எழுத்தாளர் பாலகுமாரனை சமீபத்தில் அவரது வீட்டில் சந்தித்தேன். சக்தி விகடனில் அவரை எழுத வைக்க எண்ணம்.
நேரில் சந்திப்பதற்கு முன்பாக அவரோடு தொலைபேசியில் உரையாடி, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஏற்கெனவே ‘சாவி’யில் பணியாற்றிய காலத்தில் அவரது அறிமுகம் எனக்கு உண்டு என்பதையும் தெரிவித்து, சக்தி விகடனில் தொடர் எழுதுவது பற்றிக் கேட்டேன். “நேரில் வாருங்கள், பேசுவோம்” என்றார்.
நேரில் சென்றபோது, “அடடே! வாங்க ரவிபிரகாஷ்! இப்போ தெரியுது. போனில் சொல்லும்போது எனக்குச் சட்டுனு உங்களை ஞாபகத்துக்கு வரலை” என்றார்.
பாலகுமாரன் என்னை நினைவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவரோடு எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு என்று சொல்ல முடியாது. தவிர, அவரோடு தொடர்பு விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. நான் விகடனில் சேர்ந்த பிறகு, ‘அப்பம் வடை தயிர்சாதம்’ என்றொரு தொடர்கதை எழுதினார். அப்போது அவருடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மகள் திருமணம் விஜயா மஹாலில் (பெயர் சரியா என்று தெரியவில்லை. பழைய நாகேஷ் தியேட்டர் என்றுதான் என் மனதில் பதிந்திருக்கிறது.) நடந்தபோது, பாலகுமாரனும் வந்திருந்தார். அருகில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். என்றாலும், அது அவர் நினைவில் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
‘சாவி’ காலத்தில், பாலகுமாரன் பலமுறை சாவி இல்லத்துக்கு வந்திருக்கிறார். நட்புரிமையோடு எங்களுடன் பேசுவார்; பழகுவார். அப்போது அவர் அடிக்கடி சஃபாரி டிரெஸ் அணிந்துதான் நான் பார்த்திருக்கிறேன். நாற்பது வயதுக்குரிய இளமையோடும் சுறுசுறுப்போடும் இருப்பார். மாலன், சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் இவர்களெல்லாம் பணியாற்றிய காலம் சாவியின் பொற்காலம்.
சாவி பத்திரிகையில் பாலகுமாரன் எழுதிய ‘மெர்க்குரிப் பூக்கள்’, இன்றளவும் பேசப்படும் அற்புதமான ஒரு தொடர்கதை. எழுத்தாளர் சுஜாதாவிடம் வாசகர்களுக்கு உள்ள அபரிமிதமான ஈர்ப்பைப் போன்று ஒரு வசீகர ஈர்ப்பை பாலகுமாரனுக்கும் கொண்டு சேர்த்த கதை அது. அதைப் படித்துவிட்டு லட்சக்கணக்கான வாசகர்கள் பாலகுமாரனின் அபிமானிகள் ஆனார்கள்.
கடலூரில் நடந்த என் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்ள நான் சென்றிருந்தபோது, நானும் பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிக்கொண்டு இருப்பவன் என்று அறிந்து, என்னிடம் வந்து அரட்டை அடித்த டீன் ஏஜ் பெண்கள் பலரும் கேட்ட ஒரு கேள்வி... இன்றைக்கும் நன்றாக ஞாபகம் இருக்கிறது - ‘நீங்கள் பாலகுமாரனைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்களா?’ “பேசியிருக்கிறேன்; அவரோடு கைகுலுக்கியும் இருக்கிறேன்” என்று ஒருவேளை அப்போது நான் சொல்லியிருந்தால், என் வலது கையை எடுத்து அவர்கள் முத்தமிட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். அவர்களின் கண்களில் அப்படி ஒரு ஆர்வ மின்னல் தெறித்ததை நான் பார்த்தேன்.
ஆனால், நான் அப்போது சென்னைப் பக்கமே வந்திருக்கவில்லை. ஆகவே, “ஏன் கேட்கிறீர்கள்?” என்று கேட்டு வைத்தேன். “நாங்கள் அத்தனை பேருமே பாலகுமாரன் ரசிகைகள். ஹைய்ய்யோ! என்னமா எழுதறாரு!” என்று சிலாகித்தார்கள். “நானும் ஒரு பால குமாரன்தான்” என்றேன். அப்போது என் வயது 22, 23-தான் இருக்கும். என் நகைச்சுவை(?!) அவர்கள் காதில் ஏறவேயில்லை. பாலகுமாரன் எழுத்து பற்றி ரொம்ப நேரம் மாய்ந்து மாய்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.
