உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, April 02, 2010

சாகட்டும் சமுதாயம்!

செய்தித் தாள்களைப் பிரித்தாலே பிண வாடை வருகிறது. அந்த அளவுக்கு கொலை, வன்முறை, விபத்துச் சம்பவங்கள். முன்னெல்லாம் ஒரு கொலைச் செய்தியோ, விபத்துச் செய்தியோ வந்தால் அந்த வருடம் பூராவும் அதைப் பற்றிய பேச்சாகவே இருக்கும். பின்னர் இந்தக் கால அளவு சுருங்கி, ஒரு மாத காலம் வரையிலுமாவது சாவுச் செய்தியின் தாக்கம் நீடித்திருந்தது. இப்போது தினம் பத்து கொலைகள், பன்னிரண்டு விபத்துகள்..!

இப்படியான செய்திகளையெல்லாம் படித்துப் படித்து மனசு மரத்துவிட்டது; சொரணை போய்விட்டது. மனித உயிரின் மீதான அக்கறையும், மதிப்பும் அறவே அற்றுப் போய்விட்டது. செய்தித்தாளைப் பிரித்ததுமே சாவுச் செய்தி ஏதேனும் உண்டா என்று தேடிப் போய், அதைத்தான் சுவாரசியமாகப் படிக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மனசு வக்கரித்துப் போய்விட்டது. மனசில் இருந்த ஈரம் மொத்தமும் வறண்டு, பாளம் பாளமாக வெடித்துவிட்டது.

அப்படியும்கூட, என் மனசின் ஒரு ஓரமாக ஒரு சின்ன ஈரக் கசிவு இருந்திருக்கும்போலும்! இந்த வாரத்துச் செய்திகளில் இரண்டு செய்திகள் என்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டன.

ஒன்று: பஸ் படியில் நின்றவர் தடுமாறி டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் விழ, பஸ்ஸின் சக்கரங்கள் அவர் மீது ஏறி, ஸ்பாட்டிலேயே மரணம். வெறுமே உச்சுக் கொட்டிவிட்டு, அந்த பஸ் பயணிகள் மீண்டும் பஸ்ஸில் ஏறிக் கொள்ள, டிரைவரும் பஸ்ஸை ஓட்டிச் சென்றுவிட்டார்.

அவ்வளவுதானா மனித உயிரின் மதிப்பு?

சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு போட்டோவைப் பார்த்துத் திடுக்கிட்டேன். அமெரிக்காவா, லண்டனா என்று ஞாபகமில்லை; சாலையில் பிளாட்பாரம் ஓரமாக ஒரு குழந்தையின் சடலம் கிடக்க, ஆண்களும் பெண்களுமாகப் பலர் அங்கே போய் வந்துகொண்டு இருப்பார்கள். அவர்களில் ஒருவரின் பார்வையாவது அந்தக் குழந்தையின் மீது விழுந்திருக்காது.

‘என்னடா உலகம் இது! நல்லவேளை, நம் நாட்டில் மனித நேயம் இன்னும் அந்த அளவுக்கு வற்றிப் போய்விடவில்லை’ என்று அப்போது நினைத்தேன். அந்த நினைப்பில் இன்றைக்கு மண் விழுந்துவிட்டது.

நாமும் அமெரிக்கா, லண்டன் போல முன்னேறிக்கொண்டு வருகிறோம் என்பதன் அடையாளமாக டி.வி.எஸ். பஸ் ஸ்டாப் சம்பவத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதுதானா?

இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். டிரைவர்கள் பலர் தொண்டைத் தண்ணி வற்ற, “ஏறி வாய்யா உள்ளே! படியில விழுந்து செத்தா, நீ போய்ச் சேர்ந்துடுவே! நாங்க இல்லே கோர்ட்டு வாசல்ல போய் நிக்கணும்!” என்று கடுப்படித்தும், அவர் ஏதோ தங்கள் உரிமையில், சந்தோஷத்தில் குறுக்கிடுவதாக நினைத்து முறைக்கிற பயணிகளை நான் தினம் தினம் பார்த்து வருகிறேன். தாங்கள் ஏதோ பெரிய சாகசச் செயல் செய்வதாக நினைத்துப் படியில் வீம்புக்குத் தொங்கி வருகிற கல்லூரி மாணவர்களையும் தினசரி பயணத்தில் பார்க்கிறேன்.

