சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோவில் ஒருநாள்..!
இன்னின்னிக்கு இந்த இந்த இடங்களைப் பார்க்க வேண்டும்
என்று சென்னையிலிருந்து கிளம்பும்போதே பக்காவாக பிளான் பண்ணியிருந்தோம். அந்த
வகையில் கடைசி மூன்று நாட்களும் சிங்கப்பூரில் சுரேஷ் தம்பதியின் இல்லத்தில்
தங்கி, யுனிவர்சல் ஸ்டூடியோஸ் ஒருநாள், செண்டோஸா பார்க் ஒருநாள், கடைசி நாளன்று
மெரினா பே ஸ்கைபார்க் ஹோட்டல், மெர்லியன் பார்க், ஃப்ளையர் போன்றவற்றைப்
பார்க்கலாம் என்று தீர்மானித்திருந்தோம்.
மலேசியாவில் சரியாக 9 மணிக்கு எங்கள் பஸ் கிளம்பியது.
களைத்திருந்ததால், பஸ் கிளம்பிய ஒரு மணி நேரத்துக்குள் அனைவருக்கும் நல்ல தூக்கம்.
விடியற்காலை இரண்டரை மணி சுமாருக்கு எழுப்பப்பட்டோம். சிங்கப்பூருக்குள்
நுழைவதற்கான விசா செக்கிங். மீண்டும் எங்கள் பெட்டி படுக்கைகளை இறக்கி, வரிசையில்
நின்று, பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை அதிகாரிகளிடம் காண்பித்து, தூக்கக்
கலக்கத்தோடு செக்கிங் முடித்து, மீண்டும் பஸ்ஸில் ஏறி, சிங்கப்பூரில் ஏறிய
இடத்துக்கே வந்து இறங்கியபோது மணி 3. அங்கிருந்து ஒரு கேப் பிடித்து, திரு.சுரேஷ்
அப்பார்ட்மென்ட்டுக்கு விடியற்காலை 3:30 மணிக்கு வந்து, அன் டயத்தில்
சிரமப்படுத்துகிறோமே என்கிற குற்ற உணர்ச்சியோடு காலிங்பெல் அடித்தோம். கொஞ்சம்கூட
அலுப்பில்லாமல் புன்சிரிப்போடு கதவைத் திறந்தார் ஜெயஸ்ரீ. “எல்லா
இடங்களும் நல்லா சுத்திப் பார்த்தீங்களா? பத்துமலை முருகன் கோயிலுக்கு ஏறிப்
போனீங்களா?” என்று அந்த நேரத்திலும் ஆர்வத்தோடு
விசாரித்தவர், எங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையைக் காண்பித்தார். போய்ப்
படுத்து, மீண்டும் எங்கள் உறக்கத்தைத் தொடர்ந்தோம்.
காலையில் 10 மணி சுமாருக்கு எங்களை எழுப்பினார் ஜெயஸ்ரீ.
ஒவ்வொருவராக எழுந்து பல் விளக்கி, சுடச்சுடக் காபி குடித்தோம். குளித்து முடித்து,
உடை மாற்றித் தயாராகி வருவதற்குள் டைனிங் டேபிளில் சாப்பாடு ரெடியாக இருந்தது. அது
மட்டுமல்ல, வெளியே நாங்கள் சாப்பிடுவதற்கு அலுமினிய ஃபாயிலில் ஸ்னாக்ஸும் பாக்கெட்
பாதாம் மில்க்கும்கூடத் தயாராக இருந்தது. அவர்கள் இல்லத்தில் இருந்த மூன்று
நாள்களும் எங்களுக்கு ராஜயோகம்தான். உணவுக்கும் உறைவிடத்துக்கும் வேண்டுமானால்
பணம் கொடுத்துவிடலாம்; ஆனால், சுரேஷ் தம்பதி எங்கள்மீது காட்டிய அக்கறைக்கும்
அன்புக்கும் பிரதிபலன் செய்யவே முடியாது. சென்னை திரும்பியதும் என் மகனும் மகளும்
சொன்னதுதான் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது.
“சிங்கப்பூர் டூர் முடிஞ்சு வந்தது வருத்தமாதான்
இருக்கு. ஒன்பது நாள் போனதே தெரியலே. ஆனா, அதைவிட அவங்களைவிட்டு (சுரேஷ் தம்பதி)
வந்ததுதான் ரொம்ப வருத்தமா இருக்கு” என்றான்
மகன். “ஆரஞ்சு
ரசம், அது இதுன்னு ஒவ்வொரு நாளைக்கும் விதம்விதமா சாப்பாடு பண்ணிப் போட்டாங்க.
