உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, January 03, 2016

என் புகுந்த வீடு - 3

இன்னொரு இன்டர்வியூ!

ப்ரல் 1. 

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் நுழைய ஆசைப்பட்ட அந்த பிரமாண்ட கோட்டைக்குள் ஒருவாறாக நுழைய அனுமதி கிடைத்து, எக்கச்சக்க ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் கனவுகளோடும் நான் சென்றபோது, எனக்கு முதலில் ஏமாற்றமே காத்திருந்தது.

ரிசப்ஷனிஸ்ட் நான் வந்த காரணம் பற்றி விசாரித்தார். இன்றுமுதல் விகடன் எடிட்டோரியலில் வேலையில் சேர்ந்திருப்பதாகச் சொன்னேன். அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் காட்டும்படி கேட்டார். “இன்னும் தரவில்லை. இன்றைக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்றேன். “சற்று அப்படி உட்காருங்கள்” என்று இருக்கையைக் காண்பித்தார். பின், இன்டர்காமில் யாருடனோ பேசினார். அதன்பின்பு ஒரு அட்டெண்டரை அழைத்து, என்னை திரு.வீயெஸ்வியிடம் அழைத்துப் போகச் சொன்னார்.

நானும் அவரோடு முதல் மாடியில் இருந்த வீயெஸ்வி சாரின் அறைக்குச் சென்றேன். “வாருங்கள் ரவிபிரகாஷ்!” என்று வரவேற்ற அவர், என்னை அதே தளத்தில் இருந்த வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார். ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களின் அறையைவிட மூன்று மடங்கு பெரிதான அறை அது.  ஹால் போன்றதொரு பிரமாண்ட அறை.

அங்கே நீளமும் அகலமுமான ஒரு பெரிய மேஜையின் பின்னால், சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் கார்ட்டூனிஸ்ட் மதன்.

“இவர் ரவிபிரகாஷ். சாவி பத்திரிகையில், சாவி சாரின் நேரடிப் பார்வையில் வொர்க் பண்ணினவர். இங்கே வேலைக்குச் சேர அப்ளிகேஷன் கொடுத்திருக்கார். நீங்க பார்த்துக்குங்கோ!” என்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு, வீயெஸ்வி அவர்கள் வெளியேறிவிட்டார்.

அதன்பின், மதன் சாருக்கும் எனக்குமான உரையாடல் தொடங்கியது.

“எத்தனை வருஷமா சாவியில வொர்க் பண்ணினீங்க ரவிபிரகாஷ்?” என்று மெலிதான புன்னகையோடு கேட்டார் மதன். 1987-லிருந்து பணி புரிந்ததைச் சொன்னேன்.

“சாவி ஏன் நின்னு போச்சு? என்ன பிரச்னை?” என்றார். நான் உள்பட ஏழெட்டு பேரை சாவி சார் பெங்களூர் அழைத்துச் சென்றதையும், அங்கே ஏற்பட்ட ஒரு குழப்பத்தால் சாவி சார் என் மீது கோபம் கொண்டதையும், அதன் காரணமாக அங்கேயே பத்திரிகையை மூடிவிட்டதாக அவர் அறிவித்ததையும் திரு.மதனிடம் சொன்னேன். புன்சிரித்தார்.

“சாவி ரொம்ப கோபக்காரரா?” என்று கேட்டார்.

“ரொம்பவே! ஒருத்தனிடம் திறமை இருக்குன்னு தெரிஞ்சா ஓஹோன்னு கொண்டாடுவார். மனம் திறந்து பாராட்டுவார். உயரே தூக்கி வைப்பார். அதுவே அவன் ஒரு சின்ன தப்பு பண்ணினாலும், கண்டபடி திட்டுவார். நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேப்பார்” என்றேன்.

“அவர் கோபக்காரர், கண்டபடி திட்டினார்ங்கிறதாலதான் நீங்க சாவியை விட்டு வெளியே வந்தீங்களா?” என்று கேட்டார் மதன்.


