உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, January 22, 2018

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 15

பை பை... சிங்கப்பூர்! -15

சிங்கப்பூரில் கடைசி நாளில் அதிக அலைச்சல் இல்லாமல், அருகருகே இருக்கும் முக்கிய இடங்களைப் பார்த்துவிட்டுக் கிளம்ப வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தோம். மெரினா பே ஸேண்ட்ஸ், ஃப்ளையர், மெர்லியன் பார்க், கார்டன்ஸ் பே, க்ளவுட் ஃபாரஸ்ட், ஃப்ளவர் டோம், மியூஸியம் என சிங்கப்பூரின் முக்கிய அட்ராக்‌ஷன்கள் எல்லாமே அருகருகில்தான் இருக்கின்றன. சிங்கப்பூரில் ஒருநாளோ, இரண்டு நாளோ மட்டும் டூர் திட்டமிடுபவர்கள் இவை அனைத்தையுமே நின்று நிதானமாகப் பார்த்துவிட்டு வந்துவிடலாம். நாங்கள் இந்தப் பட்டியலில் முதல் மூன்றைத் தவிர்த்து மற்றவற்றை ஆரம்ப நாட்களிலேயே பார்த்துவிட்டதால், மீதம் உள்ளவற்றை மட்டும் பார்த்துவிட்டு வரக் கிளம்பினோம்.

நடக்கும் தூரத்தில் உள்ள ‘ஸீ மி’ ஸ்டேஷன் வரை வந்து எங்களை வழியனுப்பினார் ஜெயஸ்ரீசுரேஷ். அங்கே மெட்ரோ ரயில் பிடித்து, நேரே ‘பே ஃப்ரன்ட்’ என்னும் ஸ்டேஷனில் இறங்கினோம். அருகிலேயே மெரினா பே ஸேண்ட்ஸ். உயர உயரமான மூன்று கட்டடங்கள்; உயரே மூன்றையும் இணைத்துக் கட்டப்பட்ட ஒரு ஹோட்டல் உள்ளது. ஸ்கைபார்க் ஹோட்டல் என்று பெயர். இந்தக் கட்டடம் சமீபத்தில்தான், அதாவது 2010-11-ல்தான் திறக்கப்பட்டது.

நாங்கள் அந்த மூன்று கட்டடத்தின் மீது ஏறுவதற்கு டிக்கெட் வாங்கியிருந்தோம். 56 மாடிகள். லிப்டுக்குள் ஏறியது தெரியவில்லை; லிப்ட் நகர்ந்ததா என்று தெரியவில்லை. அதற்குள் கதவு திறந்து, உச்சி வந்துவிட்டது. ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்’ கதைதான். ஓர் அதிர்வு இல்லை, ஒரு குலுக்கல் இல்லை.

மேலே சுற்றிலும் கண்ணாடிச் சுவர்தான். சிங்கப்பூர் முழுக்கப் பார்க்கலாம். நாங்கள் ஒரு சுற்றுச் சுற்றி வந்தோம். அந்தப் பக்கம் நீச்சல் குளத்துக்குப் போக யத்தனித்தபோது, ஹோட்டல் மேனேஜர் தடுத்துவிட்டார். ஹோட்டலுக்குச் சொந்தமான நீச்சல்குளமாம் அது. அதற்கெனத் தனியாக டிக்கெட் வாங்கியிருந்தால்தான் போகமுடியும் என்றார்.

நானும் மற்றவர்களும் ‘போகட்டும், விடு’ என்று தள்ளி வந்துவிட, என் மகன் ரஜினி மட்டும் அவருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு, சற்றுப் பொறுத்து வந்தான். “என்னடா கேட்டார் அவர்?” என்று மகனிடம் கேட்டேன். “ஹூ இஸ் தட் ஜென்டில்மென், லுக்ஸ் லைக் இண்டியன் பிரைம் மினிஸ்டர் மோடி?” என்று என்னைச் சுட்டிக்காட்டிக் கேட்டதாகச் சொன்னான். “அடடா!” என்று உச்சிகுளிர்ந்து போனேன். சென்னையில் என் மனைவியிலிருந்து மற்ற உறவினர்கள், அலுவலக நண்பர்கள், ஃபேஸ்புக் நண்பர்கள் எனப் பலரும் நான் அசப்பில் நரேந்திர மோடி போல் இருப்பதாகச் சொல்லியிருந்தாலும், சிங்கப்பூரின் உயரமான கட்டடத்தின் உச்சியில் ஒருவர் இப்படிச் சொல்கிறார் என்பது விசேஷமல்லவா! ஆனால், அதற்காகவேனும் அவர் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்பது இங்கே கொஞ்சம் வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் குறிப்பிடத்தக்கது.

அங்கே அழகான ஒரு சீனப் பெண் தனியாக அங்கங்கே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். இதே டூரில் ஆரம்ப தினங்களிலும் அந்தப் பெண்ணைப் பார்த்த ஞாபகம். பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்தப் பெண் எங்கள் அருகில் வந்து, என் மகளிடம் தன்னைப் புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கச் சொன்னாள். அதன்பின், எங்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினாள். அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று கேட்டேன். ‘அக்கார்டி’ என்றாள், அக்கார்டியன் இசை போன்ற குரலில்! ரயில் சிநேகிதம் போன்று ஸ்கைபார்க் சிநேகிதம்!

