உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, March 18, 2010

பொய் ஆராய்ச்சி!

‘பொய்யாமை’ என்னும் தலைப்பில் வள்ளுவர் பத்து குறட்பாக்களை இயற்றியுள்ளார்; அந்தக் குறள்களை ஊன்றிப் படித்தால், பொய் சொல்வதில் மொத்தம் ஒன்பது ரகம் உண்டு என்பது புரியும்.

கொஞ்சம் இருங்கள்... பொய் ஆராய்ச்சி என்று தலைப்பிட்டுவிட்டு எழுதத் தொடங்கும் ஆரம்ப வரியே இத்தனைப் பெரிய பொய்யாக இருந்தால், உங்களால் ஜீரணிக்க முடியாது. வாய்மை என்னும் தலைப்பில் மட்டும்தான் வள்ளுவர் குறட்பாக்கள் எழுதியுள்ளார். பொய்யாமை என்றொரு அதிகாரமே கிடையாது!

அது இருக்கட்டும்... பொய்யில் மொத்தம் ஒன்பது ரகப் பொய்கள் உண்டென்பது என் ஆராய்ச்சியில் நான் கண்ட உண்மை.

ஏற்கெனவே எனது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’யில் ‘பொய்யிலே பிறந்து...’ என்றொரு பதிவு எழுதினேன். அதற்குத் தமிழிஷ்-ஷில் 28 பேர் ஓட்டளித்திருந்தார்கள்; 43 பேர் அதைச் சிலாகித்துப் பின்னூட்டம் போட்டிருந்தார்கள்! (மகா பொய்!)

அந்தப் பதிவில், பொய் சொல்வதற்கு எத்தனைச் சாமர்த்தியம் வேண்டும், நாம் நடைமுறை வாழ்க்கையில் என்னென்ன பொய்களைச் சொல்கிறோம் என்று எழுதியிருந்தேன்.

சின்ன வயதில் (ஏன்... இப்பவும்தான்!) நான் நிறையப் பொய் சொல்லுவேன். அதையெல்லாம் என் அப்பா எப்படியோ கண்டுபிடித்து, என்னைச் சக்கையாகப் பிரம்பால் விளாசிவிடுவார். அதற்காக நான் பொய் சொல்வதை விடவில்லை. அப்பாவிடம் மாட்டிக்கொள்ளாமல் சாமர்த்தியமாகப் பொய் சொல்வது எப்படி என்று யோசித்து யோசித்துப் பொய் சொல்லி, அதில் பிஹெச்.டி வாங்குகிற அளவுக்குத் தேறிவிட்டேன்.

இதனால் நான் அறிந்துகொண்ட ஓர் உண்மை என்னவென்றால், அடியோ உதையோ, வசவோ பிள்ளைகளைத் திருத்தாது; அவர்களையே எது சரி, எது தப்பு என்று யோசிக்க விடுவதுதான் அவர்கள் உண்மையாக இருக்க, உண்மையே பேசச் செய்வதற்கான ஒரே வழி என்பதுதான்!

சரி, அது இருக்கட்டும்! பொய் சொல்வதில் ஒன்பது ரகங்கள் உண்டு என்று சொன்னேன் அல்லவா? அவை என்னென்ன என்று பார்ப்போமா?

1. சாதுவான பொய்:

“என்னுடைய சமீபத்திய வலைப்பதிவை நீங்கள் படித்தீர்களா சார்?” என்று சகபதிவர் யாரேனும் ஆவலோடு கேட்டால், “மன்னிக்கணும் சார்! படிக்கணும்னுதான் நினைச்சிருந்தேன். அடுத்தடுத்து வேலை வந்ததுல ஆபீஸ்ல முடியலை. சரி, வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா படிச்சுடுவோம்னுதான் தீர்மானிச்சேன். ஆனா பாருங்க, என்னவோ பிராப்ளம்... நெட் கனெக்ட் ஆகவே இல்லே! போன் பண்ணிச் சொல்லியிருக்கேன். அநேகமா இன்னிக்கு நாளைக்குச் சரியாயிடும். முதல் வேலை உங்க பதிவைப் படிக்கிறதுதான். ஆமா, என்ன எழுதியிருக்கீங்க?” என்று சீரியஸாகக் கேட்பது சாதுவான பொய்க்கு உதாரணம். அவர் சொன்னாலும், அதை நாம் படிக்கப்போவது இல்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும், அவர் மனசு நோகக்கூடாது என்பதற்காகச் சொல்கிற பொய்யானதால், இது சாத்விகமான பொய்யில் சேர்த்தி.

