உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, February 28, 2010

இறையும் அன்பும்!

‘சக்தி விகடன்’ இதழுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதுமே, இதில் புதிதாக யாரை எழுதச் செய்யலாம் என யோசித்தபோது, சட்டென என் மனதில் தோன்றிய பெயர் ‘இறையன்பு’.

ஒரு மனிதனுக்கு ‘இறை’ உணர்வும், சக மனிதர்களின், உயிர்களின் மீதான ‘அன்பு’ம் அவசியம் தேவை. அவற்றை வளர்ப்பதுதான் ‘சக்தி விகட’னின் நோக்கம். இந்தக் கோணத்தில் யோசித்தபோதுதான், ‘அட! இறையன்புவையே எழுதச் சொன்னால் என்ன!’ என்கிற யோசனை எனக்குத் தோன்றியது.

திரு. வெ.இறையன்புவுக்கு என் வயது இருக்கலாம். அல்லது, என்னைவிட அவர் ஓரிரு வயதுகள் இளையவராக இருக்கலாம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ‘சாவி’ வார இதழில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், இறையன்பு அடிக்கடி அங்கே சாவி சாரை பார்க்க வருவார். வரும்போது அழகான, மணிமணியான கையெழுத்தில் புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டு வருவார். மிக இளம் வயதினராக, புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் போல அப்போது இருந்தார். (இப்போது மட்டுமென்ன, அதே ஸ்லிம்மான தோற்றத்தில் இளமையாகத்தான் தெரிகிறார். 50 வயது இருக்கலாம் என்று நம்புவது கடினமாக இருக்கிறது.)

“ரவி! இந்த இளைஞரிடம் ஒரு கவர்ச்சி இருக்கிறது. எழுத்தில் ஒரு வசீகரம் இருக்கிறது. கவிதைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும்கூட, அவற்றை நிராகரித்துவிடாமல் சாவியில் வெளியிட்டு உற்சாகமூட்டு. ஒரு காலத்தில் இவர் ஓகோவென்று வரப்போகிறார். என் கணிப்பு இதுவரை தவறியதே இல்லை” என்று சொல்லி, அந்தக் கவிதைகளை என்னிடம் பிரசுரத்துக்குக் கொடுப்பார் சாவி.

இறையன்பு எழுதத் தொடங்கிய புதிது அது! சாவி சொன்னதுபோல் எழுத்தில் கொஞ்சம் கன்னித்தன்மை தெரிந்தாலும், சொல்கிற விஷயம் கனமாகவும், அழுத்தமாகவும், தீர்க்கமாகவும் இருந்ததைக் கண்டேன். அவரின் பல கவிதைகளை, கட்டுரைகளை ‘சாவி’யில் வெளியிட்டு ஊக்கம் தந்திருக்கிறார் சாவி.

என்றாலும், இறையன்புவைப் பலமுறை சாவி சாரின் இல்லத்தில் வைத்துப் பார்த்திருக்கிறேன் என்பதைத் தவிர, அவரது கவிதைகளை சாவி இதழில் வெளியிட்டிருக்கிறேன் என்பதைத் தவிர, அவரோடு எனக்கு நெருங்கிய தொடர்பு எதுவும் ஏற்படவில்லை. பொதுவாகவே நான் ரிசர்வ்ட் டைப். அதிகம் யாருடனும் ஒட்டி உறவாட மாட்டேன். அதுவும் வி.ஐ.பி. என்றால், சத்தமில்லாமல் ஒதுங்கிப் போகிற வழக்கம் உள்ளவன். அன்றைக்கு இறையன்பு மிகவும் எளிதில் நெருங்கிப் பழக முடிகிற ஒரு நண்பராகத்தான் இருந்தார் என்றாலும், அவரோடு எனக்கு நட்போ, தொடர்போ உண்டாகவில்லை.

அதன்பின், நான் ஆனந்தவிகடனில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய பின்பு, திரு. இறையன்புவிடமிருந்து பலப் பல கட்டுரைகளை வாங்கிப் பிரசுரித்திருக்கிறோம். அப்போதும் நிருபர்கள்தான் அவரைச் சென்று சந்தித்துப் பேசிவிட்டு வருவார்களே தவிர, தனிப்பட்ட முறையில் அவருடன் நான் தொடர்பை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர் மிக உயர்ந்த நிலைக்குச் சென்று, பல சாதனைகள் செய்தபோதெல்லாம், ‘அட! அன்றைக்கு சாவியில் நாம் பார்த்த அந்த ஒல்லிய தேகம் கொண்ட இளைஞரா இவர்!’ என்று வியப்பதோடு சரி.