இந்த டி.வி.எஸ். சம்பவத்துக்குப் பிறகும்கூட, பஸ்ஸினுள் இடம் இருந்தும், அழும்பாகப் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தவர்களை இன்றைய பயணத்திலும் பார்த்தேன்.

இப்படியான சூழ்நிலையில், இம்மாதிரி விபத்துச் செய்திகளைக் கேள்விப்படும்போது, தவிர்க்க முடியாமல், ‘ஒழியட்டும் சனியன்கள்! நாட்டுக்காவது கொஞ்சம் பாரம் குறையும்!’ என்று ஒரு கொடூர எண்ணம் மனதில் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், சாலையில் யாராவது விழுந்து கிடந்தால், ‘ஐயோ பாவம்!’ என்று ஓடிப் போய்த் தூக்கத் தோன்றும். யாராவது ஓடிப் போய் சோடா கீடா வாங்கி வந்து, அவர் முகத்தில் அடிப்பார்கள். ‘என்னங்க ஆச்சு?’ என்று கனிவோடும் அக்கறையோடும் விசாரிக்கிற ஈர மனசுக் கூட்டம் அவரைச் சுற்றி நிற்கும். பத்திரமாக அவரை அவரது வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிற பொறுப்பை யாராவது ஒருவர் முன்வந்து ஏற்றுக் கொள்வார்.

அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்றைக்கு யாரைப் பற்றியும் யாருக்கும் அக்கறையில்லை; கவலையில்லை. ‘எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என் காரியம் நடந்தால் சரி!’ என்கிற சுயநலம் பெருகிவிட்டது.

அதற்குக் காரணம், எவனும் இங்கே யோக்கியம் இல்லை. யார் மீதும் யாருக்கும் நம்பிக்கை இல்லை. ‘ராஸ்கல்! கொழுப்பெடுத்துப்போய் கண்ணு மண்ணு தெரியாம மூக்கு முட்டக் குடிச்சிருப்பான். அதான், இப்படி விழுந்து கிடக்கிறான். வேணும் இவனுக்கு!’ என்று அருவருப்போடு முகத்தைச் சுளித்தபடி கடந்து போய்விடுகிறார்கள்.

யோசிக்கும் வேளையில், தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சாட்டத் தோன்றவில்லை எனக்கு. ஒட்டு மொத்த சமுதாயமே சீரழிந்துகொண்டு இருக்கிறபோது யாரைக் குற்றம் சாட்டுவது?

இரண்டாவது செய்தி: ஆசிரியை திட்டினார் என்று நடுரோட்டில் மண்ணெண்ணெயைத் தன் மீது ஊற்றிக்கொண்டு, கொளுத்திக்கொண்டு இறந்து போன சிறுமி. அந்தச் சின்னப் பெண்ணுக்கு ஆறு வயசோ, ஏழு வயசோதான்!

இத்தனைச் சிறிய குழந்தைக்கு கெரஸினைத் தன் மீது ஊற்றிக்கொண்டு இறந்துபோக வேண்டும் என்கிற எண்ணம் வந்தது எப்படி?

டி.வி. சீரியல்கள் செய்கிற பிரெயின்வாஷ்தான் இதற்கு முக்கியக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிற அல்லது தலையில் கெரஸினை ஊற்றி நெருப்பு வைத்துத் தற்கொலை செய்துகொள்கிற சீன் இல்லாத சீரியல் ஏதாவது ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

அந்த ஆசிரியை சற்றுக் கடுமையாகவே திட்டிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக ஒரு சின்னப் பெண்ணுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுமா? வீட்டுப் பாடம் எழுதி வரவில்லை என்று கோபித்துக்கொண்டதற்கே ஒரு சின்னப் பெண் தற்கொலை அளவுக்குப் போயிற்றென்றால், இது வளர்ந்த பின்னால் வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டிருக்கும்? போராட்டங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை? அதைத் தைரியமாக எதிர்கொள்ள அந்தக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்காதது யார் தவறு? பெற்றோரின் தவறா? பள்ளிக்கூடங்களின் தவறா? இந்தச் சமுதாயத்தின் தவறா? ஊடகங்களின் தவறா?

தேர்வில் தோற்றால் தற்கொலை; காதலில் தோற்றால் தற்கொலை; வேலை கிடைக்கவில்லை என்றால் தற்கொலை; போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை; அடுத்தவன் அவமானமாகப் பேசிவிட்டான் என்றால் தற்கொலை... தற்கொலை, தற்கொலை, தற்கொலை..! எங்கே போய்க்கொண்டிருக்கிறது நாடு?

