‘கடவுள் கொடுத்த முத்திரை’, ‘சில சுவாரசியமான கேஸ்கள்’ என இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளையும் பதிந்த அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக, இரண்டுக்கும் தங்கள் பொன்னான வாக்குகளை உடனே தமிழிஷ்-ஷில் செலுத்தி, இரண்டையும் பாப்புலர் பதிவுகளாக்கிய முகமறியா நல்ல உள்ளங்கள் அத்தனை பேருக்கும் முதலில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி, சென்ற பதிவின் தொடர்ச்சி...
மதுரைத் திருட்டுச் சம்பவத்தில் கிடைத்த கைரேகை ஒரு குழந்தையின் ரேகையை ஒத்திருந்தது என்று கண்டோமல்லவா? காவல்துறை குழம்பியது.
அப்போது, அங்கே இருந்த ஃபிங்கர் பிரின்ட் நிபுணருக்கு ஒரு சந்தேகம்... அங்கே குரங்காட்டி ஒருவன் குரங்கை வைத்துத் தெருக்களில் வித்தை காட்டிக்கொண்டு இருந்தான். குரங்களுக்கும் மனிதர்களைப் போல ரேகைகள் உண்டு. எனவே, அந்தக் குரங்கைப் பிடித்து ரேகை எடுத்துப் பார்த்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. அதன்படியே செய்தார்கள். அந்தக் குரங்குக்குட்டியின் விரல் ரேகை, திருட்டு நடந்த அத்தனை வீடுகளில் கிடைத்த ரேகையுடனும் ஒத்துப் போயிற்று. மிருகங்கள் செய்கிற குற்றத்துக்கு நமது சட்டத்தில் தண்டனை கிடையாது. எனவே, அந்தக் குரங்காட்டிக்குத் தண்டனை கிடைத்தது. அவனிடமிருந்த பொருள்களும் கைப்பற்றப்பட்டன. உலகிலேயே ஒரு குரங்கின் கைரேகையை எடுத்துக் குற்றவாளியைப் பிடித்த விசித்திரமான கேஸ் தமிழ்நாட்டில்தான் நடந்தது.
ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் வெறுமே ரேகைகளை மட்டும்தான் வைத்துத் துப்புக் கண்டுபிடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையில், ரேகையைவிட வேறு பல விஷயங்களும் அவர்களுக்கு உதவுகின்றன. உதாரணமாக, குற்றம் நடந்த இடத்தில் கிடக்கும் ஒரு சிகரெட் துண்டு அல்லது ஒரு சின்ன செய்தித்தாள் துண்டு கூட அவர்களுக்கு ஒரு க்ளூவாக உதவும்.
தவிர, மோடஸ் ஆபரேண்டி (modus operandi) என்று ஒன்று உண்டு. சுருக்கமாக இதை எம்.ஓ. என்பார்கள். அதாவது, ஒருவர் செயல்படும் பாணி அல்லது தனித்தன்மை. எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக பாணி உண்டு. அவரவர்கள் அந்தந்த பாணியில்தான் செயல்படுவார்கள். கிரிமினல்களுக்கும் இந்த மோடஸ் ஆபரேண்டி அதிகம் உண்டு. ஒரு நல்ல, கூர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தால், இந்த எம்.ஓ-வை வைத்தும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிடலாம்.
உதாரணமாக, பகலில் திருடுகிறவன் எப்போதும் பகலிலேயே திருடுவான். இரவில் வரமாட்டான். காரிலிருந்து ஸ்டீரியோவைத் திருடிச் செல்கிறவன், அதே திருட்டையேதான் செய்வான். காரிலிருக்கும் வேறு பொருள்களைத் திருட மாட்டான். பைக் திருடுகிறவன் பைக்கை மட்டும்தான் திருடுவான்.