ஒவ்வொண்ணும் அத்தனை டேஸ்ட்! சாப்பாட்டின் சுவைக்காக ஒரு பிடி கூடுதலா சாப்பிடத்
தோணுச்சுன்னா, ‘பொரியல் இன்னும் கொஞ்சம் போடட்டுமாம்மா?’ன்னு’அவங்க
கேட்கிற அன்புக்காகவே இன்னொரு பிடி சாப்பிடலாம்போல இருந்தது”
என்றாள் மகள். சமீபத்தில் ஜெயஸ்ரீ சென்னை வந்திருந்தபோது, என் மகனும் மகளும் அவர்
வீட்டுக்கு நேரில் சென்று பார்த்துப் பேசிவிட்டு வர மிகவும் ஆசைப்பட்டார்கள்.
அவருடைய புரொகிராம்களும் எங்களுடைய புரொகிராம்களும் வெவ்வேறு திசையில் இருந்ததால்,
ஜெயஸ்ரீயைச் சந்திக்க முடியாமல் போனதில் இருவருக்கும் ரொம்பவே வருத்தம்.
சரி, விஷயத்துக்கு வருவோம். அன்றைய தினம் நாங்கள்
திட்டமிட்டிருந்தது யுனிவர்சல் ஸ்டுடியோ விஜயம். மிகச் சமீபத்தில்தான், அதாவது
2010-ம் ஆண்டுதான் யுனிவர்சல் ஸ்டுடியோ திறக்கப்பட்டிருக்கிறது என்பது எங்களுக்குச்
சற்று வியப்பாக இருந்தது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தீம் பார்க் இது
என்கிறார்கள். (முதலாவது ஜப்பானில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோ.) டிக்கெட்
வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டால், ஜாலியாக ஒவ்வொரு ரைடாக ஏறி இறங்கிக்
கொண்டாடலாம். உள்ளே தனித்தனியாக டிக்கெட் வாங்கத் தேவையில்லை.
முன்பே தெரிந்ததுதான்... இது பிள்ளைகளுக்கான இடம்.
எங்களுக்கு இங்கே வேலையில்லை. சும்மா பராக்குப் பார்த்துக்கொண்டிருக்க
வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிட்டோம்.
என்றாலும், தலைசுற்ற வைக்காமல் சிம்பிளாக ஏதேனும் இருந்தால்
நாங்களும் செல்லலாம் என்று நினைத்தோம். முதலில், மடகாஸ்கர் ரைடு என்ற ஒன்றில்
ஏறினோம். சின்னச் சின்ன போட்டுகள். நாங்கள் நால்வரும் ஒரு போட்டில் ஏறிக்கொண்டோம்.
வளைந்து வளைந்து செல்லும் கால்வாய் வழியாக அது மிதந்து செல்கிறது. இரண்டு புறமும்
சுவர்களில் இடித்து இடித்துச் செல்கிறது. வழியெல்லாம் பிரமாண்டமான கார்ட்டூன்
உருவங்கள். அத்தனையும் மடகாஸ்கர் என்கிற அனிமேஷன் படத்தில் வரும் கார்ட்டூன்கள்.
வெறுமே கட் அவுட்டுகளாக இல்லாமல், அனைத்தும் நகர்கின்றன; தலையைத் திருப்புகின்றன;
உயரமான ஒட்டைச்சிவிங்கி எங்கள் போட் வரை குனிந்து எங்களை உற்றுப் பார்த்தது.
இந்தக் கரையிலிருந்து ஒரு குட்டிக் குரங்கு (கார்ட்டூன்தான்) விழுதைப்
பிடித்துக்கொண்டு அந்தக் கரைக்குத் தாவுகிறது. ஓரத்திலிருந்து ஒரு சிம்பன்ஸி
எங்கள்மீது தண்ணீரைத் துப்பியது. சவுண்டு எஃபெக்ட்ஸ் த்ரில் கூட்டுகிறது.
கரைகளில் கள்ளிப்பெட்டிகள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி
வைக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் போட் அந்த இடத்தைக் கடக்கும்போது அத்தனை பெரிய
பெட்டிகள் தடாலென்று சரிந்து எங்கள்மீது விழுந்துவிடும்போல் பயமுறுத்துகிறது.
கொஞ்சம் தூக்கிவாரித்தான் போடுகிறது. இதன் யூ-டியூப் லின்க்கைக் கீழே
கொடுத்துள்ளேன்.
அடுத்து, நாங்கள் சென்றது ஜுராசிக் பார்க் ரேப்பிட் ரைடு.
நீளமான க்யூ. எல்லோரும் கையில் கண்ணாடித் தாளிலான ரெயின்கோட் போல் வைத்திருந்தார்கள்.
