உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, March 31, 2010

ராஜேஷ்குமாருடன் ஒரு நாள்..!

னந்த விகடன் பத்திரிகையில் வாசகர்களுக்கு வெளியிட்ட ஒரு போட்டி சம்பந்தமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோவை சென்று, கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரைச் சந்திக்க வேண்டியிருந்தது.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, ‘சாவி’ காலத்திலிருந்தே எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் எனக்குப் பழக்கம் உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால், ராஜேஷ்குமாரை நான் நேரில் சந்தித்துப் பேசியது இது இரண்டாவது முறைதான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால், முதல் முறை என்றுகூடச் சொல்லலாம். காரணம், முதல் முறை அவரைச் சந்தித்தது பட்டுக்கோட்டை பிரபாகர் மகள் திருமண வைபவத்தில். வெறுமே ஒரு புன்னகை, ஒரு ஹலோவுக்கு மேல் அந்தக் கும்பலில் அவரோடு பேச முடியவில்லை.

ஞாயிறு காலையில் கோவை போய் இறங்கியதும், நண்பர் செந்தில்நாயகம் ஸ்டேஷனுக்கு வந்து, என்னை அன்புடன் வரவேற்றுத் தமது காரில் என்னை ராஜேஷ்குமார் வசிக்கும் வடவள்ளி பகுதிக்கு அழைத்துச் சென்றார். போகிற வழியில், ‘மருதமலை 6 கி.மீ.’ என்கிற அறிவிப்பு கண்ணில்பட, “அட! மருதமலை கோவைக்கு இத்தனை அருகிலா இருக்கிறது!” என்று என் வியப்பைத் தெரிவித்தேன். “ஆமாம் சார்! வரீங்களா, அங்கே போயிட்டு அப்புறம் ராஜேஷ்குமார் வீட்டுக்குப் போவோம்” என்றார். சம்மதித்தேன்.

கார் நேரே மருதமலைக்குச் சென்றது. எட்டு மணிக்குள்ளாகவே அங்கே நாற்பதுக்கும் மேற்பட்ட கார்கள் நின்றிருந்தன. நாளை திங்களன்று பங்குனி உத்திரம். அந்த விசேஷம்கூடக் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தேன். நேற்று சென்னை சென்ட்ரலில் கிளம்பியபோது, ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமிகளுமாகச் சுமார் ஐந்நூறு அறுநூறு பேர் செவ்வாடை தரித்து, தலையில் ஒரு கலசம் ஏந்தி, குஞ்சலங்கள் ஜோடித்த மாலையொன்றை இருபக்கமும் தொங்கவிட்டபடி ரயிலில் ஏறினார்கள். விசாரித்தபோது, அவர்கள் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுப் பழநி முருகனுக்குப் பால் குடம் ஏந்திச் செல்கிறவர்கள் என்றும், ஈரோட்டில் இறங்கிப் பழநிக்குச் செல்வார்கள் என்றும் தெரிந்தது.

மருதமலைப் படிகளில் ஏறுமிடத்தில் சாண்டோ எம்.எம்.சின்னப்பா தேவர் படம் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. மருதமலையை எடுத்துக் கட்டிச் சிறப்பித்தவர் தேவர்தானே! பாலபிஷேகம் டிக்கெட் வாங்கினோம். மருதமலை முருகனைக் கண்ணாரக் கண்டு தரிசித்தோம். கோயிலைச் சுற்றி வருகையில், ‘பாம்பாட்டிச் சித்தர் குகை’ என்கிற போர்டைப் பார்த்துவிட்டுக் கடந்தோம். ‘பார்வதியும் சிவனாரும் மிதித்த மலை, இங்கு பாம்பாட்டிச் சித்தர் வந்து வசித்த மலை’ என்கிற ‘திருவருள்’ படப் பாடல் டி.எம்.எஸ். குரலில் மனசுக்குள் ஒலித்தது.

பின்பு, அங்கிருந்து கிளம்பி ராஜேஷ்குமார் வீட்டுக்கு வந்தோம். மலையோரம் ரம்மியமான சூழலில், அமைதியாக இருக்கிறது அவர் வீடு. கையோடு எடுத்துச் சென்றிருந்த, விகடன் பிரசுரம் வெளியிட்ட என்னுடைய ஐந்து புத்தகங்களையும் அவருக்குக் கொடுத்தேன்.

