ரா.அருள்வளன் அரசு மிக இனிமையான மனிதர். அவருடன் பேசுவதற்கே ஆசையாக இருக்கும். அத்தனை தன்மையாக, வார்த்தைகளை மிருதுவாகப் பிரயோகிப்பார். அவர் கேட்டு ஒன்றை மறுத்துவிட முடியாது. அவர் மனம் கஷ்டப்படுமோ என்று நம் மனசு பதறும். அந்த அளவுக்கு அன்பாக, இதமாக, உரிமையாகத் தன் கோரிக்கையை நம்மிடம் வைப்பார்.
அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கி இமயம் அளவுக்கு உயர்வது ஒன்றும் சாதாரணமான விஷயம் கிடையாது. கதை, சினிமா, கற்பனைகளை மிஞ்சி சிலர் உயர்ந்து நிற்கும்போது, அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாடமாக அமைந்துவிடுகிறது. மோசமான சூழ்நிலைகள், பிரச்னைகள், தடைகளைத் தாண்டியே அனைவரும் சாதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமான விஷயம் என்கிற புரிதல் ஏற்பட்டு, வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் மலர்கின்றன. அப்படிப்பட்ட எழுத்தாளர்களை, எழுத்துகளைப் பற்றிப் பேசுவதுதான் `கதை சொல்லி'!
அப்படித்தான் தான் பணிபுரியும் காவேரி டி.வி-க்காக என் பேட்டி வேண்டுமென்று கேட்டார். நேரம் ஒதுக்கித் தந்தேன். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் என் வீட்டுக்குத் தன் குழுவினரோடு வந்து ஒலி-ஒளிப்பதிவு செய்துகொண்டு போனார்.
இப்படி அவர் சந்தித்து நடத்திய ஆளுமைகளின் உரையாடல்களைத் தொகுத்து ‘என் பெயர் கதைசொல்லி’ என்னும் தலைப்பில் 5 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். அட, அட்டைப்படத்தில் நானும் இருக்கிறேனே!
அந்தப் புத்தகத்திலிருந்து என் பேட்டி, இங்கே உங்களுக்காக.
சிறுகதைகள், அன்றும் இன்றும்! - ரவிபிரகாஷ்
அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கி இமயம் அளவுக்கு உயர்வது ஒன்றும் சாதாரணமான விஷயம் கிடையாது. கதை, சினிமா, கற்பனைகளை மிஞ்சி சிலர் உயர்ந்து நிற்கும்போது, அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாடமாக அமைந்துவிடுகிறது. மோசமான சூழ்நிலைகள், பிரச்னைகள், தடைகளைத் தாண்டியே அனைவரும் சாதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமான விஷயம் என்கிற புரிதல் ஏற்பட்டு, வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் மலர்கின்றன. அப்படிப்பட்ட எழுத்தாளர்களை, எழுத்துகளைப் பற்றிப் பேசுவதுதான் `கதை சொல்லி'!
ஒருகாலத்தில் கதைகள்தான் இலக்கியங்களை வளர்த்தெடுத்தன; வாசிப்பைப் பரவலாக்கின. இப்படி, இலக்கியத்தை வளர்த்த சிறுகதைகளில்கூட பல ரகங்கள் இருக்கின்றன. சிறுகதைகள் என்று தொடங்கி, தொடர்கதைகள் என்று விரிந்து, தற்போது ஒரு பக்கக் கதைகள், 10 செகண்ட் கதைகள் என்று பரிணாமம் பெற்றிருக்கிறது. சாதாரண ஒரு கதைக்குள் இந்தப் பிரிவுகள் மட்டுமல்லாமல், இன்னும் சில உட்பிரிவுகள் வேறு இருக்கின்றன. இப்படிச் சிறுகதைகளுக்குள் கிளைகளைத் தேடிய பயணத்தில், நிகழ்ந்த சந்திப்பு இது.
சமகாலச் சிறுகதைகளின் முன்னோடி, மூன்று தலைமுறைகளைக் கண்ட எழுத்தாளர், 90 வருட விகடன் புத்தகங்களில் ஒன்றுவிடாமல் வாசித்த வெகுசிலரில் முதன்மையானவர். எழுத்துலக ஜாம்பவானாக வலம்வந்த சாவி, கல்கி, அசோக மித்திரன், சுஜாதா என அனைத்து மூத்த எழுத்தாளர்களிடமும் நெருங்கிப் பழகி, பணியாற்றிய எளிமையான மனிதர், எழுத்தாளர், நவரசங்கள் கலந்த மூத்த பத்திரிகையாளர் என்ற பன்முகம்கொண்ட ரவிபிரகாஷ், தனது பத்திரிகை உலக அனுபவத்தில் சிறுகதைகளைக் கையாண்ட விதம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்.
