ஆனந்தவிகடன் அலுவலகத்தில், பத்திரிகைப் பணிகளைத் தாண்டியும் பல சிறப்பான விஷயங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது விகடன் நிர்வாகம். தினமும் மாலை வேலைகளில், விகடன் அலுவலகத்தில் இருக்கும் ஹோம் தியேட்டரில் பைசைக்கிள் தீவ்ஸ், சார்லி சாப்ளின் படங்கள், இரானியப் படங்கள், முள்ளும் மலரும் போன்ற தமிழ்ப் படங்கள் எனப் பல அற்புதமான கிளாஸிக் படங்களைத் திரையிடுவது அவற்றில் ஒன்று.
அதே போலவே, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, யாரேனும் ஒரு பிரபல வி.ஐ.பி-யை விருந்தினராக வரவழைத்து, விகடன் அலுவலக மொட்டை மாடியில், அலுவலக ஊழியர்கள் மத்தியில் உரையாற்றச் செய்வதும் ஒரு சிறப்பான விஷயமாகும். தடயவியல் சந்திரசேகர், இயக்குநர் மிஷ்கின், தமிழருவி மணியன் எனப் பலர் இங்கே வந்து அற்புதமாக உரையாற்றியிருக்கிறார்கள்; தங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அப்படிச் சமீபத்தில் வந்திருந்தவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். சுமார் இரண்டு மணி நேரம் அவர் எங்களிடையே உரையாற்றியபோது, நேரம் போனதே தெரியவில்லை. தனது அனுபவங்களை அத்தனை சுவாரசியமாக அவர் அன்று எங்களோடு பகிர்ந்து கொண்டார். மனித மனங்களை வெல்வது எப்படி என்பது அவர் அன்று பேசியதன் சாராம்சம். அவர் பேசிய அத்தனையையும் இங்கே பதிவிட இயலாது எனினும், ஒரு சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்குப் புகழ் பெற்ற இரண்டு ஊர்கள் பாலமேடு, அலங்காநல்லூர். ஜல்லிக்கட்டுத் தடை விதித்திருந்தார் நீதிபதி பானுமதி. ‘அப்படி ஒரேயடியாகத் தடை செய்ய முடியாது. சில நிபந்தனைகளோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கலாம்’ என்று முறையீடு செய்து அனுமதி உத்தரவு வாங்கியவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் விசாலமாக இருக்கும். அதுவே அலங்காநல்லூரில் அது ஒரு குறுகலான ரோடு. ரிஸ்க் அதிகம். இங்கே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க முடியாது, வேறு விசாலமான இடம் இருந்தால் இது பற்றிப் பேசலாம் என்று பிடிவாதமாக இருந்தார் உதயசந்திரன். ஜல்லிக்கட்டு நடத்த கோர்ட்டில் அனுமதி வாங்கியவரே இவர்தான் என்பதால், ஊர் மக்கள் எதுவும் பேசாமல் இறுகிய முகத்தோடு அமைதி காத்தனர்.
அந்தச் சமயத்தில் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு தள்ளாத கிழவி, கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்தாள். “இதோ பாருங்க, ரெண்டு சொட்டு ரத்தமாவது இந்த இடத்துலதான் சிந்தணும். இல்லாட்டா முனியாண்டி ஒத்துக்க மாட்டான்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அதன்பின் ஊரே அவள் பேச்சை வழிமொழிய, வேறு வழியின்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, அங்கேயே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டியதாயிற்று.
உதயசந்திரன் இதைச் சொல்லிவிட்டு, “பவர் எங்கெங்கேயோ, யார் யார் அதிகாரிங்க கிட்டேயோ, அரசியல் தலைவர்கள் கிட்டேயோ இருக்குன்னு நினைச்சுக்கறோம். ஆனா, பிராக்டிகலா இறங்கிப் பார்த்தா அங்கே, அந்தக் கிழவியை எதிர்த்து யாரும் எதுவும் நடவடிக்கையும் எடுக்க முடியலே! அந்தச் சாமானிய கிழவியின் வார்த்தைக்கு அங்கே அத்தனை பவர்!” என்றார்.
