உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, February 05, 2010

காந்தி மகாத்மாவா?

காத்மா காந்தி பற்றிப் பள்ளிப் பருவத்தில் பாடங்களில் நமக்குச் சொல்லித் தரப்பட்டது வேறு; பின்னர் வளர்ந்து பெரியவனாகி, எல்லா விதமான புத்தகங்களையும் படிக்கத் தொடங்கிய பின்னர், நாம் கேள்விப்படும் விஷயங்கள் வேறு.

அவர் தன் மனைவி கஸ்தூரிபாவைப் பாடாய்ப் படுத்தி எடுத்திருக்கிறார்; கிட்டத்தட்ட ஒரு சாடிஸ்ட் போல அந்தம்மாவை டார்ச்சர் செய்திருக்கிறார்; பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாகவே அவர் நடந்து கொள்ளவில்லை; இதனால்தான் அவரின் பையன் மணிலால் ஒரு பொறுக்கியைப் போலச் சுற்றித் திரிந்தான் என்று 30 வருடங்களுக்கு முன்பே கேள்விப்பட்டேன். அதுவே எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான்! ‘சரி, ஒழுக்கத்தை போதிப்பதில் சற்றுக் கடுமையாக அவர் நடந்துகொண்டு இருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டேன் - ‘எம்டன் மகன்’ படத்தில் நாசர் கேரக்டர் இல்லையா, அது போல!

சமீபத்தில், விகடனில் அந்தக் காலத்தில் ‘கஸ்தூரி திலகம்’ என்னும் தலைப்பில் கஸ்தூரிபா காந்தியைப் பற்றி பரணீதரன் எழுதிய தொடர் கட்டுரையைப் படித்தபோதுதான், தன் கருத்துக்கு எதிர்க் கருத்து சொன்னதற்காக கஸ்தூரிபாவைப் பிறந்த வீட்டுக்கு அடித்துத் துரத்தியிருக்கிறார் காந்தி என்கிற விஷயம் தெரிய வந்தது. இன்னும் என்னென்ன அவமானப்படுத்த முடியுமோ படுத்தியிருக்கிறார். இத்தனைக்கும் பரணீதரன் அந்தக் கட்டுரையைச் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதும்போது மிகவும் ஜாக்கிரதை உணர்ச்சியோடுதான் எழுதியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஞாநி ஒரு கட்டுரையில் மகாத்மா காந்தி பற்றிக் குறிப்பிடும்போது, ‘தன் காம உணர்ச்சிகளைத் தன்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடிகிறதா’ என்பதைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள இரண்டு இளம் பெண்களை முழு நிர்வாணமாகத் தன் இரண்டு பக்கத்திலும் படுக்கச் சொல்லிவிட்டு, காந்தி ஓர் இரவு முழுவதும் தன் புலன்களை அடக்கிப் படுத்துக்கொண்டு இருந்தார் என்று எழுதியிருந்தார். காந்தியின் சுய பரிசோதனைக்குப் பரிசோதனை எலிகளாகப் பயன்பட்ட அந்தப் பெண்களும்கூட அந்தச் சோதனையில் வெற்றி பெற்றதாகத்தானே அர்த்தம்... அவர்கள் காந்தியைவிட மேலல்லவா என்று அதைப் படித்தபோது எனக்குத் தோன்றியது.

சிறையில் கைதிகளை ஆண், பெண் பேதமில்லாமல் ஒன்றாக அடைக்கும்போது, ஆண் கைதிகள் உணர்ச்சிவசப்பட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிடாமல் இருக்க, கைதாகி உள்ளே இருக்கும் பெண்கள் அத்தனை பேருக்கும் தலையை மழுங்க மொட்டை அடித்துவிடும்படி காந்தி சொன்னதாக நடிகர் சிவகுமார் ஒரு கூட்டத்தில் பேசும்போது சொல்லியிருக்கிறார்.