*****
``மூன்று தலைமுறைகளைக் கண்ட எழுத்தாளர் நீங்கள்... அந்த அனுபவம் எப்படி இருக்கு?''
``இந்த வெள்ளைத் தாடியைப் பார்த்ததும், மூன்று தலைமுறைகளைக் கண்ட எழுத்தாளர் என்று சொல்றீங்களா?!'' என்று கலகலப்பாகவே பேசத் தொடங்கினார் ரவிபிரகாஷ்.
``மேன்மையான எழுத்தாளர்கள் எல்லோருடையபண்பும், பழகுகிற பாங்கும் ஒன்றாகத்தான் இருக்கும். அவர்களுடைய எழுத்துகளில் நேர்மை இருக்கும்; பழகும்விதத்தில் தன்மை
இருக்கும்; அடுத்தவருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். இந்த மாதிரியான விஷயங்கள் அனைத்தும், மூன்று தலைமுறை எழுத்தாளர்களிடமும் இருக்கின்றன.”
``உங்களுடைய எழுத்துகளும் எண்ணங்களும் சிறுகதைப் பக்கம் திரும்பிய பிறகு, நீங்கள் முதன்முதலாக எழுதிய சிறுகதை எது?”
``1978-ம் ஆண்டுதான் நான் சிறுகதை எழுத ஆரம்பித்தேன். `கரிநாக்கு' என்றொரு கதை எழுதினேன். என் அப்பாதான் அதில் முக்கியக் கதாபாத்திரம். அவர் ஒரு தீர்க்கதரிசியாகவே ஒருசில விஷயங்களைக்கூறுவார். அவர் கூறிய ஒவ்வொரு விஷயமும் பலிக்கும்; அப்படியே நடக்கும். கிராமத்தில் நாங்கள் வசித்த குடிசை வீட்டில், கடவுள் படத்துக்கு முன்பாக ஏற்றப்பட்ட விளக்குத் திரியை இரவு ஞாபகமாக அணைத்துவிட்டுப் படுக்கும்படி அம்மாவிடம் சொல்வார். `எலி வந்து அந்தத் திரியை நெருப்புடன் இழுத்துச் சென்று வீட்டின் கூரை மேல் போட்டுவிடும்; கூரை பற்றிக்கொள்ளும்' என்பார். இது ஏதோ சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் கொஞ்சம் மிகையாகக் கற்பனை செய்து கூறுகிற மாதிரிதான் மற்றவர்களுக்குத் தோன்றும். ஆனால், அப்பா சொன்னது ஒரு நாள் உண்மையாகவே நடந்தது. எலி, விளக்குத் திரியை நெருப்புடன் எடுத்துச் சென்று கூரை மேல் போட்டுவிட்டது. எங்கள் வீட்டுக் கூரை பற்றி எறிந்தது. ‘அப்பாவுக்குக் கரிநாக்கு. அதுதான் பலித்துவிட்டது’ என்றார்கள் அக்கம்பக்கத்தார். அப்பா சொன்னதில் இருந்த தீர்க்க சிந்தனையைப் புரிந்துகொள்ளவில்லை. நான் இந்த விஷயத்தைதான் என் ‘கரிநாக்கு’ கதைக்குள் மையப் பொருளாக வைத்தேன். இந்தக் கதை, என் முதல் சிறுகதை ‘கல்கி’ வார இதழில் வெளியாயிற்று. அதன்பின் என் சிறுகதைகள் ஆனந்தவிகடன், தினமணி கதிர், குங்குமம், சாவி எனப் பல பத்திரிகைகளில் வந்தன. அதன்பின், எனக்குப் பத்திரிகைகளில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், பத்திரிகை அலுவலகத்தில் என்ன மாதிரியான வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்கிற ஐடியாவே எனக்கு இல்லை. அனுபவமே இல்லை.