தனது வெற்றிக் கதைகளை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்காமல், தான் தோற்ற கதைகளையும் சொன்னார். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற அவர் உறுதியான நடவடிக்கை எடுத்து, அப்படியான பல கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டிருந்தார். ஒரே ஒரு இடத்தில் மட்டும் அவரால் கை வைக்க முடியவில்லை. காரணம், அது கோர்ட் இயங்கி வந்த வாடகைக் கட்டடம். நீதித் துறையே உதயசந்திரனுக்கு எதிர்ப்பாக இருந்தது.
என்றாலும், நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று காலை 10 மணிக்கு, ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியை இடிப்பதற்காக உதயசந்திரன் தமது பரிவாரங்களுடன் சென்றபோது, கோர்ட்டிலிருந்து தடை உத்தரவு வந்துவிட்டது. அந்த இடம் லோகல் கோர்ட் ப்ளீடர் ஒருவருக்குச் சொந்தமானது. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய அவரே, தன் கட்டடத்தை இடிக்க கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியிருந்தார்.
எனவே, வேறு வழியின்றி அதை மட்டும் விட்டுவிட்டு, மற்ற ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டார் உதயசந்திரன். பொது மக்களிடம் இதற்குப் பெரிய வரவேற்பு!
சில நாட்களுக்குப் பின், உதயசந்திரனுக்கு ஒரு போஸ்ட் கார்டு வந்தது.
“ஐயா! நீங்க ரொம்ப நேர்மையான அதிகாரி. பாரபட்சமில்லாம நடந்துக்கிறீங்க. உங்களை ரொம்பப் பாராட்டுறேன். நான் முதுகுளத்தூர்லேர்ந்து வந்து இங்கே கடை போட்டிருந்தேன். மனைவியின் நகைகளையெல்லாம் வித்து ரூ.40,000 கொண்டு வந்து, இங்கே ஒத்திக்கு ஒரு கடை எடுத்திருந்தேன். எடுத்து 15 நாள்கூட ஆகலை; அதை இடிச்சுப்பிட்டீங்க. நியாயம்தாங்க. ஆனா, நான் வெறுங்கையோட திரும்பி ஊருக்குப் போறேன். கையிலே வேற ஒரு நயா பைசா கிடையாது. என்ன பண்ணப் போறேன்னு தெரியலீங்க. ஆனா, நீங்க நேர்மையான அதிகாரி. நீங்க செஞ்சது சரிதாங்க. உங்களை நான் பாராட்டுறேன்!”
அந்தக் கடிதம் இன்றளவும் தன்னை உறுத்திக்கொண்டு இருப்பதாகச் சொன்னார் உதயசந்திரன். தான் அங்கிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகிச் செல்லும் வரையில், அந்தத் தடை உத்தரவைத் தன்னால் நீக்க முடியவில்லை என்பதைச் சொன்னவர், “நாம யாருக்காக நம்ம திறமையை, நம்ம மூளையைச் செலவு பண்றோம்னு யோசிக்கிறப்ப, சில சமயம் சங்கடமா இருக்கு. நம்மால முடிஞ்ச வரைக்கும் மைனாரிட்டி மக்கள், அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படணும்னு அன்னிக்கு ஓர் உறுதி எடுத்துக்கிட்டேன்” என்றார்.
மக்களின் சில பண்பாட்டு நாகரிகங்கள் பற்றியும் சொன்னார். அகால மரணம் அடைந்த ஓர் இளைஞனின் வீட்டில் உறவினர்களும் நண்பர்களுமாகத் திரண்டிருந்தனர். திருமணமாகி ஒரு சில மாதங்களே ஆன நிலையில், இளம் மனைவியை விதவையாக்கிவிட்டுப் பிரிந்துவிட்டான் 25 வயதே ஆன அந்த இளைஞன். சோகமான சூழல். அப்போது ஒரு மூதாட்டி ஒரு சொம்போடு வெளியே வந்து ஒரு முல்லைப் பூ சரத்தைத் தண்ணீரில் இருந்து எடுத்து ஒரு மூலையில் போட்டாள். இன்னொரு முல்லைப்பூச் சரத்தை எடுத்து வேறு ஒரு மூலையில் போட்டாள். மூன்றாவது சரத்தையும் எடுத்துப் போட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள்.