இதே மாதிரிதான், சிலரின் பதிவுகளை முழுதாகப் படிக்காமலே அதிலிருந்து சில வரிகளை கட் அண்ட் பேஸ்ட் போட்டுவிட்டு, வெரி நைஸ் என்றோ, அல்லது ஸ்மைலி சிம்பலோ போட்டுப் பின்னூட்டம் இடுவதும் சாதுவான பொய்யில் அடங்கும்.

2. பரபரப்புப் பொய்:

பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சொல்லப்படும் பொய் இது. “நேத்து ராத்திரி நான் சினிமா பார்த்துட்டு பைக்ல வந்துட்டிருக்கேன்... கோடம்பாக்கம் பிரிட்ஜ் கிட்ட வரும்போது இங்கிட்டு நாலு பேர், அங்கிட்டு நாலு பேர் சுத்தி வளைச்சு மடக்கிட்டான்ல. எனக்கு ஈரக் கொலையை அறுந்துபோச்சு! ஏதோ ஒர்த்தன் ரெண்டு பேர்னா சமாளிக்கலாம். எண்ணி எட்டு பேர்... எஸ்கேப் ஆவுறதுதான் புத்திசாலித்தனம்னுட்டு சட்டுனு கியரை மாத்தி ரெய்ஸ் பண்ணி, வண்டியை 120-ல விரட்டினேன் பாருங்க...” - இப்படி நம் கற்பனைக்கேற்றவாறு சுவாரசியமாக பில்டப் செய்துகொண்டு போகலாம். இதுவும் யாருக்கும் எந்த உபத்திரவமும் இல்லாத பொய்!

3. தற்காப்புப் பொய்:

ஆபீசுக்கு லேட்டாக வந்து மேனேஜரிடம் டோஸ் வாங்கினால், வீட்டில் வயதான தாத்தா, பாட்டியைப் பரலோகம் அனுப்பிவைத்துவிட்டு வருவதாக புருடா விட்டுத் தப்பிக்கிறோமல்லவா, அந்த வகைப் பொய் இது! “ஆபீஸ் விட்டு நேரா வீட்டுக்கு வராம எங்கே இவ்வளவு நேரம் சுத்திட்டு வரீங்க?” என்று அதட்டும் மனைவியைச் சமாளிக்கக் கணவன்மார்கள் சொல்லும் பொய்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவை.

4. பந்தா பொய்:

கையில் பைசா இல்லை என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டு, அவமானப்பட்டு, “சேஞ்சா இல்ல... தௌசனாதான் இருக்கு. ஒரு ஃபிஃப்டி ருப்பீஸ் இருந்தா கொடுங்க. நாளைக்குத் தரேன்” என்று கேட்பது பந்தா பொய்! “டி.வி-யே சுத்த வேஸ்ட் சார்! நம்ம டயத்தைக் கெடுக்கும். சும்மாவா சொன்னாங்க அதை ‘இடியட் பாக்ஸ்’னு...” என்று என்னென்னவோ சொல்லி, சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் டி.வி. வாங்க இயலாதவர்கள் பந்தாவாகப் பொய் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்ப கலைஞர் புண்ணியத்தில் பலருக்கு கலர் டி.வி. கிடைத்துவிட்டது. அது சரி, பந்தா பொய்க்கு வேறு காரணமா இல்லை?

5. ஏமாற்றுப் பொய்:

பிறரை ஏமாற்றி, அதில் நாம் நன்மை பெறுவதற்காகச் சொல்லப்படும் பொய் இது. உதாரணமாக, “சார்! அவசரமா எனக்கு இப்ப பணம் தேவைப்படுது. அதுக்காகத்தான் இந்த பைக்கை விக்கிறேன். நல்ல கண்டிஷன்ல இருக்கு. கண்ணை மூடிக்கிட்டு இருபதாயிரம் கொடுக்க ரெடியா இருக்காங்க. ஆனா, மூணு தவணைல தரேங்கிறாங்க. எனக்கு இப்ப அவசரமா பணம் வேணும். நீங்க பதினெட்டு கொடுங்க, போதும்!” என்று பேரம் பேசி, பத்தாயிரம்கூடப் பெறாத வண்டியைப் பதினைந்தாயிரத்துக்கு அவர் தலையில் கட்டுவது இந்த ரகத்தில் சேரும்.

6. அபாண்டப் பொய்:

நமக்குப் பிடிக்காதவர்கள்மீது அபாண்டமான பழிகளையும் வதந்திகளையும் பிறரிடம் பரப்புவது அபாண்டப் பொய்க் கணக்கில் சேரும். சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் பெரும்பாலும் இந்த ரகம்தான்!

7
. மௌனப் பொய்:

நாமாக எந்தப் பொய்யையும் நம் வாயால் சொல்லவில்லை என்றாலும், நமக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லாமல் மழுங்குணியாக இருப்பதும் பொய்யில் சேர்த்திதான். அதுவே மௌனப் பொய்!

8. காதல் பொய்:

காதலியிடம் அவள் அழகையோ, புத்திசாலித்தனத்தையோ பாராட்டிக் காதலன் சொல்வதெல்லாமே அநேகமாக காதல் பொய்யில் அடங்கும்! காதலிகள் மறந்தும் இத்தகைய பொய்களைச் சொல்வதில்லை.

9. கவிதைப் பொய்:

கவிஞர்கள் கவிதையில் அழகுக்காகச் சொல்கிற உவமானங்கள் மட்டுமல்ல; நாம் கூட அவ்வப்போது கவிஞர்களாகி இத்தகைய கவிதைப் பொய்களை அவிழ்த்துவிடுவதுண்டு. “போன வாரம் ஊட்டி போயிட்டு வந்தேன். ஹப்பா! என்னமா ஒரு சில் வெதர் தெரியுமா, மொத்த நகரமுமே ஏ.சி. பண்ணினாப்ல... அத்தனை இதமா இருந்தது உடம்புக்கு! இங்கே வந்ததும் அப்படியே ஆளைத் தூக்கி அடுப்புல வெச்சாப்ல எரியுது உடம்பு!” இந்த மாதிரி வர்ணனைகள் எல்லாம் கவிதைப் பொய்யில் அடங்கும்.

இப்போதைக்கு இவ்வளவுதான்! இன்னும்கூட யோசித்தால் திகில் பொய், சும்மனாங்காட்டி பொய், விபரீதப் பொய், அசட்டுப் பொய், தமாஷ் பொய் எனப் பல ரகங்கள் கிடைக்கலாம்.

மொத்தத்துல, விதம் விதமா பொய் சொல்லுங்க; சுவாரசியமா சொல்லுங்க; அடுத்தவருக்கு ஆபத்தில்லாம சொல்லுங்க. என்ஜாய்!
.

15 comments:

// “டி.வி-யே சுத்த வேஸ்ட் சார்! நம்ம டயத்தைக் கெடுக்கும். சும்மாவா சொன்னாங்க அதை ‘இடியட் பாக்ஸ்’னு...” //

இது மட்டும் பொய்ன்னு ஏத்துக்க முடியலை.
 
/ சின்ன வயதில் (ஏன்... இப்பவும்தான்!) நான் நிறையப் பொய் சொல்லுவேன். அதையெல்லாம் என் அப்பா எப்படியோ கண்டுபிடித்து, என்னைச் சக்கையாகப் பிரம்பால் விளாசிவிடுவார். /

ஏன்... இப்பவும்தான்! :-) :-)

இது 'தமாஷ் பொய்'
 
நான் நிறையப் பொய் சொல்லுவேன். அதையெல்லாம் என் அப்பா எப்படியோ கண்டுபிடித்து, என்னைச் சக்கையாகப் பிரம்பால் விளாசிவிடுவார். அதற்காக நான் பொய் சொல்வதை விடவில்லை. அப்பாவிடம் மாட்டிக்கொள்ளாமல் சாமர்த்தியமாகப் பொய் சொல்வது எப்படி என்று யோசித்து யோசித்துப் பொய் சொல்லி, அதில் பிஹெச்.டி வாங்குகிற அளவுக்குத் தேறிவிட்டேன்.