1987-ம் ஆண்டில், புஷ்பா தங்கதுரை மூலமாக `சாவி' நாளிதழில் பெரியவர் சாவியிடம் நேரடியாகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் எனக்கு நிறைய கதைகள் எழுத வேண்டும் என்றொரு வேகம் வந்தது. அதை ஆசை என்று சொல்வதைவிட கட்டாயம் என்று சொல்லலாம். தொடர்ந்து ஏழு வருடங்கள் அங்கே, அநேகமாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எனத் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினேன். இப்படி ஏறத்தாழ 250 சிறுகதைகள் எழுதியிருப்பேன். தொடர்ந்து என் பெயரிலேயே எழுதினால், வாசகர்களுக்கு அலுத்துப் போகுமென்று, ராஜ்திலக், உஷாபாலு, என்னார், நரசு, சீதாநரசிம்மன் என என் உறவினர்கள் பலரின் பெயரிலேயும், ஜெய்குமாரி, ராஜாமகள், உஷாநந்தினி, ஷைலு எனப் பல புனைபெயர்களிலேயும் அந்தக் கதைகளை எழுதினேன்.”
``சிறுகதைகள் எனத் தொடங்கி, தொடர்கதைகள் என்று விரிந்து, தற்போது ஒரு பக்கக் கதைகள், 10 செகண்ட் கதைகள் எனச் சுருங்கிவிட்டதே... இதுதான் கதைகளின் பரிணாம வளர்ச்சியா?''
``பரிணாம வளர்ச்சி என்று பார்க்காதீர்கள். இது பரிணாமம் கிடையாது; சிறுகதைகளின் பரிமாணம். பரிணாமம் என்றால் வளர்ச்சி. பரிமாணம் என்றால் dimension. இதை அப்படித்தான் பார்க்க வேண்டும். ஆரம்ப காலத்தில் ஆனந்த விகடனில் போஸ்ட்கார்டு கதைகள் என்று வந்தது. கிராமத்தில் ஒரு வாசகனுக்குத் தபால் அட்டைதான் கிடைக்கும்; அவனால் பக்கம் பக்கமாக எழுத முடியாது. ஓர் உரையில் தபால் தலையை ஒட்டி அவனால் அனுப்ப முடியாது. அதனால், `தபால் அட்டையில் உன்னால் கதை எழுத முடியுமா?' என்று கேட்டார்கள். `வீட்டு முகவரி எழுதத் தேவைப்படும் அரை பக்கத்தை விட்டுவிட்டு ஒன்றரைப் பக்கத்தில் ஒரு சிறந்த கதையை எழுத முடியுமா?'என்றார்கள். அன்றைய காலகட்டத்தில் அன்றைய சின்ன சைஸ் ஆனந்த விகடனில் ஒரு ‘காலம்’ அளவில் அந்தக் கதைகள் வெளியாகும். நான் `சாவி'பத்திரிகையில் இருந்தபோது மின்னல் கதைகள், ஹைகூ கதைகள் என்றெல்லாம் குட்டிக் குட்டிக் கதைகளைப் பிரசுரித்தேன். மின்னல் மின்னி மறையும் நேரத்தில் அதைப் படித்துவிட முடியும் என்பதைக் குறிக்கும் விதமாக அந்தப் பெயரைவைத்தேன். அதனுடைய மறுவடிவம்தான், பத்து செகண்டு கதைகள். இது சிறுகதைகளின் ஒரு பரிமாணம். தாராளமாக இதை வரவேற்கலாம்.
`சாப்பிட்டியாப்பா?’ என்று கேட்பது அம்மாவின் அன்பு; ‘பையன் சாப்பிட்டானா?’ என்று அம்மாவை அதட்டுகிற குரலில் ஒளிந்திருக்கிறது அப்பாவின் அன்பு. - இது ஃபேஸ்புக்கில் நான் படித்த ஒரு ஸ்டேட்டஸ். இதில் ஒளிந்திருக்கிறது ஒரு சிறுகதை. இதை எப்படி மறுக்க முடியும்? எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்? ஆகவே, இது வளர்ச்சிதான்.”
``எழுத்துலகின் ஜாம்பவானாக இருந்த சாவி அவர்களிடம் ஏழு வருடங்களுக்கும் அதிகமாகப் பணியாற்றிய அனுபவம் உங்களுக்கு உண்டு. அவரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!''