2000-வது ஆண்டில் பரபரப்பான ஒரு திருட்டு கேஸ். கடைகளின் ரோலிங் ஷட்டரை நெம்பித் திறந்து, உள்ளேயிருக்கும் கல்லாப் பெட்டியை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றான் ஒரு கிரிமினல். எல்லாக் கொள்ளைகளிலும் ஓர் ஒற்றுமை இருந்தது. களவு நடந்த இடத்தில் ஒரு கடப்பாரை, ஒரு மெழுகுவத்தி, ஒரு பை கிடந்தது. சில இடங்களில் மட்டும் பை இருக்காது. கடப்பாரையும் மெழுகுவத்தியும் மட்டும் கிடக்கும்.
எதற்காக அந்த மூன்று பொருள்கள்? கடப்பாரை, ரோலிங் ஷட்டரை நெம்பித் திறப்பதற்கு. மெழுகுவத்தி, உள்ளே போய்க் கொளுத்தி, அந்த வெளிச்சத்தில் திருடுவதற்கு. ஸ்விட்ச் போட்டால், அதில் தன் கைரேகை பதிந்துவிடும் என்று உஷாராக இருந்தான் அவன். பையில் கொள்ளையடித்த பணத்தைப் போட்டு எடுத்துச் செல்வான். ஆனால், சில இடங்களில் பை கிடந்ததே, ஏன்?
விசாரணையில் காரணம் புரிந்தது. அதிக பணம் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களில், பை இல்லை. குறைவான பணம் கொள்ளை போன இடங்களில் பை இருந்திருக்கிறது. அதாவது, அதிக பணம் கிடைத்தால், அதை அந்தப் பையில் போட்டு எடுத்துச் செல்கிறான். குறைவாகக் கிடைத்தால், அதைத் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு, பையை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுகிறான்.
மவுண்ட் ரோடு ஷோரூம் ஒன்றிலிருந்து, ரூ.50,000 கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் வந்தது. அங்கேயும் கடப்பாரை, மெழுகுவத்தியோடு பையும் கிடைத்தது. எனில், 50,000 ரூபாய் கொள்ளை போனதாக அவர்கள் சொன்னது பொய் என்று யூகித்தார்கள். பிறகு, வெங்கடேசன் என்ற பெயருள்ள அந்தக் கிரிமினல் பிடிபட்டான். அவனை அடித்து, உதைத்து விசாரித்ததில், அங்கிருந்து வெறும் 5,000 ரூபாய் மட்டும்தான் கொள்ளையடித்ததாகச் சொன்னான்.
எனவே, எம்.ஓ. (மோடஸ் ஆபரேண்டி) என்பது சில கேஸ்களில் ரேகையைவிட அதிக அளவு உபயோகமாகிறது.
பூட்டை உடைத்து உள்ளே செல்வார்கள் சிலர். வேறு சிலரோ ஒரு கட்டிங் பிளேயரால், பூட்டு தொங்கும் கொண்டாணியை நறுக்கிச் சுலபமாக உள்ளே செல்வார்கள். பூட்டு திறக்கப்படாமலே கீழே விழுந்து கிடக்கும்.
எனவே, ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்காரர்கள் போனால் அவர்கள் அங்கே முதலில் பார்ப்பது பூட்டு எப்படித் திறக்கப்பட்டிருக்கிறது, அல்லது உடைக்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான். கள்ளச் சாவி போட்டுத் திறந்திருக்கிறானா, பின்னை வளைத்து உபயோகித்துத் திறந்திருக்கிறானா, கொண்டாணியை உடைத்திருக்கிறானா, ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்திருக்கிறானா, அல்லது கம்பிகளை முறுக்கி வளைத்துப் போயிருக்கிறானா, அல்லது ஜன்னலின் ஸ்க்ரூ ஆணிகளைத் திருகிக் கழற்றி ஜன்னலையே பெயர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறானா என்றெல்லாம் பார்ப்பார்கள்.
ஜவுளிக்கடைகளில் பெரும்பாலும் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்து கொள்ளையடிப்பவர்கள்தான் அதிகம். இதிலும் எம்.ஓ. உண்டு. குறிப்பிட்ட ஒரு கிரிமினல் எப்போதும் சதுரமாகத்தான் ஓட்டை போட்டு உள்ளே செல்வான். சிலர் வட்டமாக ஓட்டை போடுவார்கள். அந்த ஓட்டை கூட ஆளுக்கு ஏற்ற மாதிரி குறிப்பிட்ட சைஸ்களில்தான் இருக்கும். அதை வைத்தே இன்னார்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட முடியும். சிலர் ஆக்ஸா பிளேடு வைத்து அறுத்து, செங்கல் செங்கல்லாக உருவி, துவாரம் உண்டு பண்ணி உள்ளே செல்வார்கள்.
