குழம்பைக் கரண்டியாலதான் போடணும்; அன்னத்தை அன்னவெட்டியாலதான் பரிமாறணும். இந்த சின்ன விஷயம் தெரிஞ்சாலே பாதி ஜர்னலிஸம் தெரிஞ்ச மாதிரி!” என்பார். வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட், வலைத்தளம் எனப் பரந்துபட்டுக் கிடக்கும் இன்றைய கணினி உலகில், எந்த எந்த விஷயத்தை எப்படி எப்படித் தரவேண்டும் என்று, சாவி சார் மட்டும் இன்றைக்கு இருந்திருந்தால், நச்சென்று சொல்லிப் புரிய வைத்திருப்பாரே என்கிற ஆதங்கம் என் அடி மனதில் உண்டாகத்தான் செய்கிறது.

34) தினமணி கதிர் பத்திரிகையில் பல புதுமைகளைச் சேர்த்து, அதை அசுர வளர்ச்சி அடையும்படி செய்தவர் சாவி. இதனால், அப்போது அவரையே தினமணி நாளேட்டையும் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்களாம். அதற்கும் அற்புதமான ஓர் உதாரணம் சொல்லி மறுத்துவிட்டிருக்கிறார் சாவி. “தவில் வாசிக்கிறவன்தான் அதை நல்லா வாசிக்க முடியும். மிருதங்கம் வாசிக்கிறவனைக் கொண்டு போய் தவில் வாசிக்கச் சொல்லக் கூடாது. அபஸ்வரம்தான் மிஞ்சும். தினப் பத்திரிகை என்பது தவில் மாதிரி! அடிச்சு, வெளுத்து வாரணும். பர்முடேஷன் காம்பினேஷனெல்லாம் அதுல முக்கியமில்லே. ஆனா, வாரப் பத்திரிகைங்கிறது மிருதங்கம் வாசிக்கிற மாதிரி. மிருதங்கத்துல சின்னச் சின்ன பிருகாக்களையும் நுணுக்கமா கொண்டு வர்ற மாதிரி, வாரப் பத்திரிகையில நிறைய நகாசு வேலைகள் பண்ணி அழகா கொண்டு வர முடியும். நான் மிருதங்கம் வாசிக்கிறவன்; தவில் வாசிக்கிறவன் இல்லே!” இதைக் கேட்ட பின்னரும் அவரை வற்புறுத்தத் தோன்றுமா என்ன?!

35) கதையோ, கட்டுரையோ... அது எத்தனை முக்கியமோ, அதற்கான லே-அவுட்டும் அத்தனை முக்கியம் என்று கருதுபவர் சாவி. ஒரு குறிப்பிட்ட கதை, கட்டுரைக்கான வடிவமைப்பைப் பார்க்கும்போதே அந்தக் கதை அல்லது கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயத்தின் தன்மை வாசகர்களுக்குப் புரிந்துவிட வேண்டும் என்பார். நகைச்சுவைக் கட்டுரை என்றால் அதற்கான வடிவமைப்பு, தலைப்பு, தலைப்பை எழுதும் விதம் எல்லாமே தமாஷாக இருக்கவேண்டும்; சோகமான ஒரு மேட்டர் என்றால், அதற்கான வடிவமைப்பும் சோகத்தைப் பிரதிபலிப்பதாய் இருக்க வேண்டும். இப்படி, கதை, கட்டுரையும் அதற்கான வடிவமைப்பும் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருக்கவேண்டும் என்று வலியுறுத்திச் சொல்வார் சாவி.

 “தெருவுல கணவனும் மனைவியும் நடந்து போறாங்கன்னு வெச்சுப்போம். அவங்க ஒருத்தருக்கொருத்தர் எத்தனை அந்நியோன்னியமா இருக்காங்கன்னு அவங்க ஒட்டி உரசி நடந்து போறதை வெச்சே சொல்லிடலாம். இணைஞ்சு அழகா நடந்து போனாங்கன்னா, அவங்க தாம்பத்தியமும் ரொம்ப அழகுன்னு புரியும். கணவன் எனக்கென்னன்னு எங்கேயோ போய்க்கிட்டிருக்கான், அவன் பெண்டாட்டி பின்னாடி வந்துட்டிருந்தாள்னா அவங்களுக்குக் கல்யாணமாகி அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகியிருக்கும், தாம்பத்தியம் சலிச்சுப் போயிடுச்சுன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்கு பதிலா, அவ முன்னாடி நடந்து போறா; பின்னாடியே ஒரு ஆண் தயங்கித் தயங்கி, அங்கே இங்கே பார்த்துக்கிட்டுப் பம்மிப் பதுங்கி அவளைப் பின்தொடர்ந்து போனான்னா, ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் சரியில்லே; யார் கிட்டேயோ ஏதோ தப்பு இருக்குன்னு அர்த்தம். கதை, கட்டுரையும் அதற்கான லே-அவுட்டும் அந்நியோன்னியமான தம்பதி மாதிரி அழகா, பொருத்தமா இருக்கணும்!” பொருத்தமில்லாத லே-அவுட்டைப் பார்க்கும்போதெல்லாம் சாவி சார் சொன்ன இந்த உதாரணம்தான் சட்டென்று என் நினைவுக்கு வரும்.