அவள் அப்படிச் செய்ததன் தாத்பரியம் என்ன என்று விசாரித்தார் உதயசந்திரன். “அதுவாங்களா ஐயா! செத்துப் போனவன் ரொம்பச் சின்னவன். கல்யாணமாகிக் கொஞ்ச நாள்தான் ஆகுது. அந்தப் புள்ள இப்ப வாயும் வயிறுமா இருக்குது. இன்னும் பல மாசம் கழிச்சுக் குழந்தை பிறக்குறப்போ யாரும் தப்பா ஒரு வார்த்தை பேசிடக் கூடாது பாருங்க. அதே சமயத்துல, அதை இங்கே வெளிப்படையா சொல்றதுக்கான சூழ்நிலையும் இல்லை. அதனால்தான் சூசகமா இப்படிச் சொம்புலேர்ந்து பூ எடுத்துப் போட்டுச் சொன்னாங்க அந்தம்மா!” என்று விளக்கினார் ஒருவர்.
எத்தனை அழகாக, எத்தனை நாசூக்காக ஜனங்கள் சில விஷயங்களைக் கையாள்கிறார்கள் என்பதை விளக்க இந்தச் சம்பவத்தை வியந்து சொன்ன உதயசந்திரன், சில சமயம் பாமர ஜனங்கள் சினிமா மற்றும் டி.வி-க்கு அடிமை போல் நடந்துகொள்வதையும் சில உதாரணங்களோடு சொல்லி விளக்கினார்.
‘பாரதி’ திரைப்படம் பார்க்க தேவி தியேட்டருக்குச் சென்றிருந்தார் உதயசந்திரன். பாரதியின் இறுதி ஊர்வலத்திலிருந்து தொடங்குகிறது படம். ஒரு மாபெரும் கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் பன்னிரண்டே பேர்தான். ‘ஏன் இப்படி?’ என்ற கேள்வியோடு தொடங்கும் படம், ஃபிளாஷ்பேக்கில் பாரதியின் கதையை விவரிக்கிறது. முடியும்போது மீண்டும் வருகிறது அந்த இறுதி ஊர்வலக் காட்சி.
வழக்கமாக, ஆரம்பக் காட்சியே மீண்டும் வந்தால், படம் முடிந்துவிட்டது என்று கலையத் தொடங்கிவிடுவார்கள் ஜனங்கள். ஆனால், அந்த இறுதி ஊர்வலக் காட்சி, படம் பார்த்தவர்கள் அத்தனை பேரையும் நெகிழ்த்தியிருக்க, அனைவரும் எழுந்து, அந்தக் காட்சி முடியும் வரை மௌனமாக நின்று அஞ்சலி செலுத்தினார்கள். இது தன்னை மிகவும் சிலிர்க்கச் செய்தது என்றார் உதயசந்திரன். ஒரு மகா கவிக்கு அந்நாளில் மக்கள் செலுத்த மறந்த கடமைக்குப் பிராயச்சித்தமாக நடந்து கொண்டது போன்று இருந்தது அந்தக் காட்சி என்றார்.
அதே நேரத்தில், இதற்கு நேர்மாறாக, ‘ஜனங்கள் எப்படிப்பட்டவர்கள்’ என்று வகைப்படுத்த முடியாத குழப்பமான சம்பவமும் அன்று நிகழ்ந்தது என்றார்.