பின்னர் பல ஆண்டுகள் கழித்து ‘சாவி’ பத்திரிகையில் பணியில் சேர்ந்த பிறகுதான் எனக்கு பாலகுமாரனின் அறிமுகம் கிடைத்தது. சாவி இதழ் பொறுப்பு முழுக்க என் கைக்கு வந்த பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாலகுமாரனை நான் ஒரு தொடர்கதை எழுதும்படி கேட்டுக்கொண்டேன். ‘பந்தயப் புறா’ என்னும் தலைப்பில் எழுதினார். வாராவாரம் டாணென்று திங்கள் கிழமையன்று அந்த வாரத்துக்கான அத்தியாயம் வந்துவிடும்.
அந்நாளைய இளமை பாலகுமாரனுக்குப் பிறகு அவரை நான் ஆனந்த விகடனில் பார்த்தது முற்றிலும் மாறுபட்ட ஒரு தோற்றத்தில். கவிஞர் வாலி போன்று நீண்ட வெண் தாடியும், நீள் தலைமுடியுமாக, ஒரு சாமியார் தோற்றத்தில் பாலகுமாரனைக் கண்டபோது, காதல் ரசம் சொட்டச் சொட்ட, கணவன் மனைவியின் அந்தரங்க அன்பைப் பிழியப் பிழிய எழுதிய அந்த மெஸ்மரிஸ எழுத்தாளரா இவர் என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். ‘அப்பம் வடை தயிர்சாதம்’ எழுதும் பாலகுமாரனாகப் பக்குவப்பட்டிருந்தார்.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். பாலகுமாரனின் அழைப்பின்பேரில் சென்று, அவர் வீட்டினுள் நுழைந்தபோது, தவறிப்போய் ஏதாவது கோயிலுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று ஒரு கணம் திகைப்பு உண்டாயிற்று. ஹாலே ஒரு மினி கோயிலாக மாறியிருந்தது. சுவரில் பிரமாண்ட ராம்சுரத்குமார் படம்; பின்னணியில் திருவண்ணாமலை; பக்க அலமாரிகளில் சுவாமி படங்கள், விக்கிரகங்கள்; மேலே மாவிலை போன்று வண்ணமயமான தோரணம்; தேருக்கு நான்கு புறங்களிலும் தொங்கவிடுவது போன்ற வண்ண வண்ணத் தொம்பைகள்; சற்று முன்னால் ஒரு பீடத்தில், பித்தளையால் ஆன அம்பாள் விக்கிரகம் ஒன்று; எதிரே ஓர் அலங்காரத் தொட்டியில் தண்ணீர்; அதில் மிதக்கும் புஷ்பங்கள்; கமகமக்கும் சாம்பிராணி வாசனை, விபூதியும் குங்குமமும் கலந்த வாசனை என அந்தக் கூடமே தெய்வீகம் ததும்பி வழிந்தது.
ஆளை விழுங்கும் சோபாக்கள் ஒன்றில் அமர்ந்து, புதைந்தேன். எதிரே பாலகுமாரன். ஒரு யோகி போன்று கண்களை மூடி, ஒவ்வொரு வார்த்தைக்கும் போதிய இடைவெளி கொடுத்து, நிறுத்தி நிதானமாக, சில சமயம் கொஞ்சம் கூடுதலாகவே கால இடைவெளி தந்து பேசிய பாணி, யாரோ ஒரு முனிவரிடம் பேசிக்கொண்டு இருப்பதான உணர்வையே எனக்குத் தந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் பழகிய அந்த பாலகுமாரன் யாரோ!
சக்தி விகடனில், ரமண மகரிஷியின் சரித்திரத்தை ஆதியோடந்தமாக எழுதுவதாகச் சொன்னார் பாலகுமாரன். ரமணர் பற்றி நூற்றுக்கணக்கில் புத்தகங்களைக் கரைத்துக் குடித்து, ஒரு பெரிய ஆராய்ச்சியே சமீப காலங்களில் செய்து வந்திருக்கிறார் அவர். சக்தி விகடனுக்காக நான் சென்று கேட்டதும், மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்.
நான் சென்றிருந்த நேரத்தில், அங்கே ஒரு திரையுலகப் பிரபலமும் தன் குடும்பத்தோடு வந்திருந்தார். வந்தவர் சோபாவில் அமராமல், நேரே சென்று அந்த அம்பாள் சிலையின் முன் தரையில் சப்பணமிட்டு அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். அவரின் மனைவி பாலகுமாரனின் மனைவியோடு பேசிக்கொண்டு இருக்க, அவரின் பதின் வயதுகளில் இருந்த பையனும் பெண்ணும் சோபாவில் அமர்ந்தார்கள்.
நான் பாலகுமாரனிடம் விடைபெற்றுக் கிளம்பவிருந்த சமயத்தில் அந்தத் திரையுலகப் பிரபலம் தியானம் கலைந்து எழுந்தார். எழுந்தவர் நேரே பாலகுமாரனிடம் வந்தார். பாலகுமாரன் சோபாவில் அமர்ந்திருக்க, அவரின் கால்களில் அந்தத் திரையுலகப் புள்ளி சாஷ்டாங்மாக விழுந்து நமஸ்கரித்தார். உடனே எழுந்திருக்கவில்லை. அப்படியே கிடந்தார். “ம்... போறும்! போறும்! ம்... எழுந்திரு, போறும்!” என்று பாலகுமாரன் பலமுறை சொன்ன பிறகுதான் மெதுவாக எழுந்தார்.