இதையெல்லாம் நன்கு கவனிக்க வேண்டும்.
ஒரு குற்றம் நடந்தால், ‘பிரசர்வேஷன் ஆஃப் தி ஸீன் ஆஃப் க்ரைம்’ என்பது ரொம்ப முக்கியம். அதாவது, தடயங்களைப் பாதுகாத்தல். வெளிநாடுகளில் இது கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அங்கேயெல்லாம் ஒரு குற்றம் நடந்தால், ‘ஸீன் ஆஃப் க்ரைம்; டோண்ட் டிஸ்டர்ப்!’ என்று வெளியே போர்டு வைத்து விடுவார்கள். இங்கே நிலைமை தலைகீழ்.
குற்றம் நடந்த இடத்துக்கு முதலில் தடயவியல் நிபுணர்களும், ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டும்தான் போக வேண்டும். பிறகுதான் போலீஸ் அங்கே நுழைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, இங்கே முதலில் திபுதிபுவென பத்துப் பதினைந்து போலீஸார் நுழைந்து, பொருள்களைப் புரட்டிப் பார்த்து, இறந்து போனவரின் உடலைத் தொட்டுப் புரட்டிவிடுகிறார்கள். அப்புறம் கைரேகை நிபுணர்கள் போய் ஃபிங்கர் பிரின்ட்ஸ் எடுத்தால், எல்லாம் போலீஸ்காரர்களின் கைரேகைதான் கிடைக்கிறது. இதனாலேயே இங்கே பல குற்றவாளிகள் தடயம் கிடைக்காமல் தப்பிவிடுகின்றனர்; பல கேஸ்கள் முடியாமல் இருக்கின்றன.
தவிர, அங்கேயுள்ள வாசனை ரொம்ப முக்கியம். குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளியின் வாசனை இருக்கும். போலீஸ் நாயை அழைத்துச் செல்வ்து அதற்காகத்தான். போலீஸ்காரர்கள் நுழைந்து அவர்களின் வாசனையைப் பரப்பிவிட்டால், போலீஸ் நாய் அவர்களையேதான் பிடிக்கும்.
ஒரு கேஸில், பெண் டாக்டர் ஒருவர் காரில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் உயர் அதிகாரியே அவசரப்பட்டுக் கார் கதவைத் திறந்து, இறந்து கிடப்பவரின் உடலைப் பார்த்துவிட்டுக் கதவை மூடினார். பிறகு வந்த விரல் ரேகை நிபுணர்கள் பொடிகளைத் தூவி, “சக்ஸஸ் சார்! கைரேகை தெளிவா கிடைச்சிருக்கு. கல்ப்ரிட் அகப்பட்டுக்கிட்டான்!” என்றனர். “உடனே அவனை மடக்கிப் பிடிங்க” என்று பரபரத்தார் கமிஷனர்.
ஆனால், எடுக்கப்பட்ட கைரேகை எந்தக் குற்றவாளியின் ரேகையுடனும் பொருந்தவில்லை. அது பெரிதாகப் பிரின்ட் போடப்பட்டு, மற்ற ஸ்டேட்களில் உள்ள குற்றவாளிகளின் ரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக இந்தியா முழுக்க அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. பல நாள்கள் முயற்சி செய்தும் பலன் இல்லை. “எப்படிய்யா கிடைக்காம போகும்? ரேகையைச் சரியா எடுத்தீங்களா?” என்று கேட்டுக் கடுப்படித்தார் கமிஷனர். ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்டில் இருந்த ஒருவருக்கு மட்டும் ஒரு சந்தேகம். அதைச் சொல்லியும் விட்டார். “சார்! எங்களுக்கு முன்னே ஏ.எஸ்.பி அங்கே வந்து பார்த்தார். இந்த ரேகை அவர் ரேகையோடு பொருந்தும்னு நினைக்கிறேன்” என்றார். அதன்படி ஏ.எஸ்.பி-யின் ரேகையை எடுத்துப் பார்க்க, இரண்டும் கச்சிதமாகப் பொருந்தின.