உண்மையில் தங்கள் செயலுக்காக அவமானப்பட வேண்டியவர்கள் யாரும் அவமானப்படுவதில்லை. அவர்கள் மான, அவமானங்களைத் துடைத்துப் போட்டுவிட்டுத் தங்கள் காரியத்தைப் பார்த்துப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஊடகங்கள் உசுப்புகிற உசுப்பலில், அவமானம் கொள்ளத் தேவையில்லாததற்கெல்லாம் பெரிய மானக்கேடே நடந்துவிட்டாற்போன்று துக்கித்துத் தற்கொலை செய்துகொள்பவர்கள் அப்பாவிகள்தான்!

அதிலும், ஆறு வயசுக் குழந்தையின் தற்கொலை... சே! இதற்காக இந்தச் சமுதாயமே அவமானப்பட்டு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டும்!

.

15 comments:

பஸ் படியில் நின்றவர் தடுமாறி டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் விழ, பஸ்ஸின் சக்கரங்கள் அவர் மீது ஏறி, ஸ்பாட்டிலேயே மரணம். வெறுமே உச்சுக் கொட்டிவிட்டு, அந்த பஸ் பயணிகள் மீண்டும் பஸ்ஸில் ஏறிக் கொள்ள, டிரைவரும் பஸ்ஸை ஓட்டிச் சென்றுவிட்டார்.

அவ்வளவுதானா மனித உயிரின் மதிப்பு?

....... என்ன கொடுமை சார், இது?

சின்ன குழந்தையை கண்டு கொள்ளாமல் மக்கள் போனது, அமெரிக்காவா? எனக்கு தெரிந்து வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஒரு விபத்து நடந்த உடன், உதவி செய்யாமல் போனாலே, சட்ட பூர்வமாக அந்த ஆள் மீது நடவடிக்கை எடுக்க முடியும், இங்கே. அதனால் கேட்டேன்.
http://www.deadlyroads.com/state-laws.html

ஆறு வயது குழந்தைக்கு தற்கொலை என்றால் என்னவென்று தெரியும்? எப்படி செய்து கொள்வது என்று தெரியும்? தெரிந்து இருக்கிறது என்பதே சமூதாயத்தின் அவல நிலையை காட்டுகிறது.
 
அந்த சிறுமி செய்தியை படித்தவுடன் அது தான் ஆச்சரியமாக இருந்தது. தற்கொலை என்கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்காவது தெரிந்திருக்குமா அந்த சிறுமிக்கு...
இதே நிலைமை நீடித்தால் எட்டு வயதில் எந்த சிறுவனாவது குண்டு வைத்தால் கூட ஆச்சரியமில்லை!
 
அந்த இரண்டாவது சம்பவம்
(முன்னதை விட அதிக) அதிர்ச்சியாகத்தான்
இருக்கிறது.
 
நேற்று மூன்று குழந்தைகளை கொன்னு தானும் செத்தாளே ஒரு பெண் இவர்கள் எல்லாம் வாழ்க்கைன்னா என்னன்னு நெனச்சுட்டு இருக்காங்களோ
 
இரண்டுமே வேதனை.

சுமார் 15 வருடங்களுக்கு முன், மெகா சீரியல் வரத்தொடங்கியிருந்த காலம்.

ஒரு பெண் வாந்தி எடுப்பதாக சீன்.

பார்த்துக் கொண்டிருந்த என் உறவுக்கார பெண்மணி “என்ன ஆச்சோ தெரியலையே !” என வாய் திறந்து சொல்ல, அருகில் இருந்த 8 வயது சிறுவன் - “என்ன சொல்ல போறாங்க. கர்ப்பம்னு சொல்லுவாங்க” என்றான்.

பைக்கில் வேகமாக செல்லும் இளைஞர்கள் என் கண்முன் விழ வேண்டும் என்ற கொடூர எண்ணம் தோன்றுவதை தடுக்க இயலவில்லை.
 
இரண்டு செய்திகளுமே வருத்தமாக இருக்கிறது சார்! ’சாகட்டும் சமுதாயம்’ என்று தாங்கள் சபித்தது உங்கள் மனசின் உச்சபட்ச வேதனையை வெளிப்படுத்துகிறது! :(
 
விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி சித்ரா! அந்தப் புகைப்படம் இன்னும் என் மனதில் இருந்து உறுத்திக்கொண்டு இருக்கிறது. என்ன நகரம் என்றுதான் ஞாபகம் இல்லை.
 