“ஏற்கெனவே இரண்டு முறை அவரோட கோபம் தாங்காம வெளியேறியிருக்கேன். ஆனா, ஒரு சில மாதங்கள்ல மீண்டும் அவர் கிட்டேயே போயிருக்கேன். காரணம், அவர் கொடுத்த உற்சாகம்; சுதந்திரம். கோபம் உள்ள இடத்துலதான் குணமும் இருக்கும்கிற மாதிரி, அவர் ரொம்ப கோபக்காரராக இருந்தாலும் என் மீது நிறைய நம்பிக்கை வெச்சிருந்தார். அவர் என்னைக் கண்டிச்சது, திட்டினது எல்லாமே என் மேலுள்ள அக்கறையினால்தான். இது அவர் திட்டும்போது புரியறதில்லை. அப்புறம் நிதானமா யோசிக்கும்போது புரியும். அதனால நானே திரும்ப அவரிடம் போயிடுவேன். அவரும் எதுவுமே நடக்காத மாதிரி அன்போடு என்னைச் சேர்த்துப்பார். ஆனா, இந்த முறை அவரை விட்டு நான் வெளியேறினதுக்குக் காரணம் அவர் காட்டிய கோபம் இல்லை. பத்திரிகையை நடத்த பொருளாதார ரீதியா அவர் ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டிருந்தார். கடன்கள் பெருகிப் போச்சு. வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேரவே இல்லை. பத்திரிகையை நிர்வகிக்கவும் சரியான ஆள் இல்லை. சாவி சார் சிறந்த பத்திரிகையாளர். ஆனா, சிறந்த நிர்வாகி கிடையாது. அவர் வாரிசுகளும் இந்தத் துறையில் இல்லை. இன்னிக்கில்லேன்னா நாளைக்கு, நாளைக்கில்லேன்னா அடுத்த வாரம் என்கிற நிலைமையில்தான் சாவி பத்திரிகையின் ஆயுள் இருந்தது. இந்த நிலையில் சார் திடீர்னு ஒரு நாள் பத்திரிகையை மூடிட்டா என் கதி என்ன ஆகுறதுன்னு கவலையா இருந்தது. அதனால்தான் அவரோட இந்தக் கோபத்தை ஒரு சாக்கா வெச்சு, அங்கிருந்து வெளியேறிட்டேன்...” என்று விரிவாகச் சொன்னேன்.

“ஒருவேளை, சாவி பத்திரிகை நல்லபடியா நடந்து, இன்னும் ஒரு பத்து வருஷத்துக்குக் கவலையில்லேன்னு தெரிஞ்சா, நீங்க அங்கே வேலையில் தொடர்ந்திருப்பீங்களா?” என்று கேட்டார் மதன்.

“கண்டிப்பா! அவர் கிட்டேர்ந்து பிரிஞ்சு வரணும்கிறது என் விருப்பம் இல்லை. என் கால்கள் பிடிமானமில்லாமல் அந்தரத்தில் தொங்குற மாதிரி இருந்துது நிலைமை. எனவே, என் காலை அழுத்தமா ஊனிக்கணும்னுதான் வெளியேறினேன். அந்த பயம் இல்லைன்னா, அவரிடமே பணியில் தொடர்ந்திருப்பேன்” என்றேன்.

“அப்போ ஆனந்த விகடனில் வேலை செய்யணும்கிறது உங்க நோக்கம் இல்லை!” என்று கேட்டுப் புன்னகைத்தார் மதன்.