36) ஒரு பத்திரிகை அச்சிட்டு ரெடியாகி வந்ததும், முதல் பிரதி ஆசிரியரின் மேஜைக்குத்தான் வரவேண்டும் என்பார் சாவி. அவர் தினமணி கதிரில் இருந்தபோதா, குங்குமம் பத்திரிகையில் இருந்தபோதா என்று நினைவில்லை... ஒருமுறை  அந்த வாரத்திய இதழ் தயாராகி, உதவி ஆசிரியர் மேஜையில் இருந்தது; ஆசிரியர் சாவியின் மேஜைக்கு அது ஏனோ வரவில்லை. அல்லது, ஆசிரியருக்கென கொண்டு வந்த பிரதியை அந்த உதவி ஆசிரியர் வாங்கிப் பார்த்திருக்க வேண்டும். இதை கவனித்துவிட்டார் சாவி. உடனே அந்த உதவி ஆசிரியரை அழைத்தார்.

“உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?” என்று கேட்டார். இளம் வயதினரான அவர், “இன்னும் இல்லை சார்!” என்று பவ்வியமாகச் சொன்னார். “பரவாயில்லை, ஆயிடுச்சுன்னே வெச்சுக்கோ! உன் பெண்டாட்டிக்குப் புதுப் புடவை வாங்கித் தரே. அவ உடனே என்ன செய்யணும்? அதைக் கட்டிக்கிட்டு ஊர் பூரா போய்க் காட்டிட்டு, கடைசியா உங்கிட்டே வந்து காட்டணுமா? முதல்ல உன்கிட்டேல்ல கொண்டு வந்து காட்டணும்? அது மாதிரிதான் இதுவும். இஷ்யூ ரெடியானதும் முதல்ல இங்கே என் மேஜை மேல ஒரு காப்பி கொண்டு வந்து வைக்கணும். புரியுதா?” என்றார். அதன்பிறகும் அந்த உதவியாளர் ஆசிரியரின் மேஜைக்கு முதல் காப்பி வைக்க மறந்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள்?!

37)  மல்யுத்த வீரர்களான கிங்காங், தாராசிங் இருவரையும் ஊர் ஊராக அழைத்துச் சென்று, குத்துச் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தி, டிக்கெட் போட்டு வசூல் செய்திருக்கிறார் சாவி. அன்றைய குத்துச் சண்டையில் சிறப்பு அயிட்டம் என்ன என்பதை விளக்கி, ‘பாம்ப்லெட்’ எனப்படும் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு, ஜனங்களிடையே விநியோகிப்பார். அதைப் படித்துவிட்டு ஆர்வத்துடன் ஜனங்கள் அந்தக் குத்துச் சண்டையைக் காணக் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இன்றைக்கு டி.வி-யில் வெளிநாட்டு சேனல்களில் WWF குத்துச் சண்டைகளில் கடைப்பிடிக்கப்படும் யுக்திகளையெல்லாம் அன்றைக்கே செயல்படுத்தியவர் சாவி.

தாராசிங் நெற்றியில் வரிவரியாக மடிப்புச் சுருக்கங்கள் இருக்கும். சண்டைக்கு முன், அந்த மடிப்புகளில் லேசாக பிளேடால் தாராசிங்கை கீறிக்கொள்ளச் சொல்வாராம் சாவி. பிளேடு கீறிய இடத்தில் ரத்தம் கசிந்து உறைந்து போகும். பின்பு சண்டையில் கிங்காங்கிடம் தாராசிங்கின் நெற்றியில் உள்ளங்கையால் அறையச் சொல்வார். அப்படி அறையும்போது, ரத்தம் காய்ந்த இடம் உதிர்ந்து, புதிய ரத்தம் பளிச்செனக் கிளம்பும். இது பார்வையாளர்களின் கண்ணுக்குத் தெரிந்தால்தானே அவர்களிடம் ஒரு விறுவிறுப்பு உண்டாகும்! அதற்கும் ஒரு வழி செய்தார் சாவி. கிங்காங்கை வெள்ளை பனியன் அணிந்து சண்டையிடச் சொல்வார். தாராசிங்கைத் தாக்கி, ரத்தம் ஒட்டிய கையை தன் வெள்ளை பனியன் மீது அறைந்து கொள்ளச் சொல்வார். அப்படிச் செய்யும்போது, வெள்ளை பனியன் ரத்தமாகி, பார்வையாளர் கண்ணுக்குப் பளிச்செனத் தெரியும். சண்டை சூடு பிடிக்கும். பின்பு, ஏற்கெனவே திட்டமிட்டபடி, தாராசிங் பாய்ந்து கிங்காங் மேல் மோதி, அவரின் பனியனைக் கிழித்துக் கந்தல் கந்தலாக்குவார். “ஒரு பனியன் போனா என்ன, ஆயிரம் பனியன் வாங்குற அளவுக்கு வசூல் சேர்ந்துடும்” என்று சொல்லிச் சிரிப்பார் சாவி.