அங்கே அவ்வளவு உச்சியிலிருந்து சிங்கப்பூரை முழுவதுமாகப் பார்க்கிறோம் என்பதைத் தவிர, வேறு ஒன்றும் இல்லை. அங்கே 15 நிமிடம் இருந்தாலே அதிகம். கொள்ளைக் காசு கொடுத்துவிட்டு வந்ததற்காக நாங்கள் வம்படியாக ஒரு அரை மணி நேரம் அங்கே இருந்துவிட்டுத்தான் கீழிறங்கினோம்.

அடுத்து நாங்கள் சென்ற இடம் சிங்கப்பூர் ஃப்ளையர். ஜெயன்ட் வீல் போன்று இருக்கும் இது வேகமாகவெல்லாம் சுற்றாது. மெதுமெதுவாகத்தான் உயரே போய்க் கீழிறங்கும். இதுவும் சிங்கப்பூரை பறவைக் கோணத்தில் பார்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான். 2008-ஆம் ஆண்டிலிருந்து இது இயங்குகிறது. குளிர்பதனம் செய்யப்பட்ட 28 கேப்ஸ்யூல்கள் (கூண்டுகள்) கொண்ட இந்த ராட்டினத்தைக் கட்டி முடிக்க இரண்டரை வருடங்கள் ஆனதாம். ஒவ்வொரு கூண்டிலும் அதிகபட்சம் 28 பேர் வரைக்கும் ஏறிக்கொள்ளலாம். ஆனால், நாங்கள் சென்ற கூண்டில் பத்துப் பன்னிரண்டு பேர்தான் இருந்தோம்.

இதன் உயரம் சுமார் 540 அடி. இதற்கு முன் ஏறி இறங்கிய ஸ்கைபார்க் ஹோட்டலைவிட இது உயரம் குறைவுதான் என்பதால், ஏதாவது ஒன்றில் ஏறி இறங்கினால் போதுமே என்பது பலரின் அபிப்ராயம். ஆனால், அவ்வளவு தூரம் போய்விட்டு, சிங்கப்பூர் ஃப்ளையரில் ஏறி இறங்காமல் வந்துவிட்டால் தெய்வ குத்தமாகிவிடுமே என்று இங்கேயும் குடும்பத்தை ஏற்றிக்கொண்டு ஒரு சுற்று வந்தேன். ஃப்ளையர் ஒரு சுற்று வர அரை மணி ஆகிறது. அவ்வளவு ஸ்லோ!

அதையடுத்து, அங்கிருந்து பொடிநடையாக நடந்தே மெர்லியன் பார்க்குக்கு வந்தோம். ‘மெர்மெய்ட்’ என்றால் கடல்கன்னி. மீன் உடம்பும் மனிதத் தலையும் கொண்டவள். மீன் உடம்பும் சிங்கத் தலையும் கொண்டிருப்பதால் இது மெர்-லயன் ஆயிற்று. 1966-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் டூரிஸம் போர்டு  சார்பாக அலெக்ஸ் ஃப்ரேஸர் பர்னர் என்பவர் இந்த உருவத்தை வடிவமைத்தார். சிங்கப்பூர் டூரிஸத்தின் சின்னமாக இருந்த இதை, 1972-ல் லிம் லாங் ஜின் என்பவர் சிலையாக வடித்தார். அன்றிலிருந்து சிங்கப்பூர் நதியில் ஸ்தாபிக்கப்பட்ட இது சிங்கப்பூரின் சின்னமாகவே திகழ்ந்துகொண்டிருக்கிறது. முதலில் எஸ்பிளனேட் பிரிட்ஜ் அருகில் வேறொரு பக்கத்தில் இருந்த இந்தச் சிலையை ‘மெரினா பே’யிலிருந்து தெளிவாகப் பார்க்க முடியாமல் இருந்ததால், 2002-ல் ஃபுல்லர்ட்டன் ஹோட்டல் அருகில் இடமாற்றம் செய்தார்கள். 2010-ல் இதன் மீது பலமான இடி தாக்கியதில், இதன் பாகங்கள் துண்டுகளாகச் சிதறி விழுந்தன. அதன்பின் ரிப்பேர் செய்யப்பட்டு, 2012-லிருந்து இந்த ‘மெர்லயன்’ தொடர்ந்து நீர் உமிழ்ந்து வருகிறது.

அருகில், சாரல் மேலே தெளிக்க நிற்பது சுகமாக இருந்தது. இந்த மெர்லயனின் உயரம் சுமார் 28 அடி; இங்கேயே சற்றுத் தள்ளி இன்னொரு மெர்லயனும் இருக்கிறது. அதன் உயரம் சுமார் 7 அடி.  அதன்பின், அங்குள்ள நீண்ட நடைபாதையில், மெர்லயன் பார்க்கில் நடைபோட்டோம்.