“ஆனந்த விகடன்லதான் வேலை செய்யணும்னு எனக்கு ஒரு பெரிய கனவே உண்டு. அதுக்காக ஏற்கெனவே முயற்சி பண்ணித் தோத்திருக்கேன். இங்கே வேலை செய்ய ஒரு தகுதி வேணும்; ஒரு கொடுப்பினை வேணும். எனக்கு அதுக்கான தகுதியோ கொடுப்பினையோ இல்லைன்னு தெரிஞ்ச பிறகுதான், புஷ்பாதங்கதுரை சிபாரிசுல சாவி சாரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அதன்பிறகு, எனக்கு வேறெந்தச் சிந்தனையும் எழுந்ததில்லை. அவர் என் மீது சில சமயம் கோபப்பட்டால்கூட, அது என்னோட வளர்ச்சிக்காகத்தான்னு எனக்கு நல்லா புரியுது. என் மீது சாவி சாருக்கு தனிப்பட்ட அபிமானம் உண்டு. அன்பு உண்டு. அதை உணர்ந்த பிறகு அவரை விட்டு வெளியேற நான் விரும்பியதில்லை. எனவே, சாவி பத்திரிகை எந்தத் தொய்வும் இல்லாமல் இன்னும் பத்து வருஷம் நீடிக்கும் என்கிறபட்சத்தில், ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியே இருக்காது என்பதுதான் உண்மை. எனவே, நான் மீண்டும் ஒருமுறை விகடன் வேலைக்கு முயற்சி பண்ணியே இருக்க மாட்டேன்!” என்றேன்.

“ம்ம்...” என்று சிந்தனையோடு தமது ஃப்ரெஞ்ச் தாடியை வருடி விட்டுக்கொண்டார் மதன்.

பின்னரும் அவர் கேட்ட கேள்விகள் எல்லாம், சாவி பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள், அட்டைப்பட ஜோக் போட்டு கைதானது பற்றியதாகவே இருந்தன.

இங்கே ஓர் உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும். என் அப்ளிகேஷனின்பேரில் மதன் சார் அப்போது என்னை இன்டர்வியூ செய்துகொண்டிருக்கிறார் என்பதை நான் உணரவே இல்லை. சுத்தமாக அது எனக்கு உறைக்கவே இல்லை. அவர் இயல்பாக என்னோடு பேசிக்கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால், அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் வெள்ளந்தியாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன்.

எவ்வளவு வெள்ளந்தி என்று, அவர் கேட்ட ஒரு கேள்விக்கு நான் அளித்த பதிலைச் சொன்னால் உங்களுக்குப் புரியும்.

பேச்சினூடே மதன் சார் என்னிடம், “ரவி, சிறந்த கார்ட்டூனிஸ்ட்னு நீங்க யாரைச் சொல்வீங்க?” என்று கேட்டார்.

நான் தயக்கமே இல்லாமல், “மதிக்குமார்தான் சார்!” என்றேன். இப்போது தினமணி நாளேட்டில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணிபுரிகிறாரே, அந்த ‘மதி’தான்! அவர் அப்போது தொடர்ந்து சாவி பத்திரிகையில் கார்ட்டூன்கள் வரைந்துகொண்டிருந்தார். அவர் ஏற்கெனவே ‘மக்கள் குரல்’ நாளேட்டில் ஃப்ரீலான்சராக கார்ட்டூன்கள் வரைந்துகொண்டிருந்தார். பின்னர் ‘இதயம்பேசுகிறது’ பத்திரிகையிலும் ‘சிதம்பரம்’ என்ற பெயரில் கார்ட்டூன்கள் வரைந்தார். 

அவர் வரைந்த கார்ட்டூன்களை எல்லாம் கொண்டு வந்து என்னிடம் காண்பித்து, சாவி பத்திரிகையில் கார்ட்டூன் வரைய வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டார். அவரின் கார்ட்டூன்களைப் பார்த்து அசந்து போனேன். ஒவ்வொன்றும் புத்தம்புதுச் சிந்தனையோடு, அற்புதமாக இருந்தன.  திருத்தமாக இருந்தன. கேலி, கிண்டல், நகைச்சுவை என கார்ட்டூனுக்கு இருக்கவேண்டிய அத்தனை ரசனைகளும் குறைவற இருந்தன. சொல்ல வந்த விமர்சனத்தை சின்னச் சின்ன கோடுகளில் நறுக்கென்று சொல்லும் அவரின் உத்தி அசத்தலாக இருந்தது. அவரை நான்தான் சாவி பத்திரிகையில் கார்ட்டூன்கள் போடச் செய்தேன்.