இப்படி காந்திஜியின் இமேஜை சரிப்பதற்கென்றே சில செய்திகள் அவ்வப்போது என் காதில் வந்து விழுந்துகொண்டு இருக்கின்றன. அதையும் மீறி, வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நமது தேசத்துக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகான் என்கிற ஒரு விதமான பக்தி உணர்வு எனக்கு அவர் மீது இருக்கிறது. ‘என்ன இருந்தாலும், அவரும் மனிதர்தானே? கடவுள் அவதாரம் இல்லையே! சொல்லப்போனால் கடவுள் அவதாரங்கள்கூடத் தப்பு செய்திருக்கிறதே!’ என்று நினைப்பதுண்டு. மகாகவி பாரதியைக்கூட ‘கஞ்சா அடிக்ட்’ என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பொதுவாக, நமது முன்னோர்களிடம் உள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, அவற்றைத்தான் நமக்கான வழிகாட்டிகளாக ஏற்றுப் பின்பற்ற வேண்டுமே தவிர, அவர் கஞ்சா அடிக்கலையா, நானும் அடிப்பேன் என்றும், கண்ணதாசன் பெத்தடின் ஊசி போட்டுக் கொள்ளவில்லையா, நானும் போட்டுக் கொள்வேன் என்றும் தேடித் தேடிக் கெட்டவைகளை மட்டுமே பின்பற்றுவது நம்மை மேலும் மேலும் சீரழிக்கத்தான் செய்யும். ஆனால், நம் மனசு எப்போதுமே வக்கிரமானது; நல்லவைகளை எடுத்துக் கொள்ளாது. கெட்டவைகளைக் கப்பென்று பற்றிக் கொள்ளும். அதற்கு இம்மாதிரியான பெரியவர்களை உதாரணம் காட்டி, ஒன்றும் தப்பில்லை என்று நம் செயலுக்குச் சமாதானம் சொல்லும். இதனால்தான் காந்தி போன்ற பெரியவர்களைப் பற்றிப் பேசும்போது, அவரிடமுள்ள அல்லவைகளை நீக்கி, நல்ல விஷயங்களை மட்டுமே இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்.

ஆனால், இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. தகவல் தொழில் நுட்ப யுகத்தில் எந்த விஷயத்தையும் மூடி மறைக்க முடியவில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள். அன்னப் பறவை போல் பகுத்தாய்ந்து பால் போன்ற நல்லவைகளை மட்டும் பின்பற்றி நடப்பது அவரவர் சமர்த்து!

சமீபத்தில், மருதனின் வலைப்பூவில் ‘காந்தியின் பெண்கள்’ என்னும் தலைப்பில் ஒரு பதிவைப் படித்துத் திடுக்கிட்டேன். பெண்கள் பற்றி காந்தி எத்தனை மோசமான எண்ணம் கொண்டு இருக்கிறார் என்பது குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ‘மைக்கேல் கானெல்லன்’ என்பவர் எழுதிய கட்டுரையை மருதன் படித்து அதிர்ந்ததோடு, அதற்கான யுஆரெல் இணைப்பையும் தந்திருந்தார். அந்த ஆங்கில மூலக் கட்டுரையின் தமிழாக்கத்தைதான் கீழே தந்துள்ளேன்.

2010 ஜனவரி 27-ம் தேதி புதன்கிழமை எழுதப்பட்ட கட்டுரை இது.

காந்தியால் துயருறும் பெண்கள்

பெண்ணுரிமைக்காக இந்தியா தயாரானபோது, மோகன்தாஸ் காந்தி அதைப் பின்னுக்கு இழுத்தார்; தவிர, பெண்கள் தொடர்பான அவரது நடத்தையும் விசித்திரமாகவே இருந்திருக்கிறது.