``நீங்கள் அதற்கு ஒரு மெகா சீரியல்தான் எடுக்க வேண்டும்” என்று கிண்டலடிக்கிறார். பின்பு சிரித்துகொண்டே, ``எட்டு வருடங்கள் சாவி என்னும் இமயத்துடன் நான் நேரடித் தொடர்பில் இருந்ததால், எல்லா பெரிய ஆளுமைகளோடும் நானே நேரடியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் (ஜர்னலிசம்) ஊடகத் துறை தொடர்பான படிப்பு எதையும் படித்தது கிடையாது. நான் படித்ததெல்லாம் சாவி என்கிற ஒரு ஜாம்பவானைத்தான். அவர் தனியாக உட்கார்ந்து எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்ததில்லை. அவர் என்ன செய்கிறாரோ, அதை நான் கூர்ந்து கவனிப்பேன். அதையே எனக்கான பாடமாக எடுத்துக்கொண்டேன். அவர் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கக்கூடியவர். காலையில் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டு, இரவு ஃப்ளைட்டில் திரும்பிவிடுவார். திரும்பி வந்த பிறகு, இரவு 11 மணி அல்லது 12 மணிக்கு விமான நிலையத்திலிருந்து காரில் வருபவர் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்காமல், நேராக அலுவலகத்துக்கு வந்து, `எத்தனை ஃபாரம் முடிந்திருக்கிறது? முடித்த வரைக்கும் பார்க்கலாமா?' என்று கேட்டு, எதிரே உட்கார்ந்துகொள்வார். அதுதான் சாவி சார்! வேலை என வந்துவிட்டால், அசதியை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார். சில நேரங்களில் விடியற்காலை 3 மணிக்கு ஃபாரம் முடிப்போம். பெட்ரூமில் அவர் தலைமாட்டில் இருக்கும் தொலைபேசிக்கு ‘கால்’ போட்டு, அவரை எழுப்பி, ‘ஃபாரம் ரெடியா இருக்கு, சார்! வந்து பார்க்கறீங்களா?’ என்று கேட்டிருக்கிறேன். ஒருதடவையாவது அவர் சலித்துக்கொண்டதில்லை.”
``எழுத்தாளர் சாவி, ஒருமுறை அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். ஆனால், அந்தக் கைதுக்கு நீங்கள்தான் கரணமாக இருந்ததாக ஒரு தகவல். ஆனால், அதுகுறித்து உங்களிடம் சாவி சார் `ஏன்... எதற்கு?' என்று ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை என்றும் கேள்விப்பட்டோம். அது உண்மையா? அந்தத் தருணங்கள் பற்றி?''
சிரித்துக்கொண்டே நம்மிடம் எதிர்க் கேள்வியைக் கேட்கிறார் ரவிபிரகாஷ்... ``ஏதேது... சாவி சாரே தூக்கிப் போடாத பழியை நீங்கள் என் மீது சுமத்துறீங்களே?” என்று அன்பாகக் கடிந்துகொள்கிறார்.
``ஒருமுறை சாவி சார் முழுப் பொறுப்பையும் என்னிடம் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். நான் அப்போது இளைஞன்; பத்திரிகையில் எது போடலாம், எது போடக்கூடாது என்பதெல்லாம் தெரியாது. நகைச்சுவை என்று ரசித்து ஒரு ஜோக்கை சாவி அட்டையில் வெளியிட்டுவிட்டேன். மகளிர் அமைப்பு கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். அலுவலகத்துக்கு முன் வந்து கலாட்டா செய்தார்கள். தமிழ்நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் எல்லாம் அந்த வார சாவி இதழை கிழித்துப் போட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த நேரம் பார்த்துதான் அமெரிக்காவிலிருந்து சாவி சார் திரும்பி வருகிறார். இந்த விஷயம், விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போதே அவருக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அவர் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. அன்று மாலை 4 மணி அளவில், சாவி சார் வீட்டின் முன்பு பெரும்திரளாகக்கூடி, `ஆபாச நகைச்சுவைத் துணுக்கை அட்டைப்படமாகப் போட்டதற்கு சாவி சார் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினார்கள். `அவர் பெரிய குரு. அவரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்களே! நான்தானே மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டேன். `என்ன தண்டனையாக இருந்தாலும், எனக்குக் கொடுக்கட்டும். மரியாதைக்குரிய ஒரு பெரிய பத்திரிகையாளரை இப்படிச் சொல்கிறார்களே' என்று எனக்கு மிகவும் வருத்தம். என்னால் அவருக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு என்னை நானே நொந்துகொண்டேன். ஆனால், சாவி சார் வெளியே வந்து கைகளைக் கூப்பி, `அது ஒரு நகைச்சுவை. நகைச்சுவையை நகைச்சுவையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களை இழிவுபடுத்துவதற்காக இது பிரசுரிக்கப்படவில்லை. அப்படி ஏதாவது உங்கள் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்' என்று கூறினார். உடனே, அவர்கள் அனைவரும் கலைந்துபோய்விட்டார்கள். ஆனால், அவர்கள் ஏற்கெனவே காவல் துறையில் இதுகுறித்துப் புகார் செய்திருந்ததால், என்னையும், சாவி சார் மற்றும் அச்சடிப்பவர் என எங்கள் மூவரையும் சனிக்கிழமை மாலையில் போலீஸ் கைது செய்தது.