பின்னர், ‘இனி மின்மினி’ தொடர்கதை, விசாரணை சீரியல், சாவி சார், காஞ்சிப் பெரியவர், நித்யானந்தர் என ஒரு மணி நேரம் போல் உரையாடினோம். காஞ்சிப் பெரியவர் மீது ராஜேஷ்குமார் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்திருக்கிறார் என்பதை அவர் பேச்சிலிருந்து அறிய முடிந்தது. காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன தகவல் ஒன்று: பெரியவருக்கு, மடத்தில் இருந்த சிஷ்யர் ஒருவர் கீரையைச் சமையல் செய்து பரிமாறுவது வழக்கமாம். அப்படி ஒருநாள் அவர் கீரை பரிமாற, அதைச் சாப்பிட்ட பெரியவர் அந்தச் சீடரை அழைத்து, “இனிமே நீ எனக்காக கீரை சமைக்க வேணாம்” என்றாராம். சிஷ்யருக்கு ஒன்றும் புரியவில்லையாம். “ஏன் சுவாமி! கீரை நன்னாயில்லையா?” என்று குழப்பத்தோடு கேட்கவும், பெரியவர் புன்னகைத்தபடியே, “ரொம்ப நன்னாருக்கு. அதனாலதான் வேணாங்கறேன். என் நாக்கு இந்தச் சுவைக்கு அடிமையாகிடக்கூடாது பாரு!” என்றாராம்.

உரையாடலின் முடிவில், முதல் நாளே ராஜேஷ்குமார் அன்புக் கட்டளை இட்டிருந்தபடி, காலை டிபனை அவரோடு அமர்ந்து உண்டோம், நானும் நண்பர் செந்தில்நாயகமும்! மைசூர்பாகு, புட்டு, இட்லி, பொங்கல், வடை என ஏக தடபுடல் செய்துவிட்டார் ராஜேஷ்குமாரின் துணைவியார்.

பின்பு, விடைபெற்று நட்சத்திர ஓட்டல் அலங்காருக்கு வந்தோம். ராஜேஷ்குமார் தன் தந்தையார், துணைவியார் மற்றும் மைத்துனரோடு அவரது காரில் வந்தார். விகடனில் அறிவித்திருந்தபடி, போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்கள் ராஜேஷ்குமாரோடு கலந்துரையாடினார்கள். உற்சாகமும் மகிழ்ச்சியும் கலகலப்பும் கொண்டாட்டமுமான ஒரு சந்தோஷ சந்திப்பாக அமைந்தது அது.

அது முடிந்து, மதியம் பஃபே விருந்து! வாசகர்கள் ராஜேஷ்குமாரோடு சேர்ந்து நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். தவிர, அங்கே வந்திருந்த ஐ.டி. மாணவர் பட்டாளம் ஒன்று, ராஜேஷ்குமார் வந்திருப்பதை அறிந்து, ஓடி வந்து மொய்த்துக் கொண்டது; செல்போனில் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டது; ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டது. அந்த ஓட்டலின் மேனேஜரும் ராஜேஷ்குமாரின் விசிறியாம். அவரும் வந்து ராஜேஷ்குமாரோடு சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

வாசகர் சந்திப்புக்கு ஓட்டலிலேயே ஏ.சி. அறை, பின்னர் பஃபே விருந்து மற்றும் டின்னரில் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து உண்ண இடம் ரிசர்வ் செய்வது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்தார் நண்பர் செந்தில்நாயகம். வந்திருந்த வாசகர்களை வரவேற்றுத் தக்க முறையில் கவனித்து அனுப்பினார் நண்பர் லோகநாதன். புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினார் ராஜேஷ். ராஜேஷ்குமார்-வாசகர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தேறியதற்கு இவர்கள் மூவரின் பங்களிப்பும்தான் காரணம்.

எனக்கு மதியம் 3:20-க்கு டிரெயின். இரண்டரை மணி சுமாருக்கு, நண்பர் செந்தில்நாயகம் என்னைத் தமது காரில் கொண்டு வந்து கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டுப் போனார். ஸ்டேஷனிலேயே கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் உலாத்தினேன். பின்னர், ரிசப்ஷனில் என் டிக்கெட்டைக் காண்பித்து எத்தனாவது பிளாட்பாரம் என்று விசாரித்தபோது, “இந்த டிரெயின் இங்கே வராது. போத்தனூர் ஸ்டேஷனுக்கு உடனே போங்க!” என்று விரட்டினார். இங்கே இருப்புப்பாதை பணிகள் நடந்துகொண்டு இருப்பதால், சேரன், வைகை தவிர மற்ற ரயில்கள் இங்கே வராதாம், இன்னுமொரு பத்து நாளைக்கு.