சாவி சார், மதியின் கார்ட்டூன்களைப் பார்த்து பிரமித்துப் போனார். ஒவ்வொரு வாரமும் நாலைந்து கார்ட்டூன் ஐடியாக்களை ரஃப் ஸ்கெட்ச் போட்டுக் கொண்டு வந்து  காட்டுவார் மதி. அதில் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று குழப்பமே வந்துவிடும். அத்தனையுமே அற்புதமாக இருக்கும். பின்னர் ரொம்ப யோசித்து, அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பார் சாவி சார். ஒருமுறை ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்து மதி போட்டிருந்த எட்டு கார்ட்டூன்களையுமே தேர்ந்தெடுத்து, எட்டுப் பக்கங்களுக்கு வரிசையாகப் போடச் சொன்னார் சாவி. அந்த அளவுக்குத் திறமையானவர் கார்ட்டூனிஸ்ட் மதிக்குமார்.

எனவே, மதன் சார் கேட்டதுமே சற்றும் தயக்கமின்றி, “மதிக்குமார்தான் சிறந்த கார்ட்டூனிஸ்ட்” என்றேன்.

மதன் சார் என்னை ஆழமாகப் பார்த்து, “ம்... இஸ் இட்?” என்றபோதும் சுதாரிக்காமல், “ஆமாம் சார்” என்றேன்.

கேட்பவர், ஆனந்த விகடனின் இணையாசிரியரும், கார்ட்டூனிஸ்ட்டுமான மதன்; நான் இங்கே வேலை கேட்டு விண்ணப்பித்திருக்கிறேன். அவர் என்னை இன்டர்வியூ செய்யவில்லை, சும்மாதான் கேட்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். நான் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? “என்ன சார் நீங்க, உங்களைவிட சிறந்த கார்ட்டூனிஸ்ட் உண்டா? எனக்கு உங்கள் கார்ட்டூன்கள் என்றால் உயிர்! நீங்கள் இந்திராகாந்தியை கார்ட்டூனில் தத்ரூபமாகக் கொண்டு வந்தது போல் வேறு யாருமே போட்டதாக எனக்குத் தெரியவில்லை...” என்று சிலிர்ப்பும் பரவசமுமாகக் கொட்டியிருக்க வேண்டாமா? புத்தியுள்ள பிள்ளை அதைத்தானே செய்வான்? சரி, அதுதான் போகட்டும்... அவரைத்தான் சொல்லவில்லை. தமிழ்ப் பத்திரிகையில் அல்லாது தி ஹிண்டு, இண்டியன் எக்ஸ்பிரஸ் என ஆங்கிலப் பத்திரிகைகளில் வரையும் கார்ட்டூனிஸ்ட், அல்லது வெளிநாட்டு கார்ட்டூனிஸ்ட்டுகளில் யார் பெயரையாவது சொல்லியிருக்கக் கூடாதா? 

நான்தான் முழு அசடனாயிற்றே! மதிக்குமார் பெயரை இரண்டாம் முறையும் மதன் சாரிடம் அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.

அப்புறம், அவர் மேற்கொண்டு சம்பிரதாயத்துக்கு நாலைந்து கேள்விகள் கேட்டுவிட்டு, “சரி ரவிபிரகாஷ், நீங்க கிளம்புங்க. ஆசிரியரோடு பேசி முடிவெடுத்து, அப்புறம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அப்ளிகேஷன்ல உங்க அட்ரஸ் கொடுத்திருக்கீங்க இல்லியா... லெட்டர் வரும்.  போயிட்டு வாங்க!” என்றார்.

தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அப்போதுதான் எனக்கு உறைத்தது, அத்தனை நேரம் மதன் சார் என்னை இன்டர்வியூ செய்திருக்கிறார் என்று. நாலைந்து நாள் முன்னாடியே வந்து, ஆசிரியரைப் பார்த்துப் பேசி, அவரும் என்னை செலெக்ட் செய்துவிட்டதாகச் சொல்லி, முதல் தேதியிலிருந்து வரச் சொல்லிவிட்டபடியால், இப்போது மதன் சாரிடம் உரையாடியதை இன்டர்வியூவாகவே எடுத்துக் கொள்ளவில்லை என் மனம்.

