உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, February 04, 2010

ஒரு ஓவியரின் கதை!

நார்மன் ராக்வெல் (3.2.1894 - 8.11.1978)
னந்த விகடன் ஓவியர்கள் என்றதுமே, இன்றைக்கும் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர்கள் கோபுலுவும், மாயாவும்தான்! இந்த ஓவிய மேதைகள் இருவருடனும் அதிகம் பழகும் பாக்கியம் கிடைக்கப் பெற்றவன் நான்! அதிலும், ஓவியர் மாயாவின் வீடு என் வீட்டிலிருந்து நடை தூரத்தில் இருப்பதால், நினைத்தவுடன் கிளம்பிப் போய் அவருடன் சில மணி நேரம் கதை பேசிவிட்டு வருவேன்.

1955 ஜனவரியில் எஸ்.எஸ்.வாசனால் விகடனில் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர் ஓவியர் மாயா. இயற்பெயர் மகாதேவன். ஏற்கெனவே அங்கே உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த தேவனின் முழுப் பெயரும் மகாதேவன் என்பதால், இவர் மாயா ஆனார். 1978 வரை 23 ஆண்டு காலம் விகடனில் பணியாற்றி, பின்பு விதிவசத்தால் விலக நேர்ந்து (அது பெரிய கதை!) எழுத்தாளர் மணியன் மற்றும் தாமரை மணாளனோடு ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் இணைந்து, அங்கே ஐந்தாறு ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர் (அவர் ஓய்வு பெற்ற விதமும் ஒரு தனிக் கதை!).

அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அமரர் எஸ்.எஸ்.வாசனைப் பற்றியும், அவரின் மகன், என் மதிப்புக்குரிய சேர்மன் எஸ்.பாலசுப்பிரமணியன் பற்றியும், என் குருநாதர் சாவி பற்றியும், விகடனில் பணியாற்றிய அனுபவங்கள் பற்றியும் சுவாரசியமாக நினைவுகூர்ந்து பல விஷயங்களைச் சொல்வார். நேரம் போவதே தெரியாமல் வாய் பிளந்து ஆவலோடு கேட்டுக்கொண்டு இருப்பேன். ஒரு தனி வலைப்பூவே ஆரம்பித்து, அவர் சொல்வதையெல்லாம் பதியலாம். அவர் சொன்ன விஷயங்கள் அவ்வளவு இருக்கின்றன.
எஸ்.ராஜம்
சில நாட்களுக்கு முன் மாயாவைப் பார்த்துப் பேசிக்கொண்டு இருந்தபோது, ஓவியர் எஸ்.ராஜம் பற்றிப் பல தகவல்கள் சொன்னார். அவர் வீணை மேதை எஸ்.பாலசந்தரின் சொந்த அண்ணன் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியும். தவிர, ராஜத்துக்கு ஓவியம் வரைதல் என்பது ஒரு பொழுதுபோக்குதான் என்றும், அவர் ஒரு சங்கீத வித்வான் என்றும், சங்கீத உலகம் அவரை நன்கறியும் என்றும், நமக்குத்தான் அவரை ஓவியராகத் தெரிந்திருக்கிறது என்றும் பேசிக்கொண்டு இருந்தார்.

அடுத்த சில நாளில், ‘இட்லிவடை’ வலைப்பூவில் ஓவியர் ராஜம் பற்றிய குறும்படம் எடுத்துக்கொண்டு இருப்பது பற்றியும், ராஜம் இப்போது உடல் நிலை கெட்டு சீரியஸாக இருக்கிறார் என்றும் படித்தேன். ராஜம் பற்றி மாயா என்னிடம் பேசியதும், அடுத்த சில நாட்களில் ‘இட்லி வடை’யில் ராஜம் பற்றிப் படிக்க நேர்ந்ததும் மிகத் தற்செயலானவை. மாயா என்னிடம் ராஜம் பற்றிப் பகிர்ந்துகொண்ட தகவல்களில் ஒன்றிரண்டை பின்னூட்டமாக ‘இட்லிவடை’யில் இட்டேன் (ஓவியர் ராஜம் உடல் நிலை மோசமாகி அடுத்த நாள் காலமாகிவிட்டார். அவருக்கு வயது 91.).