தங்களை அநாவசியமாகக் கடுப்படித்ததற்குப் பழிதீர்க்கும் விதமாக, இந்தியாவில் உள்ள எல்லா ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்டுகளுக்கும் உடனே ஒரு மெயில் அனுப்பினார்கள். “அந்தக் குறிப்பிட்ட கொலைக் கேஸில் எடுத்து அனுப்பப்பட்ட கைரேகை இங்கே ஏ.எஸ்.பி-யின் கைரேகையுடன் பொருந்துகிறது. எனவே, அதைத் தயவுசெய்து இக்னோர் செய்யவும்” என்று தகவல் அனுப்பிவிட்டார்கள்.
தடயங்கள் எத்தனை முக்கியம், அதுபற்றிய விழிப்பு உணர்ச்சி இங்கே காவல்துறையில் பணி புரிகிறவர்களுக்கே இல்லை என்பதை விளக்க, ஆதங்கத்துடன் இந்த உதாரணத்தைக் குறிப்பிட்டார் வரதராஜன்.
கைரேகைக் கூடம் இங்கே சென்னையில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது என்பதைப் பெருமையுடன் பார்த்தோம். ஆனால், இதில் உள்ள ஒரு சோகம் என்னவென்றால், அதற்குப் பின் வெளிநாடுகளில் எல்லாம் இந்தத் துறை மளமளவென வளர்ந்துவிட்டது. இங்கே கறுப்பு, வெள்ளைப் பொடிகள் என இரண்டு மூன்றை மட்டுமே வைத்து ஒப்பேற்றி வருகிறார்கள். அதுவும் இவர்களாக பாரிஸ் கார்னர் போய் கெமிக்கல் வாங்கிக் கலந்து தயாரித்துக் கொள்கிறார்கள். வெளிநாடுகளில் பதினைந்து பதினாறு வகையான கெமிக்கல்கள் நடைமுறை உபயோகத்தில் உள்ளன. இதனால், அங்கே துருப்பிடித்த இரும்பு, வாழைப் பழத் தோல், செங்கல் மீதெல்லாம் பட்ட கைரேகைகளைக்கூட பிரிண்ட் எடுக்க முடிகிறது.
ஓர் அறையில் குற்றம் நடந்தால், அங்கே அறையைப் பூட்டிவிட்டு உள்ளே அயோடின் ஃப்யூமை (புகை) பரப்புவார்கள். சுவர்களில், பீரோக்களில் பதிந்துள்ள ரேகைகள் தெளிவாகப் புலப்படும். அங்கே டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இங்கேயோ, 1902-ல் கண்டுபிடித்த அதே இரண்டு மூன்று பொடிகளை மட்டும் வைத்து கதை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.
“மத்திய அரசு ஆண்டுதோறும் காவல்துறை வளர்ச்சிக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அதை உபயோகிக்காமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அந்தத் தொகையில், ஃபிங்கர் டிபார்ட்மென்ட்டுக்குத் தேவையான இப்படியான பொடிகளையும் உபகரணங்களையும் வாங்கிக் கொடுங்கள் என்று அரசுக்கு எழுதிக் கேட்டேன். அவர்கள் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் வரதராஜன்.
தனது ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ பற்றியும், அதன் மூலம் அவர் கண்டுபிடித்த சில கேஸ்கள் பற்றியும் வரதராஜன் சொன்னவற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
.
Sunday, April 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இவரது அனுபவங்களை விகடனில் தொடராகவே போடலாம்
நல்லவேளை நீங்களாவது எழுதினீர்கள். கலக்கல் சார்.
தொடருங்கள்.
அவரை சந்திக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு விட்டது.
Humm... what to say??
Kalyani's comment is good.
Post a Comment