உடனே வெளியேறி, ஒரு கால்டாக்ஸி பிடித்து, சுமார் 6 கி.மி. தொலைவில் உள்ள போத்தனூர் சென்றேன். எந்தப் பயணமானாலும் மிக முன்னதாகவே ஸ்டேஷனுக்கு வந்துவிடும் என் பழக்கம், இப்போது டிரெயினைத் தவறவிடாமல் இருக்க உதவியது.

‘ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்’ என்பது டிக்கெட்டில் காணப்படும் பெயர். கால்டாக்ஸி ஓட்டுநரிடம் இது பற்றிச் சொன்னபோது, “சார், அது ரப்திசாகர் இல்லை சார்! சகாப்திசாகர்” என்றார். போத்தனூர் ஸ்டேஷனில் சென்று விசாரித்தால், அவர்களுக்கு ரப்திசாகரும் தெரியவில்லை; சகாப்திசாகரும் தெரியவில்லை. “3:20 டிரெயின்தானே! அது கோரக்பூர் எக்ஸ்பிரஸ். இப்ப வண்டி வரும்” என்றார்கள்.

கன்ஃபார்ம் ஆகாத என் டிக்கெட்டின் பி.என்.ஆர். நம்பரைத் தட்டி அங்குள்ள கம்ப்யூட்டரில் தேடியபோது, என் கோச் எண்ணும், சீட் எண்ணும் தெரிந்தது.

சில விநாடிகளில் வண்டி வரவும், ஏறி என் இடத்தில் அமர்ந்துகொண்டேன். சில நிமிடங்களிலேயே புறப்பட்டுவிட்டது.

கோவை போகையில் வழித்துணையாக வந்த மகாஸ்ரீ அன்னைக்கும், பத்திரமாகச் சென்னைக்கு வழியனுப்பிய மருதமலையானுக்கும் மனசுக்குள் நன்றி சொல்லிக்கொண்டேன்.

.

9 comments:

பகிர்வுக்கு நன்றிகள்.
 
எங்கூருக்கு போய் மருதமலை சென்று வந்ததும் , எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களை சந்தித்து வந்ததும் தள்ளியிருந்தாலும் , நேரிலேயே சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது உங்கள் பதிவு . நன்றிகள் ....
 
"இனி மின்மினி.." தொடர் தொடர்பான சந்திப்பா சார்?

எங்களூர் (கோவை) சம்பந்தப்பட்டிருக்கும் தொடர் என்றாலும் ஆரம்ப சில அத்தியாங்களை தவறவிட்டதால் மேலும் தொடர சுவாரஸ்யமில்லாமல் அதை படிப்பதில்லை......



என்ன..இப்படியொரு கலந்துரையாடல் உங்கள் மேற்பார்வையில் இங்கு நடக்க போவது முன்பே தெரிந்திருந்தால் தொடர்ந்து வாசிதிருப்பேனோ என்னவோ....

better luck next time
 
எழுத்தில் இருக்கும் அதே சுவாரஸ்யம் அவர் பேச்சிலும் இருக்கும். உதாரணம் நீங்கள் குறிப்பிட்ட பெரியவர் சம்பவம்! ஆறேழு மாதங்களுக்கு முன்னால் போனில் பேசியபோது உங்கள் இணைய கட்டுரைகள் குறித்து விசாரித்தார்.
 
நல்ல பதிவு சார்..
உங்ககூடவே கோயமுத்தூர் வந்ததுபோல இருந்தது..
 
என்ன சார், கோவை வரப்போவது பற்றி முன்கூட்டியே ஒரு பதிவு போட்டிருந்தால், ஓடி வந்து உங்களையும், உங்கள் புண்ணியத்தில் ராஜேஷ்குமார் அவர்களையும் பார்த்து ஒரு ஆட்டோகிராஃப் வாங்கியிருப்பேனே! வட போச்சே! :)
 
நன்றி ஜீவன்பென்னி!

நன்றி பத்மநாபன்!

நன்றி தட்ஸ்கூல்சுரேஷ்!
 
எஸ்.ஆர்.கே., ராஜேஷ்குமார் என் இணைய கட்டுரைகள் பற்றி விசாரித்தார் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. இதே போல் இன்னும் சிலரும் ராஜேஷ்குமார் என் வலைப்பூ பற்றித் தங்களிடம் சொன்னதாகத் தெரிவித்தார்கள். ஆனால், நான் அவரை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அந்த அரை நாளும், நானோ அவரோ என் பிளாக் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளவில்லை!
 
நன்றி பட்டாபட்டி!

நன்றி கிருபாநந்தினி! எனது கோவை பயணம் திடீரென முடிவானது. எனவேதான் பதிவிட முடியவில்லை. தவிர, ராஜேஷ்குமார் உங்க ஊர்க்காரர்தானே! அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க என் புண்ணியம் எதற்கு?!