அங்கே சுமார் ஒரு மணி நேரம்போல இருந்துவிட்டு, அங்கிருந்து எம்.ஆர்.டி. பிடித்து ஆர்ச்சர்டு வீதி வந்தோம். மழை தூறியது. ஓரமாக இருந்த ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுக்குள் ஏறினால், அப்படியே மழையில் நனையாமல் தெருவின் அந்தக் கோடி வரை நடந்துபோய்விடலாம். கடை, கடைத்தெருவை வேடிக்கை பார்த்துவிட்டு, அங்கிருந்து பஸ் பிடித்து, முஸ்தபா சென்டர் வந்தோம். சிராங்கூன் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் வரப்போகும் தீபாவளிக் கொண்டாட்டத்துக்கான அலங்கார அறிகுறிகள் தெரிந்தன. ஒரு பெரிய திடலில் பந்தல் தயாராகிக்கொண்டிருந்தது. தீபாவளி பட்டாசுக் கடைகள் வரப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், சிங்கப்பூர் அரசாங்கம் காற்று மாசில் கவனம் செலுத்துகிறது. நம்ம ஊர் மாதிரி மெகா சைஸ் வெடிகள், ராக்கெட்டுகள், புஸ்வாணங்கள் போன்றவற்றுக்கு அங்கே அனுமதியில்லை. சின்னதாக கேப், கம்பி மத்தாப்பு போன்றவற்றை மட்டும் கொளுத்திக்கொள்ளலாமாம்.

முஸ்தபா சென்டரில் எதுவும் வாங்கவில்லையென்றாலும், ஒரு மணி நேரத்துக்கு மேல், அங்குள்ள எஸ்கலேட்டரில் ஏறி, இறங்கி, சுற்றிச் சுற்றி வந்தோம். பின்பு, வெளியே தெருவோரக் கடைகள் ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கினோம். எல்லாமே யானை விலை, குதிரை விலை. எதுவும் வாங்குகிற மாதிரி இல்லை. என்றாலும், சிங்கப்பூர் போய்வந்ததன் அடையாள அன்பளிப்பாக  உறவுகளுக்கும் நட்புகளுக்கும் கொடுப்பதற்காக பால்பாயின்ட் பேனாக்களும் சாக்லேட் பெட்டிகளும் வாங்கிக்கொண்டோம்.

இரவு மணி 8. அங்கிருந்து மீண்டும் டிரெயின் பிடித்து, ஸீமீ ஸ்டேஷனில் வந்து இறங்கி, ஜெயஸ்ரீ சுரேஷ் வீட்டுக்கு வந்தோம்.

விடியற்காலை 5 மணிக்கு ஃப்ளைட். சாப்பிட்டுவிட்டுப் படுத்த எங்களைப் பொறுப்பாக விடியற்காலை 3 மணிக்கு எழுப்பிவிட்டார் ஜெயஸ்ரீ. அந்த இரவிலும் காபி போட்டுக்கொடுத்து உபசரித்தார்.

கேப் புக் பண்ணிக் கொடுத்தார் சுரேஷ். 3:30-க்கெல்லாம் சாங்கி ஏர்போர்ட்டுக்கு வந்துவிட்டோம். எங்கள் இண்டிகோ ரெடியானதும், உள்ளே சென்று உட்கார்ந்து, அது மெல்ல நகரத் தொடங்கியதும், பிரிய மனமில்லாமல் சிங்கப்பூருக்கு ஏக்கம் கலந்த விழிகளோடு ‘பை... பை...’ சொன்னோம். இண்டிகோ  பெரிய உறுமலுடன் தடதடத்து ஓடி, குபுக்கென்று உயரே ஏறிவிட, சிங்கப்பூர் வெளிச்சப் புள்ளிகளாகி, கீழே கீழே கீழே போய், பின்பு கண்களிலிருந்து காணாமல் போனது.

சிங்கப்பூர் காஸ்ட்லியான நகரம். நாலு பேர் கொண்ட ஒரு குடும்பம் அங்கே அறைகளை வாடகைக்கு எடுத்து, ஓட்டல்களில் சாப்பிட்டு, ஒன்பது நாள்கள் ஜாலியாக இருந்துவிட்டு வர வேண்டுமென்றால், மிகப் பணக்காரராக இருந்தால்தான் முடியும். என்னை மாதிரி நடுத்தர வர்க்கக் குடும்பத்தினர் அதைக் கனவிலும் நினைக்க முடியாது.

நட்பைவிடப் பாசம் காட்டிய உறவினரும், உறவைவிட நேசம் செலுத்திய நட்பும் அங்கே  இருந்தது எங்களுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, இந்தச் சுற்றுலாப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றித் தந்த அவர்களுக்கு இன்றைக்கும் நாங்கள் மானசிகமாக நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் மற்றும் கலர்ஃபுல் மலேசியா இவற்றின் இனிய நினைவுகள் எங்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.


(பயணம் நிறைவடைந்தது)

0 comments: