அன்றைக்குச் சுற்றிப் பார்த்துவிட்டு, அப்படியே
சிங்கப்பூர் கிளம்புவதால், எங்கள் பைகள், ட்ராலி பேகுகள் போன்றவற்றையும்
எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.
முதலில் அவர் எங்களை ஒரு சாக்லேட் ஃபேக்டரிக்கு
அழைத்துப் போனார். வழக்கமான பழுப்பு நிறத்தில் மட்டுமல்லாது, வெள்ளை நிறத்தில்,
கன்னங்கரேலென்ற கறுப்பு நிறத்திலெல்லாம்கூட அங்கே வகைவகையான சாக்லேட்டுகள்
இருந்தன. சுவைத்துப் பார்ப்பதற்கு ஒவ்வொரு வகையிலும் ஒன்றிரண்டு தந்தார்கள். ஆனால்,
இங்கே நம் சென்னையில் வாங்கிச் சாப்பிடும் சாக்லேட்டின் சுவை அவற்றுக்கு இல்லை.
சில சப்பென்று இருந்தன; சில காட்டமான சுவையுடன் இருந்தன; சில ஒருவித நெடியுடன்
இருந்தன. மொத்தத்தில், எதுவும் வாங்கித் தின்ன வேண்டும் என்கிற ஆர்வத்தைத்
தூண்டும்விதமாக இல்லை. தவிர, விலையும் மிக மிக அதிகம். எனவே, எதையுமே வாங்காமல்,
வெறுமே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்து நாங்கள் சென்ற இடம்… மலேசியா என்றதுமே
நம் நினைவுக்கு வரும் இடம், கிட்டத்தட்ட மலேசியாவின் லேண்ட்மார்க்காகவே ஆகிவிட்ட
இடம்… ஆம், அதேதான், பத்துமலை முருகன் கோயில்.
‘பட்டு கேவ்ஸ்’ என்று அழைக்கிறார்கள் இந்த இடத்தை. மலாய் மொழியில் ‘பட்டு’ என்றால் ‘பத்து’ என்று அர்த்தமாம். ‘பத்துமலை முருகன் கோயில்’ என்று இதற்குப் பெயர் வந்ததற்குச்
சுவையான ஒரு காரணத்தைச் சொன்னார் முனியசாமி.
முருகனுக்கு உகந்த தலங்கள் ஆறும் ஆறுபடை
வீடுகளாகத் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இவற்றைத் தவிர, இன்னும் நான்கு தலங்கள்
மலேசியாவில் உள்ளன. ஏழாவது தலம் ‘ஈபோ’வில் உள்ள கல்லுமலை முருகன் கோயில்; எட்டாவது,
பினாங்கிலுள்ள தண்ணீர்மலைக் கோயில்; ஒன்பதாவது தலம், மலாக்காவிலுள்ள சன்னாசிமலை.
பத்தாவது தலம் இந்த பத்துமலைக் கோயில். இதை ஸ்தாபித்தவர் தம்புசாமிப் பிள்ளை
ஆவார். சுமார் நூறு, நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்த அவர்,
கூர் கூராக நிற்கும் இந்த மலைப்பகுதிகளையும், வேலாயுதம் போன்று காட்சியளித்த
இந்தக் குகை வாயிலையும் பார்த்துவிட்டு, இதை முருகனின் திருத்தலமாக்க வேண்டும் என்று முடிவுசெய்தாராம். அதன்படி, ஒரு முருகன் சிலையைத் தயார்செய்து எடுத்துக்கொண்டு வந்து, இந்தக் குகைக்குள் ஏறி, அங்கே அதைப் பிரதிஷ்டை செய்தாராம். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே இங்கே முருகனுக்குத்
தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறதாம்.
இந்தத் தகவலைச் சொன்ன முனியசாமி, இதே
கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோயிலையும் தம்புசாமிப் பிள்ளைதான் எழுப்பினார்
என்றார்.
என் மனைவியால் அவ்வளவு உயரம் படிகளில் ஏறிச்
செல்ல முடியாது என்பதால், நானும் என் மகனும் மகளும் மட்டும் படிகளில் ஏறத்
தொடங்கினோம். பிள்ளைகள் கிடுகிடுவென்று ஏறிப் போய்விட்டார்கள். என்னால் அப்படி
முடியவில்லை. மூச்சு வாங்கியது. ஆங்காங்கே உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துதான்
ஏறினேன். மலைக்கோயிலில் மண்டபக் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அதற்கு,
உடைத்த செங்கல் ஜல்லிகளைக் கீழே இருந்து பக்கெட் பக்கெட்டாக எடுத்துக்கொண்டு
போய்க்கொண்டிருந்தார்கள். எங்களிடமும் ஆளுக்கொரு பக்கெட்டைக் கொடுத்து, ‘முருகனுக்கான உங்கள் சேவையாக
இருக்கட்டும்; நீங்களும் ஒரு பக்கெட் எடுத்துச் செல்லுங்கள்’ என்றார்கள். சந்தோஷமாக
வாங்கிக்கொண்டு படியேறினோம்.
உயரே மலைக்குகை பிரமாண்டமாக இருந்தது. அங்கே கட்டட
வேலைகள் நடந்துகொண்டிருந்ததால் தரையெல்லாம் நசநசவென்று ஈரமாக இருந்தது. பாறைச்
சுவர்கள் எல்லாம் ஈரக்கசிவுடன் இருந்தன. மேலேயிருந்து பொட்டுப்பொட்டாய் தண்ணீர்த் துளிகள் விழுந்துகொண்டிருந்தன. இடமே குளிர்ந்து, சில்லென்றிருந்தது. மனசுக்கு ரம்மியமான சூழல்.
அங்கிருந்து இன்னும் சில படிகள் ஏறிச் சென்றால்,
பத்துமலை முருகன் கோயிலில் முருகப்பெருமானின் திவ்விய தரிசனம். கூடவே, ‘அழகென்ற சொல்லுக்கு முருகா…
உன்னை அண்டினோர் வாழ்விலே குறையேது முருகா…’ என்று உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார் என்
அபிமான பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன். நான் அடைந்த சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா?!
தரிசனம் முடிந்து, மீண்டும் கீழே இறங்கி
வந்தோம்.
அங்கேயே பக்கத்தில் விசுவரூப ஆஞ்சநேயர் சிலை.
அதன் பின்னால் இன்னும் பிரமாண்டமாக கிருஷ்ணர் சிலை. கீதோபதேசக் காட்சி. அங்கேயும்
ஒரு குகை உள்ளது. அதன் உள்ளே சென்று பார்த்தோம். ஆஹா… ராமாயணக் காட்சிகள்
முழுவதையும் அழகழகான பொம்மைகளாகச் செய்து வரிசையாக வைத்திருந்தார்கள்.
அத்தனையையும் கண்குளிரப் பார்த்து ரசித்தோம். அங்கேயும் பாறைச் சுவர் ஓரமாக
செங்குத்தாகப் படிகள் ஏறிச் சென்றன. அதில் ஏறிப் போய்ப் பார்த்தால் சுயம்பு
லிங்கத்தை தரிசிக்கலாம் என்றார்கள். பத்துமலை ஏறி இறங்கியதில் ரொம்பவும் டயர்டாகியிருந்தோம்.
நிச்சயம் இப்போது அதில் ஏறிச் செல்வதற்கான தெம்பு எங்களுக்கு இல்லை என்று புரிந்ததில்,
மனசை சமாதானப்படுத்திக்கொண்டு, ராமாயணக் காட்சிகளை மட்டும் கண்டுகளித்துவிட்டு
வெளியேறினோம்.
இந்த கீதோபதேச கிருஷ்ணன் சிலை, கடந்த 2014-ல்தான்
திறந்துவைக்கப்பட்டது. அந்த விழாவில் புராணச் சொற்பொழிவு நிகழ்த்த என் இனிய
நண்பர், மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ‘சொல்லின் செல்வர்’ பி.என்.பரசுராமன் அவர்கள்
சென்றிருந்தார். அவர் அந்த விழா பற்றியும், சிலை மற்றும் ராமாயண குகை பற்றியும் ‘சக்தி விகடன்’ இதழில் கட்டுரை
எழுதியுள்ளார். (அந்த லின்க்கையும் இங்கே கொடுத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள்
படித்துச் சுவைக்கலாம்.) அன்றிலிருந்தே அந்தச் சிலையையும், அந்த குகையையும் போய்ப்
பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். என் கனவு இதோ நனவாகிக்கொண்டிருப்பதை
எண்ணி, கிருஷ்ண பரமாத்மாவுக்கு மானசிகமாக என் நன்றியைச் சொல்லி, அங்கிருந்து
கிளம்பினேன்.
முனியசாமி எங்களை ‘ஜெண்ட்டிங் ஸ்கைவே’ என்னும் கேபிள்கார்
சர்வீஸுக்கு அழைத்துச் சென்று, டிக்கெட் வாங்கிக் கொடுத்து, எங்களை வழியனுப்பி
வைத்தார். தங்கிய ஹோட்டல் மற்றும் இந்த கேபிள்கார் செலவு இரண்டும் டிராவல்ஸ் பேக்கேஜிலேயே
வருகின்றன.
“நீங்கள் இப்போது போகப்போகிற இடம் ‘ஜெண்ட்டிங் ஹைலேண்ட்ஸ்’ என்னும் பகுதியாகும். நல்ல
பனிமூட்டம் உள்ள இடம் அது. ரம்மியமாக இருக்கும். அங்கே பெரிய கேஸினோ ஒன்று
இருக்கிறது. அப்புறம் ஒரு பெரிய மால் இருக்கிறது. அவற்றைப் பாருங்கள். கிட்டத்தட்ட
ஒரு இரண்டு மணி நேரம் அங்கே உங்களுக்குப் பொழுது போய்விடும். அப்புறம் அதே கேபிளில்
கிளம்பி, கீழே வாருங்கள். கீழே என்றால், கோலாலம்பூருக்கு வர வேண்டாம். மேலிருந்து
இறங்கும்போது, இரண்டாவது ஸ்டாப்பிங்கில் இறங்கிக்கொள்ளுங்கள். அங்கே ‘ஃபர்ஸ்ட்வேர்ல்டு’ என்றொரு ஹோட்டல் இருக்கிறது.
அதன் ரிசப்ஷனில் வந்து காத்திருங்கள். நான் அங்கே வந்து உங்களைப் பிக்கப்
பண்ணிக்கொள்கிறேன்” என்று விளக்கமாகச் சொல்லி
அனுப்பிவைத்தார் முனியசாமி.
ஜெண்ட்டிங் ஹைலேண்ட்ஸ் என்பது
கோலாலம்பூரிலிருந்து 5,700 அடி உயரத்தில் இருக்கிறது. இங்கே செல்லும்
கேபிள்கார்தான் உலகிலேயே அதிவேகமான கேபிள்கார் சர்வீஸ் என்றார் முனியசாமி. மணிக்கு
21 கி.மீ. வேகம். அதேபோல், ஆசியாவிலேயே மிக அதிக தூரம் உயரே செல்லக்கூடிய
கேபிள்காரும் இந்த ஜெண்ட்டிங் ஸ்கைவேதானாம். சுமார் மூன்றரை கி.மீ. எனவே, கேபிளில்
ஏறி அமர்வது முதல் அங்கே இறங்குவது வரை, மொத்தப் பிரயாண நேரம் சுமார் 20
நிமிடங்கள்தான்.
முனியசாமி சொன்னபடியே அங்கேயுள்ள கேஸினோவைப்
பார்த்துவிட்டு, மாலுக்கு வந்தோம். பிரமாண்டமான மால். உயர உயரமான சுவர்கள்
மொத்தமுமே எல்.இ.டி டிவி-க்களாக மாறி, 30 அடி உயர விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அந்த மாலைச் சுற்றிப் பார்க்க நிச்சயமாக
ஒரு மணி நேரம் போதாதுதான். ஆனால், அப்போதே மணி கிட்டத்தட்ட மாலை மணி நாலு, நாலரை
ஆகிவிட்டிருந்தது. எனவே, பார்த்தவரை போதும் என முடித்துக்கொண்டு, கேபிள்காருக்கு
வந்தோம்.
அங்கிருந்து இரண்டாவது நிறுத்தத்தில்
இறங்கிக்கொண்டோம். அந்த இடமே ‘ஃபர்ஸ்ட்வேர்ல்டு ஹோட்டல்’தான். பருமனான மரங்களில்,
தூண்களில் என எங்கெங்கு காணினும் ஒளிரும் பல்புகள் நெருக்கமாகச் சுற்றிப் படர்ந்து,
ஒளிவீசிக்கொண்டிருந்தன. இந்திரலோகம்போல் இருந்தது. அங்கே சும்மா பராக்குப்
பார்த்துவிட்டு, ரிசப்ஷன் ஹாலுக்கு வந்தோம். அடுத்த ஐந்தாவது நிமிடம் தேடிக்கொண்டு
வந்துவிட்டார் முனியசாமி.
எங்களைக் காருக்கு அழைத்துச் சென்றார். அவர்
அடுத்து எங்களை அழைத்துச் சென்றது ஒரு புத்தர் கோயிலுக்கு. சின் ஸ்வீ குகைக்
கோயில் (Chin
Swee Caves temple. இந்தப் பெயரை யூ-டியூபில் தேடிப் பாருங்கள்; பாகம்-1, 2 என
வரிசையாக நிறைய வீடியோப் பதிவுகள் காணக் கிடைக்கும்.) என்று அழைக்கப்படுகிறது
அந்தக் கோயில். மிக ரம்மியமான, அழகான இடம். எட்டடுக்கு கோபுரம் ஒன்றும் அங்கே
உள்ளது. அங்கே உச்சி வரைக்கும் ஏறலாம். ஆனால், ஒவ்வொரு தளத்திலும் ஏராளமான புத்தர்
சிலைகள், பொம்மைகள் மட்டுமே இருந்தன. வெளியே ஒரே பனிமூட்டம். எதுவுமே தெரியவில்லை.
எனவே, நான்கு தளம் வரைக்கும் ஏறி, பிறகு கீழே இறங்கிவிட்டோம். புத்தர் கோயில், மகா
பெரிய புத்தர் சிலை எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தோம்.
அங்கே பாறைச் சுவரை ஒட்டியவாறு ஓர் உயரமான,
நீளமான நடைபாதை இருக்கிறது. அதன்மீது ஏறிச் சென்றால், பாறைகளை ஆங்காங்கே ரூம்
போலக் குடைந்து, ஏராளமான பொம்மைகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லாம்
நம்மைக் கலவரப்படுத்தும் பொம்மைகள். பாவம் செய்த மனிதனுக்கு நரகத்தில் என்னென்ன
தண்டனைகள் உண்டோ, அத்தனையையும் தத்ரூபமாக பொம்மைகளாக வடித்து வைத்திருக்கிறார்கள். ஓர்
அரக்கன் ஒரு மனிதனின் மார்பை வாளால் பிளக்கிறான்; மற்றொருவனை கொதிக்கும் எண்ணெய்க்
கொப்பரையில் கொதிக்க வைக்கிறான்; ராட்சதர்கள் சிலர் ஒருவனை நாலாப்புறமிருந்தும்
ஈட்டியால் துளைக்கிறார்கள். ஒருவனைக் கூர் ஈட்டியால் குத்தி உயரே தூக்குகிறார்கள்.
கழுவேற்றப்படுகிறான் ஒருவன். ஒருவன் தலையை வாளால் அறுக்கிறான் ஓர் அசுரன்.
மற்றொருவன் தலையை பாறாங்கல்லால் நசுக்குகிறான் ஒருவன். எங்கும் ஒரே ரத்தக்களறி! இப்படி விதம்விதமான,
கொடூரமான தண்டனைகளைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. கருணையே உருவான புத்தர்
கோயிலில் இம்மாதிரியான கொடூரக் காட்சிகளை பொம்மைகளாகச் செய்துவைக்க வேண்டிய
அவசியம் என்ன? யாருடைய ஐடியா இது? தெரியவில்லை.