........ பொய்யாமை குறள் தத்துவம் 1331 நல்லா இருக்குங்க. பதிவு முழுவதும் படித்து கட் அண்ட் பேஸ்ட் செய்து கமென்ட் போட்டுருக்கேன். இது பொய் இல்லை. :-)
 
இந்தப்பதிவு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு (இது பொய் இல்லீங்க, நெஜமாலுமே நெஜம்)

இந்தப்பொய்யெ எந்த வகையிலெ சேத்துவீங்க
 
வள்ளுவர் பார்வையில் உங்க ஆராய்ச்சி தொகுப்பு மிக அருமை... இதில் கடைசி வகைப் பொய் அனைவருக்கும் பிடிக்கிறது. எனக்கும் கவிதைகள் ரொம்ப பிடிக்கும்.

-
DREAMER
 
நிஜமாவே உங்களுக்கு பின்னூட்டம் போட பயபடறாங்க போல.வெறும் வோட் மட்டும் விழுந்துருக்கு ?கொஞ்சம் சிரிப்பு வருது அப்படின்னு உண்மை எழுதினா உங்களுக்கு கொஞ்சம் கோபம் வருமோ?
coolcool
நல்ல பதிவு .பொய்யல்ல நிஜம்
 
கீழ படிக்காம , பொய்யாமை அதிகாரம் உண்மையிலேயே இருப்பதாக நம்பிக்கொண்டு .. திருக்குறள் ல தேட போயிட்டேன் , அப்புறம் '' என் டைரி'' க்கு போய் பழைய பதிவை எல்லாம் புரட்ட வச்சுட்டிங்க .பதிவெல்லாம் ஜோராவே இருந்துச்சு .... இப்படி நம்பற மாதிரியே பொய் சொல்றது எந்த வகை ?.... உண்மையிலே நல்ல பதிவு ( இது பொய் இல்லை ... நம்புங்க ).
 
பொய்யைப்பற்றி நிஜம்மாவே நல்ல பதிவு .

ரேகா ராகவன்.
 
இம்புட்டு வெரைட்டியா குடுக்கறோம் நாம !

பெரிய ஆளுங்கதான் நாம்!

:)))
 
பொய்யோ மெய்யோ எத சொன்னாலும் அதனால வரக்கூடிய பின்விழைவுகளை சந்திக்க தயாராயிருக்கனும். நீங்க சொல்லுறது எல்லாமே மெய்.
 
அன்புள்ள ரவிப்ரகாஷ்,

வணக்கம்.

உங்கள் இரண்டு வலைப்பூக்களும் ( என் டயரி , உங்கள் ரசிகன் ) மிகச் சிறப்பாக உள்ளது.
உங்கள் அனுபவங்கள் + நீங்கள் சந்தித்த VIP -- க்கள் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி.
சக்தி விகடனில் உங்கள் சிறப்பான பணி தொடரட்டும்.

நீங்கள் எழுதிய கீழ்க்கண்ட புத்தகங்கள் எங்கு கிடைக்கும் ?

நான் சந்தித்த மனிதர்கள்
ஏடாகூடக் கதைகள்
தரையில் நட்சத்திரங்கள்

அன்புடன்,
ஸ்ரீனிவாசன்
Fremont , கலிபோர்னியா
 
அடடா... எத்தனை ரகங்கள்..!?

அசத்திட்டீங்க!

இது 'உண்மை' சார்!
 
எஸ்.ஆர்.கே., பொன்னியின் செல்வன், சித்ரா, சின்னம்மணி, ட்ரீமர், பத்மா, பத்மநாபன், ரேகா ராகவன், மங்களூர் சிவா, ஜீவன்பென்னி, சுரேகா அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றி! ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லவே விரும்புகிறேன். எனினும், சக்திவிகடனின் முழுப் பொறுப்பை ஏற்ற பிறகு, பதிவு எழுதுவதற்குக்கூட நேரம் கிடைக்கவில்லை. பிறரின் வலைப்பூக்களை முன்பு போல் அதிகம் படிக்கவும் நேரம் இல்லை. வருத்தமாக இருக்கிறது.
 
திரு.சீனிவாசன், கலிஃபோர்னியா.
விகடன் பிரசுரத்தில் கேட்டால் விவரம் சொல்வார்கள். ஆன்லைனில் பணம் கட்டவும் வாய்ப்புள்ளது.
 
:-)

அட இது முதல் பொய் வகை இல்லை சார்.. எல்லாத்தையும் படிச்சுட்டுத்தான். 7 வகையான பொய் எனக்கு பொருந்துகிறது.