எனவே, பதறிப் போய், “சார், நான் நாலைந்து நாள் முன்னாடியே வந்திருந்தேன். ஆசிரியர் என்னை இன்டர்வியூ செய்தார். என்னை செலெக்ட் செய்துட்டதா சொன்னார். முதல் தேதி வந்து ஜாயின் பண்ணிக்கும்படியும், அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அப்போ வாங்கிக்கலாம்னும் சொன்னார். அதான், ஜாயின் பண்றதுக்காக இன்னிக்கு வந்தேன்” என்றேன்.

“ஓஹோ! ஏற்கெனவே இன்டர்வியூ முடிஞ்சாச்சா? இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே ரவிபிரகாஷ்? நான் இவ்வளவு நேரம் உங்க டயத்தை வேஸ்ட் பண்ணியிருக்கவே மாட்டேனே? சரி, போய் வீயெஸ்வியை வரச் சொல்லுங்க!” என்றார் மதன்.

மதன் சாரின் அறையிலிருந்து வெளியேறி, மீண்டும் வீயெஸ்வியின் அறைக்குச் சென்று, நடந்ததை விவரித்து, அவரை மதன் சார் அழைத்ததாகச் சொன்னேன்.

“அன்னிக்கு நீங்க வந்தப்போ மதன் சார் லீவுல இருந்தார். அவர் உங்களைப் பார்க்கலை, இன்டர்வியூ பண்ணலை இல்லியா... அதான்! கொஞ்சம் இருங்க, வந்துடறேன்!” என்று சொல்லிவிட்டு எழுந்து போனார் வீயெஸ்வி.

இருபது நிமிடம் கழித்துத் திரும்பினார். “சரி, நீங்க கீழே போய் ரிசப்ஷன்ல வெயிட் பண்ணுங்க!” என்றார்.

கீழே வந்தேன். காத்திருந்தேன். நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன.

மதன் சார் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு நான் அளித்த பதில்களும் மனதில் ரீவைண்டாகி, மீண்டும் ஒருமுறை ஓடின.

‘சத்தியமாக இங்கே எனக்கு வேலை கிடைக்கப் போவதில்லை’ என்கிற எண்ணம் பலமாக எழுந்தது.

காத்திருக்கப் பொறுமையின்றி, கிளம்பிவிடலாமா என்று தோன்றியது.

(இன்னும் சொல்வேன்)



4 comments:

இது சாமான்ய “தொடரும்” இதில் சுவாரஸ்யம் ஏதுமில்லை, விகடனில் இருந்த விபரம் முன்னமே தெரியும் என்பதால் மட்டுமல்ல, விகடன் போன்ற பாரம்பரிய பத்திரிக்கையில் நாளை வந்து ஆர்டரை பெற்றுக்கொள்ளச் சொல்லியும் திரும்ப மதன் சம்பிரதாயமான கேள்விகளைக்கேட்டிருக்கிறார். மற்றபடி உங்கள் ஆர்டர் பற்றின விஷயம் முன்பே தயாராக இருந்திருக்கும். இவ்வளவும் ஒரு வாசகனுக்கு முன்பே யூகிக்கமுடிவதால் இந்த ”தொடரும்” ல் ஒரு பெப் இல்லை. ஆர்டரை வாங்கிய மகிழ்ச்சியுடன் முடித்திருக்கலாம்.
 
"கொஞ்சம் பொறுங்க சார்! எங்கே ஓடப் பாக்குறீங்க?"
 
திரு.சுரேஷ்குமார், மகாபாரதக் கதையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ஒரே எபிசோடில் அத்தனையையும் சொல்லிவிடமுடியாதல்லவா? இடையில் தொடரும் போட்டுத்தானே ஆகவேண்டும்? அதுபோலத்தான்... ஒரே பதிவில் மொத்தத்தையும் எழுத முடியாது, எழுதினாலும் படிக்கப் பொறுமை இருக்காது என்பதால், இடையிடையே ‘தொடரும்’ போடுகிறேன். ஒவ்வொரு தொடருமே சாமான்ய தொடரும்தான். சுவாரஸ்ய தொடரும் இல்லை. :-)
 
நன்றி சார்...மனம் விட்டு சிரித்தேன்....அருமையான அனுபவ தொடர்...