அண்ணாநகர் காவல்நிலையத்தில் மேல் மாடியில் இருட்டு அறை ஒன்றில் எங்களை அடைத்துவிட்டனர். சோறு, தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை. நேரம் ஆக ஆக, சாவி சாரைப் பார்க்க கலைஞர் மு. கருணாநிதியே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார். அவரை அனுமதிக்க மறுத்தார்கள். ’முடிஞ்சா என்னையும் கைது பண்ணிக்கோ’ என்று அவர் சண்டை போட்ட பிறகுதான், அவசர அவசரமாக நாங்கள் அடைபட்டிருந்த அறையில் லைட் போட்டார்கள். நாங்கள் உட்கார நாற்காலிபோட்டார்கள். இவற்றையெல்லாம் எப்படி மறக்க முடியும்? எவ்வளவு பெரிய சம்பவம்... ஆனால், கடைசி வரைக்கும் சாவி சார் இதற்காக என்னைக் கடிந்துகொண்டதே இல்லை.”
``பத்திரிகையுலக ஜாம்பவான் சாவி, எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா மற்றும் அசோக மித்திரன், புஷ்பாதங்கதுரை, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா என மூத்த எழுத்தாளர்களுடன் பழகிப் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி?''
``அசோக மித்திரனுடைய நாவல்களில் மெலிதான நகைச்சுவை இருக்கும். நகைச்சுவை என்று வலிந்து திணிக்க மாட்டார். யதார்த்த வாழ்க்கையை அழகாகக் கூறியிருப்பார். புஷ்பா தங்கதுரையாக கிரைம், கிளுகிளு எனக் கலந்துகட்டி அடிப்பவர், ஸ்ரீவேணுகோபாலனாக ஆன்மிகம் எழுதுவார். இரண்டையும் படிப்பவர்களுக்கு அந்த இரண்டு விதமான எழுத்துக்கும் சொந்தக்காரர் ஒருவரேதான் என்று நம்பவே முடியாது. ராஜேஷ்குமார் என்னும் ராக்கெட் என்றுதான் சொல்வேன். எடுத்த எடுப்பில் ஜெட் வேகத்தில் பறக்கும் கதையம்சம் அவருக்கு மட்டுமே சாத்தியம். ரசனையான வரிகளுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர் பட்டுக்கோட்டை பிரபாகர். கொடூர வில்லன்கள் காமெடியாகப் பேசி பிளாக்மெயில் செய்வதை அவர் எழுத்தில்தான் முதன்முறையாகப் படித்து ரசித்தேன். சுபா (சுரேஷ்-பாலா) இரட்டையர்கள், புஷ்பா தங்கதுரைக்குப் பிறகு கிரைம், ஆன்மிகம் இரண்டையும் அதனதன் அழகோடு சரளமாக எழுதும் ஆற்றல் படைத்தவர்கள். குணச்சித்திரக் கதை ஒன்று வேண்டும் என்று கேட்டால், அதுவும் எழுதுவார். சகலவிதமாகப் புகுந்து விளையாடுவார்கள்.
ஒவ்வொரு எழுத்தாளரும் அவரவர்களுக்கான உயரத்தில், மதிப்போடு இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தனிப்பட்ட முறையில் பந்தா இல்லாமல் பழகும் தன்மை கொண்டவர்கள். பந்தாவோ தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டமோ இல்லாதவர்கள். அதைத்தான் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.”
``90 வருட ஆனந்த விகடன் புத்தகத்தை முழுவதுமாகப் படித்த வெகு சிலரில் நீங்களும் ஒருவர். அந்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது?''
``நீங்கள் குறிப்பிடுகிற அந்த வெகு சிலர் விகடனின் மிக சீனியர் வாசகர்களாக, 80, 90 வயதுகளில் இருக்கலாம். என் வயதில் இருப்பவர்களுக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. 90 வருட ஆனந்த விகடனைப் படித்தது, எனக்குத் தெரிந்து இன்றைக்கு நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும். இதை நான் பெருமையாகவும் கொஞ்சம் கர்வமாகவும் சொல்லிக்கொள்கிறேன். ஆனந்த விகடனின் சைஸை பெரிதாக்க விரும்பியது நிர்வாகம். வடிவமைப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு அது.