அவரிடம் பாலகுமாரன் என்னை அறிமுகம் செய்வித்து, “சக்திவிகடனுக்காகத் தொடர் கட்டுரை கேட்டு வந்திருக்கார்” என்றதும், அந்தத் திரையுலகப் பிரபலம் எனக்கு வணக்கம் சொன்னார். பதிலுக்குக் கைகூப்பி அவரை வணங்கி, விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.
அந்தத் திரையுலகப் பிரபலம்... சொன்னால் நம்பமாட்டீர்கள் - அவர், ராஜ்கிரண்!
.
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
பிரபாகர்.
It is interesting to read about Mr.Balakumaran.
Best wishes for Sakthi vikatan projects.
: :) :-) :-)) ;-) ;-))
பாலகுமாரன் ஐயா அவர்களின் 'உடையார்' நாவலை, பல வருடங்களுக்கு முன்னர், சில பாகங்கள் படித்தது. கடைசி சில பாகங்கள் வெளிவராத சமயம் அது. பின்னர் வேலை, வெளிமாநிலம் என்று வந்தவுடன், அந்த நாவலின் தொடர்ச்சி விட்டுப் போய்விட்டது. இந்தமுறை சென்னை வரும்போது, முழுமையும் படித்துவிட வேண்டும் என்ற அதீத ஆர்வத்தை விதைத்துவிட்டது உங்கள் பதிவு. நன்றி!
எப்போது அவரது தொடர் சக்தி விகடனில் வெளி வரப் போகிறது ?
http://www.virutcham.com
ரேகா ராகவன்.
You are tempting us to buy Shakthi Vikatan. :-))))
புல்லரிக்குதுங்கோ..
கலக்கிறிங்க சார்.... வாழ்த்துக்கள்
கெட்டாலும் மேன்மக்கள் என்ற அவரது கதையைக் குமுதத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.
நன்றி அநன்யா!
பாராட்டுக்களுக்கு நன்றி இராமசாமி கண்ணன்! பாலகுமாரன் எழுதும் தொடர் அடுத்து வெளிவர இருக்கும் சக்தி விகடன் ஏழாம் ஆண்டுச் சிறப்பிதழில் தொடங்குகிறது.
வாழ்த்துக்களுக்கு நன்றி சித்ரா! என்ன, திடீரென்று ஆங்கிலத்துக்கு மாறிவிட்டீர்கள்?!
நன்றி பொன்னியின் செல்வன்! பாலகுமாரனின் உடையார் ஒரு மெகா ப்ராஜெக்ட் ஆயிற்றே!
நன்றி விருட்சம்! வருகிற ஏழாம் ஆண்டுச் சிறப்பிதழில் தொடங்குகிறது.
நன்றி ரேகா ராகவன்!
நன்றி கிருஷ்ண பிரபு! இறையன்பு, பாலகுமாரனைத் தொடர்ந்து பாக்கியம் ராமசாமியும் எழுதுகிறார்.
பித்தனின் வாக்குக்கு நன்றி!
அதிஷா! மிக்க நன்றி!
கிருபாநந்தினி! நீங்கள் படித்துள்ள பாலகுமாரனின் நாவல்கள் இரண்டுமே அருமையானவை. ஆனந்தவிகடனில் வெளியான அவரது தாயுமானவன் மற்றும் அப்பம் வடை தயிர்சாதம் ஆகியவற்றை நீங்கள் படித்ததில்லையா?
நன்றி சித்தூர் முருகேசன்!
விக்னேஷ்வரி! அப்படியா?!:o)
இராமசாமி கண்ணன்! ஆமாம். அதுவும் மிகவும் அருமையான புத்தகம்தான்! அது சரி, பாலகுமாரன் எழுத்து எப்போது சோடை போனது! எல்லாமே வைரங்கள்தானே!
நல்ல பகிர்வு, இதைப் படித்த நானும் உங்களுடன் வந்த அந்த சோஃபாவில் அமர்ந்துக்கொண்டதுபோல் ஒரு உணர்வு.
சக்தி விகடனில் தொடங்கவிருக்கும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி..!
-
DREAMER
சென்ற முறை மூன்று பாகம் வாசித்தது.
இந்த முறை மீண்டும் வாசிக்க ஆரம்பித்து முதல் இரண்டு பாகம்தான் வாசிக்க முடிந்தது! ஒரு வாரத்திற்குள்ளாகவே இரண்டு பாகம் வாசித்து முடித்தாலும், மேலும் தொடர இயலாமல் போய் விட்டது சார்!
கண்டிப்பாக, ஒரு நாள் இல்லை ஒரு நாள் அதை வாசித்தேத் தீரவேண்டும் என்ற ஆவல் மட்டும் இன்னும் குறையவில்லை. பார்க்கலாம் !!
Post a Comment