நேற்றும் வழக்கம்போல் மாயாவைப் போய்ப் பார்த்துப் பேசிக்கொண்டு இருந்தேன். அவரின் துணைவியார் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, விஜயா மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார். திடுக்கிட்டேன். ஆஞ்சியோகிராம் செய்து பார்த்தபோது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததாகவும், ‘எனினும் பயப்பட ஒன்றுமில்லை; அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்தது; விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்பிவிடுவார்’ என்கிற ஆறுதலான செய்தியைச் சொன்னார்.

பின்னர், பேச்சு வழக்கம்போல் வேறு திசையில் பயணித்தது. விகடனில் தான் ஓவியம் வரைந்த அனுபவங்கள் பற்றிப் பேசத் தொடங்கிய மாயா, அந்நாளில் நியூயார்க்கில் பிரபல ஓவியராக விளங்கிய ‘நார்மன் ராக்வெல்’ என்பவர் பற்றிச் சொன்னார். 1894 பிப்ரவரி 3-ம் தேதி பிறந்தவர் நார்மன் ராக்வெல். 1978-ல் தனது 85-வது வயதில் அவர் காலமானார்.

‘தி சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்’ பத்திரிகையில் ஓவியராகப் பணியாற்றியவர் நார்மன் ராக்வெல். முதலில் குழந்தைகளுக்கான குட்டிக் குட்டி ஜோக் படங்களை, லைன் டிராயிங்குகளைத்தான் வரைந்துகொண்டு இருந்தார் அவர். பின்னர், இல்லஸ்ட்ரேஷன் எனப்படும் கதைகளுக்கான சித்திரங்களை வரையத் தொடங்கினார். அப்போதும் குழந்தைகளுக்கான கதைப் படங்களைத்தான் வரைந்தார்.
நார்மன் ராக்வெல் வரைந்த படம்
அவர் ஒரு சுயம்பு. தாமாகவே படம் வரையக் கற்றுக்கொண்டவர். சிறுவர்களை மாடலாக நிறுத்தி வரைந்து பழகினார். அவர் வரைந்த படங்களுக்கு வாசகர்களிடம் அத்தனை வரவேற்பு! ஒரு குறிப்பிட்ட கதையைப் படித்ததும் அதில் உள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்ற முகவெட்டு உள்ள சிறுவனைத் தேடி காரில் பயணம் கிளம்புவாராம். ஒரு வாரமோ, பத்து நாளோ அலைந்து அப்படி ஒரு சிறுவனைக் கண்டுபிடித்ததும், அவனை அழைத்து வந்து தன் விருப்பத்துக்கேற்ப ‘போஸ்’ கொடுக்கச் சொல்லி, அவனைப் படமாக வரைந்து பத்திரிகைக்குத் தருவாராம். இதனால் அவர் வரைந்த படங்கள் உயிரோட்டத்துடன் இருந்தன. படம் வரைவதற்கு அவருக்குப் போதிய நேரம் மட்டுமின்றி, போக வர கார் செலவு, மாடல் சிறுவனுக்குக் கொடுக்க வேண்டிய தொகை உள்பட அவர் படத்துக்கு ஒரு பெரிய தொகையைச் சன்மானமாகக் கொடுத்தது அவர் பணியாற்றிய பத்திரிகை.

பின்னர் நார்மன் ராக்வெல் பெரியவர்களின் கதைகளுக்கும் படங்கள் வரையத் தொடங்கினார். அப்போதும் வழக்கமான பாணியையே கையாண்டார். அந்தக் கதைகளில் வரும் கேரக்டர்கள் போன்ற மனிதர்களைத் தேடிப் பயணம் கிளம்பினார். அவருக்குப் புகழ் சேரச் சேர, அவருக்கு மாடலாக நின்று ‘போஸ்’ கொடுக்க படா படா மில்லியனர்களின் மனைவிமார்களும் ஆவலோடு நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தார்களாம்.

அவர் தனக்கு அப்படி ‘போஸ்’ கொடுத்தவர்களைப் பற்றியே ஒரு புத்தகம் எழுதினார். அது அந்நாளில் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தது.

அந்தப் புத்தகத்தில், தனக்கு ‘போஸ்’ கொடுத்த ஒரு சிறுவனைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் நார்மன் ராக்வெல். அவர் வரைந்த பல படங்களுக்கு மாடலாக நின்றவன் அவன். நாளாக நாளாக அவனிடம் ஒரு திமிர் வந்துவிட்டதாம். ‘நான் போஸ் கொடுத்து, அதைப் படமாக எழுதித்தானே நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்? எனக்கு இத்தனை பணம் தர வேண்டும்’ என்று கேட்கத் தொடங்கினானாம். அப்படியும்கூட சரியான நேரத்துக்கு வந்து ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டானாம். இவரை வேண்டுமென்றே காக்க வைப்பது, தன்னைக் கண்டதும் அவர் பரபரப்பாவதைப் பார்த்து ரசிப்பது போன்ற குணங்கள் அவனிடம் வளர்ந்துவிட்டன. ஒரு கட்டத்தில் நார்மன் ராக்வெல் அவனை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு, மாடலுக்கு வேறு ஒரு சிறுவனைத் தேடிக்கொண்டு விட்டார்.

அதற்குப் பின் ஓரிரு வருடங்கள் கழித்து, ஒரு பிச்சைக்காரச் சிறுவன் பணக்கார வீட்டில் திருடுவதற்காக டிரெயினேஜ் பைப்பைப் பிடித்துக்கொண்டு உயரே ஏற முயற்சி செய்து, மிக உயரத்தில் ஜன்னலுக்குத் தாவும்போது பிடி நழுவி, அங்கிருந்து கீழே விழுந்து மண்டை சிதறிச் செத்துப்போவதைக் கண்ணெதிரே பார்த்திருக்கிறார் நார்மன் ராக்வெல். பதறிப்போய் காரை நிறுத்திவிட்டு, இறங்கிப் போய்ப் பார்த்தால், அவன் வேறு யாருமல்ல; முன்பு அவரால் நிராகரித்து ஒதுக்கப்பட்ட அதே சிறுவன்!
.

6 comments:

விகடன் ஓவியர்களை பற்றியும், நார்மன் ராக்வெல் பற்றியும் தொகுத்து தந்துள்ள தகவல்கள், அருமை. அந்த சிறுவன் பற்றிய குறிப்பு: "அழிவுக்கு முன் அகந்தை" என்ற எடுத்து கொண்டாலும் மனதை என்னவோ செய்தது.
 
சுவராசியமான, இதுவரை நான் அறியாத தகவல்கள். நன்றி.
 
நார்மன் ராக்வெல் படங்கள் ரொம்ப தத்ரூபமாய் இருக்கும். பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவரைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ரீடர்ஸ் டைஜஸ்டில் அவர் ஓவியம் அடிக்கடி வரும். கண்ணாடியில் அவரைப் பார்த்தபடியே கான்வாஸில் அவர் ஓவியம் வரைவதை அவரே வரைந்திருக்கும் அந்த ஓவியம் இன்னும் கண் முன் நிற்கிறது.
- கே. பி. ஜனா
 
ஓவியர்கள் ராஜம் மற்றும் நார்மன் ராக்வெல் ஆகியோரைப் பற்றிய தகவல்களை அறியக் கொடுத்தமைக்கு நன்றி.

ரேகா ராகவன்.
 
நார்மன் எவ்வளவு ரசனை மிக்க ஓவியராக இருந்தார் என்பதை மிக சுவாரசியமாக பதிவு செய்து உள்ளீர்கள் .
அந்த சிறுவனுக்கு அவ்வளவு சீக்கிரம் சோக முடிவு வந்திருக்க வேண்டாம் . கூடவே நம் ஓவியர்களையும் நினைவு கூர்ந்தது
மரியாதைக்குரிய விஷயம் .
 
* உண்மைதான் சித்ரா! அந்தப் பையனின் சோக முடிவு எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. :(

* மொத்தத்துல சைவகொத்துப்பரோட்டா மாதிரி சுவாரசியமா இருந்துதுன்னு சொல்ல வரீங்க?! :)

* நன்றி கே.பி.ஜனா!

* நன்றி ரேகா ராகவன்!

* நன்றி பத்மநாபன்! அது சரி, இது முன்னூட்டமா, பின்னூட்டமா? (அதாவது முதல்ல அனுப்பியதா, அது வராமல் போய் இரண்டாவதாக அனுப்பியதா? :)