மோகன்தாஸ் காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமையன்று வருகிறது. அவர் மிகவும் வியப்புக்குரிய ஒரு மனிதர். அவர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்ட உதவி, தன் நாட்டை சுதந்திர நாடாக்க வழிவகை செய்தார். இந்தியா அவரை புனித ஆத்மா என்றும் மகாத்மா என்று வழிபட்டது; இன்றைக்கும் வழிபடுகிறது. அவர் மிகுந்த தைரியம் உள்ளவராகவும், புத்திச் சாதுர்யம் நிரம்பியவராகவும், தன் மக்களிடத்தில் கருணை கொண்டவராகவுமே மேற்கத்திய நாடுகள் அவரைப் பார்க்கின்றன.

ஆனால், காந்தி ஒழுக்கக் கோட்பாடுகளில் மிகக் கடுமையாகவும், இன்பங்களைத் துய்ப்பதைக் கடுமையாக எதிர்ப்பவராகவும், பெண்களை வெறுப்பவராகவுமே இருந்தார். பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் ஒரு பெரிய நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதிப்படுத்த விரும்பினார். பெண்கள் பிறப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் அச்சுறுத்தும் ஒரு நாடாகவே அவர் இந்தியாவை வைத்திருக்க விரும்பினார். 1949-ல் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘காந்தி - சில எண்ணங்கள்’ (Reflections on Gandhi) என்கிற கட்டுரையில், ‘அப்பாவிகள் என்று நிரூபணமாகிற வரையில், மகான்களைக்கூடக் குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இருக்கலாம்.

காந்தி உடலுறவை அடியோடு வெறுத்தார். வம்ச விருத்திக்காக மட்டுமே உடலுறவு கொள்ளலாம்; வேறு எந்த வகையிலும் பாலியல் உறவு கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். காம இச்சைகளை அடக்கத் தவறினால், அது மலச்சிக்கல் போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் போதித்தார். உடலுறவு வைத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்குத் தீங்கானது என்றும், உடலுறவுச் சுதந்திரம் என்பது இந்தியர்களை மனிதர்களாக வாழவே தகுதியற்றதாகச் செய்துவிடும் என்றும் அவர் நம்பினார். ‘சமய நெறிகள் காரணமாக இல்லற இன்பத்தைத் துறந்துவிட்டு வாழ்வது ஒரு நரகம்’ என்றார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால், அப்படியொரு இன்பம் துறந்த நாடாகத்தான் காந்தி தன் நாட்டைக் காண விரும்பினார். தன் மனைவியிடம்கூடக் கலந்தாலோசிக்காமல், இல்லற இன்பத்தைத் துறப்பதென அவர் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.

காந்தி பெண்களை ஆண்களுக்கு நிகராக மதித்தார் என்றும், சுதந்திரப் போராட்ட காலத்தில் பெண்கள் செலுத்திய பங்களிப்பைப் போற்றினார் என்றும், காந்தி மற்றும் அந்தப் புனிதரைப் பற்றிக் கட்டுரை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆம்பிளைத்தனமான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடுமைக்கு எதிராக அவர் கையாண்ட அஹிம்சா ரீதியான எதிர்ப்பை பெண்மைக்குரிய கொள்கையாக அவர் மதித்துக் கொண்டாடினார். ஆனால், பாலியல் உறவுகள் குறித்தான அவரின் கவலைகள், அவரை பாலுறவுகளுக்கு எதிராக அதிர்ச்சியான கொள்கைகளை எடுக்கச் செய்தன. பெண்களின் உடம்பு குறித்த அவரது சிந்தனை கோணலாக இருந்தது. ரீத்தா பானர்ஜி ‘செக்ஸ் அண்ட் பவர்’ என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல, ‘பெண்களின் ஆன்மா காம உணர்வுக்குத் திரும்புவதன் காரணமாகவே அவர்களுக்கு மாதாந்திர உதிரப் போக்கு நிகழ்கிறது என்று காந்தி நம்பினார்’.