ரெட்டைவால்ஸ்! சரியாகச் சொன்னீர்கள். அந்தக் குழந்தைக்கு தற்கொலை என்பதன் ஸ்பெல்லிங்கூடத் தெரிந்திருக்காது. சமுதாயம் எங்கே போகிறது!
 
சைவகொத்துப்பரோட்டா! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சித் தகவல்கள் கேட்டுக் கேட்டு மனசு ஒரேயடியாக காய்ந்து போய்விடும் போலிருக்கிறது!
 
கஷ்டமாக இருக்கிறது பத்மா!

இத்தகைய சில இளைஞர்கள் திருந்தமாட்டார்களா பின்னோக்கி? இவர்களை எப்படித்தான் திருத்துவது?

ஆமாம் கிருபாநந்தினி! பதிவு எழுதிக்கொண்டு இருக்கும்போதே, மேலே எழுதத் தோன்றாமல் கடுப்பில் அப்படி எழுதி முடித்துவிட்டேன். வேறென்ன செய்வது சொல்லுங்கள்!
 
குழந்தை தற்கொலை செய்து கொண்டதை அப்பாவி என்று சொல்லாதீர்கள் சார்! சகிப்புத்தன்மையும், பொறுமையும் சொல்லிக்கொடுக்க மறந்த ஒரு தாயின் குற்றம். ஆறு வயதுக்குழந்தையின் ஆங்காரம். 1980 களில் பள்ளியில் படித்த போது அடியும் திட்டும் வாங்காமல் பள்ளியிலிருந்து திரும்பினால் அது தான் அதிசயம். ஆனால் இன்று? யாருடைய தவறுகளையும் யாரும் சுட்டிக்காட்டக்கூடாது. அவர்களின் தன்மானத்திற்கு இழுக்கு வந்துவிடும். தற்கொலை என்பார்கள். ம்ச்...
 
படிக்கட்டு விபத்துகள் நித்தம் தொடர்கதையாக போய்க்கொண்டிருக்கிறது ..குறிப்பாக மாணவ சமுதாயம் தன்னுடைய கூட்ட ஆதிக்க மனப்பான்மையை வைத்து கொண்டு இந்த ஆபத்தான ஒழுக்கமின்மையை தொடர்கிறது.. நாங்கள் படிக்கும் காலங்களில் போக்குவரத்து காவலர் படிக்கட்டில் நிற்கும் நபர்களை தயவு தாட்சினம் இல்லாமல் தட்டுவார் . அதற்க்கு பயந்து படிக்கட்டில் யாரும் நிற்காமல், ஏறியவுடன் முதல் வேலையாக உள்ளே நுழைந்து விடுவார்கள் .. சில சமயங்களில் அடி உதவுவது போல் அட்வைஸ் உதவுவது இல்லை . உங்கள் சாபத்தில் நியாயம் இருக்கிறது ...இதை விழிப்புணர்வாக மக்கள் எடுத்து கொள்ளவேண்டும் .
 
மனித நேயம் செத்துப்போய் ரொம்ப நாளாகிவிட்டது சார். பல வருடங்களுக்கு முன்பு அம்பத்தூரில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய ஒருவர் தலையிலிருந்து ரத்தம் கொட்டக் கொட்ட தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சின்ன நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் போட்டு யாராவது என் குடும்பத்துக்கு தகவல் சொல்லுங்க என்று கூறிவிட்டு மயங்கியவரை பார்த்ததும் ஒருவர் தானாக முன் வந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் ஞாபகத்துக்கு வந்தது. போலீஸ்காரன் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வாடான்னுவான் இருக்கற தொல்லைங்க பத்தாதுன்னு எவன் சார் அங்கெல்லாம் போவான்னு சமீபத்தில் விபத்து நடந்த இடத்தில் காதில் கேட்டது இப்போதைய நிலை. மிகவும் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் இது. தேவையான பதிவு.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
 
டீ.வீயும், இந்த கலாச்சார சீரழிவுக்கு காரணம்.. (6 வயசு குழந்தைக்கு, தற்கொலை பற்றி தெரிந்ததற்க்கு..)

கொடும சார்..
 
என்ன சொல்றதுன்னே தெரியலை :((
கொடுமை