சக்தி விகடனுக்காக, குறிப்பாக அதில் வரும் ‘இளைஞர் சக்தி’ பகுதிக்காகக் கட்டுரைத் தொடர் ஒன்று எழுதித் தர வேண்டும் என்று நான் கைபேசியில் கேட்டபோது, மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டார். “ஞாயிறன்று காலையில் வீட்டுக்கு வாங்களேன்! இது பற்றி விரிவாகப் பேசுவோம்” என்றார்.

அதன்படி இன்று போயிருந்தேன். இறையன்புவிடம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே இளமை, இனிமை, எளிமை!

முன்பு அவர் குரல் மிக மென்மையாக, மிருதுவாக இருக்கும். காலத்தின் மாற்றத்தால் குரல் மட்டும் இப்போது சற்றுக் கனத்திருக்கிறது. மற்றபடி, பல நாள் பழகியவர் போன்ற அதே சகஜ பாவத்துடன் பேசினார்.

ராஜாஜி ஹால் எதிரே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான குவார்ட்டர்ஸ் ஒன்றில் குடியிருக்கிறார் திரு.இறையன்பு. ரொம்ப நாள் கழித்து அந்தப் பக்கம் போகிறேன். அண்ணா சிலைக்குப் பின்னே, டெல்லி பாராளுமன்ற கட்டடம் போன்று மிக பிரமாண்டமாக உருவாகிவரும் புதிய தலைமைச் செயலக வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்தன. அதையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் போகும் சாலை முழுக்கவே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது.

சக்தி விகடன் தொடருக்கு இரண்டு மூன்று தலைப்புகள் கொடுத்திருக்கிறார் இறையன்பு. அனைத்துமே சுவாரசியமானவை. எதை வைத்துக்கொள்ளலாம் என்பதை மற்றவர்களுடன் கலந்துகொண்டு நாளை தீர்மானிக்க உத்தேசம்.

கவியரசு கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதியபோது, அதுவரை ஆன்மிகம் பக்கம் திரும்பாதிருந்த லட்சக் கணக்கான இளைஞர்கள், கண்ணதாசனின் எழுத்தால் வசீகரிக்கப்பட்டு ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ தொடரை விழுந்து விழுந்து படித்தார்கள். அதற்குப் பின்பு எனக்குத் தெரிந்து, தமது எழுத்தால் அதிக இளைஞர்களை வசீகரிக்கச் செய்திருப்பவர் இறையன்புதான்.

அவரது எழுத்து சக்தி விகடனில் வெளியாவது, இதழுக்கு மேலும் ஒரு புதிய சக்தியைக் கூட்டும் என்பது நிச்சயம்!
.

13 comments:

கல்லூரிக்காலத்தில் விஜய் டிவியில் தினமும் இறையன்புவின் பேச்சுக்களை தவறாமல் கேட்பேன்.

சொல்லும் விஷயங்கள் அழகாகவும் தெளிவாகவும் இருக்கும்.

அவரைப்பற்றிய விவரங்களை பகிர்ந்தமைக்கு நன்றி...

பிரபாகர்.
 
இறையன்புவின் கட்டுரைகள் பலவற்றை வாசித்திருக்கிறேன். வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரது கட்டுரைகள் மிகச் சிறந்ததொரு வழிகாட்டி. அவரது கட்டுரைகள் சக்தி விகடனில் வரவிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. அவரைப் பற்றி உங்கள் மூலம் மேலும் அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி சார் .

ரேகா ராகவன்.
 
இவர் எங்கள் பள்ளி/கல்லூரி விழாக்களுக்கு வந்திருக்கிறார். இவர்,எளிமையான நிறைகுடம் என்பது என் கருத்து.பகிர்வுக்கு நன்றி!
 
ம், நல்ல தகவல். இளைஞர்களை எளிதில் சென்றடையும் திரு.இறையன்புவின் எழுத்துக்கள்.
 