சீனியர் வாசகர்களுக்கு இந்த சைஸ் மாற்றம் ஏற்புடையதாக இருக்குமா என்று எங்களுக்குச் சந்தேகமாக இருந்தது. அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தோம். எனவே, அவர்களுக்கென்று பிரத்யேகமாக`விகடன் பொக்கிஷம்' என்ற பெயரில் பழைய ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து கதைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து, தனியாக ஒரு சிறிய புத்தகமாக, இணைப்பிதழாகக் கொடுக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. அந்த இணைப்பிதழைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. அதற்காகவே நான் பழைய 90 வருட ஆனந்த விகடன் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். பிரமிப்பின் உச்சிக்கே போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய புதையலே கிடைத்தது மாதிரியான ஒரு குதூகலத்துக்கு ஆளானேன்.
’புதிய தொடர்கதை’ என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டு, `4-ம் நம்பர் வீடு' என்று ஆனந்த விகடனில் ஒரு கதை வந்தது. அதை எழுதியவர் யார் என்ற பெயர் விவரமே இல்லை. ’அத்தியாயம் 1' என்று அந்தக் கதை ஆரம்பிக்கும். கதையில் ஒரு தெரு இருக்கிறது. அதில் a b c d e என்ற வரிசையில் ஐந்து வீடுகள் மட்டும்தான் இருக்கின்றன. இந்தக் கோடியிலிருந்து பார்த்தாலும் c என்பது நடு வீடாக இருக்கிறது. அந்தக் கோடியிலிருந்து பார்த்தாலும் c என்பது நடு வீடாக இருக்கிறது. இப்படி ஆரம்பித்து, நடு வீட்டில் யார் இருந்தார்கள், பக்கத்து வீட்டில் யார் இருந்தார்கள், இரவு 12 மணிக்கு என்ன நடந்தது, சமையல்காரன் எங்கு படுத்துத் தூங்குவான், வீட்டின் முதலாளி எங்கு படுத்துத் தூங்குவார், இரவு ஹார்லிக்ஸ் சாப்பிடுவாரா அல்லது வேறென்ன சாப்பிடுவார், அலாரம் வேலைசெய்ததா, இல்லையா... இப்படி எல்லா தகவல்களையும் ஒரு கிரைம் கதைக்கே உரிய த்ரில்லோடும் திகிலோடும் வர்ணித்திருப்பார்கள்.
தெருவில் ஒருவன் நடந்து செல்கின்றான். மாடி வீட்டில் வெளிச்சம் இருக்கிறது. ஆனால், அந்த வெளிச்சம் இவருக்குத் தெரியாது . ஏனென்றால், கதவு பூட்டி இருக்கிறது. இவர் கத்தினால்கூடப் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கேட்காது; அவ்வளவு தொலைவு. இப்படியெல்லாம் வர்ணிக்கப்படும்.
கடைசியாக, அவன் யாரோ வழிப்போக்கன், போய்விட்டான். அவன் திருடனோ, கொள்ளைக்காரனோ இல்லை. பூனையோ ஏதோ ஒன்று குதித்து ஓடிவிட்டது. கடைசியாக சமையல்காரி முதலாளிக்கு ஏதோ உணவு கொண்டுவந்து கொடுத்தாளே, அதில் விஷம் கிஷம் எதுவும் கலக்கவில்லை. அதனால், அந்த முதலாளி ஒன்றும் சாகவில்லை. இப்படி ஒவ்வொரு விஷயமாகச் சொல்லி, முத்தாய்ப்பாக, ‘இப்படி எந்தவிதமான மர்மங்களோ, திருப்பங்களோ நடக்காமல் வழக்கம்போல் ஒரு சாதாரண இரவாக இது முடிந்துவிட்டதால், இது தொடர்கதையாக நீள்வதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. எனவே, வேறு வழியின்றி இந்தத் தொடர் இந்த முதல் அத்தியாயத்துடன் முற்றுப் பெறுகிறது’ என்று அந்தக் கதை முடிந்திருக்கும். ஆக, அது ஒரு சிறுகதை. ஒரு ‘கிம்மிக்’ கதை. படித்ததும் நான் பிரமித்துப்போனேன். 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு என்ன மாதிரியான ஒரு அபார கற்பனை பாருங்கள்! மகா அற்புதமான சிற்பங்களை வடித்த சிற்பியின் பெயர்கள் தெரியாமல் போனது மாதிரி, இந்த அற்புதமான கற்பனை வளம் மிக்க சிறுகதையை எழுதியவர் யார் என்றும் தெரியவில்லை. பெயர் தெரியாத அந்த எழுத்தாளர் மிகப் பெரிய எழுத்தாளர்தான். நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்தான்” என்று தன்னையும் மறந்து, வியந்து பாராட்டுகிறார் ரவிபிரகாஷ்.
``ஏடாகூடக் கதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவர் நீங்கள். வார்த்தைகளை மாற்றிப் போட்டுக் கதைகள் எழுதுவதிலும் சரி, உயிர் எழுத்துகள் இல்லாமல் கதைகள் எழுதுவதிலும் சரி, தமிழ்நாட்டிலேயே எனக்குத் தெரிந்து இப்படி எழுதக்கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டும்தான். இந்த வித்தை எப்படி உங்களுக்குச் சாத்தியமாயிற்று?''
``ஒருமுறை, சும்மா தமாஷாக ஒரு கதை எழுதினேன். அந்தக் கதையை அப்படியே வாசித்தால் ஒருவிதமாகவும், ஒரு வரி விட்டு ஒரு வரி வாசித்தால் வேறு விதமாகவும் இருக்கும். அதில் ஒரு ஜோடி, காதலிப்பார்கள். இரு வீட்டாரும் கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டார்கள். காதலன் , `நாம் பெங்களூர் சென்று திருமணம் செய்துகொள்ளலாம்' என்று கூறுவான். அதற்கு அவள், `பெற்றோர்தான் முக்கியம். எனக்கு இதில் விருப்பமில்லை' என்று கடிதத்தில் எழுதுவாள். அவளுடைய அப்பா பார்த்த பிறகுதான் அந்தக் கடிதம் அவளது காதலனிடம் போய்ச்சேரும் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவள் அவ்வாறு எழுதியிருப்பாள். காதலனுக்கு அவள் எப்படி எழுதியிருப்பாள் என்பது தெரியும். எனவே, ஒரு வரி விட்டு ஒரு வரி படிப்பான். அப்படிப் படிக்கும்போது, `நான் இத்தனை மணிக்கு நிற்கிறேன். நீ வந்துவிடு, நாம் சென்றுவிடலாம்' என்று எழுதியிருப்பாள். அதே மாதிரி அவர்கள் ஓடிப் போய்விடுவார்கள்.
அதன்பின், உயிரெழுத்தே இல்லாமல் ஒரு கதை எழுதினேன். அந்தக் கதையில் அ முதல் ஔ வரையிலான எழுத்துகளே இருக்காது. அதாவது, அந்த எழுத்துகள் கொண்ட வார்த்தைகளே இல்லாமல் அந்தக் கதையை எழுதியிருப்பேன். ‘ இந்தக் கதையில் ஜீவனே இல்லை என்று நினைக்கிறீர்களா? ஆம், ஜீவனே இல்லை. அதாவது, உயிர் எழுத்துகளே இல்லை’ என்று கதையின் இறுதியில் குறிப்பு கொடுத்திருப்பேன். அதன் பிறகு, ஒரே வாக்கியத்தில் ஒரு கதை எழுதினேன். அந்த ஒரு வாக்கியம் மிக நீளமான வாக்கியம். ஆனந்த விகடனில் மூன்று பக்கங்களுக்கு நீண்ட சிறுகதை அது. ஆரம்பத்தில் தொடங்கி, மூன்றாம் பக்கத்தில்தான் அந்த வாக்கியம் முற்றுப்புள்ளியோடு முடியும். அப்படி ஒரே வாக்கியச் சிறுகதை எழுதினேன்.
கதை நெடுக ஒரு குறிப்பிட்ட வார்த்தையில் ஒரே ஒரு எழுத்தை மட்டும் தவறாகவே தொடர்ந்து கம்போஸ் செய்ததால், கதையே வேறு மாதிரி வித்தியாசப்பட்டுப் போன சிறுகதை ஒன்று எழுதினேன். கடைசியில் இந்த எழுத்து மாறின விஷயத்தைச் சொல்லி, ‘இப்போது திருத்திப் படியுங்கள்’ என்று குறிப்பு கொடுத்திருப்பேன். அப்படிப் படித்தால், கதை வேறு ஒரு விதமாக மாறும். கதை எழுதுகிறோம். இந்தக் கதைகளில் நான் செய்தது ஒருவகையான விளையாட்டு. அவ்வளவுதான். அது ஒரு கிம்மிக் வித்தை. நான் என்னைப் பிரமாத சிறுகதை எழுத்தாளன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள மாட்டேன். என்னுடய கதைகளில் பெரிய உபதேசமோ, சமூக பிரக்ஞையோ, சமுதாயத்தைப் புரட்டிப் போடும் மெஸேஜோ இருக்காது. என் கதைகள் எல்லாம் ஜாலியாகப் படித்துவிட்டுத் தூக்கிப்போடும் கதைகள்தான்.” என்கிறார் தன்னடக்கத்துடன்.