அதைத் தனியாக ஓரிடத்தில் வாடகைக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாடகை ஒரு
டாலரோ, இரண்டு டாலரோ... ஞாபகமில்லை. இந்த ஜாலி ரைடு போகிறவர்கள் தெப்பமாக
நனைந்துபோவார்கள் என்பதால், தற்காப்புக்காக இந்த ரெயின்கோட்.
நனைந்துதான் பார்ப்போமே என்று நாங்கள் ரெயின்கோட் வாங்காமலே
சென்றோம். எங்களுக்கான போட்டில் ஏறி அமர்ந்தோம். ஒன்றன்பின் ஒன்றாக நகர
ஆரம்பித்தன. வளைந்து நெளிந்து கால்வாய் வழியே வேகமாக மிதந்து ஓடியது போட்.
வழியெல்லாம் மெகா சைஸ் டினோசர்கள்... காரே பூரே என்று உறுமிக்கொண்டிருந்தன.
ஓரங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள், சில்லென்று தெறிக்கும் தண்ணீர்த் திவாலைகள்,
திடும் திடுமெனப் பீறிட்டு அடிக்கும் ஃபவுண்டெய்ன்கள், கரையோரங்களில் கவிழ்ந்து
கிடக்கும் பழைய கால ஜீப், வேரோடு சாய்ந்த மரம் என செட்டப்புகள் அபாரம்!
‘ப்பூ... இவ்வளவுதானா...
இதற்கா ரெயின்கோட் போட்டுக்கொள்ளச் சொன்னார்கள்’ என்று
நினைத்துக் கொண்டிருக்கும்போதே, எங்கள் ரைடு க்ளைமாக்ஸை நெருங்கியது. தடதடவென்று
வழியை மறித்தாற்போல் நீர்வீழ்ச்சி ஒரு திரைபோல் கொட்டிக்கொண்டிருந்தது. ‘ஆஹா, தொப்பலாக நனையப்போகிறோம்’ என்று நினைத்து உடம்பைக் குறுக்கிக்கொள்ள,
நீர்த்திரையை எங்கள் போட் நெருங்கியதுமே சட்டென அந்த நீர்த்தாரை நின்றுபோனது. அந்த
இடத்தை எங்கள் போட் கடந்ததும், மீண்டும் ‘சோ’வெனக் கொட்டத் தொடங்கியது.
தொடர்ந்து, எங்கள் போட் ஓர் இருண்ட குகை வழியே பயணிக்கத்
தொடங்கியது. காரே பூரே சத்தங்கள் திகில் கூட்டின. ஓரங்களிலிருந்து குபீர் குபீரென
தீ ஜுவாலைகள் வீசின. சென்றுகொண்டிருந்த ஒரு போட் எங்கோ கதவு மீது முட்டி நின்றது.
கும்மிருட்டில், பெரிய உயரமான கோட்டைக் கதவுகள் போன்ற கதவுகள் திறக்க, எங்கள்
போட்டு மெதுவாக உள்ளே நுழைந்து நின்றது. திறந்த கதவுகள் மூடிக்கொண்டன.
யோசிப்பதற்குள் எங்கள் போட் விறுவிறுவென உயரே ஒரு முப்பதடி உயரத்துக்குத்
தூக்கப்பட்டது. அப்போதே வயிற்றில் புளி கரைந்தது. அடுத்த எதிர் கதவு திறக்க, உயரே
இருந்து எங்கள் போட் நீர்வீழ்ச்சியில் சரிந்து தடாலென்று கீழே விழுந்தது. ‘ஓ’ என்ற
அலறல், எங்கும் எதிரொலித்தது. தண்ணீர் வாரியடித்து எங்கள் அனைவரையும் முற்றாகக்
குளிப்பாட்டியது.
ஈரம் சொட்டச் சொட்ட வெளியேறினோம். வெளியே, ஈரத்தை
உலர்த்திக் கொள்வதற்காக ‘டிரையர் பாக்ஸ்’கள் இரண்டு இருந்தன. 2 டாலர் கட்டணம்
கொடுத்தால், பழைய கால பொதுத் தொலைபேசி பூத் போன்ற அதில் இருவர் உள்ளே ஏறி நின்று,
அனல்காற்று வாங்கலாம். நானும் என் மகனும் மட்டும் அப்படி எங்கள் உடைகளை உடம்போடு
காய வைத்துக்கொண்டோம்.
அதன்பின்பு, என் மகனும் மகளும் ரோலர் கோஸ்டர்களில் ஏறிச்
செல்ல விரும்பினார்கள். நாங்கள் அருகில் இருந்த வசதியான ஒரு மண்டபத்தில்
அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தோம்.