இறையன்பு பற்றி நல்ல தகவல் . அவரின் ஏழாவது அறிவு அனைத்து பாகம் படித்த அனுபவம் அப்போதே நான் தற்போது என் இடுகையில் 8ட்டாத அறிவு எழுத காரணமாக இருந்தது. அவர் மதுரையில் எங்கு பேசினாலும் தவறாது கேட்டு விடுவேன். உங்கள் பகிர்வுக்கு நன்றி.
 
iraianbu si one of the inspirational personality
 
உங்களது புதிய பொறுுப்பிலும் வழக்கம்போல் ஜொலித்திட வாழ்த்துக்கள்
 
சக்தி விகடன் தொடருக்கு இரண்டு மூன்று தலைப்புகள் கொடுத்திருக்கிறார் இறையன்பு. அனைத்துமே சுவாரசியமானவை. எதை வைத்துக்கொள்ளலாம் என்பதை மற்றவர்களுடன் கலந்துகொண்டு நாளை தீர்மானிக்க உத்தேசம்.

....... Best wishes! எல்லோரும் பயன் பெறட்டும்.
 
This comment has been removed by the author.
 
சக்தி விகடனில் பொறுப்பு ஏற்றுள்ளமைக்கு என் உளம்கனிந்த வாழ்த்துக்கள் சார்! இறையன்பு கட்டுரைகளைப் புத்தக வடிவில் நான் படித்திருக்கிறேன். எளிமையான நடையில் சிறப்பான கருத்துக்களைச் சொல்லியிருப்பார். புதிய தலைமுறையில் அவரின் எழுத்துக்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். சக்தி விகடனின் இளைஞர் சக்தி பகுதிக்கு அவரை எழுதச் சொல்லியிருப்பது நல்ல தேர்வு. உங்கள் பணி சிறக்க மீண்டும் என் வாழ்த்துக்கள்!
 
புதிய பொறுப்பிற்கு வாழ்த்துக்கள் , இறையன்பு அவர்களின் புத்தகங்களை வாசித்துள்ளேன் .
மிக சிறந்த ஆட்சியர் , தம்மை போலவே இளைய தலைமுறையினரும் ஆட்சியியல் படிக்கவேண்டும்
என்று நிறைய எழுதி இருக்கிறார் . இறையும் ,அன்புமாக சக்தி விகடனில் எழுதுவது மிக சிறப்பு
 
/50 வயது இருக்கலாம் என்று நம்புவது கடினமாக இருக்கிறது/

என்னது 50 வயது இருக்கலாமா? அப்படியா! அதுவே அதிகம் மாதிரி தெரிகிறது; அவர்களைப் பார்த்தால் இன்னும் இளமையாகவே தெரிகிறார்கள்.

/அதே சகஜ பாவத்துடன் பேசினார்./

:) பா :) ஹ்ம்ம்ம்... எங்கே தப்பர்த்தம் வந்துவிடுமோ என்று ஒரு போல்ட் எழுத்து :) அருமை! எழுத்து போல்ட், வாசிப்பு மைல்ட்.


சமீபத்தில் இறையன்பு அவர்கள் நடுவராக இருந்த ஒரு பட்டிமன்றத்தில், பேச்சாளர் ஒருவர், 'இப்பல்லாம் கம்ப்யூட்டர் படிச்சாதான் மதிக்கிறான். எங்கயாச்சும் அக்ரி(Agriculture) படிச்சா எவனும் மதிக்கிறானா' என்று கூறினார். உடனே இறையன்பு அவர்கள், 'ஒரு வேளை அக்ரி (Agriculture) படித்தவர்கள் இந்தமாதிரி பட்டிமன்றத்தின் தலைவராக வரமுடியுமோ என்னமோ' என்று ஒரு போடு போட்டார்களே பார்க்கனும்.
அரங்கமே கைதட்டலில் அதிர்ந்துவிட்டது !
 
பிரபாகர், ரேகா ராகவன், அநன்யா மஹாதேவன், விக்னேஷ்வரி, மதுரை சரவணன், யாஹு ராம்ஜி, லதானந்த், சித்ரா, கிருபாநந்தினி, பத்மநாபன், பொன்னியின் செல்வன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! இறையன்பு பற்றிய சுவாரசியமான துணுக்கு சொன்னதற்கு பொன்னியின் செல்வனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!