``அந்தக் கால எழுத்தாளர்களுக்கும் சமீபகால எழுத்தாளர்களுக்குமான வித்தியாசம் என்றால், எதைச் சொல்வீங்க? அதே மாதிரி, அந்தக் காலச் சிறந்த எழுத்தாளர்கள் ஒரு பெரிய பட்டியலே பரவலாக எல்லாருக்கும் தெரியும். ஆனால், இந்தக் கால சிறந்த எழுத்தாளர்கள்னா நீங்கள் யாரை முன்மொழிவீர்கள்?''
“அன்றைய காலகட்டத்துக்குரிய பிரச்னைகளை அன்றைய எழுத்தாளர்கள் எழுதினார்கள். இன்று சாராயம் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருக்கிறதோ, அதேபோன்று அந்தக் காலகட்டத்தில் லாட்டரி சீட்டு மக்களைப் படுகுழியில் தள்ளிக்கொண்டிருந்த்து. அது மக்களை எப்படி பாதித்தது, ஏழ்மை ஆக்கியது என்பதைத் தங்கள் கதைகளில் எழுதினார்கள். ஜெயகாந்தனின் ‘என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ சிறுகதை லாட்டரிச் சீட்டின் பாதிப்பைச் சொல்வதுதான். இன்றைய எழுத்தாளர்கள் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் அநியாயங்களான ஆணவக்கொலைகள் பற்றியும், ஆட்சியாளர்களின் தவறான ஆட்சியைப் பற்றியும், தேர்தலில் வாக்காளன் எப்படியெல்லாம் முட்டாளாக்கப்படுகிறான் என்பதைப் பற்றியும் எழுதுகிறார்கள். அநேகமாக எல்லாருக்குமே சரளமான நடை கைவந்திருக்கிறது. ஆனால், எனக்கு என்ன ஒரு வருத்தம் என்றால்... அன்றைக்கு டி.எம்.எஸ் என்றால் அவருக்கென்று பிரத்யேகமான ஒரு குரல், ஒரு பாணி இருக்கும். சீர்காழி கோவிந்தராஜன் என்றால், அவருக்கென்று ஒரு தனித்துவமான கணீர்க் குரல் இருக்கும். பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி. கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி என அந்தக் காலப் பாடகர்கள் எவரின் குரலைக் கேட்டாலும் இன்னார் என்று பளிச்செனத் தெரிந்து, ரசிக்க முடியும்.
சாவி எப்படி எழுதுவார் என்று எனக்குத் தெரியும். கண்ணதாசன் எப்படி எழுதுவார் என்றும் எனக்குத் தெரியும். சுஜாதாவின் எழுத்துகள் எப்படி இருக்கும் என்று எல்லோருக்குமே தெரியும். அன்றைய காலகட்டத்தில் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான ஒரு பாணி இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் எல்லோருமே நன்றாக எழுதுகிறார்களே தவிர, எல்லோருமே ஒரே மாதிரி எழுதுகிறார்கள். தங்களுக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொள்ளவில்லை.
இன்றைய எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் என்றால் பாஸ்கர் சக்தி, தமிழ்மகன், ராஜுமுருகன், க.சீ.சிவகுமார்... பாவம், இவர் மிக இளம்வயதிலேயே இறந்துவிட்டார். என் இனிய நண்பர். அவரது எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல, ஜி.ஆர். சுரேந்திர நாத், சங்கர் பாபு போன்ற இன்றைய தலைமுறையினர் பலரும் மிகவும் சிறப்பாக எழுதுகிறார்கள். அவர்களுக்கான பிரத்யேக பாணி இல்லை என்பது ஒன்றுதான் என் வருத்தம்!” - ஆரம்பம் முதலே கலகலப்பாகப் பேசிவந்த ரவிபிரகாஷ், முத்தாய்ப்பாகத் தனது ஆதங்கத்தையும் பதிவு செய்துவிட்டு, விடைபெற்றார்.
பல எழுத்தாளர்களிடம் உரையாடிய அனுபவமும், நெருங்கிய நண்பர் ஒருவரிடம் மனம்விட்டுப் பேசிய அனுபவமும் ஒருசேரக் கிடைத்தது.
0 comments:
Post a Comment