அங்கே ஒரு மணி நேரம்போல் இருந்திருப்போம்.
முனியசாமியும் எங்களோடு இருந்தார்.
திருப்தியாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு,
வேண்டிய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். காரில் கோலாலம்பூர் நோக்கிப்
பயணம். ஏழரை மணி போல் தரையிறங்கினோம்.
எங்களை ஒரு ஹோட்டலில் இறக்கிவிட்டு, ‘டிபன்
சாப்பிட்டுக்கொள்ளுங்கள். நான் காத்திருக்கிறேன். இரவு 9 மணிக்கு உங்கள் பஸ்
ரெடியாக இருக்கும். இப்போது போனால் சரியாக இருக்கும். அவசரமில்லை. நிதானமாகச்
சாப்பிட்டுவிட்டு வாருங்கள். நான் உங்களை பஸ் ஏற்றிவிட்டுச் செல்கிறேன்’ என்று அன்புடன் சொன்னார்
முனியசாமி.
அதன்படியே டிபனை முடித்துக்கொண்டு கிளம்பினோம்.
சிங்கப்பூர் மாதிரி இல்லை… இங்கே மலேசியாவில் நம்ம ஊர் இட்டிலி, தோசை, பூரி
எல்லாம் பரவலாகக் கிடைக்கின்றன. டேஸ்ட் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும், மோசம்
என்று சொல்ல முடியாது.
சரியாக எட்டரை மணிக்கு முனியசாமி எங்களை அழைத்துக்கொண்டு
போய், ஒரு கட்டடத்தின் வாசலில் இறக்கிவிட்டார். “கொஞ்சம் இருங்கள், போய் டிக்கெட் வாங்கிக்கொண்டு
(ஏற்கெனவே புக் செய்த டிக்கெட்தான்), உங்கள் பஸ் எண் என்ன என்று கேட்டுக்கொண்டு
வருகிறேன்” என்று
சொல்லிவிட்டுப் போனார். சில நிமிடங்களில் வந்து டிக்கெட்டை எங்களிடம் தந்தார்.
அவருடைய அன்புக்கும், எங்கள்மீதான அக்கறைக்கும், நின்று நிதானமாக ஒவ்வொரு இடமாக
சுற்றிக்காண்பித்ததற்கும் என்னுடைய நன்றியின் வெளிப்பாடாக நம்ம ஊர் மதிப்பில்
ரூ.500 (சுமார் 32 ரிங்கெட்ஸ்) அவருக்குக் கொடுத்தேன். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள
அவர் மறுத்துவிட்டார்.
“மன்னிக்கணும் சார், உங்கள் அன்பு ஒன்றே போதும்.
நீங்கள் திருப்தியாகத் திரும்பிச் சென்றால், அதுவே எனக்கு மகிழ்ச்சி. எங்கள்
டிராவல்ஸிலிருந்து என்னுடைய செயல்பாடு எப்படி இருந்தது என்று கேட்பார்கள். அப்போது
எனக்கு நல்ல ரேட்டிங் கொடுத்தால், அதுவே எனக்கு நீங்கள் தருகிற பெரிய டிப்ஸ்” என்றவர், “இங்கேயாவது பரவாயில்லை சார்;
ஆனால், சிங்கப்பூரில் போய் எந்த டிரைவருக்காவது இப்படி டிப்ஸ்
கொடுத்துவிடாதீர்கள். அப்புறம் உங்களை லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சொல்லி உள்ளே
தள்ளிவிடுவார்கள்” என்று சொல்லிச் சிரித்தார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கள் பஸ் வந்தது.
திரு.முனியசாமியிடம் பிரியாவிடை பெற்று, எங்கள் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம்.
பஸ் சிங்கப்பூரை நோக்கிப் புறப்பட்டது.
(பயணம் தொடரும்)
0 comments:
Post a Comment