தென்னாப்பிரிக்காவில் தங்கி, அந்த அரசின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து காந்தி போராடிக்கொண்டு இருந்த காலத்தில், இரண்டு பெண்கள் ஓர் இளைஞனைத் தொடர்ந்து பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்ததைக் கண்டார். அந்தப் ‘பாவக் கண்கள்’ சுத்திகரிக்கப்படவேண்டுமானால், அந்த இரண்டு பெண்களின் தலையை மொட்டை அடித்துவிடும்படி அவர் அவனுக்கு ஆலோசனை சொன்னார். காந்தியே தனது கட்டுரை ஒன்றில் இந்த நிகழ்ச்சியைப் பெருமையோடு குறிப்பிட்டு, பாலியல்ரீதியான தாக்குதல்களுக்குப் பெண்கள்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிற செய்தியை எல்லா இந்தியர்களுக்கும் தெரிவித்துள்ளார். அத்தகைய கொள்கைதான் இன்னமும் நீடித்துள்ளது. 2009-ம் ஆண்டு கோடையில், வட இந்தியாவில் உள்ள கல்லூரிகள் பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, பெண்கள் மேற்கத்திய நாகரிக உடையான ஜீன்ஸ் அணிவதைத் தடை செய்தன. அத்தகைய உடைகள் அந்த வளாகத்தில் உள்ள ஆண்களின் காம உணர்ச்சியைத் தூண்டுகின்றனவாம்.

கற்பழிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் மனிதர்களுக்குண்டான தகுதியை இழந்துவிடுகிறார்கள் என்று நம்பினார் காந்தி. குடும்ப மற்றும் சமூக நன்மைக்காக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தங்கள் மகள்களை அப்பாக்கள் கொல்வதைக்கூட அவர் நியாயம் என்று வாதாடினார். தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டார். ஆனால், அவரது கொள்கைகளின் பாதிப்பு இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் அவமானம் கருதித் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் நாளேடுகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கர்ப்பத்தடை மாத்திரை மற்றும் சாதனங்களுக்கு எதிராகவும் யுத்தம் செய்தார் காந்தி. அவற்றைப் பயன்படுத்தும் பெண்களை விபசாரிகளுக்கு நிகராகக் கருதினார்.

தனது சொந்த காம உணர்வுகளின் மீதே யுத்தம் செய்து அவற்றை அழுத்தப் பார்க்கும் எந்தவொரு ஆண் மகனையும் போலவே, பெண்கள் தொடர்பான காந்தியின் நடத்தை மிக மிகப் புதிராக ஆகிப்போனது. தன் காம இச்சையைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தன்னால் முடிகிறதா என்று பரிசோதித்துக் கொள்ளும் பொருட்டு, நிர்வாணமான ஓர் இளம்பெண் மற்றும் தன் உடன்பிறந்தவரின் மகளோடு படுத்து உறங்கினார். இந்தச் செயல் அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கடுங் கோபத்தையும் ஏற்படுத்தியது. காந்தியின் மனைவி இதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

பெண் என்பவள் அவளை உடைமையாக்கிக் கொண்டுள்ள ஆணுக்குப் பெருமையோ சிறுமையோ தேடித் தரும் ஒரு ஜந்து என்பது மாதிரியான ஒரு மனப்போக்கைத்தான் அடுத்த தலைமுறைக்குப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார் காந்தி. இதுவும்கூட இன்னமும் தொடர்கிறது. உலக பொருளாதார மன்றத்தின்படி, ஆண்-பெண் சமத்துவப் பட்டியலில் இந்தியா மிக மிகக் கீழே இருக்கிறது. இத்தகைய ஒரு ஆணாதிக்கத்தை எதிர்த்து இந்திய சமூகப் போராளிகள் யுத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வரதட்சிணைக் கொடுமைகளுக்கு எதிராகவும், வரதட்சிணை சாவுகளுக்கு எதிராகவும் அவர்கள் போராடுகிறார்கள். பதின்பருவ காதலர்களை இகழ்பவர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். எய்ட்ஸுக்கு எதிராகப் போராடுகிறார்கள். பெண் குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதற்கு எதிராகவும், பெண் சிசுக் கொலைக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.

இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் வார்த்தைகளில் சொன்னால், “இந்தியாவில் நடக்கும் வன்முறை மற்றும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளில் பத்துக்கு ஒன்பது, பாலியல் ரீதியான கட்டுப்பாடு காரணமாகவே நிகழ்கின்றன”. செக்ஸ் மற்றும் பெண்களின் பாலுறவு விருப்பங்கள் தொடர்பாக இந்தியாவில் ஆழமாகப் படிந்து கிடக்கும் இத்தகைய பிரச்னைக்குரிய மனப்போக்குக்கு காந்தியை மட்டும் நாம் தனிப்பட்டுக் குற்றவாளியாக்க முடியாது. ஆனால், தமது ஆளுமையும் புகழும் தொடர்ந்துகொண்டு இருந்த போதிலும், பாலுறவுச் சுதந்திரத்தை இந்தியா எப்போதுமே அனுபவிக்கக் கூடாது என்பதற்காகப் போராடி, அதில் வெற்றியும் பெற்றார் காந்தி. அகிம்ஸா முறையிலான அரசியல் புரட்சிக்கு உள்ள சக்தியை உணர்ந்துகொண்டது காந்தியின் மேதைமை. ஆனால், பெண்களுக்கு எதிரான அவரது எண்ணங்களில் உள்ள வன்முறையானது எண்ணற்ற கௌரவக் கொலைகளையும், அளக்க முடியாத துயரங்களையும் வழங்கியிருக்கிறது.

நினைவில் கொள்ளுங்கள், புனிதர் என்று இங்கே யாரும் இல்லை.

றிவியல் கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் மாறுபடும் என்பார்கள். அதே போலவே சமூகக் கோட்பாடுகள், ஒழுக்க நெறிகள் போன்றவையும் நாட்டுக்கு நாடு, நகரத்துக்கு நகரம், காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கும். இன்றைக்குள்ள நாகரிகம் பெண்களை உயர்வாய்ப் போற்றுகிறது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சமூகத்துக்கு பெண்களை போகப் பொருளாக நினைப்பது தவறாகவே இருந்திருக்கவில்லை. குல தெய்வத்துக்கு எருமை, ஆடு போன்ற மிருகங்களைப் பலியிடுவது இன்றைக்கும் பலருக்குத் தவறான செயலாகத் தோன்றவில்லை. ஆனால், இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் நம்மையெல்லாம் கொடூர சமுதாயமாக, ஈவு இரக்கமற்ற அரக்கர்கள் போன்று நினைக்கக்கூடும்.

காந்தியின் காலத்தில், அவர் வளர்ந்த சூழ்நிலையில், அவர் அப்படியான எண்ணங்களைக் கொண்டிருந்திருக்கிறார். அதை அந்த அளவோடுதான் பார்க்க வேண்டுமே தவிர, அதிகப்பிரசங்கித்தனமாக விமர்சிப்பது சரியல்ல என்பதுதான் என் எண்ணம். அய்யன் திருவள்ளுவர்கூட பெண்களுக்கு எதிரான குறள்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். ஆனாலும், திருக்குறளை இன்றைக்கும் உலகப் பொதுமறை என்று உயர்த்திப் பிடிக்கிறோமல்லவா?

ஆகவே, நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்; அல்லவைகளைப் புறந் தள்ளுவோம்!
,

20 comments:

பெரும்பாலான மனிதர்களுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கம் உயர்வான சிந்தனையை வலியுறுத்தினாலும், மறுபக்கம் வெட்கி தலைகுனிய வைக்கவே செய்கிறது. மனிதனின் அடிப்படை குணத்தை மகாத்மா என்ற பட்டம் மட்டும் மாற்றி விடுமா என்ன. மகாத்மாவை பற்றியும் நம்மால் எழுத முடிகிறது. எழுதி விடுகிறோம். இதை விட கொடூரமான தாக்குதல்கள், மதரீதியாக பெண்கள் மீது ப்ரயோகப்படுத்த பட்டாலும் பார்த்து கொண்டு சும்மா தானே இருக்கிறோம்.
 
இவ்வளவு தெளிவாக மகாத்மாவின் பெண்ணியல் கருத்து எனும் குற்றச் சாட்டை வைப்போர், அவற்றுக்கு மாற்றாக என்னதான் சொல்ல வருகிறார்கள்?

அவற்றைப் பதித்தால் தானே மகாத்மாவின் பார்வையில் குற்றம் இருக்கிறதா என்று வாசகருக்குப் புரியும்.

பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குவீர்களா? அதன் வாயிலாக முன்னேறிய கலாச்சாரம் என்ன என்பதையும் விளக்கினால் இன்னும் நலம்.

நன்றி.
 
காந்தி முஸ்லிமாக பிறந்திருக்க வேண்டியவர்! கடைசி காலம் வரை அவர் முஸ்லிம்களுக்குத்தான் ஆதரவாக இருந்தார்!
 
ரவி ... இப்படி பிரிச்சு, பிரிச்சு போட்டுட்டு , நல்லதா இருந்தா எடுத்துக்கங்க ... அல்லதா இருந்தா விட்டுருங்க ... என்று சொல்லி உள்ளீர்கள் .. எல்லோரும் சிந்திக்க ஆரம்பிப்பார்கள் .. குறிப்பாக நமது பெண்கள் ....
ஒரு விஷயம் ''பழைய காலத்தில் மகாத்மா '' '' கடவுள் '' எல்லாம் தத்துவமாக, இப்படி இருந்தால் '' நல்லது '' ( ideal condition ) என்று ஒரு பகுதியை மட்டும் பார்த்து உருவாக்கி உள்ளார்கள் . இப்ப நம்ம துப்பறியும் / தனிப்பட்ட அராய்ச்சி இதழியலை உள்ளேவிட்டோம் என்றால் எல்லாம் சிக்கல் தான் கூடும் . conditions update செய்யவேண்டும் கடவுள் விஷயத்தையும் சேர்த்து .. அப்பொழுதுதான் பகுத்த அறிவியலார்களும் சற்று ஒய்வு எடுத்து விட்டு வேறு உருப்பிடியான வேலைக்கு செல்வார்கள் ..
 
ஆகவே, நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்; அல்லவைகளைப் புறந் தள்ளுவோம்!

.........................சிந்தித்து செயல் படுவோம்.
 
இப்படி கூடவா.... நீங்கள் கூறியது போல் நல்லவைகளை மட்டும் நினைவில் கொள்வோம்.
 
இந்த விஷயங்களை எல்லாம் பாடப் புத்தகத்தில் கண்டிப்பாக போட முடியாது. எல்லா மனிதனுக்கும் மறுபக்கம் உண்டு. பெற்றோர் தங்கள் அந்தரங்கத்தை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அதுபோல் தான் இதுவும்.

மற்றவர்களை நாம் குறை கூறும் முன் நம்மை நாம் உணர்ந்தால் வாழ்வு வளம் பெரும்...

அருமையான எழுத்து நடை..

நன்றி..
 
நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க. அருமையான பதிவு.

ரேகா ராகவன்.
 
சொல்றதையும் சொலிட்டு கடைசியில் நல்லதை மட்டும் எடுத்துக்கறதா !!!!!
யாரையும் நம்ப முடியல , நான் தலைவர்கள சொன்னேங்க,.....
 
தமிழ் உதயம்! தங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரிகள் வேதனை கலந்த உண்மை!

உத்தமபுத்திரா! தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய தங்கள் கருத்துக்கும் என் இதயங்கனிந்த நன்றி!

ரவிஷா! தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் என் நன்றி!

பத்மநாபன்! தங்களின் பின்னூட்டம் ரொம்பச் சிந்திக்க வைக்கிற கருத்து!

சித்ரா! ஆமென்!
 
சைவகொத்துபரோட்டா! இப்படிக் கூடவா? இவரும்கூடவா? எனக்குள்ளும் இந்த அதிர்ச்சிக் கேள்விகள் முளைத்தன. இறுதியில், தங்களின் பின்னூட்டக் கடைசி வரியைத்தான் ஒரு பெருமூச்சோடு மனதில் இறுத்திக் கொண்டேன்.

பிரகாஷ்! என் வலைப்பூவுக்குத் தாங்கள் புதிய வரவென்று அறிகிறேன். மகிழ்ச்சி. நன்றி! \\மற்றவர்களை நாம் குறை கூறும் முன் நம்மை நாம் உணர்ந்தால் வாழ்வு வளம் பெரும்.// நூற்றில், ஏன்... ஆயிரத்தில் ஒரு வார்த்தை!

ரேகா ராகவன், ரொம்ப நன்றிங்க!

போனிஃபேஸ்! \\யாரையும் நம்ப முடியல , நான் தலைவர்கள சொன்னேங்க// நல்லாச் சொன்னீங்க போங்க! :)
 
\\இதனால்தான் அவரின் பையன் மணிலால் ஒரு பொறுக்கியைப் போலச் சுற்றித் திரிந்தான்// அந்தப் பையன் பெயர் ஹரிலால் என்றுதான் எனக்கு ஞாபகம். என்னடா, இவ வந்தாலே குற்றம் கண்டுபிடிக்கிற கண்ணோடவே வராளேன்னு நினைக்காதீங்க. தோணினதைச் சொன்னேன். மற்றபடி நல்ல பதிவு! நடுநிலையோட எழுதியிருக்கீங்க.
 
இறந்தவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்ற அபத்தமான போக்கு இங்குள்ளது என்று ஞாநி ஒரு நல்ல விஷயத்துக்குக் கோடு போட்டார் குமுதத்தில்..நீங்கள் ரோடு போட்டு விட்டீர்கள். அருமையான விமர்சனம்!

காந்தி வாழ்ந்த சூழல் உலகம் முழுமையும் போர் , Economic Depression அன்று அல்லல் பட்டுக் கொண்டிருந்தது.காந்தி ஒன்றும் புனிதரல்ல...அவர் செய்த எல்லாத்த் தவறுகளையும் ஒத்துக் கொண்டார்(in My experiments with Truth).அதனால்தான் அவர் மகாத்மா.மற்றபடி இது சூப்பர் பதிவு.
 
காந்தியைப் பற்றிய தவறான சித்திரங்கள் இருப்பதை, ஜெயமோகனின் தளத்தில் காந்தி கடிதங்கள் என்று தேடிப்பார்த்தால், இன்னும் கொஞ்சம் விவரங்களோடு, அவர் மேற்கொண்ட சோதனை முயற்சிகளைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் படிக்க முடியும்.

இங்கே ஜெயமோகனை முடிந்த ஆதாரமாகச் சுட்டுவதற்காக இந்தப் பதிலை எழுத ஆரம்பிக்கவில்லை.

அரைகுறையாகப் புரிந்துகொண்ட எழுதப்படுபவை, மிக மிக விபரீதமான அர்த்தங்களைத் தருகின்றன என்று சொல்வதற்காக மட்டுமே.
 
உங்களின் இந்தப் பதிவு தொடர்பாக பத்ரி சேஷாத்திரியின் கீழ்க்கண்ட பதிவைப் படித்துப் பார்க்கவும்.
http://thoughtsintamil.blogspot.com/2010/02/1_13.html
 
பிரபலமான மனிதர்கள் பலருக்கும் இப்படிப்பட்ட மறுபக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

அறிமுகத்திற்கு நன்றி.
 
கிருபாநந்தினி! தாங்கள் சொன்னது சரியே! அந்தப் பையன் பெயர் ஹரிலால்தான்! தவற்றைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

ரெட்டைவால்ஸ்! \\அவர் செய்த எல்லாத்த் தவறுகளையும் ஒத்துக் கொண்டார்(in My experiments with Truth).அதனால்தான் அவர் மகாத்மா.// சரியாகச் சொன்னீர்கள்!

வெங்கட்ரமணன்! இணைப்புக்கு நன்றி!

கிருஷ்ணமூர்த்தி! தகவலுக்கு மிக்க நன்றி!

படித்துவிட்டேன் அனானிமஸ்! தகவலுக்கு நன்றி!

ஜீவன்பென்னி! நன்றி!
 
மிக நல்ல பதிவு சார்! காந்தி கிரேட் தான் சார்.

/ ஆகவே, நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்; அல்லவைகளைப் புறந் தள்ளுவோம்!
/

நல்ல நிறைவான வாக்கியம்!அதாவது, கட்டுரையின் கடைசியில் நல்ல வாக்கியம்; மற்றும் மனதிற்கு நிறைவான வாசகமும் கூட!

பல டன் எடையுள்ள மாசுடைய மண் சுரங்கம் தோண்டினால்தான், சிறிது எடையுள்ள தங்கம் கிடைக்கும். காந்தி என்ற அரிய தங்கச் சுரங்கத்தில், பல டன் எடையுள்ள கருத்துள்ள தங்கம் கிடைத்த பின்தான், மாசு போன்ற தோற்றமளிக்கின்ற சிறிது மண் கிடைக்கும். அதுவும், மாசு போன்ற தோற்றமளிக்கிற அந்த மண் கூட, சத்தியம் என்பதைக் காப்பாற்ற ஓளிவு மறைவில்லாமல் இருந்ததால்தானே!

'சத்தியம் எனும் பெருங்குனம் இருக்குமிடத்தில் அனைத்து நற்குணங்களும் உள்ளடக்கம்' என்று ஒரு நாவலில் ஒரு வாசகமாக இருக்கும்.(அகிலன் அவர்களோ அல்லது நா.பா அவர்களோ எழுதியது)

சொல்லப்போனால், அந்த நாவலாசிரியர் அப்படி எழுதுவதற்கு காரணமாய் இருந்ததே காந்திதான் என்பதாக எண்ணம்.
 
காந்தியின் இந்த சுய பரிசோதனையை இது ஒருவருக்கு சாத்தியமானால் மற்றவருக்கும் முடியும் என்ற அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெற்ற பெண்ணை ஒரு வயதுக்கு மேல் தந்தை கூடவே தூங்க அனுமதிக்க தயங்கும் ஒரு கால கட்டத்தில் நாம் இருப்பதால் காந்தியின் இந்த செயல் மற்றவருக்கும் பெண் என்பவள் தனக்காக படைக்கப் பட்டவள் என்கிற கண்ணோட்டத்தை மாற்ற உதவும் என்ற அளவில் தான் பார்க்கப் பட வேண்டும்.
பெண் குழந்தைகளை தந்தை, தமையன் அல்லாது வேறு எந்த ஆணுடனும் சிறிது நேரம் கூட விட்டு வைக்கும் தைரியம் எத்தனை தாய்களுக்கு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு நாம் காந்தியை விமர்சிக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் சுய பரிசோதனை முயற்சிகளில் அவர் அந்த பெண்களின் அனுமதியின்றி வற்புறுத்தி செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. அவர் தன் வாழ்க்கையை வெளிப்படையாக சொல்லி விட்டார் என்பதால் நாம் விமர்சினம் வைக்க அனுமதிக்கப் பட்டவர்களாகி விடுவோம் என்பது தெரிந்துமே அவர் வெளிப்படுத்தி இருப்பதை நாம் கருத்தில் கொள்ளலாம்.


http://www.virutcham.com