பாரதி பட இயக்குநர் ஞான ராஜசேகரனும் அன்றைய தினம் தேவி தியேட்டருக்குப் படம் பார்க்க வந்திருந்தாராம். அவரிடம் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு, படத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பி, அவரும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தாராம். அந்தக் காட்சியை எதற்காக வைத்தீர்கள், இந்தப் பாடல் வரிகளை பாரதியார் பாடுவது போல் அமைத்தது சரியா என்று ஆக்கப்பூர்வமான கேள்வி-பதில் நிகழ்ச்சியாக இருந்தது அந்த நிகழ்ச்சி. தனது முறை வந்ததும், தானும் கேட்க வேண்டும் என்று உதயசந்திரன் நினைத்துக் கொண்டு இருந்தபோது, நாலைந்து பாமர இளைஞர்கள் இயக்குநரைச் சூழ்ந்துகொண்டு கேட்டார்களாம்... “ஆமா, ஏன் சார் பாரதிக்கு ஒரு ஃபைட் ஸீன்கூட வைக்கலே?”
இவர்களை எந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வது என்று, தான் நொந்து போனதாகச் சொன்னார் உதயசந்திரன்.
இன்னொரு சம்பவம்... சென்னையை சுனாமி தாக்கிய தினம், இவர் சென்னை கார்ப்பொரேஷனின் டெபுடி கலெக்டராக இருந்தார். வட சென்னையில் பாதிக்கப் பட்டவர்களைச் சந்திக்க மத்திய அரசிலிருந்து ஒரு குழு வந்திருந்தது.
பாதிக்கப்பட்டவர்களில் தலைவிரி கோலமாக, அழுது சிவந்திருந்த கண்களோடு வந்திருந்தாள் ஓர் இளம் பெண். காலையில், காலைக் கடன் கழிக்கச் சென்ற தனது தாயையும், அவளோடு சென்ற தனது மகளையும் ஒரே நேரத்தில் சுனாமி வந்து அடித்துக் கொண்டு போய்விட்டது என்று கதறினாள் அவள்.
“சரியா எப்பம்மா சுனாமி வந்துச்சு?” என்று மத்திய அரசுக் குழுவினர் கேட்க, அதற்கு அந்தப் பெண் சொன்ன பதில் தூக்கிவாரிப் போட வைத்தது. “அதுங்களா... அலையடிச்சு வந்துச்சுங்கய்யா... எப்பன்னா, காலைல டி.வி-யில ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ போடுவாங்களே, அப்பங்கய்யா..!”
ஒரே நேரத்தில் தாயையும் மகளையும் பறிகொடுத்த மகள் சொல்கிற நேரக் கணக்கா இது!
உதயசந்திரன் அன்று எங்களோடு பகிர்ந்து கொண்ட பல விஷயங்கள், உண்மையிலேயே எங்களுக்குப் பலவற்றைத் தெளிவு படுத்தின. மக்களில் எத்தனை விதமானவர்கள் இருக்கிறார்கள், அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்றெல்லாம் புரிய வைத்தன.
ஹேட்ஸ் ஆஃப் உதயசந்திரன்!
.
Sunday, April 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த பொற்காலம் நினைவுக்கு வருகிறது. மீண்டும் வரமாட்டாரா என்ற ஏக்கமும்!!!
உதயச் சந்திரன் அவர்களின் சொற்பொழிவை ஈரோடு புத்தகத் திருவிழாவில் இரண்டு முறை கேட்டிருக்கிறேன்.
கேட்போர் விரும்பிக்கேட்கும் வகையில் மிகவும் இனிமையானது அவரது உரை..
நூல்கள் பற்றியும், அவரது அனுபவங்கள் பற்றியம் வரலாறு பற்றியும் அவர் பேசினால் இன்று முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம்..
நல்ல பகர்வு நண்பரே..
மகிழ்ச்சி!
..... இந்த பதிலை கேட்டு, அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
இன்று பாரதி இருந்து இருந்தால், அவர் என்ன செய்து இருப்பார்? ம்ம்ம்ம்......
மிகவும் அருமையான பதிவுங்க.
Post a Comment