செய்கிற எந்த ஒரு காரியத்தையும் எப்படித் திட்டமிட்டுக் கச்சிதமாகச் செய்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்கிற நுட்பம் தெரிந்தவர் சாவி.

38) அந்தக் காலத்தில் தியாகராய நகரில், காஃபி பேலஸ் என்று ஒரு சின்ன ஹோட்டல் வைத்து நடத்தியிருக்கிறார் சாவி. ம.பொ.சி., சாண்டில்யன் எனப் பல பிரபலங்கள் அதன் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தனர். ஆனால், அங்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்ற பலபேர், தாங்கள் சாப்பிட்டதற்குக் காசு கொடுத்தால் சாவி தப்பா நினைத்துக் கொள்வாரோ என்று கருதியே, பணம் எதுவும் தராமல் போய்க்கொண்டிருந்தார்கள். இதனால் ஒரு கட்டத்தில் அந்த ஹோட்டலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நஷ்டமாகி, சாவி அதை இழுத்து மூடும்படியாகிவிட்டது.

39) சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே கட்-அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டு, விழாக்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் விழாக்கள் எடுத்து, அவர்களை கௌரவப்படுத்தி, அவர்களுக்கும் ஸ்டார் அந்தஸ்து ஏற்படுத்தித் தந்தவர் சாவிதான். எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பாதங்கதுரை,  சிவசங்கரி, ஓவியர் கோபுலு, ஜெயராஜ் ஆகியோருக்கு விழாக்கள் எடுத்துள்ளார் சாவி.

40) எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் மட்டுமல்ல; வாசகர்களுக்கும் விழா எடுத்தவர் சாவி. வி.ஜி.பி. கோல்டன் பீச்சில், கடற்கரை மணலில் தங்கச் சாவியைப் புதைத்து வைத்து, வாசகர்களைத் தேடச் சொல்லி ஒரு போட்டி நடத்தி, அதை வாசகர் திருவிழாவாகவே நடத்தியிருக்கிறார் சாவி. 

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயா அணி என இரண்டாக உடைந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில், ‘அடுத்த முதல்வர் யார்?’ என்று வாசகர்களுக்குப் போட்டி வைத்து, கலைஞர் பெயரைக் குறிப்பிட்டு எழுதியவர்களில் மாவட்ட வாரியாகப் பரவலாக ஒரு பத்து பேரைத் தேர்ந்தெடுத்து, விழா எடுத்து, அவர்களுக்கு தமிழக முதல்வர் கையால் மாலை அணிவிக்கச் செய்தார் சாவி.

(தொடரும்)

5 comments:

// அதன் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தனர். ஆனால், அங்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்ற பலபேர், தாங்கள் சாப்பிட்டதற்குக் காசு கொடுத்தால் சாவி தப்பா நினைத்துக் கொள்வாரோ என்று கருதியே, பணம் எதுவும் தராமல் போய்க்கொண்டிருந்தார்கள்//

அப்படியா சொல்கிறீர்கள்? டேக் இட் ஃபார் கிரான்டட் என்று தெரிந்தே செய்திருப்பார்கள் என்று எனக்கு இப்போது படிக்கும்போது தோன்றுகிறது!!!

திறமையாளர்களை உணர்ந்து கொண்டு உலகுக்குத் தெரிய வைத்த சாவி எவ்வளவு பெரிய திறமைசாலி.. தொடர்கிறேன்.
 
அருமையான தகவல்கள்!திரு.சாவி அவர்களின் எழுத்துப்போலவே அவரது எண்ணங்களும் கலகலப்பாய் இருந்திருக்கின்றன!
 
ஒவ்வொரு உவமைகளும் இரசித்து, சிரிக்க வைத்தன....
 
//தினமணி கதிர் பத்திரிகையில் பல புதுமைகளைச் சேர்த்து, அதை அசுர வளர்ச்சி அடையும்படி செய்தவர் சாவி. இதனால், அப்போது அவரையே தினமணி நாளேட்டையும் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்களாம்.//


நேற்று ஞாயிறு தினமணியில் கலாரசிகன் எஸ் வைத்தியநாதன் அவர்கள் நேர்மாறான கருத்தைச் சொல்லியிருக்கிறாரே...
 
திரு.ஶ்ரீராம்,

அது நேர்மாறான கருத்து என்று சொல்ல முடியாது. தினமணி நாளேட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி திரு.சாவியிடம் கேட்டபோது, தன்னால் அது இயலாது என்று கருதி அவர் அந்த உதாரணம் சொல்லி மறுத்திருக்கலாம். ஆனால், அவர் அடி மனத்தில் ஒரு நாளேட்டைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று ஆவல் இருந்திருக்கலாம். அதற்கான தகுதியை வளர்த்துக்கொண்ட பின்பு, நாளேட்டின் ஆசிரியராக அமர்வதை அவர் விரும்பியிருக்கலாம். அவ்வளவே!

மிக்க அன்புடன்,
ரவிபிரகாஷ்