பேட்டில்ஸ்டார் கலாக்டிகா என்னும் இந்த ரைடில் இரண்டு வகை இருக்கிறது. ‘ஹ்யூமன்’ என்கிற
ரைடில் ரேஸ் கார் மாதிரி உட்கார்ந்து செல்லலாம். ’சைலோன்’ என்பது கூடுதல் த்ரில் தருவது. கொக்கியில்
தொங்கியபடி செல்ல வேண்டும்.
பார்க்கும்போதே தலைசுற்றுகிறது. ராட்சதத் தண்டவாளங்களில் படுவேகமாக
ஓடும் இவை வளைந்து, நெளிந்து, சரேலென்று மேலேறி, தடாலென்று சரிந்து கீழிறங்கி,
முறுக்கிக்கொண்டு திரும்பி... என ஒரு நிமிட நேரத்துக்குள் உச்சபட்ச த்ரில்லைக்
கூட்டுகின்றன. மகனும் மகளும் அடுத்தடுத்து இரண்டிலும் ஏறி இறங்கி, பரவசம்
குறையாமல் வந்தார்கள்.
பின்னர், அங்கிருந்த ஓர் அழகான குடையின்கீழ் அமர்ந்து,
கொண்டுவந்திருந்த ஸ்னாக்ஸை உண்டு முடித்து, சற்று ரெஸ்ட் எடுத்தோம். அருகிலேயே ‘ஏன்ஷியன் ஈஜிப்ட்’ உலகம் இருந்தது. ஒரு ஜீப்பில் ஏறிக்கொண்டோம்.
ஒற்றைத் தண்டவாளத்தின் வழிகாட்டலோடு அந்த ஜீப் இயந்திர இயக்கத்தில் ஓடுகிறது.
இருபக்கமும் சுவர்களில் பழைய எகிப்திய நகரம் போன்ற கட்டட அமைப்புகள், பழைய கால
வாகனங்கள், காட்டெருமைகள், ராட்சத வண்டுகள்... எங்கோ எதுவோ எரிந்து,
புகைந்துகொண்டிருந்தது. பழைமையை நினைவூட்டும் ஒரு ஜாலி ரைடு அது!
அதன்பின்பு, மகனும் மகளும் மட்டும் வேறு பல ரைடுகளில்
புகுந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தார்கள். நானும் என் மனைவியும் மட்டும் தனியாக
உள்ளே சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். ரோம் மற்றும் நியூயார்க் நகரத்
தெருக்கள் போன்று வீடுகள், கடைகளை எல்லாம் ஒவ்வோர் இடத்தில் வடிவமைத்திருந்தார்கள்.
அங்கெல்லாம் சென்று சுற்றிப் பார்த்தோம்.
மாலை 6 மணி. ஸ்டுடியோ நேரம் முடிந்தது. அனைவரையும்
வெளியேறச் சொல்லி அறிவித்தார்கள். ஒரு நீண்ட பாதை வழியாக வெளியேறினோம். படி
ஏறுவதற்கு எஸ்கலேட்டர் போன்று நீண்ட தூரம் நடப்பதற்கு டிராவலேட்டர் (நகரும்
நடைபாதை) அமைத்திருந்தார்கள். சென்னையிலும் அப்படி டிராவலேட்டர்கள் எங்கேனும்
இருக்கக்கூடும். ஆனால், அங்கேதான் முதன்முதலில் பார்த்தோம் என்பதால், புதுமையாக
இருந்தது. எஸ்கலேட்டரில் ஏறப் பயந்த என் மனைவி, டிராவலேட்டரில் அதையே ஒரு ஜாலி
ரைடு போல உற்சாகமாக அனுபவித்தார்.
யுனிவர்சல் ஸ்டுடியோவைவிட்டு வெளியேறி, கடலோரம் நடைபாதை நீண்டது.
கப்பல்கள் நின்றிருந்தன. வேடிக்கை பார்த்துக்கொண்டே சாலைக்கு வந்தோம். கால்டாக்ஸி
வரவழைத்தோம். வீடு திரும்பினோம்.
சினிமாக்களில் பார்த்ததுபோல், அகலமும் நீளமுமான சுரங்கப்
பாதையில் வழுக்கிக்கொண்டு காரில் பயணித்தது இனிமையான அனுபவம்.
“இங்கெல்லாம் புதுசாக ரோடு போடுகிற வேலைகள்,
சாலைப் பராமரிப்பு வேலைகள் எதுவும் நடைபெறுவதில்லையா?”
என்று டிரைவரைக் கேட்டேன்.
அவர் சொன்ன பதில் என்னை வியக்கவைத்தது.
(பயணம் தொடரும்)
மடகாஸ்கர் ரைடு: https://www.youtube.com/watch?v=jobIi5EQ3zc
0 comments:
Post a Comment